ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் கழிவுநீர் தொட்டியிலிருந்து விஷவாயு தாக்கி ஒரு பெண் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே நெமிலி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு சொந்தமான வீட்டில் கழிவுநீர் தொட்டி சுத்தம் செய்யும் பணியில் துப்பரவுத் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். தொழிலாளர்கள் சுத்தம் செய்துவிட்டு சென்றபின், வீட்டின் உரிமையாளர் கிருஷ்ணமூர்த்தி, கழிவு நீர் தொட்டியின் மூடியை திறந்து பார்த்துள்ளார். அப்போது அவரை விஷவாயு தாக்கியதில், மயங்கி கழிவு நீர் தொட்டிக்குள் விழுந்துள்ளார்.

தந்தை கழிவு நீர் தொட்டிக்குள் விழுந்ததைப் பார்த்த அவரை காப்பாற்றச் சென்ற அவரது மகன்கள் கண்ணன் மற்றும் கார்த்திக்கும் விஷவாயு தாக்கி, மயங்கி தொட்டிக்குள் விழுந்துள்ளனர். இதைக் கண்ட அருகிலிருந்த பரமசிவன், லட்சுமிகாந்தன், சுரதா பாய் அவர்கள் மூன்றும் காப்பற்ற அருகில் சென்றபோது, அவர்களையும் விஷவாயு தாக்கியுள்ளது. இதில், அவர்களும் கழிவு நீர் தொட்டிக்குள் மயங்கி விழுந்தனர்.

இதைத் தொடர்ந்து, தீயணைப்பு துறையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் உயிரிழந்த நிலையில் 6 பேரின் உடலை மீட்டனர். பிரேதப் பரிசோதனைக்காக இவர்களது உடல் ஸ்ரீபெரும்பத்தூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டது. இந்த சம்பவம் குறித்துக் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 6 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.