கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் ! நான்காம் ஊரடங்கு. 

நாள்  55  முதல்  68 வரை

தேதி : 18/05/2020,  திங்கட்கிழமை – 31/05/2020 ஞாயிறு வரை.

 

மூன்றாம் ஊரடங்கில், டாஸ்மாக் திறப்பு அதற்கு கோர்ட் ஒத்துழைப்பு என ஜாலியாகப் போனதால், ஊரடங்கிற்குரிய மரியாதை இல்லாமற் போய், அதற்குப் பின் தினமும் எழுத வேண்டிய அவசியமுமில்லாமல்  போய்விட்டது !

அதைக்காட்டிலும் காமெடியாக, பயணிகள் ரயில், விமானப் போக்குவரத்து என அமர்க்களப்படுத்திய இந்த நான்காம் ஊரடங்கை ஒட்டுமொத்தமாய் கழுகுப் பார்வை பார்த்தாலென்ன என்று இன்று எழுத ஆரம்பித்தேன்.  அது இரண்டு பாகங்களாக நீண்டிருக்கிறது.  இன்று முதல் பாகம் !

என்ன கொடூரம் தெரியுமா ?  முதல் இரண்டு ஊரடங்கில் புலம் பெயர் தொழிலாளர்கள், அத்தியாவசியப் பணியாளர்கள், உணவு மற்றும் மூலப் பொருட்களின் விற்பனையாளர்கள், அன்றாட தேவைகளுக்கான பொருட்களை வாங்கச் சென்ற மக்களைத் தவிர, எஞ்சிய 75 விழுக்காடு இந்தியா வீட்டுக்குள்ளேயே முடங்கியிருந்தது !

ஆனால் மூன்றாம் ஊரடங்கைக் காட்டிலும்,  நான்காம் ஊரடங்கின் போதுதான் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை வெறி பிடித்து அதிகரித்தது.  கொரோனா சாவு எண்ணிக்கை சீனாவை விஞ்சி, கோவிட் 19 பட்டியலில் பல படி முன்னேறி அச்சமூட்டியது இந்தியா !

சமூகப் பரவல்தான் ஆபத்து, அதைத் தவிர்க்க தனித்திருப்போம் என அச்சுறுத்திய அரசை நம்பி, அதை ஏற்று, தங்களுடைய வாழ்வாதாரங்களை முழுக்க இழந்து, வீட்டுக்குள்ளேயே பல கோடி மக்கள் முடங்கியிருந்தும், அதெப்படி இவ்வளவு பேருக்கு இந்த நோய் பரவியது என்று தொற்று நோய் ஆராய்ச்சி நிபுணர்களுக்கே திகைப்பை ஏற்படுத்தியிருந்தது !

நினைவிருக்கிறதா ?  நம்ம ஊர் டெம்பரேச்சருக்கு கொரோனா வராது.  அதுவும் மே மாசம் இந்தியாவில குறைந்தபட்ச டெம்பரேச்சரே 40 – 45 டிகிரி செல்சியஸ் இருக்கும்.  இந்த வெப்பத்துல கொரோனா வைரஸ் செத்துடும் என்று நாம் மார்ச், ஏப்ரல் மத்தியில் வரை, வாட்ஸ்அப்களிலும், சட்டசபையிலும்  பேசிக்கிடந்திருந்தோம், அல்லவா ?

மே ஒன்று அன்று இந்தியாவின் ஒட்டுமொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை = 35,365.  மரணமடைந்தவர்கள் = 1,152

மே 31 அன்றோ = 1,82,143.  மரணம் = 5,164.

மே 1 அன்று தமிழகத்தில் = 2,526

மரணம் = 28

மே 31 அன்றோ = 22,303, மரணம் 173.

ஜனவரி முதல் ஏப்ரல் இறுதிவரை கூட மிருதுவாக இருந்த இந்த எண்ணிக்கை, மே மாதத்தில்தான் பன்மடங்காக, படுபயங்கர வேகத்தில் உயர்ந்து,  நம்முடைய எண்ணங்களை அடியோடு தகர்த்தெறிந்தது கொரோனா தொற்று !

இதன் பின்னரே, ஊரடங்கு இந்தியாவைப் பொறுத்தவரை முழு தோல்விகரமான நடவடிக்கை என்று குறிப்பிட்டார் ராகுல் காந்தி.  தொற்றையும், உயிரிழப்புகளையும் கட்டுப்படுத்த மாற்றாலோசனைகளை செயல்படுத்துங்கள் என்று ஒன்றிய அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார் !

இத்தாலி, ஸ்பெயின், இங்கிலாந்து, ஃப்ரான்ஸ், அமெரிக்கா போன்ற நாடுகளிலெல்லாம் தொற்று வெகு வேகமாகப் பரவி நோயாளிகள் எண்ணிக்கை பல்லாயிரக்கணக்கில் கூடிய பின்னரே ஊரடங்கை அறிவித்தார்கள்.  ஆனால் அலட்சியமான அல்லது தாமதமான அந்த நடவடிக்கையால், நிலைமை கைமீறி அங்கு பலி எண்ணிக்கை வெகு வேகமாக உயர்ந்தது.  இருந்தாலும் இப்போது பெருமளவு அங்கு அது கட்டுக்குள் வந்திருக்கிறது.  ஆனால், நம் இந்தியாவிலோ, தமிழகத்திலோ அப்படியே தலைகீழ் !

நம்முடைய முதல் ஊரடங்கு மிகக் கடுமையான ஒன்று என நமக்குத் தெரியும்.  அன்று ஒட்டுமொத்த இந்தியாவின் தொற்றெண்ணிக்கை 1000 த்திற்குள் இருந்தது.  மரண எண்ணிக்கை 20 கூட இல்லை.  எனில், இரண்டாம், மூன்றாம் ஊரடங்கிற்குப் பிறகு எவ்வளவு எண்ணிக்கை பெருகியிருந்தாலும், அது இப்போது கட்டுப்பட்டிருக்க வேண்டும்.  ஆனால் இந்தியாவில் தினமும் எட்டாயிரம் புது நோயாளிகளும் தமிழகத்தில் ஆயிரம் + புது நோயாளிகளும் உருவாகிக் கொண்டேயிருக்கிறார்கள்.  மரணங்களும் கடுமையாகப் பெருகிவிட்டது.  இந்திய ஒன்றிய மற்றும் தமிழக நிர்வாகம் கோவிட் பரவலைத் தடுப்பதில் முழுமையாக தோற்றிருக்கின்றன !

இந்த லட்சணத்தில்தான் இருபது லட்ச கோடி மெஹா பேக்கேஜ் என்கிற வடையைச் சுட்டு, அதில் பல வெத்து வேட்டுகளை வீசியிருந்தார்கள்.  ஒவ்வொரு மாநிலமும் தங்களுடைய மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்தில் இரண்டு விழுக்காடு கூடுதலாக கடனுதவியைப் பெற்றுக் கொள்ளலாம் என்பது அதில் ஒரு திட்டம் !

அதாவது தமிழகம் இதுவரை மூன்று லட்சம் கோடிகள் மட்டுமே கடன் பெறும் வரம்பிருந்தால்,  இனி இரண்டு லட்சம் கோடிகள் கூடுதல் கடன் வசதியைப் பெறலாம், ஆனால் சில கண்டிஷன்கள் என்று செக் வைத்தார் நிர்மலா சீதாராமன் !

வரும் டிசம்பர் 31 க்குள், மத்திய அரசு வகுத்துள்ள புதுச் சட்டங்களை ஒருமனதாக ஏற்றுக்கொண்டு, எந்த மாநிலங்கள் முழு ஒத்துழைப்பைத் தருகின்றனவோ, அவைகளுக்கு மட்டுமே இந்தக் கூடுதல் கடன் கிட்டும் !

அதாவது இந்தியாவில் எங்கும் செல்லக்கூடிய வகையில், அனைவருக்கும் ஒரே ரேஷன் அட்டை. இதன் மூலம் இந்தியாவில் எவரும் எங்கும் பொருட்களைப் பெற்றுக் கொள்ளலாம் என்கிற ஒன்றிய அரசின் திட்டத்தை மாநிலங்கள் மறுக்காமல் ஏற்க வேண்டும் !

ஒருபேச்சுக்கு தமிழகம் இதை ஏற்றால், குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்ட (பட்டால்) தொலைக்காட்சி பெட்டி, ஃபேன், மிக்ஸி, கிரைண்டர்களை, எல்லையோர அண்டை மாநில மக்கள் வந்து கொஞ்ச நாட்கள் இங்கு இருந்தது போல் காட்டி பெற்றுச் சென்றுவிட முடியும்.   மாறாக நாம் உ.பி, பீகார் போன்ற மாநிலங்களில் போய் வாழ நேர்ந்தால் இங்கு வழங்கப்பட்ட அட்டையைக் கொண்டே புழுத்த கோதுமையை வாங்கிக் கொள்ளலாம் !

உதய் க்ரீட் என்கிற மின் திட்டத்தின் மூலம், அனைவருக்கும் ஒரே விலையில் மின்சாரம், அதாவது இலவச மின்சாரம் இனி எளிய உழவர்களுக்கு கிட்டாது.    அதற்குப் பதிலாக அவர்கள் கட்டிய மின் கட்டண முழுத்தொகையை வங்கிக் கணக்கிலேயே மீண்டும் செலுத்தி விடுவார்களாம் !

இதுபோன்ற மாநில உரிமைகளில் தலையிடும் பல மோசமான செயல் திட்டங்களைத் தீட்டி, அவையனைத்தையும் மாநிலங்கள் ஏற்றால்தான் கடன் என்று இந்த இக்கட்டானச் சூழலைப் பயன்படுத்தி மிரட்டுகிறது ஒன்றிய அரசு !

இதற்கு மிகக் கடுமையாக வினையாற்றியிருக்கும் முதலாளாக தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் மிளிர்கிறார்.  நம்மாளும் அழுத்தம் கொடுத்து வலியுறுத்தி ஒன்றிய முதன்மை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார் !

இந்த அழகில்,  காதில் பூச்சுற்றும் எண்ணான 20 லட்சம் கோடிகள் என்கிற பேக்கேஜ் போல, மோசடி ஏதுமில்லை என ப. சிதம்பரம் முதல் அனைத்து நிதி ஆலோசகர்களும் ஒருசேர எதிர்த்து குரல்  கொடுத்திருக்கிறார்கள்.  ஒரு லட்சத்து என்பதாயிரம் கோடிகள் முதல் அதிகபட்சமாக 5 லட்சம் கோடிகள் வரைதான், அறிவித்த திட்டங்களுக்கும், சலுகைகளுக்கும் பணம் ஒதுக்க வாய்ப்பிருக்கிறது என்றும் மீதியெல்லாம் கடன் கொடுக்கப் போவதாகச் சொல்லப்படும் வெற்று உத்திரவாதங்கள்

மட்டுமே என்கிறார்கள் !

ராஜஸ்தான், டெல்லி, ஹரியானா போன்ற மாநிலங்களில் இருந்து வரும் உத்திரபிரதேசத்தின் பல லட்ச புலம்பெயர் தொழிலாளர்களுக்காக, உத்திரப்பிரதேசத்திற்குள் அவர்கள் பகுதிகளுக்கு பயணிக்க ஏதுவாக ஆயிரம் இலவச பேருந்துகளை பிரியங்கா காந்தி ஏற்பாடு செய்து, அதைப் பயன்படுத்த உ.பி அரசிடம் அனுமதி கோரினார் !

முதலில் சாக்கு போக்கு சொல்லி மறுத்த உ.பி அரசு, மாநில எல்லையோரமாக நிற்க வைக்கப்பட்ட பேருந்துகளைக் கண்டதும் மிரண்டது.  மோடிஜி மாதிரி பிரியங்கஜியும் வாயில் வடை மட்டுமே சுடுபவர் என்றெண்ணிய யோகியின் முகத்தில் கரியைப் பூசினார் பிரியங்கா !

உடனே அடுத்த ஆயுதத்தைப் பிரயோகித்தது உ.பியின் யோகி அரசு.  எங்களுக்கு வண்டியோட்டும் டிரைவர், கண்டக்டர் உடல் நிலை சான்றிதழ், பேருந்துகளின் உரிம விவரங்கள், FC update கொடுங்கள் என்றனர்.  உடனடியாக அதையும் காங்கிரஸ், உ.பி அரசுக்கு வழங்கியது.  அதில் ஒரு சில பேருந்துகளின் எண்களில் கோளாறுகள் இருக்கவே, அனைத்துமே கோல் மால் தில்லு முல்லு என பேட்டி கொடுத்து காங்கிரசின் உதவியைக் கொச்சைப் படுத்துவதிலேயே குறியாக இருந்தது யோகியின் அரசு !

1049 பேருந்துகளில் 859 பேருந்துகள் அனைத்துச் சோதனைகளிலும் தேர்வாகிவிட, உடனடியாக அந்தப் பேருந்துகள் வரையுமாவது அனுமதித்து, புலம்பெயர் தொழிலாளர்களின் துயரைத் துடைக்க இறைஞ்சினார் பிரியங்கா.  எங்களுக்கு இங்க தேவையில்ல லக்னோ வா, அங்க தேவையில்ல கான்பூர் கொண்டு போ எனக் குழப்பியடித்தது, வெறிபிடித்த காவி அரசு !

எப்பா சாமிகளா வேணும்ன்னா வெள்ள நிவாரணத்தின் போது உதவி செய்ய வந்தவர்களிடமிருந்து பொருட்களைப் பிடுங்கி ஜெயா தன் படம் போட்ட ஸ்டிக்கர ஒட்டிக்கிட்டதைப் போல, நீங்களும் பஸ்ல பாஜபா செய்யும் உதவின்னு பேனர் கட்டிக்கிட்டுக் கூட, முதலில் நடக்கும் அந்த அப்பாவி ஜீவன்களைக் காப்பாற்றுங்க என்று கூட கோரிக்கை வைத்துப் பார்த்தார் பிரியங்கா.  மூச்.

மனிதாபிமானம் அறவே அற்ற யோகி ஆதித்தியநாத் அரசு அந்த உதவியை நிராகரித்து வெறிபிடித்த தன் அரசியலைச் செய்தது.  இன்னொரு கூத்து, இதைக் காங்கிரஸ் கட்சியின் நாடகமென மாயாவதி கூறியது.   கேட்டா, புலம்பெயர் தொழிலாளர்களின் இந்த அவல நிலைக்கு காரணமே இவ்வளவு நாட்கள் ஆண்ட காங்கிரஸ் அரசுதானாம்.  எனவேத்தான் திரும்பத் திரும்பச் சொல்கிறோம் நீலச்சங்கிகளைக் காட்டிலும் நீலயானைகள் நாட்டுக்கு  அபாயகரமானவை !

மே மாத வெய்யிலும் கொடூரம், கொரோனாவும் கொடூரமென நாம் புலம்பிக்கொண்டிருந்த வேளையில் வந்தார் கல்வி அமைச்சர் செங்கோட்டையன்.  எது என்ன ஆனாலும் ஆவட்டும், பத்தாம் வகுப்புக்கு பொது தேர்வு கட்டாயமுண்டு, குறிச்சிக்கோ தேதி ஜூன் 1 என்றார்.  எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் உட்பட அனைவரும் இதை மிகக் கடுமையாக எதிர்த்தனர் !

ஆங், அதான் தனி பஸ் விடுறோம், தனி டெஸ்க் தர்றோம், எத்தனை லட்சம் பேர் கூடினா உங்களுக்கென்னா ?  அதான் ப்ளீச்சிங் பவுடர் போட்டுவோமில்ல ரேஞ்சுக்கு பேசிய அமைச்சரைப் பார்க்க வியப்பாக இருந்தது.  நாட்டில் பிரளயமே வந்தாலும் ஜூன் 1 தேர்வு உண்டு என்றுவிட்டு உள்ளே போனவர், ஐந்தே நிமிடத்தில் வெளியே வந்து சரி உங்களுக்கும் வாணாம், எனக்கும் வாணாம் ஜூன் 15 என்று இன்னொரு தேதியைக் கொடுத்துவிட்டு மீண்டும் உள்ளே போய்விட்டார் !

இதற்கும் இன்றுவரை பரவலான எதிர்ப்பே உள்ளது.  பார்ப்போம் செங்கோட்டையன் இன்னும் எத்தனைக் குட்டிக்கரணம் போடவிருக்கிறாரென்று ?

நான்காம் ஊரடங்கின் நிலை’முதல் பாகம் முற்றும்