6.இருண்ட காலத்தின் குறிப்புகள்

சென்ற ஜனவரியில் COVID-19 நோய் சீனாவில் பரவத்தொடங்கியபோது இது உலகையே முடங்கச் செய்யும் என யாரும் நினைத்திருக்கவில்லை. நாள்தோறும் இந்த நோய்க்கு எதிரான சீனாவின் மருத்துவப் போராட்டங்கள் குறித்த செய்திகள் ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் பரவலாக விவாதிக்கப்பட்டாலும் ஒரு வேடிக்கை உணர்வுடனே அணுகப்பட்டது.. மெல்ல அது தென்கொரியாவிற்கும் ஜப்பானுக்கும் பரவி ஐரோப்பாவிற்கும் அமெரிக்காவிற்கும் பரவத்தொடங்கி இன்று உலகலாவிய கொள்ளைநோயாக உருப்பெற்றிருக்கிறது.

கடந்த பத்தாண்டுகளில் ஒப்புக்கேனும் உலகளாவிய நலன்களுக்காகப் பேசும் அரசியல் கைவிடப்பட்டது. சிறந்த தலைமை என்பது மானுட மேன்மைக்காக சிந்திப்பது என்கிற கருத்து மதிப்பிழந்து தத்தமது தேசத்தின் நலன் தனது வர்க்கத்தின் நலன், தனது குழுவின் நலன், தனது குடும்பத்தின் நலன், தனது தனிப்பட்ட நலன் என்கிற மேலும் மேலும் மீச்சிறு வடிவத்திற்குள் பொது உளவியல் கட்டமைக்கப்பட்டது. இதன் விளைவாக ஹிட்லரோடு் முடிந்து போயிருந்த எதிர்மறை தேசியவாதம் புத்துயிர்ப்பைப் பெற்றது. இவ்வகை தேசியவாத அரசியலின் கச்சாப்பொருளாக தனிமனித சுயநலமே! அது தனது தேசத்தின் ஒருபிரிவினரை மற்றமையாக கட்டமைப்பதன் வழியே உருவானது.

தன்னை சுற்றிவாழும் ஒருபிரிவினரை எதிரியாக உருவகித்து அவர்களை தேசநலனில் அக்கறையற்றவர்கள் என்கிற கருத்தை ஒரு பொது உளவியலாக வளர்த்தெடுப்பது இந்தத் தேசியவாதத்தின் இயல்பு.

ஜனநாயக யுகம் துவங்கிய பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலும் இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்திலும் உலகம் முழுவதும் உருவான தேசியவாத அலையில் நவீன ஜனநாயக யுகம் துவங்கியது. அன்று ஐரோப்பிய நாடுகளின் காலனியாதிக்கத்திலிருந்து விடுதலையை முன்வைத்து மூன்றாம் உலக நாடுகளில் உருவான தேசியவாதம் உலகின் அரசியல் எல்லைகளைக் கணிசமாக திருத்தி அமைத்தது. முடிவில் உலகின் மூன்றில் ஒருபங்கு நிலப்பரப்பை வைத்திருந்த பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் தற்போதைய வடிவத்திற்குச் சுருங்கியது. இன்னும் பல ஐரோப்பிய நாடுகளும்கூட. அதே காலகட்டத்தில் தனது தேச எல்லைகளை விரிவுபடுத்தும் இன்னொரு தேசியவாதம் ஜெர்மனியிலும் இத்தாலியிலும் உருவானது. சிறுபான்மை மதக்குழுவினரான யூதர்களை மற்றமையாக கற்பித்து உருவான எதிர்மறை தேசியவாதம் வரலாற்றில் மானுடத்தின் இழிவின் சாட்சியாக பலலட்சம் மக்களைப் பலிகொண்டு பாஸிசம், நாசிசம் என்கிற பெயர்களில் வரலாற்றில் நிலைகொண்டது.

பிறகு அமெரிக்கா மற்றும் சோவியத் யூனியன் எனும் இருதுருவ அரசியல் பலமுறை போர்களுக்கு நெருக்கமாகச் சென்றாலும் ஒருவித உலகளாவிய அழுத்தத்தால் தவிர்க்கப்பட்டது.

அந்த அழுத்தத்தை இருநூறாண்டுகாலம் காலனி ஆட்சியிலிருந்து பஞ்சத்தாலும் பட்டினியாலும் கொள்ளைநோய்களாலும் நைந்து போயிருந்த தேசம் ஒன்றின் தலைவனான ஜவஹர்லால் நேரு எனும் மனிதரால் உருவான அணிசேரா இயக்கத்தால் விளைந்தது. மற்றமையை உருவாக்காமல் எல்லோரையும் உள்ளடக்கிய நேர்மறை தேசியவாதம்.. பல மத மொழி இன பண்பாட்டு குழுக்களுக்கும் இடமளித்து பரஸ்பரம் இருந்த அவநம்பிக்கையை வன்மத்தை தனது அரவணைக்கும் இயல்பால் நெகிழ்த்தி இந்த தேசியவாதத்தை உருவாக்கினார் நேரு.

அந்த அரவணைக்கும் இயல்பால் தனது தேசியவாதத்தை சர்வதேசிய மானுடப் பொதுநோக்கின் ஒரு பகுதியாகவும் வெற்றிகரமாக நிறுவினார். அது பலகாலம் உலக அரசியலில் மூன்றாம் உலகநாடுகளின் மனசாட்சியாக இருபெரும் வல்லரசுகளிடையே நின்று ஒட்டுமொத்த மனிகுலத்தின் அமைதிக்காகவும் சகவாழ்வுக்காகவும் பேசியது.

பனிப்போர் காலத்திற்குபின் சோவியத் யூனியன் சிதறுண்டு போனபின் அமெரிக்கா தனது நலன்களுக்காக உலகின் பலப் பகுதிகளில் மறைமுக ஆக்கிரமிப்பை நிகழ்த்தினாலும், ஒபாமா காலம் வரையேனும் ஏதோ ஒருவகையில் உலகத்தலைமை என்கிற பொருப்பு மனநிலை அமெரிக்காவிற்கு குறியீட்டளவிலேனும் இருந்தது. ட்ரம்பின் தேர்தல் வெற்றி அமெரிக்கர்களிடையே ஒரு பிரிவினரை (கறுப்பினத்தவர், இஸ்லாமியர்கள், தாராளவாதிகள் ஆகியோரை) மற்றமையாக கட்டமைத்ததன் வழியே பெற்றது.

இந்தியாவில் மோடியின் வருகைக்கும் எதிர்மறை தேசியவாதமே ஆதாரம்.

இது ஒரு சமூகத்தின் வரலாற்றிவையும் மானுடப் பொதுநோக்கையும் நிர்மூலமாக்கி அதை அடித்தளமாகக் கொண்டு உருவாக்கப்படுவது. அதனால் இதில் மனவிரிவுக்கோ, மானுடம் குறித்த பொது அக்கறைக்கோ இடமில்லை.. எனவே எந்த உலகலாவிய பிரச்சனையையும் தேச எல்லைகளுக்கப்பால் வைத்து அணுகும் பண்பும் இல்லை..

உலக சுகாதார அமைப்பு சர்வதேச அமைப்புகள் இந்த முரண்களைக் கையாள இயலாமல் திணறுகின்றன. அமெரிக்க இராணுவமே இந்த நோய்க்கிருமியை பரப்பியது என சீன வெளியுறவுத்துறை அதிகாரி தெரிவித்ததும், பதிலுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கொரோனோவை சீனா வைரஸ் எனக் குறிப்பிட்டதையும் இங்கு கவனத்திலெடுத்தால் நாம் இந்த முரண்களின் வீரியத்தை யூகிக்கலாம்.

நாம் இந்த எதிர்மறை தேசியவாதத்தின் ஆதார விசைகளைப்பற்றி பேசியாக வேண்டிய சூழலை இந்த மருத்துவ பேரிடர் உருவாக்கியிருக்கிறது.. இது பலகாலமாகவே சமூகஜனநாயக சிந்தனையாளர்களால் முன்வைக்கப்பட்ட விசயம்தான்.. இந்த சூழல் அதற்கான அவசியத்தை சற்று வலுவாக உணர்த்துகிறது..

அது அடிப்படை சுகாதாரத்திற்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிப்பதே.. இதற்கும் நாம் முந்தைய பத்திகளில் பேசியவைக்குமான தொடர்பு என்னவெனில் எதிர்மறை தேசியவாதத்தின் மையவிசை ராணுவவாதம்.. ராணுவவலிமையை பறைசாற்றுவது, அதை அரசியல் தளத்திற்கு விரிவுபடுத்துவதே எதிர்மறை தேசியவாதம்..

மோடியின் தவறான அரசியல் கொள்கைமுடிவுகளுக்கள் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களை மோடியின் ஆதரவுக்குழுக்கள் எப்போதும் ராணுவத்தை துணைக்கழைப்பதைக் கவனிக்க வேண்டும்.. பணமதிப்பு நீக்கம் போன்ற ஒரு பொருளியல் முடிவை மக்கள் வங்கிகளில் அலைமோதியதையும் பலர் அதில் இறந்ததையும் விமர்சித்தபோது எல்லையில் ராணுவவீரர்கள் நிற்கவில்லையா? என எழுப்பப்பட்ட கேள்விக்கான என்ன பொருள் என்றால் எதிர்மறை தேசியவாதத்தின் கச்சாப்பொருள் ராணுவவாதமே..

கடந்த சில ஆண்டுகளில் பாதுகாப்புத்துறைக்கு ஒதுக்கப்படும் நிதி ஒதுக்கீடு பெருமளவு அதிகரித்தே வருகிறது.. கடந்த 2019-20 நிதி ஆண்டில் பாதுகாப்புத்துறைக்கான ஒதுக்கீடு ரூ.3,39,569 கோடி.. இது மத்திய அரசின் மூலதனச்செலவில் 31.97% ஆகும். இது 2020-21 நிதி ஆண்டில் ரூ.4,71,378 கோடி.

இதே ஆண்டுகளில் 2019-20இல் சுகாதாரத்துக்கான நிதி ஒதுக்கீடு ரூ.62,398 கோடி 2020-21இல் ரூ.69,000 கோடி

மோடி அரசு வருவதற்கு முன்பும் பாதுகாப்புத்துறைக்கான ஒதுக்கீடு அதிகம்தான் என்றாலும் ஒரே நிதி ஆண்டில் இவ்வளவு உயர்வு ஏற்பட்டதில்லை. காஷ்மீரின் பாதுகாப்பிற்கான செலவு மட்டும் ரூ.5000 கோடியிலிருந்து ரூ.20000 கோடியாக உயர்ந்தது. ஆனால் பாகிஸ்தான் கட்டுப்பாட்டு காஷ்மீரிலிருந்து ஒரு கையகல நிலப்பரப்புகூட மீட்கப்படவில்லை.

இந்த நோய் பரவல் இந்த ராணுவமைய அரசியலை அர்த்தமிழக்கச் செய்திருக்கின்றன. போரைத் தாண்டிய பேராபத்துகள் உள்ளதை பொதுப்புத்திக்கு உணர்த்தியுள்ளன. உலகின் மாபெரும் ராணுவலிமையுள்ள நாடுகளாலும் இந்த கண்ணுக்குப் புலப்படாத எதிரி தனது மக்கள் திரள்மீது நிகழ்த்திவரும் பேரழிவை தவிர்க்க முடியவில்லை.. படைபரிவாரங்கள் உதவவில்லை.. மருத்துவர்களும் செவிலியர்களும் தூய்மைப்பணியாளர்களுமே இந்த உலகளாவிய சுகாராதரப்பேரிடரின் முன்களவீரர்களாக போரிட்டு வருகிறார்கள்.. நவீன ஆயுதங்களில் நமது பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுகிறது என்கிற ராணுவவாத அரசியல் தலைமைகளின் அறைகூவல்கள் ஒரு நவீன உருப்பெருக்கியில் 2 லட்சம்முறை பெரிதாக்கினால் மட்டுமே தெரியக்கூடிய கிருமியின் முன் அம்மணமாக நிற்கின்றன. வாய்ச்சொல் வீரர்களின் கற்பிதங்களில் மட்டுமே இனி வண்டி ஓட்ட முடியாது. ஒரு வரலாற்றுணர்வில்லாத மானுடப் பொதுநோக்கமற்ற அரசியல் எத்தனை உள்ளீடற்றது என்பதை உணர்த்தும் பாடத்தை ஒரு நோய்கிருமி நமக்கு கற்றுத்தங்திருக்கிறது..

நாம் நமது அரசியலை சமூகநலனிலிருந்து துவங்கி அதை அனைவரையும் உள்ளடக்கும் நேர்மறை தேசியவாதமாகவும், அதை சர்வதேச மானுடப் பொதுநோக்காகவும் விரிவுபடுத்தி வளர்த்தெடுக்க வேண்டும்.. ஏனெனில் இனி நாம் எதிர்கொள்ள நேரும் எதிரிகள் ராணுவ பலத்தால் எதிர்கொள்ள முடியாதவை. தேச எல்லைகளுக்குள் அடங்காதவை..

தொடரின் முந்தைய கட்டுரைகள்:

5.நிலை மாறும் உலகம் – https://bit.ly/3929B0F
4. ஜனநாயகன் பிரேமச்சந்திரன் – https://bit.ly/33voFTn
3. காதலெனும் பகல் கனவு – https://bit.ly/3b9RZ4s
2. சாண் ஏறிய தமிழும்..! முழம் சறுக்கிய ஆதீனமும்..!- https://bit.ly/2WsCn8i
1. சிறப்பு வேளாண் மண்டலம் எனும் நாடகம் – https://bit.ly/2TZVRzg

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. தூய்மைப்பணியாளர்கள் மீதான போலி நன்றியுணர்வு-இரா.முருகானந்தம்
  2. ஊரடங்கு நெருக்கடியும், உலகளாவிய நெருக்கடியும்- இரா.முருகானந்தம்
  3. நிலை மாறும் உலகம் - இரா.முருகானந்தம்
  4. ஜனநாயகன் பிரேமச்சந்திரன் - இரா.முருகானந்தம்
  5. காதலெனும் பகல் கனவு - இரா.முருகானந்தம்
  6. சாண் ஏறிய தமிழும்..! முழம் சறுக்கிய ஆதீனமும்..! - இரா.முருகானந்தம்
  7. சிறப்பு வேளாண் மண்டலம் எனும் நாடகம் - இரா.முருகானந்தம்