சென்னையில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த 2011 ஆம் ஆண்டு ஒதுக்கப்பட்ட 2.99 கோடியில் முறைகேடு  செய்யப்படிருந்ததாக தொடரப்பட்ட வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்ற டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 2011ஆம் ஆண்டு சென்னையில் 40 இடங்களில் சி‌சி‌டி‌வி பொருத்துவதற்கு மூன்று கோடி ரூபாய் நிதியை போக்குவரத்து காவல்துறைக்கு அரசு ஒதுக்கியிருந்தது. இந்தப் பணிகளை மேற்கொள்வதற்கான ஒப்பந்தம் லுக்மென் எலக்ட்ரோ போஸ்ட் நிறுவனத்துக்கு வழங்கியிருந்த நிலையில், இந்நிறுவனம் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணிகளைத் தொடங்குவதற்கு முன்பே ஒப்பந்த விதிகளை மீறி 90 விழுக்காடு நிதியான 2.63 லட்சம் ரூபாயை பெற்று முறைகேடு செய்ததாகக்கூறி போக்குவரத்து கூடுதல் துணைஆணையர் சந்திரன் கொடுத்த புகாரின் பெயரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் இவ்வழக்கை விசாரிக்க  மத்திய குற்றப்பிரிவு ஆய்வாளர் நியமிக்கபட்டார்.  ஆனால் அவரைவிட உயர் பொறுப்பில் உள்ள காவல்துறை அதிகாரிகளை விசாரிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதனையடுத்து ஓய்வுபெற்ற போக்குவரத்து திட்டமிடுதல் துணைஆணையர் சிவானந்தம் மற்றும் அமைச்சுப் பணி சூப்பிரண்டு என மூன்று பேரையும் மத்திய குற்றப்பிரிவு காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனர்.

இதனிடையே நிறுவனத்தின் உரிமையாளர் ஜாமீன்மனு தாக்கல் செய்ததால், அந்த வழக்கில் நீதிமன்றம் பதிலளிக்க உத்தரவிட்டது. அதுவரை அவரைக் கைது செய்யக்கூடாது எனவும் அறிவுறுத்தியது. இதனால் உயர் அதிகாரிகளை விசாரிக்க முடியாமலும், சம்பந்தப்பட்ட நிறுவன உரிமையாளரை விசாரிக்க முடியாமலும் மத்திய குற்றப்பிரிவு காவல்துறை அதிகாரிகள் திணறி வந்தனர். தற்போது இவ்வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்ற டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

மோசடி செய்த இதே நிறுவனத்திடம் 2020 ஆம் ஆண்டுவரை 300 காவல்நிலையங்களுக்கு சிசிடிவி கேமராக்கள் பொருத்த ஒப்பந்தம் வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடதக்கது.