“குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்”.
என்றார் வள்ளுவர்.
ஆனால், இன்றைய குழந்தைகள் பேசுவதற்கும் தயாராக இல்லை. பிறர் பேசுவதைக் கேட்பதற்கும் தயாராக இல்லை.
உண்மை தான்.!குழந்தைகள் தொழில்நுட்பங்களுடனும் தொழில்நுட்பங்களால் கண்டுபிடிக்கப்பட்ட வீடியோ கேம் களுடன் மட்டுமே பேச விருப்பப்படுகிறார்கள்.
ஒரு நாளிற்கு காலை 2 மணிநேரம் மதியம் 2 மணி நேரம் இரவு தூங்கும் முன் விளையாடினால் தான் தூக்கம் வருகிறதென்று பல குழந்தைகள் சொல்கிறார்கள். இதனால், தூக்கமின்மை தான் அவர்களின் உடல் நலத்தை முதலில் பாதிக்கிறது. பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக கண் பாதிப்படைகிறது.நான்கு ஐந்து வயதிலே கண்ணாடி போட்டு கொள்கிறார்கள். இருப்பினும் விளையாட்டு நேரம் குறைவதில்லை.
அதிகப்படியான ஞாபகமறதி , மூன்று மணி நேரம் தேர்வு எழுதுவதற்கு மனம் ஒத்துழைத்தாலும் கை ஒத்துழைப்பது இல்லை.கழுத்து நரம்புகள் முதுகு எலும்பு தசைகள் பாதிக்கப்படுகின்றன.உட்கார்ந்து கொண்டே இருப்பதால் உடல் எடை அதிகரிக்கிறது.
நாளடைவில் (போட்டோ சென்சிட்டிவ்) கை கால் வலிப்பு ஏற்படுவதாக சில ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தனிமையை அதிகம் விரும்புகிறார்கள்.இருட்டறையில் இருக்க ஆசைப்படுகிறார்கள். தகாத வார்த்தைகளை பயன்படுத்துகிறார்கள். வீடியோ கேமில் வரும் கதாபாத்திரம் போன்று தங்களை மாற்றிக் கொள்கிறார்கள்.
அடிதடியில் ஈடுபட்டால் வெற்றியை கைப்பற்றி விடலாம். இப்படி பல பல பழக்கவழக்கங்களை வீடியோ கேம் கற்றுக் கொடுக்கிறது என்கிறார்கள் பெற்றோர்கள்.
மேலும்,வீடியோ கேம் களில் சமைப்பது போன்று விவசாயம் செய்வது போன்று நடைமுறை வாழ்க்கையில் இருப்பது போன்றெல்லாம் உள்ளது. ஒரு பக்கத்தில் பார்க்கும் போது பப்ஜி பிரீ பையர் போன்று இல்லாமல் ஏதோ கற்றுக் கொள்வது போன்று தோன்றுகிறது.
மற்றொரு பக்கம் தானே அதன் உண்மையான நிலவரம் தெரிய வருகிறது. வீடியோ கேம் களில் இருப்பது போன்று நிஜ வாழ்க்கையை குழந்தைகள் வாழ விரும்புகிறார்கள்.. தோல்வியை ஏற்றுக் கொள்ளவே மறுக்கிறார்கள். நெல் அறுவடை செய்கிறான் வீடியோ கேமில் உடனே வியாபாரிடம் போட்டுவிட்டு காயினை பெற்றுக் கொள்கிறேன். இதே எதிர்பார்ப்பை நிஜ வாழ்க்கையிலும் குழந்தைகள் தேடும்போது தான் ஏமாற்றம் கொள்கிறார்கள்.
ஒரு குழந்தை எவ்வளவு நேரம் ஆன்லைனில் விளையாடுகிறதோ அதற்கு இவ்வளவு பணம் என்றொரு கணக்கில் வீடியோ கேம் செயலி நிறுவனங்கள் சம்பாதித்து கொண்டு இருக்கின்றன.இந்த செயலிகளை எல்லாம் ஒருமுறை தொட்டு விட்டால் போதும் அவைகள் நம்மை பின் தொடர ஆரம்பித்து விடுகிறது. Play Store – யில் ஒருமுறை டவுன்லோடு செய்து பின்னர் அன் இன்ஸ்டால் செய்தாலும் நம்மை தொடரும்.கூகுளிலோ யூ ட்யூப்பிலோ வேறு எதையாவது தேடிக் கொண்டு இருந்தால் விளம்பரம் போன்று வந்து வந்து போகும்.
கொரோனா காலக்கட்டத்தில் குழந்தைகளுக்கு Zoom செயலி மூலம் வகுப்புகள் நடந்தன. வகுப்புகள் நடக்க நடக்க வீடியோ கேம் செயலிகள் விளம்பரம் போன்று வந்தன.
இப்படியிருக்க சூழ்நிலையில் வீடியோ கேம் களால் ஏற்படும் நிறைகளையும் குறைகளையும் பார்க்காமல் நடுநிலையாக யோசித்தல் நன்றாக இருக்கும்.
அதென்ன நடுநிலை என்றால்? முதலில் பெற்றோர்கள் குழந்தைகள் எந்த மாதிரியான வீடியோ கேம் களை விளையாடுகிறார்கள் என்பதை கவனிக்க வேண்டும்.பின்னர்,அவற்றில் எவ்விதமான மகிழ்ச்சியை குழந்தைகள் உணர்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
அதில் கிடைக்கும் மகிழ்ச்சியை வேறு எவற்றிலாவது கொடுக்க முடியுமா என்று சிந்திக்க வேண்டும்.
உதாரணத்திற்கு கிரிக்கெட் சதுரங்கம் போன்றவற்றை உட்கார்ந்த இடத்திலே விளையாடுகிறார்கள். அதற்கு மாறாக பயிற்சி வகுப்புக்கு அனுப்பி வைக்கலாம்.
பப்ஜி, பீரி பையர், கால் ஆப் டியூட்டி போன்ற விளையாட்டுகளில் அடிதடி ரத்தம் தெறிப்பது போன்று உள்ளது. அதற்கு மாறாக பாக்ஸிங், கராத்தே சிலம்பாட்டம் போன்ற வகுப்புகளுக்கு அனுப்பி வைக்கலாம்.
கவனிக்கப்பட வேண்டிய இடம் என்னவென்றால் குழந்தைகள் நாங்கள் எங்கள் பெற்றோரிடமிருந்து தான் கைபேசி பயன்படுத்த ஆரம்பித்தோம் என்று கூறுகிறார்கள்.
முடிந்தளவு குழந்தைகளுடன் நேரத்தைச் செலவிடுங்கள். அவர்கள் மீது உங்கள் முழு கவனத்தையும் செலுத்த வேண்டுமென்ற கட்டாயம் இல்லை. இருப்பினும், அவர்களுக்கான வாழ்வியல் முறையை கற்றுக் கொடுங்கள்.