சமூக நலன் கருதி, மது விருந்து கொடுக்கும் பழக்கத்தை இளைஞர்கள் கைவிட வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் அறிவுரை வழங்கியுள்ளனர்.

தூத்துக்குடியைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்யன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், “தமிழகத்தில் அதிகரித்துவரும் மதுப் பழக்கத்தால், பலரது உடல்நிலை பாதிக்கப்பட்டு வருகிறது. இவை மட்டும் அல்லாமல் மதுவால் பல்வேறு குற்றங்களும் அதிகரித்து வருகின்றன. அதனால், மக்கள் மது அருந்துவதை தடுக்க அரசு சார்பில் மதுபோதை மீட்பு மையங்கள் மற்றும் மருத்துவ முகாம்கள் அமைக்க வேண்டும். மேலும், நீதிமன்றங்கள் இருக்கும் இடத்திலிருந்து 100 மீட்டர் தூரத்தில் புதிய மதுகடை திறக்கவோ, இடமாற்றம் செய்யவோ தடை விதிக்க வேண்டும்.” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதேபோன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக அமைந்திருக்கும் டாஸ்மாக் மதுபானக் கடையை அகற்றக்கோரி மற்றோரு மனு ஒன்றும் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த இரண்டு மனுக்களு நீதிபதி கிருபாகரன் மற்றும் நீதிபதி சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று (ஏப்ரல் 1) விசாரணைக்கு வந்தது. அப்போது, அனைத்து சமூக விரோத செயல்களுக்கும், டாஸ்மாக் மதுபானமே மிக முக்கியக் காரணமாக உள்ளதாக நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

மேலும் பேசிய நீதிபதிகள், “மது அருந்துவதால் விபத்துகளும் உயிரிழப்பும் அதிகமாக ஏற்படுகின்றன. ஆண்களுக்கு ஆண்மைக் குறைவு ஏற்படக் காரணமாக இருப்பதும் மட்டுமல்லாமல் பாலியல் குற்றங்களும் அதிகமாக நடக்கின்றன. அதனால், சமூக நலன் கருதி திருமணம் போன்ற விழாக்களில் இளைஞர்கள் மது விருந்து கொடுப்பதை தவிர்க்கவேண்டும். இளம் வழக்கறிஞர்கள் நண்பர்களுக்கு மது விருந்து வழங்குவதை தவிர்த்து, மற்றவர்களுக்கு முன்னோடியாக விளங்க வேண்டும்.” என்று கூறினார்கள். வழக்கு விசாரணையை வரும் ஏப்ரல் 8ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர் நீதிபதிகள்.