எழுத்தாளர் திலீப்குமாரின் ‘ஒரு குமாஸ்தாவின் கதை’ என்ற சிறுகதையைத் தழுவி இயக்கப்பட்டிருக்கும் திரைப்படம் ‘நசீர்’. ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் 2020கான NETPAC (Network for the Promotion of Asian Cinema) விருதினை சிறந்த திரைப்படத்திற்காகப் பெற்றுள்ளது. இந்தியாவிலிருந்து இதற்கு முன்பு மணி கௌல், அடூர் கோபாலகிருஷ்ணன் போன்ற மிக முக்கியத் திரைக்கலைஞர்களுக்குப் பிறகு ‘நசீர்’ திரைப்படத்திற்காக அதன் இயக்குனர் அருண் கார்த்திக்கும் இவ்வுயரிய விருந்தினைப் பெற்றிருப்பது குறிப்பிடத்தகுந்தது.
விமர்சனங்கள் எத்திரைப்படத்திற்கும் அந்நியமில்லை என்றாலும் ஒரு நாவலையோ, சிறு/குறுங்கதையையோ தழுவி எடுக்கப்படும் திரைப்படம் மீதான விமர்சனத்திற்கான பரிணாமம் விரிவடைகிறது. குறிப்பிட்ட திரைப்படம் அது தழுவி எடுக்கப்பட்ட கதைக்கு நியாயம் செய்திருக்கிறதா என்பதே முதல் கேள்வியாக விமர்சனத்தில் இடம்பெறுகிறது. இக்கேள்விக்கான பதிலாக ‘நசீர்’ திரைப்படம் ‘ஒரு குமாஸ்தாவின் கதை’ சிறுகதைக்கு நியாயமிழைத்திருப்பது மட்டுமல்ல, மூலக்கதையின் அரசியலையும் மிகக் கச்சிதமாக உள்வாங்கி அதைத் திரைமொழியில் பிரதிபலித்திருக்கிறது எனலாம்.
இயக்குனர் சிறுகதையில் இருந்து எடுத்துக்கொண்டு உருவாக்கிய காட்சிகளை விடவும், தன் திரைக்கதையிலிருந்து உருவாக்கிய காட்சிகளின் வழி இத்திரைப்படத்தின் அரசியலை அணுகுவது முக்கியம் என்று கருதுகிறேன். குறிப்பாக, சிறுகதையில் இல்லாத, கல்லூரி இளைஞர்கள் தங்கும் விடுதிக்கு கதாநாயகன் நசீர் செல்லும் காட்சியும், தான் வேலை செய்யும் கடை முதலாளியின் மகனுக்கு மதிய உணவளிக்கச் செல்லும் காட்சியும், தன்னுடைய தூரத்து உறவினர் ஒருவரை அனிச்சையாக மதிய உணவு இடைவேளையில் சந்தித்து உரையாடும் காட்சியையும் சொல்லலாம். இக்காட்சிகள் சிறுகதையில் இருப்பது போன்று கதாநாயகனை வீடு, துணிக்கடை என்று நிறுத்தாமல், அவனது உலகத்தை சற்று விரிவாக்குகிறது. இந்த மாற்றத்தை இயக்குனர் ஏன் செய்ய வேண்டும் என்ற கேள்விக்கான விடையையும் இக்கட்டுரை அறிய முயற்சிக்கிறது.
நசீர் என்ற, நாற்பதுகளின் தொடக்கத்தில் இருக்கும் திருமணமான சாமானிய மனிதன் ஒருவனது ஒருநாள் வாழ்வு நம் முன் காட்சிகளாக விரிகிறது. ஏறத்தாழ ஒன்றரை மணி நேரம் ஓடும் திரைப்படத்தில் காலை, மதியம், மாலை, இரவு என்று ஒருநாளின் அனைத்துப் பொழுதுகளிலும் கிட்டத்தட்ட பல மணி நேரங்கள் நசீரின் வாழ்வில் அவன் கண்ணுக்குப் புலப்படாத நிழலாக உலா வரும் உணர்வை மிகக் கச்சிதமான ஒளிப்பதிவின் மூலம் பார்வையாளர்கள் அடைகிறோம். வசதியிலும் எண்ணிக்கையிலும் எளிமையான நசீரின் குடும்பத்தில் இருப்பவர்கள், நசீர், அவனது மனைவி, அவனது தாயார், மனவளம் பாதிகப்பட்ட ஒரு வளறிளம் சிறுவன். அன்று அதிகாலை மசூதியிலிருந்து ஒலிக்கும் ஆசான் குரலுக்குக் கண் விழிக்கும் நசீர், எழுந்தவுடன் முதல் வேலையாகத் தன் மனைவி தாஜை உதட்டில் முத்தமிடுகிறான். அவளும் அவனது முத்தத்தை மறுப்பின்றிப் பெற்றுக்கொள்கிறாள். முந்தைய இரவின் கூடலின் தொடர்ச்சியோ, அடுத்து வரும் மூன்று நாட்களுக்குத் தன் மனைவியை பிரிந்திருக்கப்போகும் ஏக்கமோ, காரணங்கள் ஏதும் தேவயற்ற காதலின் வெளிப்பாடோ – எதுவாகயிருப்பினும் முகப்பூச்சற்ற, நளினமற்ற அந்த முத்தம் நசீர்-தாஜ் தம்பதிகளுக்கு இடையிலான அன்பை சில நொடிகளில் பிரஸ்தாபித்துவிடுகிறது. அன்றாடம் என்பதன் அர்த்தத்திற்கிணங்கத் தொடங்கும் அவனது காலையில் இளையராஜாவும் இருக்கிறார். திலீப்குமாரின் மெஹ்பூபிற்கு பேகம் அக்தர் என்றால் அருண் கார்த்திக்கின் நசீருக்கு இளையராஜா.
அன்றைய தினம் நசீரின் பேச்சை மீறி உறவினரின் திருமணத் தயாரிப்புகளில் கலந்துகொள்ள தாஜ் செல்லவிருக்கிறாள். அங்கு சென்றால் அவளால் தன் குடும்பத்தினரிடமிருந்து ஏதாவது பணத்தை ஏற்பாடு செய்ய முடியும். அப்பணத்தைக் கொண்டு கர்ப்பப்பைப் புற்றுநோயால் வேதனைப்பட்டுகொண்டிருக்கும் நசீரின் அம்மாவிற்கு சிகிச்சையளிக்க முடியும். நசீர் வேலைக்குத் தயாராகும்பொழுதே அதிகாலையிலேயே எழுந்து அவனுக்காக மதிய உணவைத் தயாரித்து வைத்து, தாஜும் அவனுடனேயே தயாராகிறாள். நசீர் அவளது ஹிஜாபை சரிசெய்து ஊக்குக் குத்திவிடுகிறான். அவர்கள் வீட்டை விட்டுக் கிளம்புமுன் நசீர் தன் அண்டைவீட்டுக்காரனிடம் பணம் கைமாறு வாங்கச் செல்கிறான். ஆனால் நசீரைப் போலவே வசதியற்ற அந்த மனிதனிடமும் பணம் அத்தனை சுலபமாகச் சேர்வதில்லை. அவனது பிழைப்பும் நகையை அடகு வைத்து மீட்க முடியாமல் மூழ்கி வறுமையில்தான் நடக்கிறது.
தாஜை பேருந்தில் ஏற்றி வழியனுப்பிவிடச் செல்லும் நசீர் அவள் அதில் ஏறி அமர்வது வரை அவள் செல்லத்தான் வேண்டுமா என்று கேட்கிறான். அவள் பதில் கூறாமல் முறைக்க, அவன் கைப்பையை அவளிடம் ஒப்படைத்துவிட்டு அமைதியாக விடைபெறுகிறான். இச்சில தொடக்கக் காட்சிகளிலேயே நசீர் என்ற கதாபாத்திரத்தின் குண வார்ப்பும் நிறுவப்படுகிறது. நசீர் மனைவி மற்றும் தாயிடம்கூட அதிர்ந்து பேசாத தன்மையானவன். கவிதைகளையும் இசையையும் ரசிக்கும் மென்மையானவன். யாருடைய வம்பிற்கும் செல்ல விரும்பாதவன். அவன் வேலை பார்க்கும் கடையில் இருக்கும் மற்றவர்கள் அவனிடம் விளையாட்டாக வம்பிழுத்தாலும் புன்னகையுடன் விலகிக்கொள்பவன். அவன் யாரைக்குறித்தும் புறம்பேச விரும்பாதவன். இப்படிப்பட்ட நசீரைத்தான் நாம் நாள் முழுவதும் தொடர்கிறோம். ஏன் நசீரின் கதாபாத்திரம் இத்தனை மென்மையானதாக இருக்கிறது?
திலீப்குமாரின் ‘ஒரு குமாஸ்தாவின் கதை’ வழக்கமான நடையில் எழுதப்பட்ட கதையல்ல. ஓர் இலக்கியப் படைப்பு, எந்த வடிவமானாலும் பெரும்பாலும் முதல் நபர் விவரணையிலோ அல்லது மூன்றாம் நபர் விவரணையிலோதான் இருக்கும். இரண்டாம் நபர் விவரணையில் எழுதப்படும் படைப்புகள் மிக மிக அரிதானவை. அவை முக்கியக் கதாபாத்திரத்தின் உணர்வுகளைக் கடத்துவதில் முதல் இரண்டு விதங்களைவிடவும் சற்று கடினமானவை. இலக்கிய மதிப்பீட்டில் இரண்டாம் நபர் விவரணையில் எழுதப்படும் கதைகள் சவாலானவையும்கூட. திலீப்குமார் ஏன் இந்தக் கதையை இரண்டாம் நபர் விவரணையில் எழுத வேண்டும்? வெறும் விதிமீறலை நிகழ்த்துவதற்கா?
திரைப்படத்தில் முஸ்லீம் குடியிருப்பில் நசீரின் வீடு இருந்தாலும் அவனது கடையும், வீட்டிலிருந்து கடைக்குச் செல்லும் வழியும் இந்துக்கள் ஆதிக்கம் செலுத்தும் இடமாக இருக்கிறது. நசீர் தெருக்களில் நடக்கும்பொழுதெல்லாம் அவனது சுற்றத்தைக் கவனித்தால் இது விளங்கும். போலவே, அண்டை வீட்டாரைத் தவிர, அவன் தினமும் பழகுபவர்களும் இஸ்லாமியர்கள் அல்ல. நசீர் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், அவன் நல்லவனாக இருப்பது அவன் மீது சுமத்தப்பட்டிருக்கும் பொறுப்பு. அவன் தனது அன்றாடங்களிலிருந்து கொஞ்சம் பிசகினாலும் உடனேயே கவனிக்கப்படுவான்.
பார்ப்பன இந்துமதம் பொதுபுத்தியில் இஸ்லாமியன் என்றால் சினிமாவில் இயங்கும் ஹீரோ-வில்லன் என்பதுபோன்ற இருமை விதியின் கீழ் பிரித்து வைத்திருக்கிறது. ஓர் ஆதர்ச இஸ்லாமியன் ஐந்து வேளையும் தொழுபவனாக, கடுமையாக உழைத்துப் பொருள் ஈட்டிக் குடும்பத்தைக் காப்பாற்றுபவனாக, தன் அன்றாட வழமையான நடவடிக்கைகளைக்கூட வெளிப்படையாகவே செய்பவனாக, சுற்றத்தாரிடம் குறிப்பாக இஸ்லாமியச் சொந்தங்கள்/நண்பர்கள் அல்லாத சுற்றத்தாரிடம், அதாவது இந்துக்களிடம் தன்மையாக நடந்துகொள்பவனாக இருக்க வேண்டும். இதில் எங்கு, எது கொஞ்சம் பிசகினாலும் அவன் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புகொண்டவனாகவோ அல்லது அவனே ஒரு தீவிரவாதியாகவோ ஆகிவிடுகிறான். ஆக, சமுதாயத்தில் ஓர் ஆதர்ச இஸ்லாமியர் எப்படி இருக்க வேண்டும் என்று நிர்பந்திக்கும் பார்ப்பன இந்துமதம் பொதுபுத்தியில் ஏற்படுத்தியிருக்கும் பிம்பத்திற்கு ஏற்ப, இஸ்லாமியர்களைச் சித்தரிக்கும் வெகுஜன திரைப்படங்களிலும் பெரும்பாலும் இப்போக்கையே காணலாம். இஸ்லாமியன் என்றால் மிக மிக ஒழுக்கமானவனாகத்தான் இருக்க வேண்டும், அல்லையேல் அவன் ஒரு தீவிரவாதி என்று மீண்டும் மீண்டும் பிரசங்கம் செய்யப்படும் இந்த இருமையின் போலித்தனத்தை ‘ஒரு குமாஸ்தாவின் கதை’ கேலி செய்கிறது. அதையே ‘நசீர்’-உம் பிரதிபலிக்கிறது. இக்கதை இரண்டாம் நபர் விவரணையில் எழுதப்பட்டிருப்பதற்கான காரணமாக இக்கோணத்தில் இதை நாம் அணுகுவது அவசியம். சிறுகதையிலிருந்து கீழே வரும் இந்த வாக்கியங்களை கவனியுங்கள்:
“மரணத்தை நீங்கள் நெருங்கிவிட்டதாக லேசாக உணர்கிறீர்கள். மரணத்திற்கு முன் எதைப் பற்றியும் உங்களால் நினைக்க முடியவில்லை.
இக்பாலை இவர்கள் கொன்றுவிட்டார்களா?
சமையல் செய்துகொண்டிருக்கும் அம்மிஜான் என்ன ஆவாள்.
குளித்துக்கொண்டிருக்கும் கரீம் தாத்தாவை அப்படியே இவர்கள் கொளுத்திவிடுவார்களா?
தஸ்தகீரின் வீட்டை நொறுக்கிவிடுவார்களா?
தாஜ் பேகம் எப்படியிருக்கிறாள்?
இக்பால் வரைந்த மான்குட்டி, மோஸ்தர்களின் மாளிகை, சண்முகம், வீரு, நந்து, அர்ஜுன் தாஸ், லீலாதர், டிகம் தாஸ், கிஷன் சந்த், பகவான் தாஸ், டிப்டாப் உலர் சலவையகம், முபாரக் டீ ஸ்டால், மங்களூர் கணேஷ் பீடி, பேகம் அக்தர், சுரையா, நீங்கள் எழுத நினைத்த கவிதைகள், இப்படி யாரைப் பற்றியும் எதைப் பற்றியும் நினைக்காமலேயே நீங்கள் இறந்துவிடுகிறீர்கள்.
நீங்கள் இறந்துவிட்டீர்கள்.”
மெஹ்பூபோ, நசீரோ – அவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருந்தார்கள் என்பது அவர்கள் மரணத்தைத் தீர்மானிக்கவில்லை. அவர்கள் யாராக இருந்தார்கள் என்பதுதான் காவி பயங்கரவாதிகளின் கையில் அவர்கள் மரணத்தைத் தீர்மானிக்கிறது.
கதையில் இல்லாத சில தருணங்கள் திரைப்படத்தில் இடம்பெறுவதை இக்கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிட்டிருந்தேன். அத்தருணங்கள் ஒவ்வொன்றையும் கவனித்தால் நசீர் தான் சந்திக்கும் மனிதர்களிடம் வழக்கமாக ஒருவரிடம் வெளிப்படும் தன்மையைவிடவும் அதிகத் தன்மையுடன் நடந்துகொள்கிறான். நசீர் ஏன் நல்லவனாக இருக்கிறான் என்ற கேள்வியைவிடவும் நசீருக்கு இத்தனை நல்லவனாக இருக்க வேண்டிய நிர்பந்தம் எதனால் ஏற்படுகிறது என்ற கேள்வியே முக்கியமானது.
எழுத்தாளர் ரமேஷ் பிரேதன் தனது கட்டுரை ஒன்றில் தான் வைத்திருக்கும் தாடி தன்னை ஓர் இஸ்லாமியனாக மூன்றாம் மனிதனுக்கு அடையாளப்படுத்துவதோடு, அந்த அடையாளம் தன்னை அனுதினமும் பயத்துடனேயே வைத்திருப்பது குறித்து ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருப்பார். இஸ்லாமியர் அல்லாத ஓர் ஆண், தனது தோற்றத்திற்காகவே ஒவ்வொரு நாளும் செத்துப் பிழைக்க வேண்டுமென்றால், இந்த தேசத்தில் இஸ்லாமியர்கள் மீது ஏவப்படும் வன்முறையை ஒருவர் அவதானிப்பது எளிது.
பிஹாரைச் சேர்ந்த அப்துல்லா கானின் ‘பாட்னா ப்ளூஸ்’ (தமிழில் கானல் நீர்) நாவலின் முக்கிய கதாபாத்திரமான ஆரிஃப் என்ற இளைஞன் பாட்னாவின் நகரத்தெருக்களில் போகும்போதெல்லாம் ஏதோ ஓர் ஒலிபெருக்கியிலிருந்து யாரோ ஓர் இந்து, இஸ்லாமிய வெறுப்பை உமிழ்ந்துகொண்டிருப்பார். இதில் சுவாரசியம் என்னவென்றால், அந்த இந்துவையோ, அவர்முன் அமர்ந்திருக்கும் ஆயிரக்கணக்கான பொதுமக்களாகிய இந்துக்களையோ நாம் பார்க்க முடியாது. ஆனால் அந்த வெறுப்பு ஆரிஃபின் காதுகளையும், எண்ணற்ற இஸ்லாமியர்களின் காதுகளையும் எட்டும். எட்ட வேண்டும். ஒலிபெருக்கியில் யார் பேசினாலும், என்ன பேசினாலும், அதன் முன் அமர்ந்திருப்பவர்களை விடவும் பேசுபவை இஸ்லாமியர்களின் காதுகளில் விழச்செய்வதுதான் இவர்களது நோக்கம். இஸ்லாமிய சமூகத்தையே ஒருவித பயத்தில் எப்பொழுதும்வைத்திருப்பதற்கான முனைப்புதான் இந்த ஒலிபெருக்கி உபாசனைகள். எண்ணற்ற இஸ்லாமிய சொந்தங்களில் ஒருவனாக ஆரிஃபை நாம் பார்க்கிறோம். அவர்கள் விதைக்கும் வெறுப்பு பயமாக அந்த இளைஞனின் மனதில் படிவதைப் பார்க்கிறோம். ஏதோ ஓர் வேலையாக வெளியில் செல்பவன் ஒலிபெருக்கியில் கேட்கும் வெறுப்புக் குரலால் வேலையை அரைகுறையாக முடித்து பத்திரமாக வீடடைய வேண்டும் என்கிற பதட்டம் அவனைத் தொற்றிக்கொள்வதைப் பார்க்கிறோம்.
நசீர் வழக்கமாக வேலைக்கும் வீட்டிற்கும் நடந்து செல்லும் தெருக்களிலும் ஒலிபெருக்கிகள் வெறுப்பைக் கக்குகின்றன. அவை நசீரின் காதுகளில் வந்தடைவதையும் நாம் பார்க்கிறோம். நசீரால் என்ன செய்யமுடியும், அமைதியாகக் கடந்து செல்வதைத் தவிர. அவனைத்தான் நாம் ‘நல்லவன்’ என்று அடையாளப்படுத்துகிறோம்.
ஓர் இஸ்லாமியனாக நசீர் எதிர்கொள்ளும் இந்த அன்றாட வன்முறையை இத்திரைப்படம் நெடுகிலும் பதிவுசெய்கிறது. கடைசிக் காட்சியில் நசீரின் மீது மதவெறியர்கள் நிகழ்த்தும் கோரத் தாக்குதல் உடல் மீதான வன்முறை என்றால், கூட வேலை பார்க்கும் கடை ஊழியன் கைப்பேசியில் இஸ்லாமியர்களைக் குறித்து நசீரின் காதுபடவே இழிவாகப் பேசுவது உளவியல் வன்முறை. வெளிப்படையான வன்முறைகளுக்கு மட்டுமே எதிர்வினையாற்றிப் பழகப்பட்டிருக்கும் சமூகத்தில் சிறுபான்மை மதத்தவர்களின்மீது நிகழ்த்தப்படும் உளவியல் வன்முறைகளுக்கு எடுத்துக்காட்டான ‘விநாயக சதுர்த்திக் கொண்டாட்டங்கள்’ போன்ற நிகழ்வுகள் குறித்து பெரிதாக நாம் அலட்டிக்கொள்வதில்லை. நசீர் போன்ற சாதாரண மனிதர்களின் வாழ்க்கையைக் குலைத்துப் போடுவதற்கு இக்கொண்டாட்டங்கள் அடித்தளம் அமைத்துத் தருகின்றன.
திரைப்படத்தின் இறுதியில் இந்துத் தீவிரவாதிகள் வெட்டி சாய்த்துக் கிடாசும் நசீரின் உயிரற்ற உடல் கேட்பாரற்றுக் கிடப்பதைப் பார்க்க நம் ஈரக்குலை நடுங்குகிறது.
தன் காதல் கணவனின் இறந்த உடல் தெருவில் கிடப்பதைக்கூட அறியாத தாஜ் அன்று காலை அவனிடமிருந்து பெற்றுக்கொண்டதுதான் கடைசி முத்தம் என்றறிய நேரும் நொடி அவள் இடும் ஓலத்தைக் கேட்க யாரால் இயலும்?