காவிரி கரையோரத்தில் இருக்கும் நான்கு மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது மத்திய ஜல் சக்தி அமைச்சகம்.

கர்நாடகாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் கிருஷ்ண ராஜ சாகர் மற்றும் கபினி அணைகளின் நீர் மட்டம் உயர்ந்துவருகிறது. இதனால் இந்த அணைகளிலிருந்து தமிழகத்திற்குத் தண்ணீர் திறக்கப்பட்டு, மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்துவருகிறது. மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 2 லட்சத்து 20 ஆயிரம் கன அடி நீர்வரத்து வருகிறது. மாலை வரை இதே நிலை நீடிக்கும் என்பதால் காவிரி கரையோரத்தில் இருக்கும் கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், தாழ்வான பகுதிகளிலுள்ள மக்களைப் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு மாவட்ட ஆட்சியர்களுக்கு மத்திய ஜல் சக்தி அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.