எதனாலோ

தனாலோ அன்றிரவு மழை நிற்காமல் பல மணி நேரம் தூறியது. எதனாலோ அந்த நேரத்தில் அவனது பைக் ஊரின் காவலாளி இல்லாத ஆண்கள் பள்ளிக்கூடத்துக்கு அருகே நின்றுபோனது. எதனாலோ பள்ளிக்கூடத்தின் பெரிய கதவுக்கருகே ஒருக்களித்துத் திறந்திருந்த சிறிய கம்பிக் கதவின் வழியே அவன் நடந்து சென்றான். எதனாலோ பள்ளியின் முதல் மாடியில் ஒரு அறையில் மாத்திரம் மங்கிய விளக்கொளி எரிந்துகொண்டிருந்தது. எதனாலோ வளாகத்தில் முன்னே ஓங்கி நின்றிருந்த பூவரச மரத்தைத்தாண்டி தரையோடு ஒட்டியிருந்த நீண்ட வராந்தாவில் நடந்து இரண்டு மூன்று படிகளாக மாடிப்படியில் தாவி ஏறியவன் விளக்கெரிந்த அறைக்குள் சென்றான். எதனாலோ அந்த வகுப்பறையில் கடைசி டெஸ்க்குக்கு முந்தைய டெஸ்க்கில் எழுதப்பட்ட பெயர்களைப் பார்த்தபடி நின்றான். எதனாலோ கடைசியாக அவன் பெயர் இருந்த அந்த லிஸ்ட்டில் அவன் பெயருக்கு முந்தைய பெயராக இருந்த கலை என்ற பெயருக்குப் பக்கத்திலிருந்த எழுத்துகள் அழிபட்டிருந்தன. எதனாலோ அழிந்த எழுத்துகள் தந்த ஏமாற்றம் தாங்காமல் தன்னுடைய சாவிக்கொத்தில் இருந்த பேனாக் கத்தியால்  ய, ர, ச என அடுத்தடுத்த எழுத்துகளைக் கீறியவன் எதனாலோ கால்மாற்றி நின்று நிதானித்து  எதனாலோ ச-வுக்கு மேல்கொம்பு வரைந்து சி-யாக்கிய பின் எதனாலோ மனம் கலங்கினான். எதனாலோ அந்தக் கணத்தில் மின்சாரம் தடைபட அவன் அறையை விட்டு வெளியே வர எதனாலோ அந்தக் கும்மிருட்டில் விஸ்தாரமான மைதானத்தில் அவன் பார்வையோட,  எட்டாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்த அவனும் அந்த ஆண்டிறுதியில் படிப்பை நிறுத்திவிட்ட அவன் வகுப்புத் தோழனும் ஒரு மதியத்தில் எதனாலோ ஒரே நேரத்தில் உதைத்த பந்து எகிறி மேலே போய் செருகிக்கொண்ட அந்தப் பெரிய பூவரச மரக் கிளை எதனாலோ ஒரு மின்னலில் ஒளிரும்போதே பற்றிக்கொண்டு திசை காட்டி  அவனை அழைத்தது.

பாம்பு

“நகரு, சட்னு நகரு.” அவள் தம்பியிடம் கத்தினாள். அன்று ஞாயிற்றுக்கிழமை. அவளும் அவள் தம்பியும் ரிப்பேர் நடந்துகொண்டிருக்கும் தங்கள் வீட்டைப் பார்ப்பதற்காக கும்பகோணத்திலிருந்து இன்னம்பூருக்கு வந்திருந்தார்கள். இரு வருடங்களுக்கு முன்பு ஒரு விபத்தில் இறந்துபோன அவர்கள் அப்பா சேர்த்து வைத்திருந்த சொற்பத் தொகையோடு, சமீபத்தில் அவள் வேலைக்குச் சேர்ந்த கம்பெனியில் கொஞ்சம் லோனும் வாங்கி ரிப்பேர் வேலையில் போட்டிருந்தாள். படு மோசமான நிலையில் இருந்த பழைய வீடு. சிதிலமடைந்திருந்த முன்பக்கச் சுவர்கள் முழுக்க இடிக்கப்பட்டிருந்தன.

“கால் கிட்ட பாம்பு பாரு.”  பாம்புக்குக் கேட்காமல் அவனுக்கு மட்டும் எப்படிச் சொல்வது என்று புரியாமல்  படபடத்தாள்.

பாம்பு தன் மூன்றடியை இரண்டு ஒன்றரை அடிகளாக மடித்துப் படுத்திருந்தது. தூணுக்கு அருகே அதன் சின்னத் தலையும் அதைவிட மெல்லிய வாலும் அவள் கண்ணுக்குத் தெரிந்தன. அவள் தம்பி தூணுக்கு வலப்புறமாகவும், அவள் வீட்டுக்கு இரண்டடி கீழே மண் தரை முகப்பிலும் நின்றுகொண்டிருந்தார்கள்.

”எங்கக்கா பாம்பு?” என்றான் அவன் சாவகாசமாக.

“மொதல்ல நீ நகரு,” பாம்பின் மேல் ஒரு கண்ணும் தம்பியின் மேல் ஒரு கண்ணும் வைத்திருந்தவள் சிடுசிடுத்தாள்.

”நீ மேல வா,” என்றான் அவன் விடாமல். கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு வந்தால்தான் வருவான் என சிமிண்ட் மூட்டையில் காலை வைத்து ஒரே தாவாக ஏறிச் சென்றாள். ”சொன்ன பேச்சையே கேக்க மாட்டியாடா?”

”எங்க பாம்பு?” என்றான் அவன் திரும்பவும். ”இங்கதான்” என்றுவிட்டு அவனுக்கு அதைக் காட்டக் குனிந்தபோது பாம்பைக் காணவில்லை.

”இங்கேதான்டா இருந்தது. இப்ப ஓடிருச்சி.”

“உன் கண்ணுதான் சரியில்ல.”

“என் கண்ணு இருக்கட்டும். சொன்னா ஒடனே இறங்க மாட்டியா?”

“பாம்புதான் இல்லியே.”

அவளுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. அவனுக்கு மூன்று வயதானபோதே அவர்கள் அம்மா இறந்துவிட்டாள். அவன் ஏழாவது வகுப்புக்கு வந்தபோது அப்பாவும் போய்விட்டார். தான்தான் இனி அவனுக்கும் பொறுப்பு என்று நினைக்கும்போதே அவளுக்கு மலைப்பாக இருந்தது.

இந்தப் பூர்வீக வீட்டை ரிப்பேர் செய்ய வேண்டும் என்று அவள் அப்பா சொல்லிக்கொண்டிருந்தார். அவர் இறந்தபின் ரிப்பேர் வேலையைத் தொடங்க ஒரு பொறியாளரைத் தேடியபோதுதான் எவ்வளவு சிரமம் அது என்று அவளுக்குப் புரிந்தது. அவளுடைய அப்பாவின் நண்பர்கள் எல்லாரும் ஒரே குரலில்  கட்டடப்  பொறியாளர், மேஸ்திரி எல்லோரும் கொஞ்சம் அசந்தால்  பணம் அடிக்கப் பார்ப்பார்கள் என்று பயமுறுத்தினார்கள்.  அவள் சின்னப் பெண், அவர்களை மேற்பார்வை செய்யுமளவுக்கு அவளுக்கு அனுபவம் போதாது என்று  தெரிவித்தார்கள். ஒருவர் ஒரு படி மேலே போய் அவளுக்குத் திருமணமானால் அவள் கணவனே செய்துவிடுவான், அவளுக்கு எதற்கு வீண்வேலை என்று கடிந்துகொண்டார்.

அவள் துணிந்து இறங்கினாள். அவர்கள் மேலக்காவிரியில் ஒரு வாடகை வீட்டில் இருந்தார்கள். வாடகை சரியாகக் கொடுத்துக்கொண்டிருந்தாலும் வீட்டுக்காரர் திடீரென அவர்களைக் காலி பண்ணச் சொல்லிவிட்டால் என்ன செய்வது என்று அவளுக்குப் பயமாக இருந்தது. அப்பா திடீரென இறந்த பிறகு திடீரென எதுவும் நடக்கலாம் என்று அவளுக்குப் பலதும் தோன்றிக்கொண்டிருந்தன.  தம்பிக்கு டெங்கும் மலேரியாவும் சேர்ந்து வந்து  படுத்த படுக்கையாகிவிட்டால் என்ன செய்வது என்று நினைப்பாள். அவன் பள்ளிக்கூடத்தில் யாரையாவது அடித்து வைத்து, அவனுக்காகத் தான் போலீஸ் ஸ்டேஷன் போக வேண்டியிருந்தால் என்ன பேச வேண்டும் என்று சில சமயம் யோசிப்பாள். சில சமயம் தனக்கு வேலை போய்விடும் என்று அவளுக்குத் தோன்றிவிடும். காசையெல்லாம் வீடு ரிப்பேரில் போட்டுவிட்டோமே என்று கலங்கிப் போவாள்.

”கெளம்பலாம்க்கா. நாளைக்கு சயின்ஸ் டெஸ்ட் இருக்கு,” என்றான் தம்பி. இருவரும் வீட்டிலிருந்து இறங்கினார்கள்.

இருட்டிப் போக ஆரம்பித்திருந்தது.  அந்தி நேரத்தில் வீட்டைப் பார்க்க வந்திருக்கக் கூடாதோ என்று தோன்றியது. சற்று நேரம் ஸ்கூட்டியை எடுக்காமல் வீட்டைப் பார்த்தபடியே நின்றுகொண்டிருந்தாள். தம்பி கண்ணுக்குத் தெரியாத பாம்பு தனக்கு மட்டும் ஏன் தெரிந்தது? பாம்பு எதற்கு அறிகுறி?  நிஜமாகவே அங்கே பாம்பு இருந்ததா?  இந்த நொடியில் அவள் அப்பா  அவர்கள் முன்னால் தோன்றி “உனக்கு பிரமைதான். வேற ஒண்ணுமில்ல” என்று அவளிடம் சொன்னால் எவ்வளவு நன்றாக இருக்கும் என நினைத்துக்கொண்டாள்.

“போலாமா?” கேட்டான் தம்பி.

”ம்.” சொரத்தில்லாமல். ஸ்கூட்டியைக் கிளப்பினாள்.

“உனக்கு பிரமைதான், வேற ஒண்ணுமில்ல,” என்று சொல்லியபடியே தம்பி ஸ்கூட்டியில் ஏறி உட்கார்ந்தான்.