“உயிர் பயத்தினூடே தான் அன்றாட அத்தியாவசிய தேவைகளுக்காக அமெரிக்க வீதிகளில் நடக்கிறோம். அனால் இவை அனைத்தையும் விட ஒரு அத்தியாவசியம் இது. அதற்கு தான் வீதிக்கு வந்துள்ளோம்” என்கிறார் அட்லாண்டா போராட்ட களத்தில் நிற்கும் ஒரு பெண். இன்று நாம் பலரும் கேள்விப்பட்டும் அறியப்பட்டும் வரும் செய்தி அமெரிக்காவில் நடைபெற்று வரும் இனவெறிக்கு எதிரான போராட்டங்கள். அதிகாரங்களுக்கும் அடக்குமுறைகளுக்கும் எதிராக போராட்டம் என்பது தொடர்ந்து அடக்கபடுபவர்களால் முன்னெடுக்கும் ஒன்று. ஆனால் தற்பொழுது அமெரிக்காவில் நடக்கும் போராட்டங்கள் நாம் அத்தகைய பொதுவான போராட்டங்களாகக் கடந்து செல்ல இயலாது. ஏனெனில் இந்தப் போராட்டம் நடக்கும் சூழல் மற்றும் தன்மைகள், இதனைத் தனித்து காட்டுகின்றன. இன்று உலகம் முழுவதிலும் அசாதாரண சூழலை எதிர்கொண்டு கொண்டிருக்கிறோம். மக்களின் நெருக்கத்தினால் வேகமாக பரவ கூடிய ஒரு தொற்றினை சந்தித்து கொண்டிருக்கிறோம். வெளியில் செல்ல, பொது இடங்களில் கூட, மக்களுடன் பழக யோசிக்கும் நிலைமையில் இருக்கிறோம். இது ஒருபுறம் இருக்க இதன்பின் ஒவ்வொருத்தருடைய வாழ்விலும் சூழப்போகும் நிச்சயமற்ற தன்மையை நினைத்து அச்சங்களையும் கொண்டுள்ளோம். இதில் அமெரிக்கா எத்தகு பாதிப்பினை சந்தித்து கொண்டிருக்கிறது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. அத்தகு தருணம் ஒன்றினில் அமெரிக்காவில் ஒரு கறுப்பினத்தவரின் மீது காவல்துறை அதிகாரி நிகழ்த்திய கொடூரத்திற்காக மொத்த அமெரிக்காவும் இன்று வீதியில் திரண்டு போராடுகிறது. தன் உயிரின் மீதான ஆபத்தையும் தன் வாழ்வின் மீதான அச்சமின்மையையும் கலைத்து தன் சமூகத்திற்காக மக்களது பெருங்கூட்டம் அங்கு திரண்டுள்ளது. எப்பொழுதும் போல் அரசு அவர்களின் மீது தாக்குதல்களையும் மிரட்டல்களையும் விடுத்து கொண்டுதான் இருக்கிறது ஆனாலும் மக்கள் அசருவதாய் இல்லை.
பொதுவில் பார்த்தால் இந்தியாவிலும் அமெரிக்காவிலும் நடக்கும் அரசியல் கிட்டத்தட்ட ஒன்று தான். இரண்டு நாடுகளிலும் அதிகார உச்சாணியில் இருப்பவர்கள் அடைய நினைக்கும் இலக்கும் அதுக்கு எடுத்து கொண்டிருக்கும் பாதையும் அடிப்படையில் ஒன்றுதான். அவர்கள் அடைய நினைப்பது கூட்டுறவு ஜனநாயகத்தை அழித்து அவர்கள் அதிகாரத்தை நீடித்து கொள்வதற்கான ஏகாபத்திய ஆட்சி தான். அதற்கு அவர்கள் தேர்ந்தெடுத்து கொண்ட வழி வெறுப்பரசியலும் வகுப்புவாதமும். இருநாட்டிலும் அதில் இருக்கும் கூறுகள் தான் வெவ்வேறானவை. மக்களிடையே வெறுப்பினை தூண்டி கொழுந்துவிட்டு எரியும் அத்தீயினால் தன் அதிகாரத்தை வலுவாக்க நினைக்கும் தருணத்தில் அமெரிக்காவில் இந்த இக்கட்டான சூழ்நிலையில் மக்கள் தொடுத்து வரும் இப்போராட்டம் தார்மீகத்தின் அடிப்படையில் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
ஆனால் இதே சமயத்தில் நம் நாட்டில் நடந்து வருவது அதற்கு நேர்மாறானதாகவும் அது மேலும் வளருவதையும் எண்ணி மனம் பதைக்கிறது. இங்கு ஆட்சியில் இருப்பவர்கள் அவர்களது வெறுப்பினை இஸ்லாமியர்களின் மேல் கொட்டுகிறார்கள் மக்களைக் கொட்ட வைக்கிறார்கள். அதற்கு நாடு அமைதியாக வேடிக்கை பார்ப்பது மட்டுமில்லாமல் அவர்களுடன் இருந்து அவர்களது ஆயுதங்களை பட்டை தீட்டி கொடுக்கிறது.
பசு பாதுகாவலர்கள் என்று கூறிக்கொண்டு இஸ்லாமியர்களை குற்றவாளி கூண்டினுள் ஏற்றினார்கள். இதன் அடிப்படையில் உத்தரபிரதேசம், ஹரியானா முதலிய வடமாநிலங்களில் வாழும் இஸ்லாமியர்களின் மேல் அவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளால் அவர்கள் தாக்கப்பட்டனர், கொல்லப்பட்டனர். வீதியில் சாதாரணமாக நடக்க அச்சப்பட்டு உறைந்து போனார்கள். அவர்களுக்கு எதிராக தேசியவாதத்தை கையில் எடுத்து ஒவ்வொரு இஸ்லாமியரின் நாட்டின் மீதான இறையாண்மையை கேள்வி குறி ஆக்கினார்கள். பாபர் மசூதி இடிப்பு வழக்கின் தீர்ப்பின் மூலம் அவர்கள் நிகழ்த்தி காட்டிய நாட்டின் மாபெரும் நீங்கா கறையினை தர்மத்தின் போராக மாற்றினார்கள். பாராளுமன்றத்தில் ஒரு இஸ்லாமிய எம்.பி உரையாற்றுகையில் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ கோஷம் போட்டு மக்கள் தேர்ந்தெடுத்தது எத்தகு பிரதிநிதிகளை என உலகுக்கு காட்டி நாட்டின் ஜனநாயகத்தை வெட்கப்பட வைத்தார்கள். தொடர்ந்து ஆட்சியில் இருக்கும் எம்.எல்.ஏ க்கள் எம்.பி. க்கள் என அறிக்கையின் ஊடாக அவர்களை அன்னியப்படுத்தினார்கள். பாலியல் வன்முறை செய்து கொல்லப்பட்ட ஒரு குழந்தை இஸ்லாமியர் என்பதாலேயே குற்றம் செய்தவர்க்கு ஆதரவாக ஊர்வலம் நடத்தினார்கள். இது அனைத்துக்கும் மேலாக குடியுரிமை சட்டம் என அவர்களின் அடிப்படை உரிமையில் கை வைத்தனர். இந்த கொரோனா இக்கட்டிலும் இஸ்லாமியர்கள் தான் நோய் பரவலின் ஊடகங்கள் என மாற்றி தங்கள் வெறுப்பிற்கு தீனி போட்டு கொண்டார்கள்.
சமூகத்தில் தங்களோடு சேர்ந்து வாழும் குறிப்பிட்ட மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி கண்டு சிறு சிறு அமைப்புகளும் சில சமூக ஆர்வலர்களையும் தாண்டி பெரிதாக மக்களிடயே எவ்வித எதிர்ப்பையும் காண முடியவில்லை. இது அவர்கள் பிரச்சனை, நமக்கு இதனால் ஒன்றும் இல்லை என்றே பெரும்பான்மை உள்ளவர்கள் நினைக்கிறார்கள். இஸ்லாமியர்கள் – நாம் என இருமுனைகளாக பிரித்து பலர் பார்ப்பது இயல்பாக மாறி வருகிறது. இதை விட அச்சம் தரும் விஷயம் அதை ஆதரிக்கும் மனபோக்கு பெரும்பாலானவர்களிடம் இருக்கிறது. அவர்களுக்கு சலுகைகள் உண்டு அவர்கள் வேலைவாய்ப்பினை பறித்து கொள்கிறார்கள் என பொதுவாகவே அடிப்படை அற்ற சந்தேகங்களில் உழன்று கொண்டிருக்கும் இவர்கள் இது தான் சரியான வழி இதன்மூலம் நமது வளங்கள் நமதாகும் என ஒரு மனப் பிராந்தியதுக்குள் சிக்கி கொண்டு ஒரு மத அடிப்படையிலான சர்வாதிகார அரசுக்கு பூங்கொத்து தருகிறார்கள். அந்த அபத்தனமான மனக்குமுறல்கள்தான் அவர்கள் வெறுப்பினை கட்டுவதற்குரிய அடித்தளம். அனால் இதன் விளைவாக ஒரு ஆதிக்க அரசு தான் உருவாகுமே தவிர யாருக்கும் எந்த நல்வாழ்வும் வர போவதில்லை. இதனை செய்பவர்கள் எங்கோ எவரோ அல்ல. பெரும்பான்மை மக்கள் வீட்டில் உள்ள சாதாரண நபர்கள்தான். அவர்களே இஸ்லாமியர்களின் அச்சத்தால் அதிகார பலத்தை கூட்டிகொண்ட அரசுக்கு தங்கள் ஆதரவின் மூலம் பலம் சேர்த்தனர். அவர்களே இஸ்லாமியர்கள் தாக்கப்பட்டு கொல்லப் படுகையில் வெறும் செய்தியாக கடந்து சென்று அதை நியாயப்படுத்தியவர்கள். அவர்களே இஸ்லாமியர்கள் தங்கள் குடியுரிமைக்காக வீதியில் இறங்கி போராடிய பொழுது அவர்களுக்கு தோள் கொடுக்க மறந்து தனித்து விட்டவர்கள். அவர்களே டில்லியில் வெளிப்படையாக கலவரம் செய்து இஸ்லாமியர்கள் ஒடுக்க பட்ட பொழுது கண்ணை மூடிகொண்டார்கள். இப்பொழுது இஸ்லாமியரின் கடைகளில் வாங்காதீர்கள் அவர்களால் தான் கொரோனா இந்தியாவிற்கு வந்தது என சமூக ஊடங்கங்களில் பிரச்சாரம் செய்பவர்களும் அவர்களே.
ஒரு இனத்திற்கு எதிரான ஒடுக்குமுறை வீட்டு வரவேற்பறையில் வந்த பின்பும் அது வந்து விட்டது என பலர் வாய் கிழிய கத்தியும் கண்டும் காணதது போல் கேட்டும் கேட்காதது போல் இருக்கும் இச்சமூகம், பல உயிர்கள் கொரோனாவிர்க்கு பலி கொடுத்த இந்த சூழலிலும் ஒடுக்குமுறைக்கு எதிராக வீதியில் இறங்கிருக்கும் ஆயிரக்கணக்கான அமெரிக்க மக்களிடம் இருந்து கற்று கொள்ள வேண்டியது ஏராளம். அநீதிக்கு எதிராக மக்கள் குரல் கொடுக்காத வரையில் பல சமூக அவலங்கள் இங்கு தொடர்ந்து அரங்கேற தான் போகின்றன. அநீதியை கண்டு மௌனம் காத்தவர்களும் அநீதி இழைத்தவர்களே.