இந்திய சினிமா, கலை நேர்த்தியாக படமெடுக்கக்கூடிய  பல இயக்குநர்களைக் கண்டுள்ளது. ஏன் காதலுக்காகவே உருகி உருகி படம் எடுக்கக்கூடிய எத்தனையோ  இயக்குநர்களையும் நாம் இதுவரை கண்டிருக்கிறோம். ஆனால் ஒரு பெயர்…  தமிழ்ச் சினிமா ரசிகர்களின் மனதில் ஆழமாகப் பதிந்துள்ளது.

மிகப்பெரிய ஒலி பாதிப்பையும் (voice over) காதலுக்காக உருகி வழியும் கதாநாயகர்களையும் (Love) ஹாலிவுட் படங்களுக்கு நிகரான பகட்டுகளையும்  (Style)  தன் படங்கள் மூலம் உருவாக்கக்கூடியவர் ஒருவர் இங்கும் இருக்கிறார்.  இவருக்குப் பிடித்தது காதல், மற்றொன்று காவல். ஆம் அவர்தான் கௌதம்  மேனன்.

ஹாலிவுட் படங்களின் முழு பாதிப்பில் உருவான சில இயக்குநர்களின் பட்டியலில் கௌதம் மேனனை முதல் இடத்திலேயே சேர்க்கலாம். அழுக்கான  அலமாரிகளோ, தலைமுடி சிக்குபடிந்த, முகத்தில் எண்ணெய்வழியும்  கதாநாயகிகளோ, ஆங்கிலம் தெரியாதா கதாநாயகர்களோ இவரின் படங்களில்  பார்க்க முடியாது. தமிழ் சமூகத்தில் ஒட்டுமொத்தமாக மேல் தட்டு  மக்களுக்கான வாழ்வுமுறைகளில் இருந்து உருவானதுதான் கௌதமின்  படங்கள். ஏதேனும் ஒரு டிகிரி (பெரும்பாலும் மெக்கானிக்கல் என்ஜினியரின்)  முடித்த ஹிரோக்கள், நைட்டி அணியாத ஹிரோயின்கள், பிளாட்பாரமில்  காய்கறி வாங்காத அம்மாக்கள், மகன்களுக்குப் பிடித்த அப்பாக்கள், சொன்னதே திரும்பி  உரக்கச்  சொல்லும் வில்லன்கள் என்று தமிழ்ச் சினிமா இதுவரை பார்த்திராத  கதாபாத்திரங்களை கௌதமின் படங்களில் பார்க்கலாம். எடுத்த கதைக்களத்தில்  எப்போதும் தீவிர அக்கறையுடன் திரைக்கதை அமைக்கும் கௌதமிற்கு காதலை விட்டால் காவல், காவலை விட்டால் காதல்தான் இயற்கையாகவே  அமைந்துவிடுகிறது.

சில சமயம் (தயாரிப்பாளர்களின் நெருக்கடி காரணமாக) கதாநாயகன்  கதாநாயகியை தேடி செல்வதையே படமாக எடுத்து வெற்றியடைய செய்யும் ஜெகஜால கில்லாடி. கௌதம் மேனன் இயக்கிய அனைத்து படங்களைப்பற்றியும் விரிவாகப் பேசலாம் என்றாலும் முதல் மூன்று படங்களை மட்டுமே எடுத்துக்கொள்வோம். பெரும்பாலும் இந்தப் படங்களிருந்து பிரிந்து அல்லது இந்தப் படக்கதைகளின் மூலமாக சில படங்களை அவரே எடுத்துவிட்டதால் இந்த முடிவு.

மின்னலே

கௌதமின் முதல் படம். காதலியை எப்படியாவது கரம்பிடிக்க போராடும்  காதலன். இடையில் காதலிக்கான பெஸ்டியுடன் நிச்சயதார்த்தம் என  முக்கோண காதல் அமைப்பை கொண்டு உருவானப் படம், கதாநாயகன்  மாதவனுக்கு ஏற்கனவே இருந்த ப்ளே பாய் இமேஜை வைத்து எடுக்கப்பட்ட  படம் என்பதால் முழுக்க முழுக்க ஹிரோயினை கவர்வதற்காக அவர் செய்த  சின்ன சின்ன ரொமாண்டிங் சீன்கள்தான் இன்றும் 80-90’s பிறந்த பெண்களின்  ஃபேவரட் சீன்களாக உள்ளன. இசை ஹாரிஸ் ஜெயராஜ். மெல்ல மெல்ல  மனதை அவிழ்க்கும் பாடல்கள், காற்றிலே கரையும் தீம் மியூசிக்குகள் என  இசையமைப்பாளருக்கும் முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டாதால் அக்கால 80-90’s கிட்ஸ்களின் ஃபேவரட் ரிங்டோன்களில் முக்கியப் பங்குவகித்தது.  வழக்கமாக வில்லன்களுக்கு வாய்ஸ் ஓவர் கொடுப்பது கௌதமிற்கு பிடித்த  செயல். மின்னலே படத்தில் பெரிதாக வில்லன் என்று யாரும் இல்லாததால்  கௌதமின் வாய்ஸை இந்தப் படத்தில் ரசிகர்கள் மிஸ் செய்திருப்பார்கள்.  இன்றும் ஏதேனும் தமிழ் பண்டிகைகளில் ராஜ் டிவியில் இப்படத்தை  ஒளிபரப்புகிறார்கள். கௌதமின் கோடான கோடி ரசிகர்கள் கண்டிப்பாக சேனல்  மாற்றாமல் வசீகரா பாடலை கேட்பார்கள், அப்படி ஒரு டிசைன் இந்தப்  படத்திற்கு.

காக்க காக்க

கௌதம் இன்றளவும் தமிழ் சினிமாவில் தன்னைத் தனித்த இயக்குநராக  காட்டிக்கொள்ள உதவியிருக்கும் இப்படம் தமிழ் சினிமாவின் மைல்கல் என்றே  சொல்லலாம். ஆமாம் வாய்ஸ் ஓவர். கதை முன்னே ஓடிக்கொண்டிருக்கும்  கதைக்கான காட்சிகளை பின்னே கதாநாயகனோ அல்லது இயக்குநரோ விவரிக்கும் பாணி இந்தப் படத்தில் இருந்துதான் தமிழ்ச் சினிமா  இயக்குநர்களுக்கு தொற்றியதாக எண்ணிக்கொள்ளலாம். கிட்டத்தட்ட காக்கா,  நரி கதைதான் என்றாலும் கௌதமின் போலீஸ் மேஜிக் தான் திரைக்கதை.  ஹீரோ போலீஸ் ஆபிசர்,  ஹீரோயின் டீச்சர் அப்புறம் வழக்கமான வில்லன், கூடவே ஹாரிஸ் இசை  என்று  கௌதம் மேனன் ஃபுல் பார்முக்கு வந்த படம் காக்க காக்க. ஜோதிகா சூர்யாவிற்கு இடையேயான காதல் காட்சிகளுக்காகப் படம் நூறு நாட்களைத் தாண்டி ஓடியது, சூர்யாவின் சிங்க அவதாரங்களுக்கு (சிங்கம், சிங்கம்2 சிங்கம்3) சிறு முன்னோட்டமாக  பார்க்கப்பட்ட படம். இப்படத்தின்மூலம்தான் கௌதமை தமிழ் சினிமா தரமான இயக்குநர்களின் பட்டியலில் சேர்த்துக்கொண்டது.

வேட்டையாடு விளையாடு

எத்தனையோ புதுபுது விஷயங்களுக்காக இப்படத்தை தமிழ் சினிமா உலகில் முக்கியப் படமாக கருதலாம். முதல் காரணம் கமல்ஹாசன். கமல்ஹாசன் அதிகமாக நடந்த, அதாவது நடந்து நடித்த படங்களில் வேட்டையாடு விளையாடுதான் முதல் இடம் கொடுக்கப்படும். முறிந்த காதலிலிருந்து மீண்டும் ஒரு காதல் என்று ஹாலிவுட் படங்களுக்கு நிகரான மென் சோக காதல் காட்சிகள், முன்னாள் காதலியை(மனைவியை) பிரிந்த ஹீரோ, முன்னாள் கணவனை(காதலனை) இழந்த ஹீரோயின் இருவருக்கிடையேயான புது காதல். இடையில் ஒரு குழந்தை என்று கமலின் பக்குவப்பட்ட நடிப்பில் காதலை வெவ்வேறு கோணங்களில் காட்சிப்படுத்தியிருப்பார் கௌதம். இப்படத்தில் முக்கியமாக சொல்ல வேண்டியது வில்லன்கள், தமிழ் சினிமாவில் முதன்முறையாக ஓர்பால் ஈர்ப்பாளராக வில்லன்களை சித்தரிக்க முயன்று தோற்றப் படம் என்று சொல்லலாம். ஹிரோவிற்கு வித்தியாசமான ஓப்பனிங் சாங். 5 நிமிட பாடலில் ஒட்டுமொத்தமாக ஒரு படத்தையே ஓட்டிக் காண்பித்து புது முயற்சியை கையாண்டிருப்பார் கௌதம்.

கண்களுக்கு கூலிங்கிளாஸ் போடப்பட்டதுபோல ஒரு புது வெளிச்சத்தை தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகப்படுத்திய கௌதம் மேனனிற்கு பிறந்தநாள் வாழ்த்துகள்,