பட்டியலின மக்களைப் பற்றி சில திமுக நிர்வாகிகள் தவறான வார்த்தைகள் சொல்லிவிட்டார்கள் என திமுகவிற்கு எதிராக போராட்டம், வழக்கு என பல்வேறு நடவடிக்கைகளில் அதிமுக அரசு இறங்கியுள்ளது.
கொரோனா நோய்தடுப்புக்கான ஊரடங்கு முழுமையாக நீக்கப்படாத நிலையிலும், ஆளும் அதிமுக அரசின் இதுபோன்ற பட்டியலின மக்களக்கு பரிந்து பேசுவது போன்ற நடவடிகைகள் ஆக்கப்பூர்வமானவைகளாக இல்லாமல், வெறும் அரசியல் கூச்சலாக மட்டுமே இருப்பதை, தொடர்ந்து பத்திரிகைகளை வாசித்துக் கொண்டிருக்கும் ஒரு சாதாரண மனிதனுக்கும் எளிதில் புலனாகும். மேலும் குறிப்பாக, வன்கொடுமை தடுப்பு சட்ட விதிகளின்படி, ஆறு மாதங்களுக்கு ஒருமுறை கண்டிப்பாக கூட்ட வேண்டிய மாநில அளவிலான “விழிகண்” சீராய்வு கூட்டத்தினை, தான் பொறுப்பேற்ற பிறகு, தமிழக முதல்வர் இதுநாள் வரையிலும் கூட்டவே இல்லை.
கொரோனா நோய்தடுப்புக்காக ஊரடங்கு அறிவிக்கப்பட்ட மார்ச் 25 முதல் மே 13 வரையிலுமான இடைபட்ட 45 நாட்களில், தமிழ்நாட்டின் 20 மாவட்டங்களில் பட்டியல் இன மக்களுக்கு எதிராக மொத்தம் 40 வன்கொடுமை குற்றங்கள் நடந்துள்ளன என்று பத்திரிகைச் செய்திகள் வெளிவந்துள்ளன. அவைகளில் ஏழு கொலைகள், ஒரு ஆணவப் படுகொலை, மூன்று பேரை பொது இடத்தில் இழிவு படுத்தியது மற்றும் கட்டி வைத்து சித்திரவதை செய்தது, டாக்டர் அம்பேத்கர் சிலையை அவமதிப்பு செய்தது, வீடு இடிப்பு, நில அபகரிப்பு, சாதி மறுப்பு திருமணம் செய்ததால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டது, மூன்று இடங்களில் ஊராட்சித் தலைவர் மீது தாக்குதல் மற்றும் ஊராட்சி மன்ற தலைவராக செயல்படுவதற்கு சட்ட முரணாக தடை விதித்தது மற்றும் பத்துக்கும் அதிகமான பேர் ஜாதிய ரீதியான தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டது போன்றவைகள் அடக்கம்.
ஊரடங்கினை கடுமையாக அமல் படுத்தியதாக மாநில அரசு தொடர்ந்து கூறி வருகிறது. ஆனால் அந்த ஊரடங்கு சமயத்திலும் பட்டியலின மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் மட்டும் எப்போதும் போல தொடர்ந்து கொண்டே இருந்ததையே, பல்வேறு காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த 40க்கும் அதிகமான வன்கொடுமைகள் நமக்கு உணர்த்துகின்றன.
காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, பத்திரிகைளில் பதிவு செய்யப்பட்டுள்ள நிகழ்வுகளின் எண்ணிக்கை மட்டுமே இவைகள். அது தவிர புகார் கொடுக்கப்படாத நிகழ்வுகளின் எண்ணிக்கை, புகார் கொடுக்கப்பட்டும் வழக்குப் பதிவு செய்யப்படாத குற்ற நிகழ்வுகள் போன்றவைகளின் எண்ணிக்கை விபரம் குறித்து பதிவு இல்லை. மே 13ம் தேதியோடு இந்த வன்கொடுமைகள் நிறுத்தப்பட்டுவிடவில்லை. அதற்குப் பிறகும் இதுநாள் வரையிலும் பட்டியலின மக்களுக்கு எதிராக பல்வேறு வன்கொடுமைகள் நிகழ்த்தப்பட்டு வருவதையும் பத்திரிகைகள் வாயிலாக அறியலாம்.
பட்டியலினம் மற்றும் பழங்குடி இன மக்களின் உரிமைகளை பாதுகாத்திடும் வகையில் 1989ம் ஆண்டில் வன்கொடுமை தடுப்பு சட்டம் உருவாக்கப்பட்டது. ஆறு ஆண்டுகள் கழித்து, 1995ம் ஆண்டில் அதன் விதிகள் உருவாக்கப்பட்டன. பட்டியலின / பழங்குடியின மக்களின் உரிமைகளைப் பாதுகாத்திடுவதற்காக, வேறு எந்த சட்டங்களிலும் இல்லாத வகையில், பல்வேறு சிறப்பு விதிமுறைகள் இந்த சட்டம் மற்றும் விதிகளில் உருவாக்கப்பட்டுள்ளன.
நடுவண் மற்றும் மாநில அரசுகள் இந்த சட்டத்தினை அமலாக்கம் செய்வதில் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பிரிவு 21 கூறுகிறது. அதற்காக ஒவ்வொரு மாநில அரசும், மாநில அளவில் உயர்மட்ட விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக்குழு ஒன்றை உருவாக்கிட வேண்டும் என்று பட்டியலினம் மற்றும் பழங்குடி இன (வன்கொடுமை தடுப்பு) விதி 16 கூறுகிறது. அந்த குழுவானது “விழிகண் குழு” என்று பொதுவாக சொல்லப்படுகிறது.
மாநில முதலமைச்சரைத் தலைவராகக் கொண்ட மாநில அளவிலான உயர்மட்ட “விழிகண் குழு”வில், உள்துறை அமைச்சர், நிதி அமைச்சர், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர், பட்டியலினத்தைச் சேர்ந்த சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தலைமை செயலாளர், உள்துறை செயலாளர், காவல்துறை இயக்குனர், தேசிய பட்டியலின மற்றும் பழங்குடியினர் ஆணையங்களின் இயக்குனர் ஆகியோரை உள்ளடக்கிய, 25 பேருக்கு மிகாத எண்ணிக்கையில் உறுப்பினர்கள் இடம் பெறுவார்கள்.
இந்த மாநில அளவிலான குழுவானது, ஒரு ஆண்டில் எத்தனை முறை வேண்டுமானாலும் கூடலாம், அதேவேளையில் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் என குறைந்த பட்சம் இரண்டு முறை கண்டிப்பாக கூடும். அந்த கூட்டத்தில் சம்மந்தப்பட்ட மாநிலத்தில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளில் எடுக்கப்படும் நடவடிக்கைகள், வழக்கு விசாரணைகள் சரியான விதத்தில் செல்கிறதா, சட்ட அமலாக்கத்தில் அதிகாரிகளின் பங்கு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட நிவாரணங்கள், மறுவாழ்வு பணிகள் மற்றும் இந்த சட்டம் மற்றும் விதிகளின் அமலாக்கம் போன்றவைகள் குறித்த அனைத்து அம்சங்களையும் ஆய்வு செய்யப்படும் என்று விதி 16(2) கூறுகிறது.
மாநில அளவிலான விழிகண் குழுவினைப் போலவே, மாவட்ட அளவிலான குழுக்கள் அந்தந்த மாவட்டங்களில் உருவாக்கப்பட வேண்டும் என விதி 17 கூறுகிறது. அந்த குழு ஆண்டுக்கு குறைந்த பட்சம் 3 முறையாவது கூட வேண்டும். அது போல வட்டார அளவிலான விழிகண் குழு குறித்து விதி 17அ கூறுகிறது.
மாநில அரசு, ஒவ்வொரு ஆண்டும் ஜுலை மாதம் 1ம் தேதிக்கு முன்பாக வன்கொடுமை தடுப்பு சட்ட அமலாக்கத்திற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், அதன் அடிப்படையிலான திட்டங்கள், முந்தைய ஆண்டில் திட்டமிடப்பட்ட எதிர்கால திட்டங்கள் உள்ளிட்டவைகள் குறித்த ஆண்டு அறிக்கையை நடுவண் அரசுக்கு அனுப்பிட வேண்டும் என விதி 18 கூறுகிறது.
மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த மாநில அளவிலான உயர்மட்ட விழிகண் சீராய்வு குழு உருவாக்கப்பட்ட பிறகு இரண்டு முறை மட்டுமே கூடியுள்ளது. கடைசியாக 2012ம் ஆண்டில் கூடியது அதன் பிறகு கூடவேயில்லை என்பதால், உடனடியாக அந்த கூட்டம் நடத்த உத்தரவிட வேண்டுமென, திண்டிவனத்தில் இயங்கி வரும் இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மையத்தின் சார்பாக அதன் இயக்குனர் இரமேஷ்நாதன் சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2014ம் ஆண்டு பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். அந்த வழக்கினைத் தொடர்ந்து 2014ம் ஆண்டு விழிகண் குழு கூடியது. ஆனால் அதன்பிறகு இதுநாள் வரையிலும் கூட்டப்படவே இல்லை.
இவ்வாறு 6 ஆண்டுகளாக கூட்டப்படாததன் காரணமாகவும், ஊரடங்கு அமலில் இருந்த காலத்திலும் தொடர்ந்து வரும் வன்கொடுமைகளின் காரணமாகவும், ஜூலை 1ஆம் தேதிக்கு முன்பாக மாநில அளவிலான விழிகண் குழுவின் சீராய்வு கூட்டத்தை தமிழக அரசு கூட்ட வேண்டும் என பட்டியல் இன மக்களுக்கான உரிமைகளை பாதுகாக்கும் நோக்கத்தில் செயல்பட்டு வரும் பல்வேறு அமைப்புகள், தமிழக முதல்வருக்கு மனுக்களை அனுப்பி வருகிறார்கள்.
தற்போதைய தமிழக முதலமைச்சர் பொறுப்பேற்ற பிறகு, கடந்த இரண்டு ஆண்டுகளில் குறைந்தபட்சம் நான்கு முறையாவது மாநில அளவிலான விழிகண் குழு சீராய்வு கூட்டம் கூட்டப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இதுவரையிலும் ஒருமுறை கூட அவ்வாறு கூட்டப்படவில்லை. இவ்வாறு சட்டப்படி தான் செய்ய வேண்டிய கடமையிலிருந்து ஒரு மாநில முதல்வரே தவறும்போது அவரது நிர்வாகத்தின் கீழ் பணியாற்றும் நிர்வாக அதிகாரிகள் அந்த சட்டத்தினை எப்படி கையாள்வார்கள் என்பதனை யாரும் சொல்லாமலேயே உணர்ந்து கொள்ள இயலும்.
வன்கொடுமைகள் நிகழ்வதற்கு முன்பாகவே அதனை தடுக்க வேண்டியது தான் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் பிரதான நோக்கங்களில் ஒன்று. ஆனால் வழக்கமான, குற்றங்கள் நடந்த பிறகு, அவைகளைப் பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதை காரணமாகக் காட்டி, வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படும் பட்டியலின மக்களுக்காக தாங்கள் உரிய நடவடிக்கைகளை எடுத்து வருவதாக ஆட்சியாளர்கள்/ அதிகாரிகள் கூற முடியாது. குற்றங்களுக்குப் பிறகான நடைமுறைகளைக் குறித்து ஆய்வு மேற்கொள்ளும் பணிகள் மட்டுமே பெரும்பாலும் நடந்து வருகிறது. இதன் காரணமாகவே இந்த சட்டம் இயற்றப்பட்டு 30 ஆண்டுகள் கடந்த பிறகும், பாதிக்கப்பட்ட மக்களால் அதன் பலன்களை முழுமையாக அனுபவிக்க முடியாத அவல நிலை நிலவுகிறது.
முதலமைச்சர் தலைமையிலான மாநில அளவிலான உயர்மட்ட விழிகண் குழுவில் எடுக்கப்படும் சிறப்பான நடவடிக்கைகளின் மூலமாக, பட்டியலின மக்களுக்கு எதிராக நிகழவிருக்கும் பெரும்பான்மையான வன்கொடுமை குற்றங்களைத் தடுக்கமுடியும். சட்டபடியான இதுபோன்ற செயல்பாடுகளை தொடர்ந்து செய்து வரும்போது மட்டுமே, பட்டியலின மக்களின் உணர்வுகளுக்கு மாநில அரசு உண்மையிலேயே செவி சாய்ப்பதாகக் கருத முடியும்.
ஊரடங்கு உத்தரவு அமலில் இருகின்ற காலத்திலும் பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்கொடுமை வழக்குகள் மற்றும் அது தொடர்பான தொடர் நடவடிக்கைகள், திட்டங்கள் போன்றவைகள் தொடர்பான அறிக்கைகளை சீராய்வு செய்யும் விதமாகவும், தமிழகத்தில் தொடரும் வன்கொடுமைகளை கட்டுப்படுத்திடும் வகையிலும், ஜூலை மாதம் 1-ஆம் தேதிக்குள் மாநில அளவிலான விழிகண் குழுவின் கூட்டத்தினைக் கூட்ட தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.