சுரேஷ்குமார இந்திரஜித் குறுங்கதைகள்-21 & 22
21 ) மடம்
என் நண்பர் சரவணன் அந்த மடாதிபதியைக் காண என்னை அழைத்தபோது நான் மிகவும் தயங்கினேன். அவருக்கு நில சம்பந்தமான ஆலோசனைகள் வேண்டும் என்று என்னை அழைத்துச் செல்கிறார். எனக்கு மடாதிபதிகளை பற்றி அதிகம் தெரியாது. ஆனால் அவர்கள் நவீன சிந்தனைகள் அற்றவர்களாகவும் பழமையான ஆன்மீகக் கேள்விகளுக்கு பழமையான பதில்களை வைத்திருப்பவர்களாகவும் இருப்பவர்கள் என்பதால் எதையும் புரிய வைப்பது சிரமம் என்று நினைத்தேன். மடத்துக்குள் நுழைந்தோம். ஒரு பெரிய ஹாலில் சிம்மாசனம் போடப்பட்டிருந்தது. எதிரில் ஜமுக்காளம் விரிக்கப்பட்டிருந்தது. உள்ளறையில் டி வி ஒலிக்கும் சத்தம் கேட்டது. மடாதிபதியின் உதவியாளர் நாங்கள் வந்த தகவலைச் சொல்ல உள்ளே சென்றார். சற்று நேரத்தில் மடாதிபதி வந்தார். சிம்மாசனத்தில் அமர்ந்தார். அவருடைய உதவியாளர் எங்களைக் கீழே விழுந்து வணங்கச் சொன்னார். நான் தயங்கினேன். சரவணன் விழுந்து வணங்கினான். வேறு வழியில்லாமல் இதுதான் பழக்கம் போல என்று நினைத்து நானும் அந்த ஆணவம் பிடித்த மடாதிபதியின் முன் விழுந்து வணங்கினேன்.
சில ஆவணங்களை என்னிடம் கொடுத்தார். ” இந்தச் சொத்துக்களை கிரயம் கொடுப்பதில் என்ன பிரச்னை இருக்கிறது ” என்று கேட்டார். ” இந்த இடம் பூர்வீகச் சொத்து. உங்கள் தாய் தந்தை இறந்து விட்டதால் வாரிசுச் சான்றின்படி உங்களுக்கும், உடன் பிறந்த சகோதரிகள் மூன்று பேருக்கும் சேர்த்து நான்கு சம பங்கு உண்டு. அவர்களுக்குத் திருமணமாகி விட்டது என்றாலும் சம பங்கு உண்டு ” என்றேன். “.இது என்ன நியாயம் ” என்றார். ‘
“இதுதான் சட்டம் ” என்றேன் .”அநியாயமாக இருக்கிறதே’ என்றார்.’ நான் மட்டும் கையெழுத்துப் போட்டு விற்கவேண்டும். அதற்கு ஏற்பாடு செய்யுங்கள் ” என்றார்.
நாங்கள் வெளியே வந்தோம். இங்கே கூட்டி வந்ததற்காக என் நண்பனைக் கடிந்து கொண்டேன். ” ஒருவர் துறவி ஆகும்போது சொந்த பந்தங்கள் சொத்து எல்லாவற்றையும் துறந்து வர வேண்டும் என்பதுதான் நியதி” என்றேன். “இவர் துறவி இல்லையே ” என்றான். நான் அந்தப் பழைய மடத்தைப் பார்த்தேன்.
22 ) நடிகையின் தோற்றம்
அந்த நடிகை என் முன்னால் உட்கார்ந்திருந்தாள். கன்னத்தில் குழி விழும் அடர்ந்த கூந்தலை உடைய அந்தச் சிகப்பு நிற நடிகை என் முன்னால் உட்கார்ந்திருப்பதே என்னுடைய அதிர்ஷ்டம்தான்.” படங்களில் வருவதில்லேயே ‘.என்றேன். “நல்ல பாத்திரங்களுக்கு காத்திருக்கிறேன்” என்றாள். ” நான் மொத்தம் பத்து போஸ் கொடுப்பேன் அதுதான் ஒப்பந்தம் ” என்றாள் . அவள் போஸ் கொடுக்க ஆரம்பித்தாள். ஒவ்வொரு போஸிலும் அவள் தோற்றம் மாறுவதை மூன்றாவது போஸில் கண்டு பிடித்தேன். அவள் பேரழகியாகவும் கொடுமைக்காரியாகவும் மாறி மாறி தோற்றம் தந்தாள் . என்னுடைய கேமிரா தடுமாற ஆரம்பித்தது. காமிராவைப் பார்த்தேன். ஒரு கட்டத்தில் மிக மோசமான கொடுமைக்காரியாக அவள் உருவம் இருப்பதை கவனித்தேன். நான் போஸ் தருவதை நிறுத்தச் சொன்னேன்.
அவள் நிறுத்தியதும் பழைய கன்னத்தில் குழி விழும் சிகப்பழகியாக இருந்தாள் .” போஸ் கொடுக்க ஆரம்பிக்கவா? ” என்றாள். அந்த அழகி கொடுமைக்கார தோற்றம் அடைவதை விரும்பாத நான் ‘ வேண்டாம் சும்மாவே உட்கார்ந்திருங்கள். இதோ பாருங்கள் நான் காமிராவை தனியே வைத்து விட்டேன் ” என்றேன். அவள், தான் கொண்டு வந்த சிகரெட்டை வாயில் வைத்துக் கொண்டு எனக்கு ஒரு சிகரெட் கொடுத்தாள். நான் மறுத்துவிட்டேன். அவள் சிகரெட் பிடிக்கும் அழகைப் பார்த்துக் கொண்டிருந்தேன். உண்மையைச் சொல்கிறேன். அவள் அழகி என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் கேமிராவில் பார்க்கும்போது அவள் கொடுமைக்காரி தோற்றம் தருவதன் மர்மத்தைத்தான் என்னால் விளங்கிக் கொள்ள முடியவில்லை..