காற்றினிலே வரும் கீதம் – 13

இசைஞானி இளையராஜா துவக்க கால படங்களின் பாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்தேன். 1978ம் ஆண்டு அவர் இசையமைத்த அவள் ஒரு பச்சைக்குழந்தை படத்தில் இடம் பெற்ற ஒரு பாடல் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டியது.

எஸ்என்.சுரேந்தருடன் பாடிய அந்த பெண் குரல் பி.சுசீலாவின் குரல் என நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், அவரில்லை, இவர் தான் எனத் தெரிந்த போது ஆச்சரியப்பட்டுப் போனேன்.

மாலை இளம் மனதின் ஆசை தனை தூவியது… எனத் துவங்கும் இந்தப் பாடலை ப் பாடியவர் யார் தெரியுமா? பாடகி, தயாரிப்பாளர், கதை, இயக்கம் என பல்வேறு திறமைக் கொண்ட ஷோபா.

அவரின் துவக்க கால பாடல் இது. மிகப்பெரிய ஆச்சரியம் என்னவென்றால், விஜயகுமார், பவானி நடித்த இந்தப் படத்தை இயக்கியவருக்கு அது முதல் படம். அவர் பெயர் எஸ்சி.சேகர். அதாவது எஸ்ஏ.சந்திரசேகர். அவரின் மனைவி தான் பாடகி ஷோபா.

தமிழ் சினிமாவில் நடிகராக விஜய் அறிமுகமாகமான போது அவரது தாய் ஷோபா பாடிய, எல்ஓவிஇ லவ்வு மாமா, தொட்டபேட்டா ரோட்டு மேல முட்டை பரோட்டா மாதிரியான சில பாடல்களைக் கேட்டு, என்னடா இப்படிப் பாடலையே பாடுகிறார் என நினைத்தேன்.

ஆனால், அவர் பாடிய மாலை இளம் மனதின் பாடலைக் கேட்டவுடன் அவர் பாடிய பாடல்களைத் தேடத் துவங்கினேன்.

ஷோபா சந்திரசேகர் என்று அறியப்படுவதற்கு முன்பு மிகச்சிறந்த இசைக்கலைஞராக அறிமுகமானவர் ஷோபா. அவரது குடும்பமே இசை மீது காதல் கொண்டது. சென்னையில் 1948ம் ஆண்டு பிறந்த ஷோபா தனது 11 வயதில் வடபழனி முருகன் கோயில் மேடை நிகழ்ச்சியில் பாட ஆரம்பித்தார். இன்றுவரை கிட்டத்தட்ட 57 ஆண்டுகளாக ஷோபா பாடிக் கொண்டிருப்பதே மிகப்பெரிய சாதனை.

துவக்க காலத்தில் தனது சகோதரர் எஸ்என்.சுரேந்தர், சகோதரி ஷீலாவுடன் இணைந்து தனது தாய் பெயரில் லலிதாஞ்சலி என்ற பெயரில் குழுவைத் துவக்கி பாட ஆரம்பித்தார். தனது 19 வயதில் தமிழ் திரையிசையில் தனது முதல் பாடலை மெல்லிசை மன்னர் எம்எஸ்.விஸ்வநாதன் இசையில் நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடித்த இருமலர்கள் படத்தில் பாடினார்.

ஏசி.திருலோகசந்தரின் இயக்கத்தில் முக்கோணக்காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இருமலர்கள் படத்தில் சிவாஜியின் மகளாக நடித்தவர் ரோஜாரமணி. அவருடன் சிவாஜி, ஒரு பொம்மை பாடுவது போல அமைக்கப்பட்ட பாடல் தான்,

மகராஜா ஒரு மகராணி

இந்த இருவருக்கும் இவள் குட்டி ராணி….

டிஎம்.சௌந்தராஜனுடன் பொம்மையாக பாடியது மிகச்சிறந்த மிமிக்ரி கலைஞரான சதன். ரோஜாரமணிக்கு குரல் கொடுத்தவர் ஷோபா.

யாரது இங்கே மந்திரி

குட்டி ராணி வந்தா நீ எந்திரி ….

என்பது தான் அவர் தமிழ் திரையிசையில் பாடிய முதல்வரிகள். 19 வயதில் ரோஜாரமணிக்கு மட்டுல்ல, தனது 37 வயதில் மாஸ்டர் சுரேஷீக்கும் ஷோபா குரல் கொடுத்தார் என்றால் நம்ப முடிகிறதா?

எஸ்ஏ.சந்திரசேகர் 1985ம் ஆண்டு இயக்கிய படம் நீதியின் மறுபக்கம். விஜயகாந்த் நடித்த இந்த படத்திற்கு இசை இளையராஜா. இப்படத்தில் இளையராஜாவுடன் இணைந்து மாஸ்டர் சுரேஷீக்கு பாடிய பாடல் தான்

பெட்டிக்கடையிலே புட்டிருக்குது

துட்டுக்கொண்டுண்ணே வாங்கித் தின்னலாம்….

1981ம் ஆண்டு எஸ்ஏ.சந்திரசேகரன் இயக்கத்தில் சட்டம் ஒரு இருட்டறை வெளியானது. விஜயகாந்தை ஸ்டார் அந்தஸ்திற்கு கொண்டு வந்தார் இயக்குநர் எஸ்ஏ.சந்திரசேகர் தான். சங்கர் கணேஷ் இசையில் இடம் பெற்ற

பகலின் ஒரு தாகம் இரவில் அது தீரும்

பாவைகள் என்னும் பன்னீரில் ஆடும்

நேரம் இது தானே…. என்ற பாடலை ஷோபா பாடினார்.

முக்தா சுந்தர் இயக்கத்தில் 1986ம் ஆண்டு வெளியான படம் கோடைமழை. வித்யா, லெட்சுமி, ஜெய்சங்கர் நடித்த இப்படத்திற்கு இசை இசைஞானி. இப்படத்தில் ஷோபாவும், உமாரமணனும் இணைந்து பாடிய, பளபள குருவி சிறகை விரித்து பறக்குது என்று வேகமான மெட்டுக்கு போட்டி போட்டு பாடும் இவரும் பாடியிருப்பார்கள்.

தமிழ் சினிமாவில் சோசலிசம் பேசிய சில படங்களில் நட்பும் ஒன்று. பிஎஸ்.வீரப்பாவின் மகன் ஹரிஹரன் தயாரிப்பில் 1986ம் ஆண்டு வெளியான இந்த படத்தில் கார்த்திக், ராதாராவி, ஸ்ரீப்ரியா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கே.பாலச்சந்தரின் உதவியாளர் அமீர்ஜான் இயக்கத்தில் இசைஞானி இசையில் இந்தப் படத்தில் இடம் பெற்ற இந்தப் பாடல் கொஞ்சம் வித்தியாசமானது.

ஜெயச்சந்திரன் இப்படியான பாடலைப் பாடியிருக்கிறாரா என ஆச்சரியப்பட வைக்கும். அவருடன் இணைந்து ஷோபா பாடியிருப்பார்.

அடி மாடி வீட்டு மானே

உன்னைத் தேடி வந்தேன் நானே

அய்யரு வைக்கல அம்மி மிதிக்கல

கல்யாணம் தான் ஆகிப்போச்சு….

எனத் துவங்கும் பாடலை ஷோபா இப்படி முடிப்பார்.

நான் மாடிவீட்டு மானே

உன்னை தேடி வந்தேன் நானே

காதலுக்கு ஆயுள் நூறு

இந்த கண்ணீருக்கு அர்த்தம் வேறு…..

தனது கணவர் சந்திரசேகரன் இயக்கிய பல படங்களுக்கு ஷோபா கதை எழுதியதுடன் தயாரித்துள்ளார். இதன் தொடர்ச்சியாக 1991ம் ஆண்டு நண்பர்கள் என்ற படத்தை இயக்கினார். இப்படத்தை தயாரித்தவர் விஜய். ஹிந்தி மெட்டில் ஒலித்த இப்படப்பாடல்களால் படம் வெற்றி பெற்றது. நீரஜ், மம்தா குல்கர்னி நடித்த இந்த படத்தின் பாடலுக்கு இசை பாபு போஸ்.

மனோவுடன் இணைந்து ஷோபா இப்படத்தில் பாடிய, காதல் ஏன் பாவம் என்றால் ஹிட் பாடலைப் பாடினார்.

இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இசைஞானி இசையில் 1992ம் ஆண்டு இன்னிசை மழை என்ற படத்தை ஷோபா இயக்கினார். படத்தில் இடம் பெற்ற 9 பாடல்களும் கேசட் கடைகளில் எதிரொலித்துக் கொண்டிருந்தது. வாலிபக்கவிஞர் வாலி தான் பாடல்களை எழுதியிருந்தார். இப்படத்தில் எஸ்பி.பாலசுப்ரமணியத்துடன் இணைந்து ஷோபா பாடிய பாடலை இன்றளவும் மறக்க முடியாது.

தூரி தூரி மனதில் ஒரு தூரி

லாலி லாலி விழியில் ஒரு லாலி

புது தாளம் புது ராகம்

அதில் சேரும் அரங்கேறும்

வஞ்சிப் பூ என் நெஞ்சத்தில் கொஞ்சும்.

மிகச்சிறந்த பாடகியான ஷோபாவிற்கு பல ஹிட் பாடலைப் பாட இசைஞானி வாய்ப்பளித்துள்ளார். அப்படி ஒரு பாடல் 1993ம் ஆண்டு லியாகத் அலிகான் இயக்கத்தில் வெளியான கட்டளை படத்தில் இடம் பெற்றது.

சத்யராஜ், பானுப்ரியா நடித்த இந்தப் படத்தில் மனோவுடன் ஷோபா இணைந்து பாடிய டூயட் பாடல் தான் எனக்கு அவர் பாடிய பாடல்களில் மிகவும் பிடித்த பாடல்.

நம்பினேன் மகராஜனே

நம்பியது வீணில்லையே

கண்ணன் போல் கொடுத்தேயே

வண்ணப் பூஞ்சேலை

இல்லையில் அவமானம் தான்….

இதன் தொடர்ச்சியாக நடிகர் விஜயை வைத்து அவரது தந்தை சந்திரசேகர் ரசிகன், விஷ்ணு போன்ற படங்களை இயக்கினார். இப்படங்களில் எல்ஓவியி லவ்வு மாமா, தொட்டப்பெட்டா ரோட்டு மேல முட்ட பரொட்டா பாடல்களை ஷோபா பாடினார்.இதில் இரண்டாவது பாடலை மகனுடன் சேர்ந்து பாடினார்.

1997ம் ஆண்டு சிவாஜி, சரோஜாதேவி, விஜய், சிம்ரன் நடித்த ஒன்ஸ்மோர் படம் வெளியானது. பழம்பெரும் இயக்குநர் சிவி.ராஜேந்திரன் தான் இந்த படத்தை தயாரித்தார். வசனத்தை இயக்குநர் எஸ்பி.ராஜ்குமார் எழுதினார். கதை இயக்குநர் சண்முகப்பிரியன் எழுதினார். தேவா இசையில் வைரமுத்து எழுதிய இந்த பாடலை தனது மகன் விஜயுடன் இணைந்து ஷோபா பாடினார். இந்தப் பாடலில் எத்தனை லா, ளா வருகிறது எனக் கணக்குப் போட்டியே வைக்கலாம். அத்தனை லா,ளாக்கள்.

ஊர்மிளா ஊர்மிளா கண்ணிலே காதலா

நீ கண் அடிக்கும் மின்னலா ஊர்மிளா

உன் கண்ணம் தங்க ஆப்பிளா ஊர்மிளா

நீ பூத்ததென்ன பூவிலா ...

பேரரசு இயக்கத்தில் 2005ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெற்றி பெற்ற சிவகாசி படத்தில் நயன்தாரா ஓட்டு கேட்டு ஆடும்,

கோடம்பாக்கம் ஏரியா ஓட்டு கேட்டு வாறியா

குத்தாட்டம் என்னோட ஆட ரெடியா

நீ நாட்டுபுற ஆளுடா

ஆட்டம் போட்டு பாருடா

என்னாட்டம் ஆட இங்க ஆளு யாருடா ... என்ற பாடலை திப்புவுடன் இணைந்து ஷோபா பாடினார்.

மீண்டும் எஸ்ஏ.சந்திரசேகரன் இயக்கத்தில் 2006ம் ஆண்டு வெளியான நெஞ்சிருக்கும் வரை படத்தில் ஸ்ரீகாந்த் தேவா இசையில் அழகான பொண்ணு தான் பாடலை ஷோபா பாடினார்.

சி.பாலமுருகன் என்ற பெயரில் அவர் இயக்கிய முதல் கனவே படத்தில் ஸ்ரீகாந்த் தேவா இசையில் தனது சகோதரி மகனான விக்ராந்த்துடன் இணைந்து ஷோபா பாடலை பாடினார்.

பீரு வேணுமா, பிராந்தி வேணுமாபொண்ணு வேணுமா, ஜின்னு வேணுமா என்ற இந்த பாடலை எழுதியவர் இயக்குநரே தான்.

2008ம் ஆண்டு எஸ்ஏ.சந்திரசேகரன் இயக்கத்தில் வெளியான பந்தயம் படத்தில் சின்னமாமியே உன் சின்ன மகளே என்ற புகழ் பெற்ற பொப்பிசை பாடல், விஜய் ஆண்டனி இசையில் ரீமிக்ஸ் செய்யப்பட்டது. அந்த பாடலை ஷோபா தான் பாடியுள்ளார். ஆனால், பழைய பாடல் போல புதிய பாடல் இல்லை.

ஏவிஎம் தயாரிப்பில் நீண்ட நாளுக்குப் பின் 2009ம் ஆண்டு வெளியான படம் வேட்டைக்காரன். பாபுசிவன் இயக்கிய இப்படத்தில் காலம் சென்ற கவிஞர் அண்ணாமலை எழுதி குழந்தைகள் மத்தியில் சட்டென புகழ்பெற்ற பாடல்.

என் உச்சி மண்டைல சுர்ருங்குது

உன்ன நான் பார்க்கையில கிர்ருங்குது

கிட்ட நீ வந்தாலே விர்ருன்குது டர்ருன்குது

இந்தப் பாடலை கிருஷ்ண அய்யருடன் இணைந்து பாடியது ஷோபா தான்.

விஜய் படத்திலேயே பாடாவதி படமான சுறா 2010ம் ஆண்டு வெளியானது. நகைச்சுவை தோரணம் கட்டும் இயக்குநர் எஸ்பி.ராஜ்குமார் , ஹீரோ ஓரியண்டல் கதை என எழுதி அடி வாங்கிய படம்.மணிசர்மா இசையில் கவிஞர் கபிலன் எழுதிய

நான் நடந்தால் அதிரடி

என் பேச்சு சரவெடி

என்னைச் சுற்றும் காதல் கொடி நீ

பாடலை நவீனுடன் இணைந்து ஷோபா பாடினார். மிக ஹிட்டாக இந்த பாடல் அமைந்தது.

சினிமாவில் மட்டுமின்றி பக்திப்பாடல் தொகுப்பையும் வெளியிட்டுள்ள ஷோபா என்ற பாடகியின் இசைபயணம் மென்மேலும் தொடரட்டும். வாழ்த்துகள்.

                                               ==============

S inger Shoba Shoba chandrasekha

Introduction to tamil playback singer Shoba chandrasekhar by kavitha kumar

Brief Introduction to tamil playback singer Shoba chandrasekhar. She also sung devotional songs in tamil

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
 1. சிவாஜி, ரஜினியை இயக்கியும் தோல்வியடைந்த இயக்குநர்-- ப.கவிதா குமார்
 2.  ஏழு சுவரங்களில் எத்தனைப் பாடல்:வாணி ஜெயராம் - ப.கவிதா குமார்
 3. கோழிக்கறி கேட்டதற்காக சென்சார் செய்யப்பட்ட பாடல்- ப.கவிதா குமார்
 4. வித்தியாசமான பாடல்களின்முகவரி  வி.சீத்தாராமன்- - ப.கவிதா குமார்
 5. கண்மணி சுப்பு: கவியரசு வீட்டுக்கட்டுத்தறி- ப.கவிதா குமார்
 6. வித்வான் வே.லட்சுமணன்  ஜோசியக்காரர் மட்டும்தானா? - ப.கவிதா குமார்
 7. ஏடி பூங்கொடி ஏனிந்த பார்வை: வங்கத்துக் குயில் எம்ஆர்.விஜயா - ப.கவிதா குமார்
 8. தென்னாட்டு தமிழ்க்குரல்  விஎன்.சுந்தரம்-ப.கவிதா குமார்
 9. ’புதுப் பெண்ணின் மனசைத் தொட்டு போறவரே’ :கவி சீமான் கேபி. காமாட்சி- ப.கவிதா குமார்
 10. ''தங்கம் உனதங்கம் அதில் எங்கும் இசை பொங்கும்'':யார் இந்த நேதாஜி? - ப.கவிதா குமார்
 11. ஜாவர் சீத்தாராமன் சரி... அது யார் ராஜ் சீத்தாராமன்?- ப.கவிதா குமார்
 12. மனோவின் முன்னோடி ...மறக்க முடியாத பாடகர் ரமேஷ்- ப.கவிதா குமார்