காற்றினிலே வரும் கீதம்-5

விருதிற்காக தவமிருப்போர் காலத்தில் எனக்கு கலைமாமணி விருதெல்லாம் வேண்டாம் என்று சொன்ன பழம்பெரும் பாடகர் குறித்து நினைவிற்கு வந்தது. உரிய காலத்தில் கவுரவிக்கப்படாத கலைஞன் அவர்.

கிட்டத்தட்ட தமிழ் சினிமாவில் 50 ஆண்டுகளுக்கு முன் நாடகத்துறையில் இருந்து நடிப்பிற்கு வந்து பின்பு பாடகரான அவர் குரல் கொடுக்காத கலைஞர்களே இல்லை.

 

இசைசித்தர் சிஎஸ். ஜெயராமன் நாடகங்களில்  கதாநாயகியாக வேடத்தில் (ஸ்திரி பார்ட்) நடித்த போது இந்த பாடகன் தான் கதாநாயகனாக (ராஜபார்ட்) வேடமிட்டார்.

அவரை சட்டென அடையாளம் சொல்ல ஒரு பாடல் உள்ளது. 1996ம் ஆண்டு உள்ளத்தை அள்ளித்தா படத்தில் சிற்பி இசையில் கவுண்டமணி பாடுவது போல் ஒரு பாடல் காட்சி அமைக்கப்பட்டிருக்கும். ஆனால், அந்த பாடலை கவுண்டமணியின் பின்னால் இருந்து கார்த்திக் பாடுவார்.

மாமா நீ மாமா புத்தம் புது பாட்டு
கேட்டு நீ ஏட்டு பந்த பாசம் காட்டு
குயிலுக்கு வாத்தியாரு நான் ….

இந்தப் பாட்டு ஞாபகத்தில் இருப்பவர்கள் அப்படியே, 42  ஆண்டுகள் பின்னோக்கி போனால், “கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி” என்ற படத்தின் பாடல் ஞாபகத்திற்கு வரும்.

அப்படத்தில் காதலிக்கும் பெண்ணைக் கவர டிஆர்.ராமச்சந்திரன் பாடல் பாடுவார்.

கவியின் கனவில் வாழும் காவியமே
கருத்தில் அழகு செய்யும் ஓவியமே –  உயிர் ஓவியமே…

லிங்கப்பாவின்  இசையில் ஒலிக்கும் இந்தப் பாடலை  எழுதியது கே.டி.சந்தானம். திரைப்படத்தில்  டிஆர்.ராமச்சந்திரனுக்குப் பதிலாக, பின்னால் இருந்து பாடுபவராக நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடித்திருந்தார்.


இப்படி ஒரு படத்தில் இருவருக்கு குரல் கொடுத்த பாடகர் தான்  இந்த பதிவின் கதாநாயகன். அவர் தான், கலைமாமணி விருதெல்லாம் வேண்டாம் என ஒதுக்கிய கலைஞன் .  அவர் பெயர் விஎன்.சுந்தரம்.

அவரை இன்னும் உங்களுக்கு நெருக்கமாக அறிமுகம் செய்யலாம் என நினைக்கிறேன். “வீரபாண்டிய கட்டப்பொம்மன்” படத்தில் போருக்கு தயாராகும் காட்சியில் சிவாஜிகணேசன் மெய்யுருகி பாடுவது போல ஒரு பாடல்,  ஞாபகத்திற்கு வருகிறதா?

வெற்றி வடிவேலனே சக்தி உமைபாலனே
வீரம் விளைத்த குகனே
உற்றதொரு படை வெல்ல
தோளிலும் நெஞ்சிலும்
ஓங்கிடும் வளவை அருள்வாய்
மனங்கனிந் தருளவேல் முருகா
புள்ளி மயிலேறும் மால்மருகா முருகா…

என சிவாஜி பாடும் பாடலைப் பாடியவர் தான் விஎன். சுந்தரம். அவருடன் இணைந்து பாடியவர் வரலட்சுமி. சுந்தரத்திற்கு சொந்த ஊர்  தஞ்சாவூர் மாவட்ட கிராமத்தில் உள்ள விகலூர். முறைப்படி சங்கீதம் கற்காதவர், கேள்வி ஞானத்தில் இசைமணியாய் மாறியவர்.  அவரது பெயர் ஆலாஸ்ய சுந்தரம் . நாடகத்திற்காக தனது பெயரை விஎன்.சுந்தரம் என பின்பு மாற்றிக் கொண்டார்.

ஏழு வயதிலே சுதி தப்பாது பாடப்பயிற்சி எடுத்த சுந்தரம், நாதஸ்வர சக்கரவர்த்திகளான திருவெண்காடு சுப்பிரமணியபிள்ளை, திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை ஆகியோரின் இசை கேட்டு  வளர்ந்தவர்.

முதலில்  நடராஜ கான சபாவிலும்,  பின்பு மதுரை பாலவினோத சங்கீத சபாவிலும் சேர்ந்து நடிக்க ஆரம்பித்தார். அற்புதமான குரல் வளம் கொண்ட சுந்தரம் நாடகங்களில் பாடும் பாடலால் புகழடைந்தார். அவரது அற்புதமான தோற்றம் பல நாடகங்களில் அவருக்கு கதாநாயகன் அந்தஸ்தை பெற்றுத் தந்தது.

அவரின் பாடும் திறனைக் கண்டு வியந்த மதுரகவி பாஸ்கரதாஸ், சினிமாவில் நடிக்க உதவி செய்தார். அவர்   உதவியால் 1934ம் ஆண்டு “மார்க்கண்டேயர்” என்ற படத்தின் மூலம்  விஎன். சுந்தரம்  நடிகரானார். அபாரமாக பாடும் அவரது திறனால்  பட்டினத்தார், சந்தரஹாசன், சுந்தரமூர்த்தி நாயனார், கண்ணப்ப நாயனார், சங்கராச்சாரியார், சுபத்ரா அர்ஜுன மணிமான், ராஜசூயம், தள அமராவதி படங்களில் முக்கிய வேடமேற்றார்.

சினிமாவில் தியாகராஜ பாகவர்,கிட்டப்பா, டிஆர்.மகாலிங்கம் போன்ற ஜாம்பாவான்கள்  கொலுவீற்றிருந்த காலத்தில் தனது வித்தியாசமான குரலால் இசை ரசிகர்களை விஎன்.சுந்தரம் மகிழ்வித்தார்.

நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடித்த படத்திலேயே அதிக பாடல் உள்ள படம் “அம்பிகாபதி”. இப்படத்தில் 28 பாடல்கள் இடம் பெற்றன. அதில் சுந்தரம் 4 பாடல்களைப் பாடியுள்ளார். அவர் பாடிய,” என்னரும் நலத்தினால் இணையில் கண்ணோடு கண் இமை” என்ற சங்கீதம் ததும்பும் இந்தப் பாடலைக் கேட்டுக் கொண்டேயிருக்கலாம்.

மாமன்னர்கள் மருது சகோதரர்களின் வரலாற்றை மிகுந்த பொருட்செலவில் “சிவகங்கை சீமை” என்ற பெயரில் கவிஞர் கண்ணதாசன் தயாரித்தார்.  இந்தப் படத்தின் அனைத்துப் பாடல்களையும் அவர் தான் எழுதினார்.  இந்தப் படத்தில் விஎன்.சுந்தரம் ஒரு பாடலைப் பாடியிருப்பார். கள்வர்கள் தொல்லை குறித்து மருது சகோதரர்களிடம் புலவர் ஒருவர் முறையிடுவதுபோல எழுதப்பட்ட அந்தப் பாடல்,

 

மருவிருக்கும் கூந்தல் மனையாள் கணவன்
அருகிருக்க தாலி அறுமா – இரவுனக்குச் 
செங்கோல் இலையா? இத் தேசமெங்கும் கள்ளருக்குப்
பங்கோ, மருதுபூ பா?….

ஆனால், இந்தப் பாடலை  கமுதி நாட்டுப்புலவர் எழுதியதாக வரலாற்று ஆய்வாளர் மீ.மனோகரன் பதிவு செய்துள்ளார். கமுதியில் வாழ்ந்த புலவர் தனது மனைவியுடன் சென்று மன்னர்களைப் பாடி பரிசு பெறச் சென்ற போது, கள்வர்கள் அவர்களை வழி மறிக்கின்றனர். ஆனால், அவர்களிடம்  ஒன்றும் இல்லை. புலவரின் மனைவி கழுத்தில் கிடந்த தாலியைப் பறித்துச் செல்கிறார்கள்.  இதனால் மனம் நொந்து புலவர், மாமன்னர்களிடம் அவர் பாடிய வரிகள், சிவகங்கை சீமையில் படத்தில் விஎன்.சுந்தரம் குரலில் ஒலிக்கிறது என்று அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பாடலின் வரிகளைக் கேட்கும் போது டிஆர்.மகாலிங்கத்தின் குரலை விட மிக உச்சத்தில்  ஒலிப்பதை நீங்கள் உணர முடியும்.

பெரிய ஆச்சரியம் என்னவென்றால் டிஎஸ்.பாலையாவிற்கு விஎன்.சுந்தரம் பல பாடல்களைப் பாடியுள்ளார். “மணமகள்” படத்தில்  சிஆர்.சுப்பராமனின் இசையில் எம்எல்.வசந்தகுமாரியுடன்  அவர் இணைந்து பாடிய, “சின்னஞ்சிறு கிளியே” பாடல் புகழ்பெற்றது. பல்வேறு ராகங்கள் அமைக்கப்பட்ட இந்தப் பாடலை நீங்கள் இப்போதும் யூடியூப்பில் கேட்டு மகிழலாம்.  “தூக்கு தூக்கி” படத்தில் ராகிணியோடு டிஎஸ்.பாலையா பாடுவது போன்ற ஒரு பாடல்,

பியாரிக்கு நிம்மில் மேலே நமக்கு மஜா
நம்மில்க்கு நிம்மில் மேலே மஜா…

என்ற அந்தப் பாடலில் விஎன்.சுந்தரம் அரைகுறை தமிழ் தெரிந்த சேட்டு போல மிகச்சிறப்பாக பாடியிருப்பார். அவருடன் எம்எஸ்.ராஜேஸ்வரி இணைந்து பாடியிருப்பார். டிஎஸ்.பாலையாவிற்காக “பாமா விஜயம்” படத்தில் ” வரவு எட்டணா செலவு பத்தணா” பாடலைப் பாட  விஎன்.சுந்தரத்திற்கு அழைப்பு வருகிறது. வசனத்தன்மையில் பாடல் இருந்ததால் அவர் பாட மறுத்து விட்டார். இதனால் டிஎம்.சௌந்தரராஜன் இந்தப் பாடலைப் பாடினார்.

மிகச்சிறந்த சங்கீத அறிவு கொண்ட விஎன்.சுந்தரம், ஜேபி.சந்திரபாபுவின் வெஸ்டன் இசைக்கு இணையாக கர்நாடக சங்கீதத்தை பொழிந்த படம் “பதிபக்தி”.

 ராக் ராக் ராக் ராக் அண்ட் ரோல் 
ஷேக் ஷேக் ஷேக் ஷேக் அண்ட் ரோல் 
இங்கிலீஷ் டேன்ஸ் ஒன் அண்ட் டூ அண்ட்
இண்டியன் டேன்ஸ் தை… தை… தை… தை…
சைனா டேன்ஸ் சிங் சாங் சிங் சாங்
பர்மா டேன்ஸ் டிங் டாங் டிங் டாங்
லேடி டேன்ஸ் ஜோடி டேன்ஸ்
பாடி பியூட்டிகள் பப்ளி சிட்டிகள்
பாடி ஆடிடும் டேன்ஸ்…..

என   சந்திரபாபு  கலந்து கட்டி அடிக்க, மறுபுறம் பரதக்கலைஞர்கள் நடுவே,

தில்லை அம்பலத்தே நின்று
அரகரனாம் திருநடன சபேசன்
ஆடினார் அன்றோ
அண்டம் குலுங்கிடத் தொண்டர் நடுங்கிட
நந்தி மத்தளம் எங்கும் முழங்கிட
அரங்கினில் ஆடினார் ….”

என கர்நாடக இசையில் போட்டி போட்டு பாடியிருப்பார் விஎன்.சுந்தரம். இந்தக் காட்சியில் விஎன்.சுந்தரம் குரல் அசைத்தது நம்ம டிஎஸ்.பாலையாவிற்கு தான்.

விஎன்.சுந்தரம் குரலில் எனக்கு மிகவும் பிடித்த பாடல், “நானே ராஜா” படத்தில் இடம் பெற்றது. சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த கவிஞர் குயிலன் எழுதிய இந்தப் புகழ் பெற்ற டூயட் பாடலுக்கு நடித்தவர்கள் குறித்து பதிவிடுவது அவசியம் என்றே கருதுகிறேன்.

எம்ஜிஆர் நடித்த பல படங்களில் துணை நடிகராக நடித்த பஷீர், “பராசக்தி” படத்தில் சிவாஜியின் தங்கையாக நடித்த ஸ்ரீரஞ்சனி தான் அவர்கள். ராமநாதன் இசையில் விஎன்..சுந்தரம்,பி.லீலா குரல்களில் ஒலிக்கும்

சிந்து பாடும் தென்றல் வந்து
இன்பம் பொங்க வீசுது….

என்ற அற்புத கீதத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம். குமாராராஜா, நான் கண்ட சொர்க்கம், ராஜாம்பாள், கூண்டுக்கிளி, தெனாலிராமன், மாலையிட்ட மங்கை உள்ளிட்ட ஏராளமான படங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடிய விஎன்.சுந்தரம் சினிமாவை விட்டு விலகி 1980ம் ஆண்டு வரை டிஆர்.மகாலிங்கம் நாடகக்குழுவில் நடித்தார்.

அவருக்கு  தென்னிந்திய நடிகர் சங்கம் 1990ம் ஆண்டு கலைச்செல்வம்  விருது வழங்கியது.  கலைமாமணி விருதுக்கான ஏற்பாடுகள் நடந்தபோது  வேண்டாமென மறுத்த விஎன்.சுந்தரம் சென்னையில் 2009ம் ஆண்டு  காலமானார்.

தமிழ் சினிமாவில் அச்சு அசலான தெலுங்கு சங்கீத கீர்த்தனைகள் வந்து கொண்டிருந்த நேரத்தில், தென்னாட்டு தமிழ் இசை பாரம்பரியத்தோடு தமிழ் இசையாய் ஒலித்தது விஎன்.சுந்தரத்தின் குரல் என்றால் அது மிகையில்லை.

———-

 

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. மனதின் ஆசையை தூண்டிய குரல் - ப.கவிதா குமார்
  2. சிவாஜி, ரஜினியை இயக்கியும் தோல்வியடைந்த இயக்குநர்-- ப.கவிதா குமார்
  3.  ஏழு சுவரங்களில் எத்தனைப் பாடல்:வாணி ஜெயராம் - ப.கவிதா குமார்
  4. கோழிக்கறி கேட்டதற்காக சென்சார் செய்யப்பட்ட பாடல்- ப.கவிதா குமார்
  5. வித்தியாசமான பாடல்களின்முகவரி  வி.சீத்தாராமன்- - ப.கவிதா குமார்
  6. கண்மணி சுப்பு: கவியரசு வீட்டுக்கட்டுத்தறி- ப.கவிதா குமார்
  7. வித்வான் வே.லட்சுமணன்  ஜோசியக்காரர் மட்டும்தானா? - ப.கவிதா குமார்
  8. ஏடி பூங்கொடி ஏனிந்த பார்வை: வங்கத்துக் குயில் எம்ஆர்.விஜயா - ப.கவிதா குமார்
  9. ’புதுப் பெண்ணின் மனசைத் தொட்டு போறவரே’ :கவி சீமான் கேபி. காமாட்சி- ப.கவிதா குமார்
  10. ''தங்கம் உனதங்கம் அதில் எங்கும் இசை பொங்கும்'':யார் இந்த நேதாஜி? - ப.கவிதா குமார்
  11. ஜாவர் சீத்தாராமன் சரி... அது யார் ராஜ் சீத்தாராமன்?- ப.கவிதா குமார்
  12. மனோவின் முன்னோடி ...மறக்க முடியாத பாடகர் ரமேஷ்- ப.கவிதா குமார்