அக்னிபத்’ – அக்கினிப் பாதை’ எனும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வடமாநில இளைஞர்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்திலும் வேலூர் உள்ளிட்ட சில இடங்களில் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதை கவனிக்க முடிகிறது.
பாஜகவுக்கு பின்னடைவா ?
கடந்த 8 ஆண்டு கால பாஜக ஆட்சியில், காஷ்மீர் பிரச்சினை, விவசாயிகள் போராட்டம், அதற்கு அடுத்து மிக முக்கிய கவனம் பெற்ற போராட்டமாக அக்னிபாத் போராட்டம் உருவாகியுள்ளது. அசாம், உத்திரபிரதேசம், ராஜஸ்தான் என பாஜக வலுவாக உள்ள மாநிலங்களில் இளைஞர்கள் கடும் கொந்தளிப்பில் உள்ளனர்.
இது, வரும் தேர்தல்களில் பாஜகவுக்கு பின்னடைவை உருவாக்குமா என்றால், பண்பு ரீதியாக ஆமாம் என்று சொல்லிவிட முடியும். ஆனால், வடமாநில சங்கிக் கூட்டத்தை நம்ப முடியாது. பணமதிப்பு நீக்கம், திடீர் ஊரடங்கு என அல்லல்பட்டு, அலைய வைத்தும் ‘மோடி அன்ட் கோ’ வை மீண்டும் ஆட்சியில் அமர வைத்தது அந்த கூட்டம்தான்.
ராணுவத்துக்கு ஒப்பந்த தொழிலாளர் முறை கொண்டுவரக் கூடாது, தேசபக்தி என்னாவது என சிலர் பொங்குகின்றனர். எதிர்க்கட்சிகள் இந்த வாதத்தை முன்வைத்து அக்னிபாதை திட்டத்தை எதிர்க்கின்றன.
ராணுவத்தில் சேர்வதற்கு தேசபக்தி தேவையில்லை என்பதை, போராடும் இளைஞர்களிடமிருந்து புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு மழுங்க வைக்கப்பட்டிருக்கிறோம்.
உத்திரவாதமான வேலை பறிபோகிறதே என்கிற கோபத்தில் அக்னிபாதை திட்டத்தை எதிர்த்து இளைஞர்கள் வீதியில் இறங்கி விட்டனர். தேச சேவையாற்ற முடியவில்லை என்கிற ஆதங்கம் எல்லாம் அவர்களிடம் கிடையாது.
படிக்காத வேலையற்ற இளைஞர்களுக்கு உத்திரவாதமான வேலை என்பதைத் தாண்டி ராணுவப் பணியில் ஒரு வெங்காயமும் இல்லை. உடல் தகுதி மட்டும் போதும். கடைநிலை காவலராகி, எவரையும் கை வைக்கலாம் என்கிற உள்ளூர் காவலர் மனநிலைதான், தேசபக்தி மனநிலை.
கொத்தடிமையும்- கூலிப்படையும்
அக்னிபாத் திட்டத்தில் மிக முக்கியமாக கவனிக்க வேண்டியது, பணி நீட்டிப்பு பெறும் அந்த 25 சதவீத ஊழியர்களே. அவர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்கலாம் என்கிற அதிகாரம் யார் கையில் இருக்கும் என்பதை பொறுத்தது. உயர் அதிகாரிகளுக்கு விசுவாசம் காட்டும், இந்தி மட்டும் தெரிந்த அல்லது ஜெய் ஶ்ரீராம், சாய் ராம் சொல்லும் வீரர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு மட்டும் பணி நீட்டிப்பு வழங்கும் போக்கு உருவாகும்.
பாஜக உருவாக்க விரும்பும் இந்தியாவில், ஜெய் ஶ்ரீராம் சொல்லும் ராணுவம் உருவாக்கும் திட்டமாக அக்னிபாத் இருக்கும். இப்படி நடக்கும் என நம்புவதற்கு ஓராயிரம் காரணங்கள் நம் முன் உள்ளன.
கழித்து கட்டப்படும் 75 சதவீத ஊழியர்களும் கட்டமைக்கப்பட்ட, ஆயுதம் கையாளத் தெரிந்த அடியாள் படையாக எளிதாக மாற்றி விட முடியும். எந்த படிப்பறிவும் இல்லாமல், ஆயுதப் பயிற்சியுடன் 21 வயதில் ராணுவத்தில் இருந்து வெளியே வரும் (வடமாநில) இளைஞர்கள், இயல்பிலேயே சங்கிக் கூட்டத்துடன் கலப்பது புதிய நெருக்கடிகளை இந்திய சிவில் சமூகத்துக்கு உருவாக்கும். ஶ்ரீதர் சுப்ரமணியன் சொல்வதுபோல, அவர்கள் தீவிரவாத குழுக்களுடனோ, மாவோயிட்ஸ்ட் குழுக்களிலோ சேர வாய்ப்பில்லை.
மாற்று வேலைக்கு வாய்ப்பில்லையா ?
தவிர 4 ஆண்டு ஒப்பந்தப் பணி முடிந்து, 22 வயதில் வெளியே வரும் இளைஞன் மாற்று வேலை தேடுவது கடினமான காரியம் இல்லை, அல்லது சொந்த தொழில் வாய்ப்புகளுக்கு நிதி உதவி ஏற்பாடுகளையும் பயன்படுத்திக் கொள்ள முடியும். எனவே, ராணுவ ஒப்பந்த பணி வாய்ப்பு என்பது internship போல கொண்டு வரலாம். இந்த internship முடிந்து அவர்கள், சங்க பரிவாரம் உருவாக்கும் தனி கட்டமைப்பில் சேர வாய்ப்பும் உள்ளது.
நவீன இந்தியாவின், நவீன ராணுவ வீரர்களை உருவாக்கும் இந்த உத்தி தெரியாமல், வடமாநில சங்கி இளைஞர்கள் தெருவில் இறங்கி விட்டனர். இன்னும் சில நாட்களில் இதே இளைஞர்கள் சத்தமில்லாமல் பணிகளில் சேர்ந்திருப்பதைக் கவனிக்கலாம்.
ஊதிய வரம்பு, ஒப்பந்த பணி, ஓய்வூதியம் என கவனத்தை திசை திருப்பும் காரணங்கள் எல்லாம் பணப் பலன் சார்ந்தவை. சத்தமில்லாமல் சரி செய்துவிட முடியும்.
இந்த திட்டத்தின் இலக்கு என்கிற வகையில் கவனித்தால், 25 சதவீத கொத்தடிமைகளையும், கழித்து கட்டப்படும் 75 சதவீத நவீன கூலிப்படைகளையும் உருவாக்கும். இந்த இரண்டுமே எதிர்கால இந்திய சிவில் சமூகத்துக்கு புதிய நெருக்கடியை கொண்டு வரும் ஆபத்து நிறைந்தது.