சிங்கமுக லச்சினை அடையாளம் கொண்ட முள்ளிநாட்டு மெய்க்காவல் படை வீரர்களான வலங்கை வேளக்கார சேனை. சோழ தேசத்தில் வெள்ளைக் குதிரையில் வலம் வந்து, பதினாறு கால் பந்தல் போடவும், 18 வகை இசை கருவிகளை வாசித்துக்கொள்ளவும் உரிமை பெற்றவர்களாய் இருந்தனர்.

(அப்போது வெள்ளைப்புரவியை மாமன்னர் மற்றும் படைத்தளபதிகள் மட்டுமே பயன்படுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.)
மாமன்னர் ராஜராஜன் அரியணை ஏறியது முதல் பரந்து விரிந்த சோழ தேசத்தின் அனைத்து நாடுகளிலும் ஒன்றி ஒற்றர்களாக வாழ்ந்து அவ்வப்போது மாமன்னருக்கு ராஜ ரகசிய தகவல்களை பகிர்ந்து கொண்டிருந்தனர்.
தக்கோலத்தின் குதிரைப்படைத் தளபதியான மாப்பளத்தான் என்பவனின் சேனையில், படைவீரன் வேடத்தில் ஒற்றனாக இருக்கும்.
வலங்கை வேளக்கார சேனை படையின் தலைமை தளபதியான பூவன் அனுப்பியிருந்த ரகசிய ஓலையைக் கண்ட மறு நாழிகையில்.
அதிர்ச்சியும் ஆச்சரியமும் கலந்து தந்தையை‌ எண்ணி வியப்புற்றான் இளவரசன்.
மேலும் இந்த இரவில் மாமன்னருக்கு பாதுகாவலாக வந்துள்ள படையினரும் சற்று வித்தியாசமாக தோற்றம் கொள்ள.
இதற்கு முன் இவர்களைப் பார்த்தது போல தெரியவில்லையே. எந்தப் படைப்பிரிவைச் சேர்ந்தவர்கள் இவர்கள் என வியப்பின் உச்சத்திற்கே போனது போல உணர்ந்தான் இளவரசன்.
இலக்கணத்திலும் இலக்கியத்திலும், அறநெறிகளிலும் ஆழ்ந்த ஞானம் கொண்ட சர்வசிவ பண்டிதன் என பெயர் பெற்ற இளவரசன் ராஜேந்திரன். போர், கள தர்மங்கள், ஆயுதப் பயன்பாடு, மூதாதையர் வரலாறுகள், இலக்கண இலக்கியங்கள் அனைத்தையும் கற்றுத் தேர்ந்தவன். மேலும் இசை, சிற்பம், ஓவியம் என பல கலைகளில் வெறும் ரசிகனாக மட்டுமின்றி கலைஞனாகவும் இருந்த சோழநாட்டு இளவரசன் இவன். பாட்டு புனையும் அளவுக்கு அவன் பாண்டித்தியம் பெற்றதால் பண்டித சோழன் என்று அவனைப் போற்றினர் அரசவை நாயகர்கள்.
தமையனின் தோளில் கை போட்டு ஆதூரச் சாலையின் உள்ளே சென்ற மாமன்னர் அருள்மொழிவர்மன்.
ராஜேந்திரா. கண்ணால் பார்க்கும் எதையும் எளிதில் நம்பிவிடக்கூடாது என்பதற்காகத்தான் ஒற்றன் கொடுத்த ரகசிய ஓலையை உன்னைக் கொண்டு படிக்க வைத்தேன்.
உள்ளே வா. விபரம் முழுவதையும் காட்டுகிறேன் என்று கூறி துறவியின் அறையை நோக்கி சென்றனர். மாமன்னரின் இடது பக்கமாக பறந்துகொண்டிருந்த வெண்பட்டு ஆடையை விரல்களால் இழுத்துகொள்ள. அவரது காதுகளிலும், கழுத்திலும் மின்னிய ஆபரண ஒளிகள் இருள் படர்ந்த தீப்பந்த விளக்கொளியில் பட்டுத் தெறித்து மின்மினிகளால் பறந்தன.
துறவியின் அறையை அடைந்த இருவரும். அங்கே அங்கம்மா தேவி. ஆதித்தன். நல்லப்பர். பழுவூர் நக்கன் மற்றும் சுந்தரர் ஆதூரச்சாலையின் தலைமை வைத்தியர் என அனைவரும் நின்றிருக்க.
இவர்களுக்கு பின்னால் ஒன்றிரண்டு வீரர்கள் கையில் வேல் மற்றும் தீப்பந்தங்களோடு நின்று கொண்டிருந்தனர்.
மாமன்னரும் இளவரசரும் உள்ளே வருவதைப் பார்த்ததும்.
தந்தையே இதோ இங்கே அமருங்கள் என ஒரு இடத்தைக்காட்ட. துறவியின் சீடன் ஓடிவந்து தன் தோளில் போட்டிருந்த நீளமான துணியை விரித்தான் இளவரசி காட்டிய அந்த இடத்தில்.
அங்கம்மா தேவி காட்டிய அந்த இடத்தில் உட்கார்ந்த பிறகு அவருக்கு பின்னால் ஒளிர்ந்த தீக்கனலில் கருப்பு ச் சந்திரன் தோன்றியது போல தெரிந்தது அனைவருக்கும்.
ம்ம்ம்.,…. என சற்று குரலைக் கனைத்தவாறு.
வைத்தியரே. பாத்திரம் ஒன்றில் பாதி அளவு நீர் நிரப்பி எடுத்து வாரும் என்று கூற…
ஆகட்டும் மன்னா… என‌ பதிலுரைத்து தண்ணீர் எடுக்க விரைந்தார் தலைமை வைத்தியர்.
ராஜேந்திரா அந்த ஓலையை இப்படி கொடு என கேட்க.
தன் கையில் வைத்திருந்த ஓலையை மன்னரிடம் கொடுத்தான் இளவரசன்.
சுற்றி இருந்தவர்கள் ஓலையைக் கண்டதும் சற்று வியப்படைந்தவர்களாக. அதில் என்ன எழுதியுள்ளது என்பதை அறிய ஆவல் கொண்டனர்.
அருகே படுத்திருந்த துறவி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார் என்பது அவர்  சுவாச நாசியில் இருந்து வந்த பெருத்த ஒலியை வைத்து அறிய முடிந்தது.
நடு சாம வேளை. சந்திரன் நடு உச்சிக்கு வந்திருந்தது. வாயிற் காவலர்களுக்கு உறக்கம் கண்களைச் சொக்க ஆரம்பித்திருந்தது.
உள்ளே இருந்த அனைவருக்கும் உறக்கம் வரவில்லை. மாறாக உற்சாகம் மேலோங்கி மாமன்னருடனான தனிமை பயணத்தில் தாங்களும் இணைந்து மகிழ்வுற்றனர்.
சொற்ப நேரத்தற்குள்ளாக தலைமை வைத்தியர் பெரிய பாத்திரம் ஒன்றில் பாதியளவு தண்ணீர் நிரப்பி எடுத்து வர.
என் முன்னால் அதை வையுங்கள் என்றார் மாமன்னர்.
மன்னர் முன்பாக வைக்கப்பட்டது அந்த தண்ணீர் பாத்திரம்.
ராஜேந்திரா….. அந்த ஓலையை எடுத்து வா…. எனக்கூற.
தான் கையில் வைத்திருந்த நன்கு தகதகத்த பட்டுச்சுருளை மாமன்னரிடம் கொடுக்க.
அதை வாங்கி . இரு கைகளாலும் பிரித்து முழுவதுமாக விரித்தபடி அகலமான அந்த பாத்திரத்தில் மூழ்கடித்தார் மாமன்னர்.
அந்த பட்டுத்துணி மூழ்கிய உடன் வெள்ளையாக சுண்ணாம்பு வெளிப்பட. துணியின் வெளிர் நிறத்திற்கு மாறத் தொடங்கியது.
அட… இந்த இரவில் ஒற்றன் ஓலை என்பதே ஆச்சரியம்.‌ஆனால்‌ அந்த ஓலையிலே மந்திரம் செய்வது போல மாமன்னர் செய்ததைப் பார்த்த மற்றவர்கள் புருவம் உயர்த்த வியப்படைந்தனர் இந்த நடுநிசி வேளையிலும்.
மொத்தமாக நீர் அடர் வெளிர் நிறமாக மாற. அந்த தீப்பந்த வெளிச்சத்திலும் அழகாக தெரிந்தது.
அந்த துணியைக் கையில் எடுத்த மாமன்னர்.
ராஜேந்திரா இப்போது இதைப் படி என  அந்த வெள்ளைத் துணியைக் கொடுக்க…
தந்தையே… ஒன்றுமே இல்லையே.. வெற்றுத்துணியாகத்தானே இருக்கிறது என்றான்.
அப்படியா…..
வீரரே. அந்த தீக்கனல் பந்தத்தை என் அருகிலே கொண்டு வாருங்கள் என்று கூற.
சுவற்றோடு சுவராக  நின்றுகொண்டிருந்த அந்த வீரன். சரசரவென மாமன்னரை நோக்கி வந்தான்.
ராஜேந்திரா…
அந்த வெள்ளைத்துணியை நெருப்பு ஒளியில் காட்டு…. எனக்கூற.
கையிலிருந்த வெள்ளைத் துணியை இரு கைகளாலும் பிரித்து. விளக்கொளியில் காட்ட..
கலிங்கன் காத்திருக்க காவிரின் கலியூரில் பதினெட்டுக்காடு பத்தாயிரஞ்சேனை…
ராஜேந்திரா அதை சத்தமாக படி என மாமன்னர் கூற.
அதில் எழுதியிருந்த வார்த்தைகளை படித்தவுடன்.
சுற்றியுள்ள அனைவரும்  உடனடியாக புரியவில்லை என்றாலும் ஏதோ விபரீதமான அவசர செய்தி என்பது மட்டும் நன்றாக புரிந்தது.
மாமன்னா…
பாளைய தேசத்தின் காலாட்படை தளபதியின் வணக்கங்கள்.
இந்த குறிப்போலை பற்றி எனக்கு சிறு ஐயப்பாடு உள்ளது… என்று நல்லப்பர் கூற.
சற்று பொருங்கள் தளபதியாரே. தேசத்தின் இளவரசன். முடிசூட்டிய மன்னன் ராஜேந்திரன் பேசட்டும் என்று கூற.
தந்தையே… சில நாழிகையில் வியப்பின் உச்சத்திற்கே சென்று வந்துள்ளேன்.
அந்த பட்டுத் துணியை முதலில் பார்த்தபோது இருந்த செய்திக்கும்…
தற்போது பார்த்த செய்திக்கும்….
அப்பப்பாபா….
இவ்வளவு நுணுக்கமான ஒற்றர் படை ஒன்று இருப்பதே தற்போது தானே அறிகிறேன். என பேசிக்கொண்டிருக்க..
அங்கம்மா….. சற்று அருகே வா…. என‌ அழைக்க.
பதுமைப் பேதை பாதம் தொட்டு பூமியில் பவ்யமாக நடந்து வந்தாள்.
தந்தையே……
இக்கடித ஓலையை வாங்கி பத்திரமாக  பாதுகாத்திடு.
அவசியம் வரும் வேளையில் உம்மிடம் இருந்து பெற்றுக் கொள்கிறோம்… என்றார் மாமன்னர்.
ஆகட்டும் தந்தையே…. அங்கம்மா தேவி.
மன்னா… தாங்கள் ஓய்வெடுக்க எண்ணும் பட்சத்தில் இவ்வேளையில் இங்கே ஓய்வெடுக்க அறை ஒன்றினை தயார் செய்துள்ளேன். தயவு கூர்ந்து மறுப்பு ஏதும் கூறாமல் இன்றிரவு தங்கிவிட்டு காலை புறப்படுங்கள்…..  என்று கூறினார் தளபதி பழுவூர் நக்கன்.
அடடே…… தளபதி நக்கா.. என்னால் உங்களது உறக்கமும் வீணானது அல்லவா….. மாமன்னர்.
அல்லவே மன்னா…. உங்கள் விஜயத்தை விட உறக்கம் ஒன்றும் பெரிதல்ல எங்களுக்கு.
மாமன்னரை விடவா மதில் உறக்கம் அவசியமாகும்…
அல்லவே அல்ல…
நடுநிசி வேளையிலும் நன்றி கொண்ட நட்பாக இவ்வளவு தூரம் பயணித்து நீங்கள் வருகையில்.
உங்களை விட எங்களுக்கு உறக்கம் பெரிதல்ல மாமன்னா…. ஆதித்தன்.
பலே… பலே….
வந்தியரின் புதல்வன் என்பதை மறுமொழியில் உணர்த்துகிறாய் ஆதாத்தா..
இன்னும் கண நேரத்தில் பொழுது புலர்ந்து விடும்.
அனைவரும் போய் உறங்குங்கள்.
ராஜேந்திரா. அங்கம்மா..என்னுடைய அறைக்கு வாருங்கள் என்று சொன்னவாறு..
எழுந்து நின்ற மன்னர்..நக்கா.. எந்தப்பக்கம் என்று கேட்ட.
விருட்டென மாமன்னரின் முன்னே சென்று இடது பக்கம் திரும்ப விசாலமான பெரிய அறை ஒன்று எதிர்ப்பட.
பின்னால் வந்த தீப்பந்த விளக்கொளியில் பரந்து விரிந்த விசால அறை தென்பட்டது.
பட்டுத் துணி விரிக்கப்பட்ட பெரிய மெத்தைக்கட்டில் அலங்கரிக்க.
உள்ளே வந்த அங்கம்மாவை நோக்கி..
தாயே.. உன்னிடம் உள்ள அந்த குறிப்போலை பாத்திரமாக இருக்கட்டும். பொழுது விடிந்ததும் நான் பெற்றுக் கொள்கிறேன்.
நீங்கள் போய் ஓய்வெடுங்கள் என்று கூறியவாறு பட்டு விரித்த மெத்தையின் மேலமர்ந்து உறக்க உலகைத்தேடி பயணப்பட தொடங்கினார் மாமன்னர் அருள்மொழிவர்மன்.
பின்னால் வந்த ராஜேந்திரனும் அங்கம்மாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள. அவர்களுக்கு பின்னால் நின்று கொண்டிருந்த தளபதி நக்கன்.
இளவரசே.. இதோ இந்த அறையில் நீங்கள் ஓய்வெடுக்கவாம்‌ என்று‌ ஓர் அறையைக் காட்ட..
அங்கம்மா.. பத்திரம்.. காலையில் பார்க்கிறேன் என்று கூறியவாறு தன் அறைக்குச்சென்றான்‌ இளவரசன்.
இளவரசி. வலதுபக்கமுள்ள இந்த‌ அறை உங்களுடையது. அதற்கு அடுத்ததாக உள்ள அறையில் நாங்கள் அனைவரும் இருப்போம்.
ஏதேனும் அவசியம் என்றால் குரல் கொடுங்கள்..
ஓடோடி வரக்காத்திருக்கிறோம்… என்றான் தளபதி நக்கன்.
ஆம்.  தளபதி என்றவாறு.. இடுப்பில் செருகியிருந்த வாளை எடுத்தவாறு தன் அறையை நோக்கி நகர்ந்தாள் இளவரசி அங்கம்மா தேவி.