டெஸ்ட் கிரிக்கெட்டைப் பிரபலப்படுத்தும் முயற்சியில் ஐ.சி.சி பல மாற்றங்களைச் செய்து வருகிறது. அதில் ஒன்று தான் இந்த டெஸ்ட் ஜெர்சி. டெஸ்ட் போட்டிகளில் வீரர்கள் வெள்ளை உடை அணிவது வழக்கம். அதில் அவர்களது பெயரோ எண்ணோ இருக்காது. இந்நிலையில் ஐ.சி.சி-யின் புதிய மாற்றத்தின்படி வீரர்களின் டெஸ்ட் ஜெர்சியில் அவர்களது பெயரும் எண்ணும் இடம்பெற வேண்டும். அந்த வகையில் முதல் முறையாக தற்போது இந்திய அணி இந்த புது ஜெர்சியை பயன்படுத்தவுள்ளது.
இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் முதல் முறையாக நம்பர்கள் இடம் பெற்றுள்ள ஜெர்சியை அணிந்து போட்டிகளில் பங்கேற்று விளையாடவுள்ளனர்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் வீரர்கள் இந்த ஜெர்சியை அணிந்திருந்தனர். ஆனாலும் அதில் சிலர் வேறு வீரர்களின் ஜெர்சியை பயன்படுத்தினர். உதாரணத்திற்கு அஸ்வின் பேட்டிங் செய்யும் போது ரோஹித் ஷர்மாவின் ஜெர்சியை அணிந்திருந்தார். வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் பெயரோ எண்ணோ அல்லாத பழைய டெஸ்ட் ஜெர்சியை தான் அணிந்திருந்தனர் பயிற்சி போட்டி என்பதால் இந்த புதிய விதிகளின் கட்டுப்பாடுகள் இல்லை. இந்நிலையில் இன்று இந்திய கிரிக்கெட் அணியின் அதிகாரப்பூர்வ டெஸ்ட் ஜெர்சி இன்ஸ்டாகிராமில் வெளியாகியுள்ளது.
வீரர்கள் பெரும்பாலும் தங்களது ஒருநாள் மற்றும் டி-20 ஜெர்சி எண்ணையே பயன்படுத்தியுள்ளார்கள். இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 18 எண்ணையும், ரோஹித் ஷர்மா 45 எண்ணையும் பயன்படுத்தியுள்ளார். இந்தியாவுக்கு டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடும் செதேஷ்வர் புஜாரா 25-யை பயன்படுத்தியுள்ளார். மேலும் ரிஷப் பண்ட், முகமது ஷமி, இஷாந்த் சர்மா, குலதீப் யாதவ், அஸ்வின், ஜடேஜா ஆகியோர் முறையே 17, 11, 97, 23, 99, 8 ஆகிய எண்களைப் பயன்படுத்தியுள்ளனர். தோனியின் ஜெர்சி எண் 7-யை யாராவது பயன்படுத்துவார்களாக என்று எதிர்பார்த்த நிலையில் அதனை யாரும் பயன்படுத்தவில்லை.
2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நாளை தொடங்குகிறது. ஆன்டிகுவாவில் உள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் போட்டி நடைபெறுகிறது. இந்த டெஸ்ட் தொடர் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஒரு பாகம் என்பதால் போட்டிக்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.
இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பர்கள் இடம் பெற்ற ஜெர்சியை அணிந்து வீரர்கள் பங்கேற்பதை முன்னாள் கிரிக்கெட் வீரர்களான பிரட் லீ, சோயிப் அக்தர், கெவின் பீட்டர்சன் உள்ளிட்ட கடுமையாக விமர்சித்துள்ளனர்.