இந்தியாவின் முன்னணி நிறுவனமான ஜெட் ஏர்வேஸ் நிறுவன ஊழியர்கள் தங்கள் சம்பள பாக்கியைப் பெற்றுத்தருமாறு பிரதமர் மோடி மற்றும் விமான போக்குவரத்துத்துறை மந்திரி சுரேஷ்பிரபு ஆகியோருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஜெட் ஏர்வேஸ் சில ஆண்டுகளாக  நஷ்டத்தில் இயங்கி வருகிறது. நிறுவனத்தில் கிட்டதட்ட 23 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். நிறுவனம் வாங்கிய கடன்களையும் அடைக்க முடியவில்லை. சுமார் ரூ.7 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் உள்ளது. அந்தக் கடனையும் நிறுவனத்தால் அடைக்க முடியவில்லை. கடும் நிதி நெருக்கடியால் ஊழியர்களுக்கு பல மாதமாக சம்பளமும் வழங்கவில்லை. மேலும் இயக்க முடியாமல் நிறுத்தப்பட்டு உள்ள 40 விமானங்களையும்  ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் வாங்க உள்ளது.

இந்நிலையில்  ஜெட் ஏர்வேஸ் நிறுவன பைலட்டுகள் தங்கள் சம்பள பாக்கியை உடனே வழங்கவில்லை என்றால் வருகிற 1-ந்தேதி முதல் விமானங்களை இயக்க மாட் டோம் என்று தெரிவித்து உள்ளனர். மேலும் பிரதமர் மோடி மற்றும் விமான போக்குவரத்து மந்திரி சுரேஷ்பிரபு ஆகியோர் இதில் தலையிட்டு சம்பள பாக்கியைப் பெற்று தரவேண்டும். நிறுவனத்தை காப்பாற்றும் நடவடிக்கைகளையும் மேற்கொள்ள  வேண்டும் என்றும் ஊழியர் சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதனையடுத்து ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் பணியாற்றிய பைலட்டுகளில் 250 பேர் இதிலிருந்து விலகி ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தில் சேர்ந்துள்ளனர். இதுதொடர்பாக இந்திய விமான சங்கத்தினர் “ஏர் லைன்  நிறுவனங்கள் மிக மோசமான நிலைக்கு சென்றுள்ளன. இதைக் காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளனர்