சுரேஷ்குமார இந்திரஜித் குறுங்கதைகள்- 27 & 28
27) புத்தகம்
என் வீட்டு வாசலில் ஒருவன் நின்று கொண்டிருந்தான். நான் கதவைத் திறந்தேன். கையில் புத்தகங்கள் வைத்திருந்தான். புத்தகங்களை விற்க வந்திருப்பதாகக் கூறினான். உள்ளே வந்து அமரச் சொன்னேன். ‘ நீங்கள் எந்தப் புத்தகத்தை என்னிடம் விற்க விரும்புகிறீர்கள் ‘ என்று கேட்டேன். அவன் ஒரு நீதி நூலை என்னிடம் விற்க விரும்புவதாகக் கூறினான். அந்தப் புத்தகத்தை என்னிடம் காட்டினான். 102 பக்கங்கள் இருந்தன. அட்டையில் மலர்க் கொத்து படம் இருந்தது. ஆசிரியர் யாரென்று பார்த்தேன். ‘ பெயரற்றவர் ‘ என்று இருந்தது. இந்தநூல் வியட்நாமில் பிரபலம் என்றும் உலகம் முழுக்க இந்த நூல் பரவலாக விற்பனை ஆவதாகவும் தெரிவித்தான். நூலின் சிறப்பு பற்றிக் கேட்டேன். இது நீதி நூல் என்றும் ஆனால் வழக்கமான நீதி நூல் போல் இருக்காது என்றும் கூறினான். நான் சற்று விளக்குமாறு கூறினேன்.
நீதி என்பதும் அநீதி என்பதும் ஆட்களைப் பொறுத்தது. ஜெயிப்பவனுக்கு ஒரு நீதி . அது மற்றவர்களுக்கு அநீதி செய்தது மூலம் கிடைத்ததாக இருக்கும். ஜெயித்தவனின் நீதி தோற்றவனைப் பொறுத்தவரை அநீதி. உண்மை என்பது மாயம் போல் தோற்றமளிக்கிறது. ஒரு சிறு துணுக்குக் கதையை எடுத்துக் கொண்டு பல தரப்பு நீதிகளை இந்த நூல் அலசுகிறது. நூற்றுக் கணக்கானவர்கள் தங்களிடம் உள்ள நீதியைப் பற்றி பேசுகிறார்கள். ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு நீதி.. அந்த நீதிகளை வைத்துக் கொண்டு அவர்கள் மற்றவர்கள் வைத்திருக்கும் அந்த மாய நீதியைக் கேள்வி கேட்கிறார்கள். பலருடைய வாழ்க்கை; பலருடைய வாதங்கள்; நூல் முழுவதும் நிரம்பி இருக்கிறது. இப்படிப் பலவாறாகப் பேசி அந்த நூலை என்னிடம் விற்க முனைந்தான். இந்த நூல் என்னைக் குழப்பிவிடும் என்பதை அறிந்தேன்.மேலும் என் வாழ்க்கையை சூனியத்திற்குள் தள்ளி விடும் அந்த நூலிலிருந்து தள்ளி இருக்கவே விரும்பினேன். ஆனால் அவனை ஏமாற்ற விரும்பவில்லை. அவனிடம் பணம் கொடுத்து அந்தப் புத்தகத்தை வாங்கினேன். ஆனால் அந்தப் புத்தகத்தை என் ஆயுள் வரை திறந்து பார்க்கக்கூடாது என்று உறுதி எடுத்துக்கொண்டேன்..
28 ) மனிதன்
நான் சாவு வீட்டில் இருந்தேன். அழுகைக்குரல் கேட்டுக் கொண்டிருந்தது. துர் மரணம். கார் விபத்தில் ஏற்பட்டது. போஸ்ட் மார்ட்டம் முடிந்து பொட்டலமாகக் கட்டி வைத்திருந்தார்கள். நான் பலமுறை அவர் கூட விபத்து ஏற்பட்ட காரில் பயணம் செய்திருந்தாலும் எனோ விபத்து நடக்கவில்லை. நான் பல காலம் வாழ்ந்து துயரத்தையும் மகிழ்ச்சியையும் அனுபவிக்க இருக்கிறேன் என்று நினைத்துக் கொள்கிறேன். அப்போதுதான் நான் கருப்பசாமியைப் பார்த்தேன்.நடக்க முடியாமல் வாக்கரை வைத்து நடந்து வந்தார். முகத்திற்குப் பொருத்தமில்லாத மூக்குக் கண்ணாடி அணிந்திருந்த அவரின் மனைவி அவரைத் தாங்கிப் பிடித்துக் கொண்டிருந்தாள்.நான்
அவரை நீண்ட காலம் கழித்துப் பார்க்கிறேன். நோயுற்ற உடலுடன் இருந்தார். வாடகை காரில் வந்திருந்தார்.
அவர் அந்தக்காலத்தில் எனக்குப் பெரிய உதவிகள் செய்து இருக்கிறார். அதாவது காலத்தில் செய்த உதவி. என்னிடம் பணம் இல்லாத நேரத்தில் என் தாயாருக்கு உடல் நலம் சரியில்லாமல் ஆகிவிட்டது. அவர்தான் பணம் கொடுத்து உதவினார். பணம் என்று இல்லை, பல வெவ்வேறு உதவிகள் செய்திருக்கிறார்.. அவரைச் சென்று பார்ப்பதில் விளக்க முடியாத சங்கோஜம் எனக்கு இருந்தது..நீண்ட காலம் பார்க்காமல் இருந்தது பெரிய இடைவெளியை உருவாக்கிவிட்டது. பேச விஷயமும் இல்லை. அவர் வந்து சேரில் உட்கார்ந்திருந்தார் . சங்கடத்தையோ அல்லது விளங்காத உணர்வுகளை தவிர்ப்பதற்கோ நான் அவரைப் பார்க்காமல் நழுவி வீட்டுக்குச் .சென்றேன்.