மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை இன்று (ஜூலை 6) வெளியிட்டார் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர்.

நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த மே 5ஆம் தேதி நடைபெற்றது. பின்னர் நீட் தேர்வு முடிவு வெளியானதை தொடர்ந்து 2019-20ஆம் ஆண்டிற்கான எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு பற்றிய அறிவிப்பு வெளியானது. நீட் தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் இந்தக் கலந்தாய்வு நடைபெற்று அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர்.

அதன்படி தமிழகத்தில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பம் ஜூன் 7ஆம் தேதி தொடங்கி ஜூன் 20 வரை நடைபெற்றது. நடப்பாண்டில்தான் எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். படிப்புகளுக்கு முதல் முறையாக ஆன்லைனில் விண்ணப்பம் வெளியிடப்பட்டது.

ஜூலை 2ஆம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு ஜூலை 4ஆம் தேதி கலந்தாய்வு நடைபெறும் எனக் கூறப்பட்டது. ஆனால், விண்ணப்பங்கள் அதிகமாக சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் பரிசீலனைக்கு ஒருவார காலம் நீடித்ததால் தரவரிசை பட்டியல் மற்றும் கலந்தாய்வு தேதி தள்ளிபோனது.

இந்நிலையில், சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புக்கான தரவரிசை பட்டியலை சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று வெளியிட்டார். அரசு ஒதுக்கீட்டிற்கான முதல் 10 இடங்களை பிடித்த மாணவர்களின் விவரங்கள் அறிவிக்கப்பட்டன.

அதில், திருவள்ளூர் மணவாள நகரை சேர்ந்த கே.ஸ்ருதி, 685 நீட் மதிப்பெண்களுடன் அரசு ஒதுக்கீட்டில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். ஈரோடு மாவட்டம் அந்தியூர் தவிட்டுப்பாளையத்தை சேர்ந்த ஏ.கே.அஸ்வின் ராஸ், 677 மதிப்பெண்களுடன் இரண்டாம் இடத்தையும், கோவை கணபதியை சேர்ந்த வி.இளமதி 676 மதிப்பெண்களுடன் மூன்றாமிடத்தையும் பிடித்துள்ளார்.

இது குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியதாவது, ”எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் ஜூலை 6ஆம் தேதியான இன்று வெளியிடப்படுகிறது. சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு வரும் 8ஆம் தேதியும், பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு 9ஆம் தேதியும் தொடங்கும்” எனத் தெரிவித்தார்.

”தமிழகத்தில் 23 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 3,250 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 34,368 விண்ணப்பங்களும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 25,388 விண்ணப்பங்களும் என மொத்தம் 59,756 விண்ணப்பங்கள் வந்துள்ளன.” என்று கூறிய அமைச்சர், “பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்குவது குறித்து வரும் திங்கட்கிழமை (ஜூலை 8) அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தி தீர்மானிக்கப்படும்” எனத் தெரிவித்தார்.