கடந்த 2016ஆம் ஆண்டு சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி என்ற இளம்பெண் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் இன்றும் நம் நெஞ்சை விட்டு அகலாத நிலையில் சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் இதேபோன்று ஒரு சம்பவம் நேற்றிரவு நடந்துள்ளது.

தமிழகத்தையே உலுக்கிய அந்த சம்பவத்தைத் தொடர்ந்து, இன்று நடைபெற்ற சம்பவத்தைப் பார்க்கும்போது பெண்களுக்கு ரயில் நிலையங்களில் பாதுகாப்பு இருக்கிறதா?? என்ற கேள்வி முன்வைக்கப்படுகிறது. பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத நாடுகளில் இந்தியா உள்ளது என்பதையும் இந்த இடம் உறுதிப்படுத்துகிறது. கடந்த சில வருடங்களாகப் பெண்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகள் ஏராளம்.

சுவாதி சம்பவத்தைப் போல சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் இளம் பெண்ணை அரிவாளால் வெட்டிக்கொல்ல முயன்ற சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 25 வயதான தேன்மொழி சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு கூட்டுறவு சார்பதிவாளர் அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார். சென்னை, எழும்பூர், வீராசாமி தெருவில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கியுள்ளார். நேற்றிரவு 7.50 மணியளவில் தேன்மொழி பணி முடிந்ததும் மின்சார ரயிலில் வீட்டுக்குச் செல்வதற்காகச் சேத்துப்பட்டு ரயில் நிலையத்துக்கு வந்தார் தேன்மொழி. அங்கு தனக்கு நடக்கப் போகும் விபரீதத்தை அறியாமல் ரயிலுக்காக காத்திருந்தார் தேன்மொழி.

அப்போது அங்கு வந்த ஈரோட்டைச் சேர்ந்த சுரேந்தர் என்ற வாலிபர் தேன்மொழியிடம் பேச முயன்றார். ஆனால், அவரிடம் பேச மறுத்து தேன்மொழி அவரைத் திட்டியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சுரேந்தர் இடுப்பில் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து தேன்மொழியை சரமாரியாக வெட்டினார். இதில் தேன்மொழிக்கு இடப்பக்க தாடையிலும், இடது கையிலும் வெட்டுப்பட்டு ரத்தம் கொட்டிய நிலையில் மயங்கி விழுந்தார்.

அத்துடன் சிறிது நேரத்தில் எதிரே வந்த மின்சார ரயில் முன் சுரேந்தர் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதில் படுகாயமடைந்த இருவரையும் மீட்ட ரயில்வே போலீசார் கீழ்பாக்கம் மருத்துவமனையில் தேன்மொழியையும், ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சுரேந்திரையும் அனுமதித்துள்ளனர்.

இதுதொடர்பாக போலீசார் கூறுவது, “ஈரோடு மாவட்டம், கவுண்டச்சிபாளையத்தைச் சேர்ந்தவர் தேன்மொழி. கடந்த 4 மாதங்களுக்கு முன்பு `குரூப் 4′ தேர்வில் வெற்றி பெற்று சென்னை கீழ்ப்பாக்கம் கூட்டுறவு தலைமைப் பதிவாளர் அலுவலகத்தில் தட்டச்சராக பணிபுரிந்து வருகிறார். தேன்மொழியும், சுரேந்திரனும் கடந்த 3 ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளனர். இந்த காதலுக்கு சம்மதம் தெரிவித்த சுரேந்தரின் பெற்றோர், தேன்மொழியை பெண் கேட்டு அவர் வீட்டுக்குச் சென்றனர். ஆனால், தேன்மொழி வீட்டில் இதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டனர்.

தேன்மொழியும் தனது பெற்றோரின் பேச்சைக்கேட்டு சுரேந்திரனிடம் பேசுவதைத் தவிர்த்து வந்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்துதான் சுரேந்தர் திடீரென காதலை முறித்தது ஏன்? எனவும் தன்னைத் திருமணம் செய்துகொள்ளும்படி தேன்மொழியிடம் வற்புறுத்தி வந்துள்ளார். அப்போது நடந்த தகராறில் ஆத்திரமடைந்த சுரேந்தர் அரிவாளால் தேன்மொழியை சரமாரியாக வெட்டியுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாகக் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்துள்ளோம்.” என்று தெரிவித்துள்ளனர்.

இதைதொடர்ந்து, ரயில் நிலையங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும், சுவாதி, தேன்மொழிக்கு நடந்த விபரீதம்போல மற்றவர்களுக்கு ஏற்படாத வரையில் காவல்துறை பாதுகாப்பு கொடுக்கவேண்டும் எனவும் பொதுமக்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.