4.இருண்ட காலத்தின் குறிப்புகள்

 

கேரளாவில் அரசியல் தலைவர்களைக் கட்சி வேறுபாடின்றி ஜனநாயகன் என்கிற முன்னொட்டுடன் விளிப்பதுண்டு.. நேரடியாக மக்கள் தலைவர் என்கிற பொருள் இதற்குண்டு என்றாலும் ஜனநாயகச் செயல்பாடுகளுக்கு தன்னை முழுமையாக ஒப்புக்கொடுத்தவர் என்றும் பொருள்கொள்ள முடியும். என்.கே.பிரேமச்சந்திரனுக்கு இரண்டு நிலைகளிலும் பொருள் கொள்ளும் தகுதியுண்டு.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியிலுள்ள புரட்சிகர சோசலிச கட்சியைச் சேர்ந்தவரான திரு.பிரேமச்சந்திரன் 1996,1998, 2014, 2019 ஆகிய நான்குமுறை நாடாளுமன்ற மக்களவைக்கும் 2000 ஆண்டில் மாநிலங்களவைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டவர். தற்போது கொல்லம் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். 2006-2011 வரை கேரள மாநில நீர்ப்பாசனத்துறை அமைச்சராகவும் இருந்தவர்.

திரு.பிரேமச்சந்திரன் இன்றைய மக்களவையின் நட்சத்திர உரையாளர்களில் ஒருவர். அழுத்தந்திருத்தமான ஆங்கிலத்தில் தர்க்க ஒழுங்குடனும், விரிவான தகவல்களுடனும், அமையும் அவரின் பேச்சுக்கள் இன்றைய அரசிற்குச் சவாலாக ஒலிப்பவை. தனது உரையை அவர் தொகுத்து முன்வைக்கும் விதமும் அத்தனை நேர்த்தியானது. ஒரு தனிக்கட்சியின் ஒற்றை உறுப்பினர் என்பதால் அநேகமாக எல்லா முக்கிய விவாதங்களிலும் பங்கேற்று பேசும் வாய்ப்பைக் குறுகிய நேரமாயினும் அதைச் செறிவோடு பயன்படுத்தி ஒரு விவாதத்தின் போக்கைத் திருத்தியமைக்கும் ஆற்றலைப் பெற்றவர். மூத்த உறுப்பினர்களில் ஒருவர் என்பதால் சபாநாயகர் இல்லாத நேரத்தில் அவையை நடத்தும் மாற்றுத்தலைவராகவும் அவ்வப்போது செயல்படுகிறார். திரு.பிரேமச்சந்திரனின் உரைகள் கட்சி வேறுபாடுகளுக்கப்பால் அனைத்து உறுப்பினர்களாலும் கவனிக்கப்பட்டுச் சிலாகிக்கப்படுகின்றன. ஒருபோதும் நிதானம் தவறாத தர்க்க ஒழுங்கிலிருந்து விலகாத அவரின் உரைகளை நான் எப்போதும் ஆர்வத்துடன் பார்க்கிறேன்.

இன்றைய அரசிற்கு நாடாளுமன்ற விவாதங்களும் அதில் முன்வைக்கப்படும் மாற்றுப் பார்வைகளும் ஒரு பொருட்டல்ல. தனக்கிருக்கும் பெரும்பான்மையை ஒரு சிவில் சமூக அரசிற்கான மனவிரிவின்றி குறுகிய நோக்கில் பயன்படுத்தும் ஆட்சியாளர்கள் கொண்ட மன்றத்தில் திரு.என்.கே.பிரேமச்சந்திரன் எதற்காக இப்படி மெனக்கெடுகிறார்? என்றும் கூட அடிக்கடி தோன்றும்..

காஷ்மீருக்கு சிறப்புத்தகுதி வழங்கும் 370 பிரிவு நீக்கம் எப்படி அரசமைப்பு சட்டத்தின் அடிப்படைக்கு விரோதமானது என்பதையும், எதிர்த்தும், முத்தலாக் தடைச்சட்டத்தின் முரண்பாடுகளை அம்பலப்படுத்தியும், குடியுரிமை சட்டத்திருத்தத்தை எதிர்த்தும், நாடாளுமன்றத்தில் ஒலித்த அர்த்தப்பூர்வமான குரல்களில் ஒன்று திரு.பிரேமச்சந்திரனுடையது. அவரின் ஒவ்வொரு உரையும் தென்னிந்திய, இந்திய ஜனநாயகத்திற்கு காட்டும் வரலாற்றுப்பூர்வமான மாற்றுப்பார்வையாக இருக்கிறது. வெறும் உணர்ச்சிகரமான அறிவின் சுவடற்ற கூச்சல்களுக்குச் சவாலாக, அறைக்கூவலாக இருக்கிறது.

பாராளுமன்ற ஜனநாயகத்தின் அர்த்தம் அது எவ்வளவு தூரம் தன்னைத் தேர்ந்தெடுத்த சமூகத்தின் வருங்காலத்தின்மீது பொறுப்போடும் அக்கறையோடும் சிந்திக்கிறோம் என்பதில் துலக்கம் பெறுகிறது. இருண்டகாலத்தின் விடியல் ஒரே கணத்தில் நிகழ்ந்துவிடுவதில்லை. ஓராயிரம் சிறு சுடர்கள் இணைந்தே அவ்விருளை விரட்டுகின்றன. திரு.பிரேமச்சத்திரன் அத்தகைய சுடர்களில் ஒருவர்.

எதற்காக மெனக்கெடுகிறார் என்கிற முந்தைய எனது சந்தேகத்திற்கான விடை அவர் வாழையடி வாழையென தழைக்கும் எதிர்கால சந்ததியின் மீதான அக்கறையிலும் நம்பிக்கையிலும் இயங்குகிறார் என்பதாலாக இருக்கலாம்..

ஒருவேளை ‘காதிருப்பவன் கேட்கக்கடவன்’ என்கிற விவிலியத்தின் சொற்களையும் அவர் படித்திருக்கக்கூடும்.

திரு. பிரேமச்சந்திரனின் உரைகள் சிலவற்றின் இணைப்புகள்:

முந்தைய தொடர்கள்:

3. காதலெனும் பகல் கனவு – https://bit.ly/3b9RZ4s
2. சாண் ஏறிய தமிழும்..! முழம் சறுக்கிய ஆதீனமும்..!- https://bit.ly/2WsCn8i
1. சிறப்பு வேளாண் மண்டலம் எனும் நாடகம் – https://bit.ly/2TZVRzg

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. தூய்மைப்பணியாளர்கள் மீதான போலி நன்றியுணர்வு-இரா.முருகானந்தம்
  2. ஊரடங்கு நெருக்கடியும், உலகளாவிய நெருக்கடியும்- இரா.முருகானந்தம்
  3. அரசியல் நோயும்! நோயின் அரசியலும்! - இரா.முருகானந்தம்
  4. நிலை மாறும் உலகம் - இரா.முருகானந்தம்
  5. காதலெனும் பகல் கனவு - இரா.முருகானந்தம்
  6. சாண் ஏறிய தமிழும்..! முழம் சறுக்கிய ஆதீனமும்..! - இரா.முருகானந்தம்
  7. சிறப்பு வேளாண் மண்டலம் எனும் நாடகம் - இரா.முருகானந்தம்