நாட்டில் கொரோனோ, பங்குச் சந்தை வீழ்ச்சி, சி.ஏ.ஏ, மத வன்முறை என உங்கள் தலைக்குள் ஆயிரம் பிரச்சினைகள் இருக்கலாம். ஆனால் இது எதைப்பற்றியும் கவலைப்படாமல் தங்கள் வாழ்க்கையை ஜாலியாக கொண்டு செலுத்திக்கொண்டிருப்பவர்கள்தான் அநேகம். அப்படி ஒரு சம்பவம்தான் இது.

நேற்று சென்னை காவல்துறை ஆணையரிடம் ஒரு விசித்திரமான புகார். சமீபத்தில் வெளியான ‘ ஓ மை கடவுளே ‘’ படத்தில் நடிகை வாணி போஜன் தனது செல்போன் நம்பரை பகிர்ந்துகொள்ளும் ஒரு காட்சி. நம்பர் தெளிவாக திரையில் காட்டப்படுகிறது. சினிமாவில் டம்மியாக காட்டப்பட்ட அந்த நம்பர் சென்னை மகாகவி நகரை சேர்ந்த பூபாலன் என்ற ரியல் எஸ்டேட் வர்த்தகருக்குச் சொந்தமானது. இது ஒரு விபத்தா அல்லது பட இயக்குனருக்கும் பூபாலனுக்கும் ஏதும் பிரச்சினையா தெரியவில்லை. பூபாலனுக்கு நாளெல்லாம் இடையறாதா தொலைபேசி அழைப்புகள். ‘’ ஹலோ வாணி போஜன் தானே பேசறது..? ’’ என்று. அழைப்பு மட்டுமல்ல, ’’ ஹாய்..ஹாய்..’’ வாட்ஸப்  மெசேஜ்கள் வேறு. நம்பருக்குச் சொந்தக்காரர் தனக்கு வரும் அழைப்புகளை கூட எடுக்க முடியாதபடி வெறிகொண்டு அழைத்திருக்கிறார்கள். நான் வாணிபோஜன் இல்லை என்று சொன்னால் கெட்ட வார்த்தையில் திட்டுவேறு கிடைத்திருக்கிறது. வீட்டிலிருக்கும் பெண்கள் போனை எடுத்தால் இன்னும் மோசமாக பேசியிருக்கிறார்கள். பொறுக்க முடியாமல் ’உடனடியாக படத்திலிருந்து தனது தொலைபேசி எண்ணை மறைக்க வேண்டும்’ என புகார் கொடுத்திருக்கிறார்.

பொதுவாக தொலைபேசி எண்களையோ, கார் எண்களையோ, வீட்டு முகவரிகளையோ திரைப்படங்களில் காட்டும்போது அது எந்த தனிபட்ட நபருக்கும் சொந்தமானதாக இல்லாமல் பார்த்துக்கொள்வது ஒரு அடிப்படை நெறி. அதை பெரும்பாலான இயக்குனர்கள் கடைப்பிடிக்கிறார்கள் என்ற போதும் சில சமயம் இதுபோன்ற விபத்துகள் நிகழ்ந்துவிடுகின்றன.

ஆனால் இதைவிட பெரிய விபத்து, திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரத்தின் தொலைபேசி எண்ணை அந்த நடிகையின் சொந்த தொலைபேசி எண்ணாக கருதி போன் செய்யும் மனப்பான்மைதான். இதை ஏதோ ஓரிருவர் செய்தால் ஏதோ பிறழ்வு என்று புறம் தள்ளிவிடலாம். அந்தப் புகாரின் அடிப்படையில் பார்த்தால் ஏராளமானோர் இந்த எண்ணிற்கு நடிகை வாணி போஜன் என்று நினைத்து அழைத்துள்ளனர். ஒரு சினிமா கதாபாத்திரத்தையும் நிஜ ஆளையும் பிரித்துப்பார்க்க முடியாத அளவு சினிமா பைத்தியம் முற்றிவிட்டதா?

ஆனால் தமிழர்களுக்கு இது புதிதல்ல. திரையில் நம்பியாரையும் அசோகனையும் மக்கள்  எப்படி வயிறெரிந்து சாபம் கொடுத்தார்கள் என்பதை நாம் பார்த்திருக்கிறோம். அதே திரையில் தோன்றிய நாயகர்கள் நிஜவாழ்க்கையிலும் நல்லவர்கள் என தலைவர்களாக்கி ஆளவைத்ததும் இதே மனநிலைதான். இன்றும் ரஜினி படத்தில் நல்லவர் எனவே நாட்டை அவரிடம் கொடுத்து நல்லாட்சி நடத்தச் சொல்லவேண்டும் என்பவர்களும் இருக்கிறார்கள்தானே.

ஆனால் இது சினிமா பைத்தியம் மட்டுமல்ல   ’ஸ்டாகிங்க்’ என்று சொல்லக்கூடிய பெண்களை பின்தொடரும் மனோபாவத்தின் முற்றிய நிலை என்றும் சொல்லாம். ஒரு பெண்ணை யாராவது பழிவாங்க நினைத்தால் அவர் பெயரை பாத் ரூம் சுவரில் எழுதிவைத்துவிட்டுபோவது அல்லது ஆபாசப்புகைப்படங்களுடன் அந்தப் பெண்ணின் தொலைபேசி என்ணைப் பகிர்வது என்பது போன்ற வக்கிரமான செயல்களை பலரும் தொடர்ந்து செய்துவந்திருக்கிறார்கள். அப்படி செய்பவர்களைவிட  சிக்கலானவர்கள் அந்த எண்ணிற்கு அழைத்துப் பேச முற்படுபவர்கள். அப்படி அழைக்கபப்டுபவர்கள் பேச விரும்பாவிட்டால்கூட கிடைத்த சிலநிமிட அவகாசத்தில் ஆபாசமான பேச்சுகளை உதிர்ந்த்து இன்பம் அடைபவர்கள் இருக்கிறார்கள். இன்று ஃபேஸ்புக் மூலம் காண்கிற முன்பின் அறிமுகம் இல்லாத பெண்களைக் கூட வீடியோ கால் மூலம் அழைத்துப் பேச முற்படுபவர்கள் ஏராளம். ஒரு பெண்ணின் தொலைபேசி எண் ஏற்படுத்தும் இந்த பதட்டம் ஒரு பாலியல் வறட்சி கொண்ட சமூகத்தின் மனச்சிதைவு மட்டும்தானா?

அடுத்தவர்களுடைய அந்தரங்கத்தை, கண்ணியத்தை, கெளரவத்தை மதிக்காத ஒரு மனநிலையின் வெளிப்பாடுதான் அன்னியர் ஒருவரை எப்படியும் அழைத்துப்பேசலாம் என்ற துணிச்சலைத் தருகிறது. உதாரணமாக  நாம் ஏற்காத கருத்தியல்கொண்ட ஒருவரின் எண்ணை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து அவரை தொலைபேசியில் அழைத்து   இழிவாகப்பேசத்துண்டும் மனோபாவமும் இதுதான். அப்படி எவ்வளவோ மோசமான வன்மமான மிரட்டல் அழைப்புகளை  யார் என்றே தெரியாத பலரிடமிருந்தும் நான் தொடர்ந்து பெற்றிருக்கிறேன், ஒருவருடைய எண் நம்மிடம் இருப்பதாலேயே அவரை அழைத்துப் பேசும் உரிமை தனக்கு வந்துவிட்டதாக நம்பும் மனநிலை ஏராளமானோருக்கு இருக்கிறது. வெறும் தொழில் நுட்ப ரீதியாக மட்டும் வளர்ந்து பண்பாட்டு ரீதியாக அடிமட்டத்தில் இருக்கும் ஒரு சமூகத்தின் பிரச்சினை இது.

இதில் இறுதியாகச் சொல்லவேண்டிய மற்றொன்று, யாரேன்று தெரியாத ஒரு பெண்ணை அணுகுவதற்கும் ஆக்ரமிப்பதற்குமான ஆணாதிக்க மனநிலை அவர்கள் திரை நட்சத்திரங்களாக இருந்தால் அவர்களை தங்கள் உடமையாகவே பார்க்கூடிய அளவுக்கு மூர்க்கமானதாக மாறிவிடுகிறது. திரை நட்சத்திரங்களாக இருக்கும் பெண்களுடன் அவர்கள் மானசீகமாக கொண்டிருக்கும் நெருக்கத்தை திரையில் வருகிற அவர்களது ஒரு கற்பனை தொலைபேசி எண்ணுக்குக் கூட அழைத்துப் பேச வைக்கிறது இவ்வளவு ஊடகம் வளர்ந்த காலத்திலும் கூட ஒரு நடிகை ஒரு இடத்திற்கு வருகிறார் எனில் அவரைகாண வரும் கூட்டம் குறையவே இல்லை.

இதோ இப்போது கூட கொரொனாவைபற்றி ஊரே பதறிக் கொண்டிருக்கும்போது யாரோ ஒருவர் வாணி போஜனின் எண்ணை முயற்சித்துகொண்டிருப்பார் என்பதுதான் மனித நடத்தையின் வினோதம். கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடித்துவிடலாம். இந்த பாலியல் வக்கிரத்திற்கு மருந்துகண்டுபிடிக்க முடியுமா தெரியவில்லை.