1. இருண்ட காலத்தின் குறிப்புகள்

நான் அடிப்படையில் ஒரு விவசாயசங்க செயல்பாட்டாளன்.. இன்றும் கூட..

ஆனால் இது சற்று சிக்கலான அடையாளம்.. நீங்கள் இதற்கு வேளாண்மையின் சமகால சவால்களுக்கு முகம் கொடுக்க நவீன சிந்தனைகளுக்கும் உலகலாவிய சூழலின் புரிதலில் இதை அணுக முயல்வது ஆகியவை அறவே இல்லாமல்தான் இந்த அடையாளத்தை வெற்றிகரமாக தக்கவைக்க முடியும் என்கிற விநோதமான சூழல் இங்கு நிலவுகிறது.

இந்தியா, கிராமங்களில் வாழ்கிறது என்கிற காந்தியின் பழைய கூற்றைத் தமிழகத்தின் பெருநகரில் இருந்துகொண்டு சமூக வலைத்தளங்களில் கூவுபவர்களுக்கு எந்த நிதர்சனமும் தெரியாது. கூடவே விவசாயத்தின்மீது மெய்யான ஆர்வமும் நன்மதிப்பும் ஒரு துளியும் உள்ளூர இருக்காது… சுயமுரண்களால் நிரம்பிய இவர்களின் அன்றாட முன்னுரிமைகளில் விவசாயப் பிரச்சனைகளின்பால் புரிதல்பெற எந்த எத்தனிப்பையும் காண இயலாது. உண்மையில் தமிழகம் இன்று கிராமத்திலோ விவசாயத்திலோ வாழவில்லை. கடந்த 20 வருடங்களில் தமிழகமும் கேரளமும் வேகாமாக நகர்மயமாகிவரும் மாநிலங்கள். தமிழகத்தின் பெரும்பாலான கிராமங்கள் நகரங்களின் சிறு வடிவங்கள். நகரங்களில் பேரளவில் கிடைக்கும் பொருட்கள் கிராமங்களில் சற்று குறைவான வடிவங்களில் கிடைக்கும். நவீன தமிழகம் வேகமாக பொருளியல் காரணிகள் விவசாயத்தை மையமிட்டு இல்லை. தமிழகத்தின் மொத்த வளர்ச்சி அளவீட்டில் (GDP) சேவைத்துறை, உற்பத்தித்துறைக்கு அடுத்து சுமார் 16% மட்டுமே இதன் பங்களிப்பு…

இந்த நிலையில் தமிழக விவசாயிகளின் பிரச்சனைகள் என விவசாயசங்கங்கள் முன்வைப்பவை யாவும் பரந்துபட்ட பார்வைகளை உள்ளடக்கிய புரிதலுடன் முன்வைக்கப்படுவதில்லை.

அதன் பலவீனங்களில் அழகாக ஆட்சியாளர்கள் புகுந்துகொள்வது எளிது. ஏன் எடப்பாடிக்கே சுலபம் எனும் அளவிற்கு.. அப்படித்தான் காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண்மண்டலமாக அறிவித்து விவசாயதோழனாக ஒரேநாளில் உருவெடுத்துவிட்டார். இத்தனைக்கும் உயர் மின் கோபுரங்களால் பாதிக்கப்படும் விவசாயிகள் போராட்டத்தை நசுக்க பொய்வழக்கு போலீஸ் அடக்குமுறை என சகல அஸ்திரங்களையும் பிரயோகித்து வருகிறது.

சிறுகுறு விவசாயிகள் மட்டுமின்றி அனைத்து விவசாயிகளின் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து அந்தவழக்கையும் ஊறப்போட்டு வைத்திருப்பதும் இதே அரசுதான். இத்தனைக்கும் இதற்கு அரசிற்குக் கூடுதலாக ஆகும் செலவு வெறும் 1400 கோடி. விவசாய நிலங்களில் அத்துமீறி எட்டுவழிச்சாலை அமைப்பதற்காக இந்த அரசு ஆடிய அதிகார ஆட்டங்கள் வெகுநாள் முன்பு நடந்ததல்ல.

மேலும் இந்த அறிவிப்பிற்கு ஒருநாள் முன்பு தமிழகத்தில் அதே காவிரி டெல்டாவின் ஒருபகுதியான கடலூர் மாவட்டத்தில் மாவட்டங்களில் பெட்ரோ கெமிக்கல் தொழில் பூங்கா அமைக்க சுமார் 50ஆயிரம் கோடி முதலீடு செய்வது குறித்து ஹால்டியா பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனத்தலைவர் புரந்தன் சாட்டர்ஜி முதல்வரை சந்தித்து ஆலோசித்தார்.. இதே எடப்பாடி அரசு 2017 ஜூலை 19இல் கடலூர் நாகப்பட்டிணம் மாவட்டங்களில் பெட்ரோலிய ரசாயண தொழில் மண்டலம் அமைக்க 45 கிராமங்களில் 57,500 ஏக்கர் நிலம் கையகப்படுத்த வெளியிட்ட குறிப்பாணை அப்படியேதான் இருக்கிறது.

மேலும் பாதுகாக்கப்பட்ட வேளாண்மண்டலம் என்பதற்கான கொள்கை வரையறைகளே கிடையாது. மேலும் பாதுகாக்கப்பட்ட மண்டலங்கள் என்பவை மக்கள் அடர்ந்து வாழாத வனங்கள் மற்றும் கடல் பரப்புகளுக்கே பொருந்தும். அதிலும் பல பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் வாழும் மலைவாழ் மக்கள் வனத்துறையினால் தங்களின் இயல்பான வாழ்க்கை எவ்வளவு நெருக்கடியாக மாறியிருக்கிறது என்பதை பேசும் நூற்றுக்கணக்கான துயரக்கதைகள் இருக்கிறது.. இருப்பினும் வனப்பரப்புகளை பாதுகாப்பது அரியவகை உயிரினங்களைப் பாதுகாக்கும் பல்லுயிரிய சூழலின் அவசியம் ஆகியவற்றால் இது தவிர்க்க இயலாத ஒன்று என்பதால் இதை ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது..

ஆனால் மக்கள் நெருக்கமுள்ள வேளாண்மை நடைபெறும் இடங்களை அப்படி வரையறுக்கவே இயலாது.. மேலும் ஒரு சிறிய தொழில் என்றால்கூட அரசின் அனுமதி பெற அதிகார வர்க்கத்திடம் அலைவதும், அதற்காக தண்டமாக லஞ்சம் அழுவதுமே எஞ்சும். இந்த அறிவிப்பை அவசரமாக வரவேற்ற விவசாயசங்க தலைவர்கள் நான் மேற்சொன்ன வரையறையிலிருந்து இம்மி பிசகாத மேதாவிகள் என்பதை மெய்ப்பித்திருக்கிறார்கள்..

ஹைட்ரோ கார்பன் எடுப்பதைத் தடுப்பதற்கு உள்ள அனுமதியை ரத்து செய்வதும் அதற்கு அனுமதி அளிப்பதில்லை என கொள்கை முடிவெடுப்துமான நேரடியான எளிய நடைமுறைகள் இருக்கையில் எதற்கு இந்த நாடக அறிவிப்பு..?

எதைத்தின்றால் பித்தம் தெளியும்? எனத்தெரியாமல் கண்டதையும் மெல்லும் சமூகச்சூழலில் எடப்பாடிகள் ராஜ்யத்தில் எப்போதும் உய்யலாலாதான்..

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. தூய்மைப்பணியாளர்கள் மீதான போலி நன்றியுணர்வு-இரா.முருகானந்தம்
  2. ஊரடங்கு நெருக்கடியும், உலகளாவிய நெருக்கடியும்- இரா.முருகானந்தம்
  3. அரசியல் நோயும்! நோயின் அரசியலும்! - இரா.முருகானந்தம்
  4. நிலை மாறும் உலகம் - இரா.முருகானந்தம்
  5. ஜனநாயகன் பிரேமச்சந்திரன் - இரா.முருகானந்தம்
  6. காதலெனும் பகல் கனவு - இரா.முருகானந்தம்
  7. சாண் ஏறிய தமிழும்..! முழம் சறுக்கிய ஆதீனமும்..! - இரா.முருகானந்தம்