எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைவது தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் நீடித்து வரும் சூழலில் மதுரை தோப்பூரில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனை இடத்தை ஜப்பான் நிதிக்குழுவும், மத்திய நிதிக்குழுவும் இன்று (ஜூன் 10) ஆய்வு செய்தன.

2016ஆம் ஆண்டு மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என அறிவித்திருந்தது. மத்திய அரசு அறிவித்து 3 ஆண்டுகள் கடந்த நிலையில், எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியிடாமல் இருந்தது மோடி அரசு. இதற்கு தமிழகத்திலிருந்து கண்டனங்கள் எழுந்த நிலையில், கடந்த வருடம் மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என அறிவித்தது மத்திய அரசு.

கடந்த ஜனவரி மாதம் பிரதமர் மோடி மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அடிக்கல் நாட்டிய நிலையில், மருத்துவமனை கட்டுவதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. இதற்காக தமிழக அரசின் சார்பில் 202 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. ரூ.1264 கோடி செலவில் அமைக்கவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனை 48 மாதங்களில் கட்டி முடிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பான் நிதியுதவியுடன் மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளது. இந்நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள இடத்தை இன்று மத்திய நிதிக்குழுவைச் சேர்ந்த சஞ்சய்ராய் தலைமையிலான மத்திய நிதிக் குழுவினரும் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த நிதிக்குழுவினரும் ஆய்வு செய்தனர்.

எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதற்குத் தேவையான வசதிகள் அனைத்தும் சரியாக உள்ளனவா? மருத்துவமனை அமைப்பதற்கான இடம் பரப்பளவு தேவையான அளவில் உள்ளதா? என்பது குறித்து ஜப்பானிய குழுவினர் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வறிக்கையை மத்திய நிதிக்குழுவினர் அளித்த பிறகு கட்டுமான பணிக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.