தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று முதல் ஒரு வாரத்திற்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகத் தெரிவித்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்.

வெப்பச் சலனம் காரணமாகத் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் ஒரு வாரத்திற்குக் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்பச் சலனம் காரணமாகத் திருவள்ளூர், வேலூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், தஞ்சை, நாகை மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும் நீலகிரி, கோவை மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. மேற்கு மத்திய வங்கக் கடலில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசி வருவதால் மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என்று எச்சரித்துள்ளது வானிலை மையம். கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் தேவாலாவில் 5 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.