சோமாஸ்கந்தர் சிலை செய்ததில் முறைகேடு நடந்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், இந்து அறநிலையத் துறை முன்னாள் ஆணையர் வீரசண்முகமணிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் உள்ள சோமாஸ்கந்தர் சிலை 8.7 கிலோ தங்கத்தில் செய்யப்பட்டது. இந்த சிலை செய்ததில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக, இந்து சமய அறநிலையத் துறை முன்னாள் ஆணையர் வீரசண்முகமணியை சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கடந்த 15 ஆம் தேதி கைது செய்தனர்.

இந்நிலையில், தன்னை ஜாமீனில் விடுவிக்க கோரி வீரசண்முகமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு, நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் அமர்வு முன்பு இன்று (மார்ச் 28) விசாரணைக்கு வந்தது. அப்போது, வீரசண்முகமணிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்ட நீதிபதி, விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.