- தீர்க்கதரிசியின் பேனா
றாமானந்த சித்தர் தன்னை ஒரு தீர்க்கதரிசி என்று உளமார நம்பி வந்தார். கவிஞர்களுக்கு அந்தப் பெயர் ஏற்கனவே இருந்தது. போதாக்குறைக்கு, அவ்வாறு அவர் நம்புவதற்குத் தேவையான சில உறுதியான காரணங்களும் அவரிடம் இல்லாமல் இல்லை. சித்தர் எழுதும் சில கற்பனையான விசயங்கள் கால இடைவெளியில் நிஜத்திலும் நடந்தேறி வந்தன. அவருக்கோ அதை எண்ணி ஆச்சரியம் தாள முடியவில்லை. எனினும், வெளியில் சொன்னால் தனக்குப் பித்துப் பிடித்திருக்கிறது என்று பழிப்பார்கள் என தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொண்டு வாழ்ந்து வந்தார்.
ஆனால், இந்த விசயத்தை அவருடைய வாசகர்களும் கண்டுபிடித்து அவரிடம் சொல்லத் தொடங்கியபோது இவருக்கு உண்மையிலேயே இருப்பு கொள்ளாமல் போய்விட்டது. ஒருநாள் இனியும் தாமசிக்கக் கூடாது என்று தன் பேனாவை எடுத்து இப்படி எழுதினார்:
நான் ஒரு நல்ல கவிஞனாக வேண்டும், கதாசிரியனாக வேண்டும், சினிமா எடுக்க வேண்டும், சீப் மினிஸ்டர் எனப்படும் முதன்மை மந்திரி ஆகவேண்டும். முக்கியமாய், இந்த மாதிரி அவசர சமயங்களில் பேனா ஒழுங்காக வேலை செய்ய வேண்டும்.
[தாமசம் – தாமதம்]
- வீணாய்ப்போன ஞானோதயம்
றாமானந்த சித்தர் இலக்கிய லோகத்தில் மோசமான பேர்வழி என்று பெயரெடுத்திருந்தார். தன் சகாக்களின் எழுத்துகள்மீது பொறாமை கொண்டவர்; அவர்களின் வளர்ச்சியினைப் பொறுக்கமாட்டாமல் தொடர்ந்து அவர்கள் என்ன எழுதினாலும் ஐந்து பக்கங்களுக்குப் பிலாக்கணம் வைக்கிறார் என்பவையெல்லாம் அவர் மீது வைக்கப்பட்டு வந்த குற்றச்சாட்டுகள். இதன் பொருட்டே அவருக்கிருக்கும் இந்த அவப்பெயரும் என்ற பேச்சும் வழக்கிலிருந்தது.
இதை எண்ணி வருத்தமுற்று வந்த றாமானந்த சித்தருக்கு திடீரென்று ஒருநாள் ஞானோதயம் பிறந்தது: ‘இந்த சிறுகதை ஆசிரியர்களைப் பார்! எப்படி ஒருவரை ஒருவர் அனுசரித்து எழுதிப் பழகுகிறார்கள். இந்தக் கவிஞர்கள்தான் சரியான வாய்த்தகராறு பேர்வழிகள்!’
உடனே தாமசிக்காமல் தன்னுடைய சகாக்களுள் ஒருவரைப் பற்றி நல்லபடியாய் நாலு வார்த்தைகள் எழுதிவிட்டு அது தந்த ஆனந்தத்தில் லயிக்கலானார் சித்தர்.
இரண்டு நாட்கள் கழித்து, சித்தரின் பாராட்டிற்குப் பாத்திரமான சகா பேசு ஃபோன் எனப்படும் பேசு கருவி மூலம் அழைக்கலானார். நீண்ட நாட்கள் கழித்தான அந்த சம்பாஷனை ஸுமுகமான முறையில் நடக்குமென்ற நம்பிக்கை றாமானந்தரின் முகத்தில் ஸ்பஷ்டமாக பிரதிபலித்தது. ஃபோன் எனப்படும் பேசு கருவியை எடுத்து தன் காதருகே கொண்டுபோய், சித்தர் இப்படி பவ்யமாய்கக் கேட்டார்: ”வணக்கம் எப்படி இருக்கிறாய்?”
அவருடைய சகா: “ஆ. எல்லாம் நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது, நீ என்னைப் பாராட்டி எழுதும் வரை. இனி, இது போன்ற உபத்திரவங்களைப் பண்ணாமல் இரு!” என்ற வாக்கியத்தோடு மறுமுனையில் அழைப்பு துண்டிக்கப்பட்டது.
- றாமானந்த சித்தரின் விமரிசனா முறைமை
றாமானந்த சித்தரின் நண்பர் ஒருவர் காதம்பரி எழுதுவார். தன்னுடைய காவியத்தைப் படித்துப் பார்த்துக் கருத்துச் சொல்லும்படி சித்தரை அவர் சதா நச்சரித்துக் கொண்டே இருந்தார். ஒருநாள் றாமானந்தரும் எப்படியாச்சும் இந்த புஸ்தகத்திற்கென நேரம் ஒதுக்கிப் படித்து முடித்துவிடவேண்டும் என்று உறுதி பூண்டு அன்ன ஆகாரம் இன்றி ஒரு பகல் மொத்தத்தையும் ஒதுக்கி, அவ்வண்ணமே அதைப் படித்தும் முடித்தார். படித்த விசயத்தையும், மறுநாள் அழைக்கிறேன் என்ற தகவலையும் நண்பருக்குச் சொல்லி அனுப்பியிருந்தார். அவருடைய இஷ்டகாரரும் ஆர்வ மிகுதியில் இருந்தார்.
அழைத்த சித்தர், எடுத்த எடுப்பிலேயே ”என்னய்யா இது. படுமோசமான தொழில் நேர்த்தி” என்றார். நண்பருக்கு விளங்கவில்லை. எல்லோரும் காவிய லட்சணம் பொருந்தி வந்திருக்கிறது என்றுதானே சொன்னார்கள். பிறகு இவர் என்ன இப்படி ஆரம்பிக்கிறார் என்று மனதில் நினைத்தபடி குழம்பினார். சித்தர் இப்படித் தொடர்ந்தார்:
”உன்னுடைய இந்த நவ காவியத்தில் மொத்தம் இருபத்தி எட்டு எழுத்துப் பிழைகள். பின்னிரெண்டு இடங்களில் வாக்கியப் பிழைகளும் நான்கு இடங்களில் ஒருமை பன்மை மயக்கங்களும் வந்துள்ளன. நீர் அடுத்தமுறை என்னிடம் தாரும். என்னுடைய ஸ்நேகிதர் என்பதால் உமக்குச் சலுகையும் உண்டு” என்று சொல்லிவிட்டு அழைப்பினைத் துண்டித்தார்.
[காதம்பரி – நாவல்]
- றாமானந்த சித்தரின் பிரபல்ய ரகசியம்
றாமானந்த சித்தருக்குத் தான் பிரபல்யம் பெறவில்லையே என்கிற வருத்தம் இருந்தது. அதுகுறித்து அவர் தன்னுடைய சிநேகிதர்களிடமும் அடிக்கடி புலம்பிக்கொண்டிருந்தார். இதன்பொருட்டு அவருக்குத் தான் எழுதுவது கவிதையா, இல்லையா என்ற யோசனையும் அவ்வப்போது வர ஆரம்பித்து மனதைத் தொந்தரவு பண்ணிக் கொண்டிருந்தது; அவருக்கு இப்படியான ஒரு யோசனை தோன்றவும் அதை நடைமுறையும் படுத்திப்பார்த்தார்:
முகநூல் எனப்பட்ட நவீன மக்கள் சம்பாஷித்துக் கொள்ளப் பயன்பட்டு வந்த ஓர் உபகார ஸ்தலத்தில் ஒரு போலிக் கணக்கை ஏற்படுத்தி, அதில் தான் பால்ய பருவத்தில் எழுதியவற்றைப் பிரசுரிக்க ஆரம்பித்தார். அவரால் நம்பமுடியவில்லை. கொஞ்ச நாட்களிலேயே அவருடைய அந்த பழைய கவிதைகளின் பிரஸ்தாபம் ஊர் தெருவெங்கும் வேக வேகமாய் பரவியது.
இவ்வாறு நடந்த பிறகு சித்தர் சும்மா இருப்பாரா, அவருக்கோ இந்த முறை தன் கவிதைகளின் மீது உறுதியான நம்பிக்கை ஏற்பட்டுவிட்டது. பழைய கவிதைகளுக்கே, இப்படி என்றால், இப்போது எழுதினவற்றிற்கு என்ன குறை என்று, மீண்டும் தன் பழைய கணக்கினைத் தூசி தட்டி கவிதைகளையும் பதிய ஆரம்பித்தார். ஆனால், அவர் நினைத்தமாதிரி ஒரு வரவேற்பும் கிடைக்கவில்லை; அதே பழைய சங்கதிதான். அவருக்கோ தர்மசங்கடமாய்ப் போய்விட்டது.
போதாதென்று, அவருடைய கவிதைகளில் அந்தப் போலிக் கணக்கின் வாடை அடிப்பதை முகர்ந்துணர்ந்த அவருடைய சாஹித்திய சஹுருதயர்கள் இப்படியெல்லாம் எழுதினார்கள்: ”உனக்குப் புகழ் வேண்டுமானால் எழுதிச் சம்பாதிக்க வேண்டும். எங்கள் ’சீதா’வின் கவிதைகளைத் திருடி உன் பெயரில் போட்டுக் கொள்ளக்கூடாது. அக் கலாவாணியின் கால் தூசிற்கு நீ பெற மாட்டாய்” என்றெல்லாம் அவரை வசை மாரி பொழிந்தார்கள்; றாமானந்தரும் சரி உண்மையைச் சொல்லிக் கிடைத்த புகழை ஏன் கெடுத்துக் கொள்வானேன் என்று கவிதாயினி சீதா பிராட்டியாகவே சக பிரபஞ்சத்தில் வாழ்ந்து வந்தார்.
[சக பிரபஞ்சம் – parallel universe]
- றாமானந்த சித்தரின் எழுத்துக்குக் கிடைத்த சன்மானம்
றாமானந்த சித்தருக்கு ராயல்டி என்று ஐரோப்பியத் துரைமார் பாஷையில் சொல்லப்படும் ’ஒருவரின் எழுத்துக்குத் தரக்கூடிய சன்மானத் தொகை’யினைத் தன் வாழ்நாளில் ஒருமுறையாவது வாங்கிவிட வேண்டும் என்று ரொம்பவே ஆசை ஏற்பட ஆரம்பித்தது. ஆனால் அத்தொகையினைப் பெறவோ புஸ்தகம் தேக்கமடையாமல் விற்றுத் தீர வேண்டும் என்ற நிபந்தனை அவர் முன் இருந்தது; துர்பலனாய், அவர் எழுதும் எந்தப் புஸ்தகமும் அவர் நினைத்த அளவு கீர்த்தி பெறவில்லை. ஒருநாள் அவருக்கு இப்படியான ஒரு யோசனை வந்ததும் உடனே அதற்கு செயல் வடிவமும் தந்தார்:
’நண்பர்களே எனக்கொரு ஆசை வந்துவிட்டது. அதை எப்படியும் நிறைவேற்றாமல் போய்விட்டால் எனக்கு மோட்சம் கிடைக்காது. அதனால் என் அபிமானத்திற்குரிய சிநேகிதர்களாகிய தாங்கள், தங்களால் இயன்ற பொருளுதவியை அளித்து எனக்கு உபகாரம் பண்ணுமாறு தயவுடன் கேட்டுக்கொள்கிறேன்.’ என்று எல்லோருக்கும் கடுதாசி அனுப்பினார்.
அவர் எதிர்பார்த்திராத அளவுக்கு அவருக்கு உதவிகள் கிடைத்தன. அச்செய்தியினை தானே நம்ப இயலாதவராய் இருந்தார்; என்றாலும், உடனடியாக தன் ஆசையை நிறைவேற்றிக் கொள்ள வேண்டுமென்று எண்ணி, வந்தத் தொகைப் போதாதென்று, மேலும் சில காசுகளுக்குத் தன்னிடம் இருந்த சில பண்டங்களையும் விற்கலானார்.
அவற்றை மொத்தமாகக் கொண்டு போய், புஸ்தக விற்பனா நிலையத்தில் கொடுத்து, விற்காமல் இருந்த பல நூறு படிகளைத் தானே விலை கொடுத்து வாங்கினார்.
உடனே கையோடு, பிரசுராதிபதியிடம் போய், “ஐயா! நான் எழுதிய அனைத்துப் புத்தகங்களும் பொன் போல் விற்றுவிட்டன; எனவே, எனக்குத் தரவேண்டிய சன்மானத்தொகையை உடனே தந்து என்னைப் போன்ற மகாசாகித்யாதிபதியைத் தக்கவைத்து கொள்ளும்!” என்று கட்டளை இட்டார்.
பிரசுராதிபதியும் வந்தவரை லாபம் என்று மறுபேச்சு இல்லாமல், உரியத் தொகையினைக் கொடுத்தனுப்பினார். தொகையினைப் பெற்றுக் கொண்டு வீடு திரும்பியதும்தான் சித்தர் பெருமானுக்கு இங்ஙனம் உரைத்தது; பேசாமல் நண்பர்கள் தந்த பணத்தைக் கொண்டு கொஞ்ச நாளைக்கு ஜபர்தஸ்தாய் வாழ்ந்திருக்கலாம்!