தமிழ்நாட்டில் சில ஆண்டுகளாகவே நீட் ஆதரவு – எதிர்ப்பு என்ற குரல் ஒலித்து கொண்டுதான் உள்ளது. நீட் மாணவர்களின் தரத்தை உயர்த்தும் என்று ஒரு தரப்பினரும் இது கிராமப்புற, அடித்தட்டு விளிம்புநிலை மாணவர்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஒரு தரப்பினரும் தற்போது வரை விவாதங்கள் நடைபெற்று கொண்டுதான் உள்ளது.
தமிழ்நாட்டு மாணவர்களின் மருத்துவ கனவை 100% நீட் தேர்வு சிதைக்கும் என்பதனைதான் தற்போது ஆதாரத்துடன் வெளியிட்டுள்ளது நீதிபதி ஏ.கே.ராஜன் கமிட்டியின் அறிக்கை.
நீங்களும் இந்த அறிக்கையை முழுமையாக படித்தீர்கள் என்றால் பல முக்கியமான விடயங்களை தெரிந்து கொள்ளலாம்
நான் மருத்துவர் என்பதை தாண்டி சாமானிய மக்களின் ஒருவனாக நின்று இரண்டு விஷயங்களை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
தமிழ்நாட்டில் பள்ளிப்படிப்பை அதாவது (6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்புவரை) படிக்காத வேறு மாநிலத்தில் பள்ளிபடிப்பை முடித்தவர்கள் கடந்த 2014- 2015 ஆம் கல்வியாண்டில் தமிழக மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை மொத்தம் 44 பேர்.
அதில் அரசு மருத்துவகல்லூரியில் 29 பேரும்; தனியார் மருத்துவ கல்லூரியில் 15 பேரும் சேர்ந்தனர்
இதே போன்று 2017-2018 ஆம் ஆண்டு நீட் வந்த போது அரசு மருத்துவகல்லூரியில் 307 பேரும்; தனியார் மருத்துவ கல்லூரியில் 64 பேரும் சேர்ந்தனர். 2020-2021 கடந்த கல்வியாண்டில் அரசு மருத்துவகல்லூரியில் 188 பேரும்; தனியார் மருத்துவ கல்லூரியில் 74 பேரும் சேர்ந்துள்ளனர்.
மேலே குறிப்பிட்டுள்ளவை அகில இந்திய இட ஒதுக்கீடு கிடையாது. தமிழக மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்ட இடங்கள். அதாவது தமிழ்நாட்டை இருப்பிடமாக கொண்டு பள்ளி படிப்பை முடித்தவர்களுக்காக ஒதுக்கப்பட்டது.
நடப்பது என்ன?
வேறு மாநிலத்தில் பள்ளிப்படிப்பை முடித்தவர்கள் தமிழ்நாட்டில் நீட் தேர்வு பயிற்சிக்காக இங்குள்ள மையத்தில் பயிற்சி மேற்கொள்கின்றனர்.
சிலருக்கு ஓர் ஆண்டில் தேர்வாகின்றனர் சிலர் இரண்டு மற்றும் மூன்று ஆண்டுகளில் தேர்வாகின்றனர். இந்த காலக்கட்டத்தில் இதனை ஆதாரமாக வைத்து தமிழ்நாட்டில் இருப்பிட சான்றிதழ் அதாவது ரேஷன் கார்டை பெறுகின்றனர். பின் மாநில ஒதுக்கீடு( State Quota) பயன்படுத்தி கல்லூரிக்குள் நுழைகின்றனர்.
இதில் சட்டபூர்வமாக எந்த தவறும் கிடையாது. இதற்கு முக்கிய காரணம் என்னவென்று பார்த்தால் மற்ற எந்த மாநிலங்களிலும் தமிழ்நாட்டை போன்று இவ்வளவு மருத்துவ கல்லூரிகள் கிடையாது.
தமிழ்நாட்டில் இதுவரை ஆட்சி செய்தவர்கள் கல்விக்கு முக்கியத்துவம் அளித்ததே இதற்கு முக்கிய காரணமும் கூட, பொது சுகாதாரத்தில் இந்தியாவிலேயே தமிழகம் முன்னோடி மாநிலம் என்பதை யாராலும் மறுக்க முடியாது.
வேறு மாநிலங்களில் மிக குறைந்த அளவிலான மருத்துவ இடங்கள் மட்டுமே உள்ளதால் அவர்கள் அங்கு நீட் தேர்வில் 700க்கு 600என்ற மதிப்பெண்களை பெற வேண்டும் என்பதால் இங்கு வந்து தமிழக மாணவர்களின் இடங்களை பறிக்கின்றர்.
இதைதான் நீதிபதி ஏ.கே.ராஜன் கமிட்டி அறிக்கையில் 85வது பக்கத்தில் விரிவாக குறிப்பிட்டுள்ளது.
—-
உயர் சிகிச்சை மருத்துவ படிப்பு DM அதாவது ஒரு துறை சார்ந்த படிப்புகள்( நரம்பியல், இதய நோய், மகப்பேறு, நுரையீரல், Etc) போன்றவற்றிற்கான இடங்களில் 2015 ஆம் ஆண்டு 100% இடங்களையும் தமிழக மாணவர்கள் நிரப்பி நிலையில், தற்போது 60 முதல் 65 சதவீதம் வேறு மாநிலத்தவர்கள் ஆக்கிரமிப்பதால் தமிழக மாணவர்களின் முதுநிலை மருத்துவ படிப்பு கானல் நீராகிறது.
முக்கியமான ஒரு விஷயத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் இவர்கள் படிக்கும் கல்லூரி மற்றும் அனைத்து கட்டமைப்பும் தமிழ்நாடு அரசு நிதியிலிருந்து செலவிடப்படுகிறது.
யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற கூறிய கணியன் பூங்குன்றனார் வழி வந்தவர்கள்தான் நாம் என்றாலும் இங்கு முதுநிலை பட்டம் பயின்ற வெளிமாநிலத்தவர்கள் அவர்கள் மாநிலத்திற்கு சென்று சேவையாற்றுகிறார்கள்.
பாதிப்பது?
ஒரு காலத்தில் பணக்காரர்கள் வியாதி இதுபோய் எதுக்கு எங்களுக்கு வந்தது? என வெகுஜன மக்கம் கூறுவார்கள். ஆனால் தற்போதைய காலமாற்றம் யாருக்கும் எந்த வியாதியும் வரலாம். சாதாரண வியாதிகளை மட்டும்தான் ஆரம்ப சுகாதார நிலையங்களில் சரி செய்ய இயலும்.
தற்போது வரை ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் அரசு மருத்துவமனைகள் இருந்தாலும் உயர் சிகிச்சைக்கு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்குதான் அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.
தற்போது முதுகலை மருத்துவ படிப்பில் நீட் தகுதிப்படி வாய்ப்பு வழங்கப்பட்டால் பொது சுகாதார கட்டமைப்பு வெகுவாக மட்டுமல்ல, ஒருகட்டத்தில் கை வைத்தியம் பாட்டி வைத்தியம் என்ற நிலையை நோக்கி தமிழகம் பின்னோக்கி நகர்வதற்கு கூட வாய்ப்புள்ளது.
இடைக்கால தீர்வு:
நீட் கட்டாயம் ஒழிக்க பட வேண்டிய ஒன்று. தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் திமுக ஆட்சி அதற்கான முன்னெடுப்புகளை செய்து கொண்டுதான் உள்ளது இதில் மாற்று கருத்து இல்லை.
அரசுபள்ளியில் படித்த மாணவர்களுக்கு 7.5% மருத்துவ படிப்பில் இட ஒதுக்கீடு என்ற மாநில அரசின்(அ.தி.மு.க) தீர்மானம் நிறைவேற்றி அமல்படுத்தியதை போன்று தமிழ்நாட்டில் 6 முதல் 12 வகுப்பு வரை படித்த அல்லது தமிழை ஒரு பாடமாக படித்து மேல்நிலை வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டுமே தமிழகத்திற்கு இருக்கும் ஒதுக்கீடு கீழ் இருக்கும் இடங்களுக்கான கலந்தாய்வில் கலந்துக்க முடியும் என ஒரு சட்டம் இயற்றினால் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு அதிக இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.
இறுதியாக நீட் சமூகநீதிக்கு எதிரானது என்பதை காட்டிலும் தமிழக மாணவர்கள் மற்றும் மக்களின் மருத்துவ சேவைக்கு வேட்டு வைப்பதாகும். நடந்தவை நடந்தவைகளாக இருக்கட்டும் இனி நடப்பவை நல்லவையாக நடக்கட்டும் என்ற அறிஞர் அண்ணாவின் வரிகளை மட்டும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.