க்றிஸ்டோஃபர் நோலன்: காலத்தின் கலைஞன்
Memento | English | 2000 | USA | 1 hr 53 mins | Christopher Nolan
க்றிஸ்டோஃபர் நோலனின் தம்பி ஜோனதன் நோலன். ஆறாண்டு இளையவர். அவர் தன் கல்லூரிப் பாடத்தின் பகுதியான உளவியல் வகுப்பில் தோன்றிய எண்ணத்தின் அடிப்படையில் Memento Mori என்ற சிறுகதையை 90களின் இறுதியில் எழுதினார். “நீ மரிப்பாய் என்பதை நினைவிற் கொள்” என்பது தலைப்பின் பொருள். ஏர்ல் என்பவன் குறுங்கால மறதியால் (Anterograde amnesia – நம்மூர் பாஷையில் சொன்னால் Short-term Memory Loss) அவதிப்படுபவன். சில நிமிடங்களுக்கு ஒரு முறை அவனது நினைவுகள் அழிந்து விடும். அவன் மனைவியை யாரோ வன்புணர்ந்து கொன்ற நிகழ்வின் போது நடந்த கைகலப்பில் தான் அவனுக்கு இப்பிரச்சனை ஆரம்பிக்கிறது. இதோடு அவன் கொலையாளியைக் கண்டுபிடித்துப் பழிதீர்க்க வேண்டும். அதற்காக கொலையாளி பற்றிய தகவல்களை உடலெங்கும் பச்சை குத்திக் கொள்கிறான். கதை இரு வேறு காலகட்டங்களிடையே மாறி மாறிப் பயணிக்கிறது. இக்கதையை ஜோனதன் சொன்ன போது க்றிஸ்டோஃபர் அவரை ஊக்குவித்து எழுதச் சொல்லி இருக்கிறார். அதன் முதல் வரைவு தயாரானதும் க்றிஸடோஃபர் நோலன் அதற்குத் திரைக்கதை எழுத ஆரம்பித்தார். ஜோனதனும் அக்கதையைத் தொடர்ந்து செப்பனிட்டுக் கொண்டிருந்தார்.
இருவரும் தத்தம் பிரதிகளை அவ்வப்போது பறிமாறி, விவாதித்து மெருகேற்றினர். க்றிஸ்டோஃபர் நோலனுக்கு அவர் மனைவி எம்மா தாமஸின் சினிமாத் தொடர்புகள் வழி அத்திரைக்கதையைப் படமாக்கும் வாய்ப்பு வந்தது. 2000ம் ஆண்டில் திரைப்படம் வெளியானது. அதன் பிறகு ஓராண்டு கழித்து (2001) Esquire சஞ்சிகையில் ஜோனதன் நோலனின் சிறுகதை வெளியானது. Memento Mori சிறுகதையை இந்த இணைப்பில் படிக்கலாம்:
https://www.londonscreenwritersfestival.com/assets/Memento-Short-Story-by-Jonathan-Nolan.pdf.
மேற்சொன்ன அதே கதை தான் Memento படத்திற்கும். கதாபாத்திரப் பெயர்கள் வேறு. அவர்தம் குணநலன்கள் வேறு. சம்பவங்கள் வேறு. முடிவு வேறு. எல்லாவற்றுக்கும் மேல் படத்தின் தனித்துவம் தலைகீழ்க் கதை சொல்லும் பாணி (Reverse Chronology).
இதில் நாயகன் லியோனார்ட் என்ற லென்னி. குறுங்கால மறதி என்றால் அவனால் புதிய நினைவுகளை உண்டாக்கிக் கொள்ள முடியாது. அவனது கடைசி ஸ்திர நினைவு அவன் மனைவியின் முகம். குளியலறையில் வல்லுறவு செய்யப்பட்டு நிர்வாணமாய்க் கிடக்கும் அவளது உயிர்விடும் கணங்கள். மறதியை எதிர்கொள்ள அவன் மூன்று உபாயங்களைக் கையாள்கிறான். ஒன்று கொலையாளி பற்றிய துப்பு கிடைக்கும் போதெல்லாம் டாட்டூ குத்தும் கடைகளுக்குச் சென்று அதைத் தன் உடல் முழுக்கப் பச்சை குத்திக் கொள்கிறான் (JOHN G. RAPED AND MURDERD MY WIFE, FIND HIM AND KILL HIM, FACT 1: MALE, FACT 2: WHITE, FACT 3: FIRST NAME JOHN OR JAMES, FACT 4: LAST NAME G______, FACT 5: DRUGDEALER, FACT 6: car license number SG13 7IU, NEVER ANSWER THE PHONE, remember sammy jankis – இப்படி மார்பு, வயிறு, விலா, கை, கால் என எல்லா இடங்களிலும்). இரண்டாவது அவன் ஒரு இன்ஸ்டன்ட் போலராய்ட் கேமெரா வைத்திருக்கிறான். அவன் தான் சந்திருக்கும் நபர்களைப் புகைப்படமெடுத்து, அதில் அவர்கள் பெயர்களையும், அவர்கள் பற்றிய குறிப்பையும் எழுதி, எப்போதும் அவற்றைத் தன் சட்டைப் பையில் வைத்திருக்கிறான். மூன்றாவதாய் அவனோ, மற்றவர்களோ காகிதங்களில், அட்டைகளில் எழுதித் தரும் குறிப்புகள். இவற்றை எல்லாம் வைத்துத் தன் ஞாபகக் குறையை நிரப்ப முனைகிறான். அவன் உயிர் வாழ்வதே அவன் மனைவியின் சாவுக்குக் காரணமானவனைக் கொல்லத் தான்.
கதை இரண்டு பகுதிகளாகப் பிரிந்திருக்கிறது. ஒரு பகுதி கருப்பு வெள்ளையில் அசல் கால வரிசையில் போகிறது. மற்ற பகுதி கலரில் தலைகீழ் வரிசையில் போகிறது. மாறி மாறி இவ்விரு பகுதிகளும் வருகின்றன. இறுதியில் இரண்டும் இணைகின்றன. உதாரணமாய் மொத்தமாகவே படத்தில் பத்து காட்சிகள் தாம் இருக்கின்றன என வைத்துக் கொள்வோம். ஐந்து கருப்பு வெள்ளைக் காட்சிகள்: 1, 2, 3, 4 & 5 (இது படத்தில் இப்படியே நேராய் வரும்). ஐந்து கலர் காட்சிகள்: A, B, C, D & E (இது படத்தில் தலைகீழாய் வரும்: E, D, C, B & A). இந்த இரண்டும் மாறி மாறி படத்தில் வரும். அந்தப் பத்தும் நிகழ்ந்த நிஜக் கால வரிசை இது: 1, 2, 3, 4, 5, A, B, C, D & E. ஆனால் படம் அவற்றை இந்த வரிசையில் காட்டுகிறது: E, 1, D, 2, C, 3, B, 4, A & 5.
கருப்பு வெள்ளைப் பகுதி முழுக்க லென்னி டிஸ்கவுண்ட் இன் என்ற ஹோட்டலின் அறையில் தங்கியிருந்து தொலைபேசியில் டெட்டி என்ற போலீஸ்காரருக்குத் தன் கதையைச் சொல்வதும், பச்சை குத்திக் கொள்வதும் காட்டப்படுகின்றன. அவன் ஓர் மருத்துவக் காப்பீட்டு விசாரணை அதிகாரி. முன்பு சாம்மி என்பவரின் கேஸில் அவர் விபத்தில் குறுங்கால மறதியால் அவதிப்படுவதற்கு இன்ஷ்யூரன்ஸ் கிடைக்குமா என விசாரித்து மறுத்து விடுகிறான். சாம்மியின் மனைவியிடம் அவருக்கு நினைவுத்திறம் மீளும் வாய்ப்புள்ளது என்கிறான். நீரிழிவு நோயாளியான அவள் அதை நம்பித் தன் கணவனைப் பரிசோதிக்க தனக்கு ஒரே வேளையில் மீண்டும் மீண்டும் இன்சுலின் போடச் சொல்கிறாள், அவர் அவள் மீது அதிபிரியம் கொண்டுள்ளவர் என்பதால் அதன் மூலம் அவரது நினைவு திரும்பும் என்ற நம்பிக்கையில். ஆனால் அவரோ மறதியால் மூன்று முறை அவளுக்கு இன்சுலின் செலுத்தியதால் அவள் மீளவியலாக் கோமாவுக்குப் போகிறாள். இக்கதையைத் தன் கதையோடு ஒப்பிட்டுக் கொள்கிறான் லென்னி. போலீஸ்காரர் டெட்டியின் வழிகாட்டுதலில் ஜிம்மி என்ற போதைப்பொருள் கடத்தல்காரன் தான் தன் மனைவியைக் கொன்றவன் என நம்பி ஒரு பாழடைந்த தொழிற்சாலையில் வைத்துக் கொன்று புகைப்படமெடுப்பதோடு கருப்பு வெள்ளைப் பகுதி முடிகிறது. கொலை செய்த போலரைட் புகைப்படம் கருப்பு வெள்ளையிலிருந்து கருப்புக்கு மாறும் அழகிய ரசவாதத்தோடு இத்திரைக்கதை மாற்றம் காட்டப்படுகிறது.
அங்கே தெரிய வரும் ஓர் உண்மையில் அதிர்ந்து லென்னி மூன்று விஷயங்கள் செய்கிறான்: ஜிம்மியைக் கொன்ற புகைப்படத்தை எரிக்கிறான், டெட்டியின் படத்தில் “அவன் பொய்யன், நம்பாதே” என எழுதி வைத்துக் கொள்கிறான், டெட்டியின் காரின் நம்பர் ப்ளேட்டைக் கொலையாளியின் அடையாளமாய்க் குறித்துக் கொள்கிறான். படத்தின் கலர்ப் பகுதிகள் முழுக்க நகர்வது இந்த மூன்று செயல்களால் தான். கலர்ப் பகுதி முழுக்க அவன் கொல்லத் துரத்துவது கொலையாளியை அல்ல, டெட்டியைத் தான். அதாவது உண்மையை மறைத்து தனக்குத் தானே ஒரு பொய்யைச் சொல்லிக் கொள்கிறான். அந்த குறுங்கால மறதி நோய் ஒரு சாபம் தான். ஆனால் அதை அவன் தன் ஆயுதமாக அப்போது ஆக்கிக் கொள்ளும் பிரமாதமான தத்துவத் தருணம் அது.
கலர்ப் பகுதி முழுக்க அவன் ஹோட்டல் டிஸ்கவுண்ட் இன்னில் வேறோர் அறையில் தங்கியிருக்கிறான். இறந்த ஜிம்மியின் சினேகிதியான நடாலி லென்னியின் ஞாபக மறதியைத் தன் சொந்த பிரச்சனை ஒன்றைத் தீர்க்கப் பயன்படுத்திக் கொள்கிறாள். ஹோட்டல் ரிசப்ஷனில் இருப்பவனும் அதைப் பயன்படுத்துப் பணம் பார்க்கிறான். போலீஸ்காரர் டெட்டி அவனைத் தொடர்ந்து வந்து ஏதோ எச்சரித்துக் கொண்டே இருக்கிறார். லென்னியும் அவன் மனைவியும் குளியலறையில் வைத்து யாரோ இருவரால் தாக்கப்படும் ஃப்ளாஷ்பேக்கும் இந்தக் கலர்ப் பகுதியில் தான் வருகிறது.
லியோனார்ட் என்ற லென்னி மனைவியைக் கொன்றவனைக் கண்டுபிடித்தானா, பழி தீர்த்தானா போன்ற கேள்விகளுக்கு ஒரு பலத்த திருப்பத்துடன் பதில் கிடைக்கிறது.
மேலே சொன்னது போல் கலர்ப் பகுதியின் முதல் காட்சி தான் காலவரிசைப்படி கடைசிச் சம்பவம். அது டெட்டியைக் கொலை செய்து எடுக்கும் புகைப்படத்தில் ஆரம்பிக்கிறது. அந்தப் போலரைட் புகைப்படம் மெல்ல மெல்லக் கலரிலிருந்து கருப்பு வெள்ளைக்கு மாறுகிறது. அதிலிருந்தே கலர்ப் பகுதிகள் கால வரிசையில் தலைகீழாகக் காட்டப்படவிருக்கறது என்பது பார்வையாளனுக்குச் சொல்லப்பட்டு விடுகிறது. ஒவ்வொரு கலர்க் காட்சி முடிகையிலும் அடுத்த காட்சியின் (அதாவது காலவரிசைப்படி முந்தைய சம்பவம்) ஆரம்பமும் சில நொடிகள் காட்டப்படுகிறது. காரணம் தலைகீழ் வரிசை என்பதால் பார்வையாளனுக்குத் தெளிவாக்கும் விதமாக.
உதாரணமாக காட்சி வரிசையில் முதலில் லென்னி நடாலியை ஓர் உணவகத்தில் சந்தித்து கொலையாளியின் கார் பற்றிய தகவல்களையும் அவளது அறையில் தான் தவற விட்டு வந்த ஹோட்டல் அறையின் சாவியையும் பெறுகிறான். அடுத்த காட்சி அவன் ஹோட்டல் அறைக்குப் போய்ச் சாவியின்றிக் குழம்பி ஹோட்டல் ரிசப்ஷன் ஆளிடம் பேசித் தேடிய பின்னர் தன் காகிதக் குறிப்பைப் பார்த்து நடாலியாவைச் சந்திக்கப் போவது. உணவகத்தில் அமர்ந்திருக்கும் நடாலி லென்னியின் கையைப் பிடித்திழுக்கும் காட்சியோடு முடிகிறது. முதலில் சொல்லப்பட்ட காட்சியின் துவக்கமும் அதுவே. ஆக, பார்வையாளன் காட்சி இரண்டு முதலில் நடந்திருக்கிறது, அதன் தொடர்ச்சியாய்க் காட்சி ஒன்று வருகிறது என விளங்கிக் கொள்ள முடியும்.
ஹாலிவுட் சினிமாவில் சிக்கலான திரைக்கதை அமைப்பு கொண்ட படங்களில் இது முதன்மையானது. படம் வெளியான போது திரையரங்கில் வைத்து பார்த்தோரில் எத்தனை பேருக்குப் படம் துல்லியமாய்ப் புரிந்தது எனத் தெரியவில்லை. பொதுவாக நான் புரிதலின் நிமித்தம் எந்தப் படத்தையும் இரண்டாம் முறை பார்ப்பவனில்லை. அதற்கு படத்தை மீண்டும் ரசிக்கும் உத்தேசமே காரணமாய் இருக்கும். அப்படியான நானே இப்படத்தை கணிணியில் சப்டைட்டிலோடு பார்த்ததில் முதல் முறை 90% தான் புரிந்தது. சில காட்சிகளின் நுணுக்கமும், அதன் பின்னுள்ள காரண காரியங்கள் பற்றியும் இடைவெளிகள் இருந்தன. அவ்விடங்களை மட்டும் தள்ளிவைத்து மீண்டும் பார்த்து நிரப்பிக் கொண்டேன். அவ்வகையில் இது ஒரு சவாலான திரைப்படம் தான்.
இந்த முன்பின் கலைத்துப் போடும் விஷயங்கள் இல்லாவிடிலும் சுவாரஸ்யமான திரைக்கதை. இது சேர்வதால் சவாலான திரைக்கதையாகப் பரிணாமம் கொள்கிறது. ஒருவரது ஊனத்தை எப்படி ஒவ்வொருவரும் தம் சுயநலத்துக்குப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதே படத்தின் அடிநாதம். இறுதியில் அவனே தன் ஊனத்தை எப்படித் தன் சுயநலத்துக்குப் பயன்படுத்திக் கொள்கிறான் என்பதில் முடிகிறது.
லென்னியின் குறுங்கால மறதி தொடர்பான காட்சிகள் மிக நன்றாக வந்திருக்கின்றன. உதாரணமாய் ஒரு காட்சியில் லென்னியை ஒருவன் கொல்லத்துரத்துகிறான். அவன் ஓடுகிறான். அப்போது அவனுக்கு முந்தைய பத்து நிமிடங்களின் நினைவுகள் அழிந்து எதற்கு ஓடுகிறோம் என்பது புரியவில்லை. பக்கவாட்டில் அவனைத் துரத்துகிறவன் ஓடிக் கொண்டிருக்கிறான். தான் அவனைத் துரத்துவதாக எண்ணிக் கொள்கிறான்.
“Oh, I’m chasing this guy.”
துரத்துபவன் லென்னியைத் தன் துப்பாக்கியால் சுடுகிறான். அவனுக்கு உறைக்கிறது.
“No, he’s chasing me.”
இன்னொரு காட்சியில் நடாலியாவை லென்னி அடித்துக் காயப்படுத்துகிறான். அவள் வெளியேறி காருக்க்குப் போகிறாள். அதைப் பதிவு செய்ய பேனா பேப்பர் தேடுகிறான் லென்னி. ஆனால் அதற்குள் அவனுக்கு மறந்து விடுகிறது. வெளியே போனவள் திரும்பி வீட்டுக்கு வந்து தன்னை வேறொருவன் தாக்கி விட்டதாக லென்னியிடம் அழுகிறாள். அவனே அவளது ரத்தக் காயத்துக்குப் பனிக்கட்டி ஒத்தடம் அளிக்கிறான்.
நடாலியா முதல் முறை லென்னியைச் சந்திக்கும் காட்சியில் அவன் சொல்லுகின்ற ஞாபகப் பிரச்சனையைப் பரிசோதிக்க அவனது பியர் கோப்பையில் அவனைய எச்சில் துப்பச் செய்து குடிக்க வைக்கிறாள். அவன் துப்பியது மறந்து அதைக் குடிக்கிறான்.
Following போலவே மிகக் குறைந்த பாத்திரங்கள். கை பியர்ஸ் என்பவர் லென்னியாக நன்றாக நடித்திருக்கிறார். (முதலில் ப்ராட் பிட் இந்தப் பாத்திரத்தில் நடிப்பதாக இருந்தது என்கிறார்கள்.) நடாலியா மற்றும் டெட்டியாக நடித்துள்ளோரும் சிறப்பு.
நோலனின் முந்தைய படத்துக்கு இசையமைத்த டேவிட் ஜூல்யனே இதற்கும் இசை. ஒளிப்பதிவும் அற்புதமாக வந்திருக்கிறது. அதுவும் இரண்டு நிறங்களிலும். நோலனின் முந்தைய படம் போலவே வசனமும் பிரமாதம். உதாரணமாய் நினைவுகள் சரியாய் இருப்பதும் ஒன்றும் சிறப்பான விஷயமல்ல என்பதற்கு லென்னி சொல்லும் வரி:
“Memories can be distorted. They’re just an interpretation, they’re not a record, and they’re irrelevant if you have the facts.”
நடாலியாவிடம் தன் கடைசி நினைவுகள் பற்றி லென்னி சொல்லும் வசனங்கள்:
“What’s the last thing that you do remember?”
“My wife…”
“That’s sweet.”
“…dying.”
எல்லாவற்றுக்கும் மேல் கொன்றவனைப் பழிவாங்கினால் மட்டும் உனக்கென்ன அது நினைவிருக்கவா போகிறது எனக் கேட்கப்படும் போது லென்னி சொல்லும் விளக்கம்:
“My wife deserves vengeance. Doesn’t make any difference whether I know about it. Just because there are things I don’t remember doesn’t make my actions meaningless. I have to believe in a world outside my own mind. I have to believe that my actions still have meaning, even if I can’t remember them. I have to believe that when my eyes are closed, the world’s still there. Do I believe the world’s still there? Is it still out there? Yeah. We all need mirrors to remind ourselves who we are. I’m no different.”
Memento வணிகரீதியாக வெற்றியடைந்தது. விமர்சகர்களாலும் கொண்டாடப்பட்டது. குறிப்பாக அதன் திரைக்கதைப் பிரதிகள் இருபதாண்டுகள் கழித்து இப்போதும் சினிமா எழுதக் கற்கும் மாணவர்களுக்குப் பிரம்மிப்பூட்டும் ஒரு பாடமாக இருந்து வருகிறது.
தமிழில் நோலன் படங்கள் சில பிரதியெடுக்கப்பட்டிருக்கின்றன. மொத்தமாக இல்லை என்றாலும் காட்சிகள், கருத்துக்கள் என ஆங்காங்கே. உதாரணமாய் Following படத்தின் தழுவல் தான் ஐ. அஹமத் இயக்கிய முதல் படமான வாமனன் (ஜெய், ரகுமான் நடித்தது). ஏஆர் முருகதாஸ் Memento-வைத் தழுவி சூர்யா, அசினை வைத்து கஜினி எடுத்தார். அதை இந்தியிலும் அமீர் கானை வைத்து மறுஆக்கம் செய்தார். வாமனன் சுமாராக ஓடியது. கஜினி இரண்டுமே பெருவெற்றிப் படங்கள். அவரது மேலும் சில படங்களும் தமிழில் பிரதி செய்யப்பட்டிருக்கின்றன. அவை அடுத்த அத்தியாயங்களில்.
இப்படத்தில் நோலன் காலத்தை வைத்துக் கலை செய்யும் போது நினைவுகளையும் விளையாட்டுப் பொருளாக்கி விட்டார். மறதி என்பதே காலத்தை இழப்பது தானே!
(கடிகை ஓடும்)