டிவிட்டரில் வைரலாகியச் செய்தியை அடுத்து பிறந்த ஆண்டை மாற்றினால் அவர்களின் டிவிட்டர் கணக்கு முடக்கப்பட்டுவிடும் என டிவிட்டர் நிறுவனம் எச்சரித்துள்ளது.

ஒருவரின் டிவிட்டர் கணக்கின் கலர் மற்றும் வடிவம் ஆகியவற்றை மாற்ற வேண்டுமென்றால் அவர்களின் பிறந்த ஆண்டை 2007 என்று மாற்றினால், அவர்கள் கணக்கு புதிய வடிவத்தில் புதிய தீமாக(நிறம்) மாற்றப்படும் என்று ஒரு செய்தி வைரலாக பரவி வருகின்றது. இதனையடுத்து டிவிட்டர் பயன்பாட்டாளர்கள் அனைவரும் தங்கள் பிறந்த தேதியை மாற்றி வருகிற நிலையில் அவர்களின் கணக்கு முடக்கப்பட்டுவருகிறது.

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள டிவிட்டர் நிறுவனம், “பிறந்த ஆண்டை 2007ஆக மாற்றுங்கள். என்று பரவிவரும்  செய்தியை யாரும் நம்பவேண்டாம். அதைமீறி உங்கள் பிறந்த ஆண்டை 2007 என்று மாற்றினால் நீங்கள் சிறுவர்களாக கணக்கிடப்பட்டு உங்கள் கணக்கு முடக்கப்படும்.  இது யாரோ ஏற்படுத்தியுள்ள சூழ்ச்சிதான் எனவே இதில் யாரும் சிக்கவேண்டாம். ஒருவேளை உங்கள் கணக்கு முடக்கப்பட்டிருந்தால், அரசால் அங்கீகரிக்கப்பட்ட பிறந்த ஆண்டு குறிப்பிடப்படுள்ள அடையாள அட்டையைக் காண்பித்து டிவிட்டர் சப்போர்ட் உதவியுடன் கணக்கை புதுப்பித்துக்கொள்ளலாம்” என தெரிவித்துள்ளது.

ஒருவர் டிவிட்டர் கணக்கு வைத்துக்கொள்ள வேண்டுமென்றால் குறைந்தது 13 வயது நிரம்பியவராக இருக்கவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.