காற்றினிலே வரும் கீதம்-6
யாழும் குழலும் சீரும் மிடறும்
தாழ்குரல் தண்ணுமை ஆடலொடு
இவற்றின் இசைந்த பாடல் இசையாகும்.
இசை என்றால் என்ன என ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரம் இப்படி கூறுகிறது. ஆனால் யாழ், குழல், தாளம் ஆகியவை ஒன்று சேராமலே சிலருடைய குரல்கள் சொக்க வைக்கின்றன.
தமிழ் சினிமாவின் முதல் பாடலாசிரியரான மதுரகவி பாஸ்கரதாஸ் காலத்தில் இருந்து இன்றுவரை எத்தனையோ கவிஞர்கள் எழுதிய எண்ணற்ற பாடல்களை பாடிய எண்ணற்ற பாடகர்கள், பாடகிகளில் எத்தனை பேர் மக்கள் மனதில் நிறைந்திருக்கிறார்கள்?
இதற்கு செவ்வியல் இசையான கர்நாடக சங்கீதத்திற்கு கிடைக்கக்கூடிய மரியாதை, திரைப்பாடல்களுக்கு கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. இசையறிந்தவர்களால் மட்டுமே செவ்வியல் இசையை ரசிக்க முடியும். ஆனால், திரையிசையை யார் வேண்டுமானலும் ரசிக்கலாம். செவ்வியல் இசையை விட திரையிசைக் கேட்கும் கூட்டம் தான் அதிகம். எனவே, மரியாதை என்பது சபாக்கள் தருவதில்லை, மக்களின் சபாஷ் தருபவை.
இதன் காரணமாக நூற்றாண்டு காலமாக பல பாடகர்கள், பாடகிகள் மக்களின் மனதில் நீக்கமற நிறைந்திருக்கிறார்கள். அப்படியொரு அரிதான குரல்வளம் கொண்ட பாடகியைப் பற்றி தான் இந்த பதிவு.
அவர் பிறந்தது கொல்கத்தா. இனிப்பு வகைகளில் கொல்கத்தா ரசகுல்லாவிற்கு தனியிடம் உண்டு. அது போல, எத்தனையோ பாடகிகள் மத்தியில் இவர் குரல், ஒரு மயக்கத்தை தந்ததை மறக்க முடியாது. பி.சுசீலா,எல்ஆர்.ஈஸ்வரி போன்ற பாடகிகள் கொடிக்கட்டிப் பறந்த காலத்தில் தான் இந்த பாடகியும் திரைத்துறையில் அறிமுகமானார். 5 வயதிலே அவர் முறைப்படி சங்கீதம் பயின்றார். அகில இந்திய வானொலி நடத்திய கர்நாடக இசைப்போட்டியில் ஜனாதிபதி விருதை முதன் முதலில் பெற்றவரும் அவர் தான்.
இசைத்துறையில் மிளிர வேண்டும் என்ற ஆவலுடன் கொல்கத்தாவிலிருந்து குடும்பத்துடன் சென்னைக்கு வந்த போது அவர் வயது 15. பக்தி கீர்த்தனைகளை பல்வேறு மொழியில் பாடத் தெரிந்த அந்தப் பாடகிக்கு பாட வாய்ப்பு கிடைத்த படமும் பக்திப் படம் தான்.
சமூகப்படங்களுக்கு இணையாக, ஏராளமான பொருட்செலவில் பக்தி படங்களை எடுத்துப் புகழ்பெற்ற ஏபி.நாகராஜன் இயக்கத்தில் 1970ம் ஆண்டு தனது முதல் பாடலை சீர்காழி கோவிந்தராஜன், எல்ஆர்.ஈஸ்வரி ஆகியோருடன் இணைந்து “திருமலை தென்குமரி” படத்திற்காக அந்த பாடகி பாடினார். திரையுலகில் பக்தி இசையை மணக்கச் செய்த குன்னக்குடி வைத்தியநாதன் தான் படத்திற்கு இசை.
திரிபுரசுந்தரி சீர்காழியிலே
சிவசக்தி பார்வதி கைலையிலே
வரம் தரும் கற்பகமாம் மயிலையிலே
வஞ்சமில்லா நெஞ்சில் வாழ்பவளே….
என்ற வரிகளை அந்த பாடகி உருகிப் பாடிய பாவத்தில் அத்தனை மீனாட்சி பக்தர்களும் மயங்கித் தான் போனார்கள். “மதுரை அரசாளும் மீனாட்சி” என்ற அந்த பாடல் மூலம் அந்தப் பாடகியின் பெயர் திரையிசையில் கருக்கொண்டது. இப்படத்தில் சீர்காழி கோவிந்தராஜனுடன் இணைந்து ” அழகே தமிழே நீ வாழ்க” என்ற புகழ்பெற்ற பாடலையும் பாடினார் .
திரையிசை திலகம் கேவி.மகாதேவன் இசையில் “கண்காட்சி” படத்தில் பி.ராதாவுடன் இணைந்து “குறவர் குலம் காக்கும்” பாடலையும்,” காணும் கலையெல்லாம் கண்காட்சி” பாடல்களை பாடியுள்ளார். தயாரிப்பாளர் ஜிஎன்.வேலுமணி 1972ம் ஆண்டு இயக்கிய “அன்னை அபிராமி” படத்தில் நாக தெய்வமே நாங்கள் நாடும் தெய்வமே, “சக்தி லீலை” பாடத்தில் உறங்கக் கூடாது கண்ணே மயங்கக்கூடாது ஆகிய பாடல்களைப் பாடியுள்ளார்.
பக்தி படத்தில் இத்தனை பாடகர்களைப் பாட வைக்க முடியுமா என்ற ஆச்சரியப்பட வைத்த படம் “தெய்வம்”. 1972ம் ஆண்டு வெளியான இப்படத்தில் சூலமங்கலம் ராஜலட்சுமியுடன் இணைந்து பாடிய பாடல் இன்றளவும் முருகனின் அறுபடை வீடுகளில் எதிரொலிக்கிறது.கவியரசு கண்ணதாசன் எழுதிய,
வருவான்டி தருவான்டி மலையாண்டி
அவன் வரம் வேண்டி வருவோர்க்கு அருள்வான்டி …
இந்தப் பாடல் அந்த பாடகிக்கு நல்ல பெயரை வாங்கித் தந்தது. இந்த பாடலுக்கு வாயசைத்ததோடு, திரையிலும் அந்த பாடலரசி தோன்றியிருந்தார். யார் அவர் என்று தெரிகிறதா? அவர் பெயரிலேயே தமிழகத்தில் புகழ்பெற்ற நடிகை இருக்கிறார். எம்ஜிஆர், சிவாஜிகணேசன் உள்ளிட்ட அனைத்து நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தவர், நடித்துக்கொண்டிருக்கும் புன்னகை அரசியின் பெயர் தெரிந்திருந்தால் இந்த பாடகியின் பெயரும் உங்களுக்கு தெரிந்திருக்கும். புன்னகை அரசி கேஆர்.விஜயா என்றால் அந்த பாடலரசி எம்ஆர்.விஜயா.
இவர் பாடிய ஒரு பாடலைக் கேட்டவுடன் எனக்கு “உன்னால் முடியும் தம்பி” படமும், ஜெமினி கணேசனும் ஞாபகத்திற்கு வந்து விடுவார்கள். அப்படத்தில் ஜெமினியின் பெயர் பிலஹரி மார்த்தாண்டம் பிள்ளை. பிலஹரி என்பது ஒரு புகழ்பெற்ற ராகத்தின் பெயர். இப்படத்தில் அந்த ராகத்தில் கேஜே.யேசுதாஸ் பாடிய அற்புத பாடல் ஒன்று உள்ளது.
நீ ஒன்று தான் என் சங்கீதம் – பிலஹரி
நீ ஒன்று தான் என் சங்கீதம்
குருவி தோளில் இமயம் இல்லை
குடத்து நீரில் கடலும் இல்லை
வானின் எல்லை ஆடில் இல்லை
நீ ஒன்று தான் என் சங்கீதம் – பிலஹரி ….
இசைஞானி இசையில் ஒலிக்கும் இப்பாடலின் ராகம் அப்படியே அந்தரத்தில் நம்மை மிதக்க வைக்கும். அப்படியான ராகத்தில் எம்ஆர்.விஜயா, பி.ராதாவுடன் இணைந்து பாடிய பாடல் தமிழகத்தில் பிரபலமானது.
தலைவா தவப்புதல்வா வருகவே உன்தன்
தாமரைத் தாள் பணிந்தேன் வாழ்கவே…
இந்தப் புகழ்பெற்ற பாடலை எழுதியவர் கே.டி. சந்தானம். அம்பிகாபதி படத்தில் அனைத்துப் பாடல்களையும் எழுதிய அற்புதமான கவிஞர் இவர். சண்டிராணி படத்திற்காக இவர் எழுதிய `வான் மீதிலே இன்பத் தேன் மாரி பெய்யுதே’ என்ற பாடல் தான் ‘மெல்லத் திறந்தது கதவு’ படத்தில் இடம் பெற்ற ‘வா வெண்ணிலா உன்னைத் தானே வானம் தேடுதே ‘ என்ற பாடலுக்கு உத்வேகத்தை தந்ததாக இசைஞானி குறிப்பிடுவார். இசைஞானிக்கு உத்வேகமூட்டிய அந்த கவிஞர் அகத்தியர் படத்தில் எழுதிய `தலைவா தவப்புதல்வா ‘பாடலின் துவக்கத்தில் ஒரு ஜதி வைத்திருப்பார்.
தத்தஜம் தத் தத்தஜம் தரிகிட தத்தஜம்
தத்தத்தத்தத் ஜம் தஜம் த ஜம் தஜம் த ஜம்..
இந்த வரிகளை எம்ஆர்.விஜயா பாடும் அழகில் மேடை அதிரும். மிக வேகமான தாளக்கட்டுடன் அமைந்த இந்தப் பாடலுக்கும் இசை குன்னக்குடி வைத்தியநாதன் தான். 1972ம் ஆண்டு “குறத்திமகன்” படத்திற்காக தங்கப்பனுடன் இணைந்து “அஞ்சாதே நீ அஞ்சாதே” என்ற பாடலை எம்ஆர்.விஜயா பாடினார்.
1973ம் ஆண்டு டிஆர்.ராமண்ணா இயக்கத்தில் வந்த “மறுபிறவி” படத்தில் இடம் பெற்ற பாடல் தான் இந்தப் பதிவை எழுத காரணமாக அமைந்தது. டிஆர்.பாப்பா இசையில் கவியரசு கண்ணதாசன் எழுதிய வரிகளுக்கு எம்ஆர். விஜயா உயிரூட்டியிருப்பார். காலத்தால் அழியாத அந்த இனிய பாடல்,
ஏடி பூங்கொடி ஏனிந்த பார்வை
கோடி கோடியோ நீ கொண்ட ஆசை
தேடி வந்த தெய்வம் யாரடி…..
இந்தப் பாடலில் ‘தெய்வம் யாரடி’ என முடிக்கும் இடத்தில் டியை எம்ஆர்.விஜயா அழுத்தி நம்மை சொக்க வைப்பார். அப்போது அந்த இடத்தில் புல்லாங்குழல் ஒலி துவங்கி நம்மை காற்றில் கரைக்கும். இப்படியான மெலடிப்பாடல்கள் சாகாவரம் பெற்றவை என்பது எவ்வளவு மெய்யான உண்மை.
நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடித்த “ராஜாராஜசோழன்” படத்தில் அத்தனை பாடல்களும் அற்புதம். குன்னக்குடி வைத்தியநாதன் இசையில் இப்படத்தில் மாதங்கள் குறித்த இந்தப்பாடலை டிஎம்.சௌந்தரராஜன், எல்ஆர்.ஈஸ்வரி, எஸ்பி.பாலசுப்ரமணியம் ஆகியோருடன் இணைந்து எம்ஆர்.விஜயா பாடியிருப்பார்.
மாதென்னை படைத்தான் உனக்காக
மாதங்கள் படைத்தான் நமக்காக
கீதங்கள் படைத்தான் இசைக்காக
காதலை படைத்தான் கணக்காக…
ஆனால், இப்பாடலைப் பாடிய எம்ஆர்.விஜயா பெயரைத் தவிர மற்ற எல்லாருடைய பெயர்களும் பாடல் இணையதளங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. 1974ம் ஆண்டு “வைரம்” படத்திற்காக “இரவு முழுதும் விருந்து வைக்கின்றேன்” என்று ஜெயலலிதாவிற்கு குரல் கொடுத்தவர் எம்ஆர்.விஜயா தான்.
தமிழ் சினிமாவில் கதாகாலட்சேப பாடல்கள் பக்தி படங்களில் மட்டுமின்றி சமூகப்படங்கள் பலவற்றில் இடம் பெற்றன. “பத்ரகாளி” படத்தில் எம்ஆர்.விஜயா கதாகாலட்சேபம் செய்திருப்பார். ” ஆனந்த பைரவி அகிலாண்ட நாயகி ” என்ற பாடலை வில்லுப்பாட்டு வடிவத்தில் குழுவினருடன் எம்ஆர்.விஜயா பாடியிருப்பார். இசைஞானி இசையில் வெளிவந்த இந்த பாடல் இசைத்தட்டில் வெளியாகவில்லை. இதன் பின் சரிகம இசைநிறுவனம் இந்த பாடலை சேர்த்தது.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் வங்காள மொழிகளில் நூற்றுக்கணக்கான எம்ஆர்.விஜயா பாடியுள்ளார். அத்துடன் இன்றளவும் இசைக்கச்சேரி நடத்தி வருகிறார். ஏராளமான ஆன்மிக இசைப்பேழைகளை அவர் வெளியிட்டுள்ளார்.
“எம்ஜிஆர் திருப்புகழ்” என்று ஸ்ரீபதி இசையில் வெளியான இசைத்தட்டில் டிஎம்.சௌந்தரராஜனுடன் இணைந்து எம்ஆர்.விஜயா பல பாடல்களைப் பாடியுள்ளார்.
இந்தப் பதிவிற்காக எம்ஆர்.விஜயா பாடிய பக்திப் பாடல்கள் பலவற்றை கேட்டு மகிழ்ந்தேன். துர்க்கை குறித்து அவர் பாடிய பாடல்கள் கேட்டுக் கொண்டேயிருக்கலாம் போலிருக்கிறது.
வீணை இசையோடு, மதவாரப்பிள்ளையாரின் , பட்டீஸ்வரம் தினம் பாடும் ஸ்வரம், தேவி துர்க்கை அவளின் திருமந்திரம், கேட்டவரம் தரும் குருசேத்திரம், பாட்டு ஸ்வரத்தில்,அரிகர நந்தினி போன்ற அற்புதமான பக்திப்பாடல்களைப் பாடிய எம்ஆர்.விஜயாவின் குரல் இனிமை தமிழ் திரையிசை உலகில் கொல்கத்தா ரசகுல்லா போன்றது என்றால் மிகையில்லை.
தொடரின் முந்தைய கட்டுரைகள்:
- மனதின் ஆசையை தூண்டிய குரல் - ப.கவிதா குமார்
- சிவாஜி, ரஜினியை இயக்கியும் தோல்வியடைந்த இயக்குநர்-- ப.கவிதா குமார்
- ஏழு சுவரங்களில் எத்தனைப் பாடல்:வாணி ஜெயராம் - ப.கவிதா குமார்
- கோழிக்கறி கேட்டதற்காக சென்சார் செய்யப்பட்ட பாடல்- ப.கவிதா குமார்
- வித்தியாசமான பாடல்களின்முகவரி வி.சீத்தாராமன்- - ப.கவிதா குமார்
- கண்மணி சுப்பு: கவியரசு வீட்டுக்கட்டுத்தறி- ப.கவிதா குமார்
- வித்வான் வே.லட்சுமணன் ஜோசியக்காரர் மட்டும்தானா? - ப.கவிதா குமார்
- தென்னாட்டு தமிழ்க்குரல் விஎன்.சுந்தரம்-ப.கவிதா குமார்
- ’புதுப் பெண்ணின் மனசைத் தொட்டு போறவரே’ :கவி சீமான் கேபி. காமாட்சி- ப.கவிதா குமார்
- ''தங்கம் உனதங்கம் அதில் எங்கும் இசை பொங்கும்'':யார் இந்த நேதாஜி? - ப.கவிதா குமார்
- ஜாவர் சீத்தாராமன் சரி... அது யார் ராஜ் சீத்தாராமன்?- ப.கவிதா குமார்
- மனோவின் முன்னோடி ...மறக்க முடியாத பாடகர் ரமேஷ்- ப.கவிதா குமார்