நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளதையடுத்து அங்குள்ள ஊட்டி, கூடலூர், பந்தலூர், குந்தா, அவலாஞ்சி மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளில் நேற்று 7-வது நாளாக கடுமையான மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள ஓடைகள், நீர்வீழ்ச்சிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த தண்ணீர் அனைத்தும் அங்குள்ள அவலாஞ்சி, அப்பர் பவானி, எமரால்டு, கனடா உள்ளிட்ட அணைகளுக்கு வந்தது. இதனால் அந்த அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. அவலாஞ்சி பகுதியில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி அதிகபட்சமாக 91 செ.மீ. மழை பதிவானது.

மழை தொடர்ந்து பெய்து வருவதால் மலைரெயில் செல்லும் தண்டவாளங்களில் நீர் சூழந்துள்ளது. இதனால் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வந்த மலை ரெயிலின் சக்கரங்கள் தண்ட வாளத்தில் சரியாக இயங்கவில்லை. இதன் காரணமாக காலை 10.30 மணிக்கு குன்னூர் வர வேண்டிய மலை ரெயில் அரை மணி நேரம் தாமதமாக காலை 11 மணிக்கு வந்து சேர்ந்தது.

பல்வேறு இடங்களில் மண் அரிப்பு ஏற்பட்டு சாலையில் மரங்கள் சரிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டன. எல்லமலை பகுதியைச் சேர்ந்த ஒருவர் வெள்ளத்தில் அடித்துச் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் அவரை தேடும் பணியில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

அவலாஞ்சி அருகே காட்டுக்குப்பையில் உள்ள நீர்மின் உற்பத்தி நிலையத்தில், மற்றொரு நீர் மின் உற்பத்தி அலகு அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த மின்நிலையத்துக்கு தண்ணீர் கொண்டு செல்ல சுரங்கப்பாதை அமைக்கும் பணியில் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு உள்ளனர். அவலாஞ்சியில் பெய்து வரும் கனமழை காரணமாக மஞ்சூரில் இருந்து காட்டுக்குப்பை செல்லும் ரோடு முற்றிலும் துண்டிக்கப்பட்டது. இதனால் சுரங்கப்பாதை அமைக்கும் பணியில் ஈடுபட்டவர்கள் உணவு இல்லாமல் தவித்துவருகின்றனர்

கனமழை காரணமாக அணைகளில் தண்ணீரின் அளவு அதிகமாகி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் 2 வயது குழந்தை சுந்தரி வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டது. அந்த குழந்தையின் நிலை என்ன என்பது தெரியவில்லை. வெள்ளத்தால் வீடுகளை இழந்த மக்கள் அங்குள்ள மின்வாரிய குடியிருப்பில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

கோயம்புத்தூரை சுற்றி சில இடங்களிலும் வால்பாறை-பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டு சாலை துண்டிக்கப்பட்டுள்ளது.

கனமழைக்கான காரணத்தை வானியல் ஆரய்ச்சி மைய அதிகாரி கூறும்போது, “ கடந்த கோடை காலங்களில் ஏற்பட்ட வெப்பச் சலனம் வானில் மேக பிரிவுகளாக உண்டாகி தற்போது அவலாஞ்சி பகுதியில் ஒன்று சேர்ந்துள்ளதாகவும் தொடர்ந்து மேகங்கள் நீலகிரி மாவட்டம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நிலைகொண்டுள்ளதாலும் கனமழை பெய்துவருகிறது என்று கூறினார். மேலும் நிலைமை இன்னும் ஓரிரு நாளில் சரியாகிவிடும் என்றும் கூறினார்.