தங்கமகன் – 15 ( பின்னோக்கிச் செல்லும் எண் வரிசை)

வரும் ஜூலை 30ம் தேதி திரை இயக்குநர் க்றிஸ்டோஃபர் நோலன் ஐம்பது வயதை நிறைவு செய்கிறார். காலத்தை வைத்துத் தன் படைப்புகளில் பல விளையாட்டுகள் நிகழ்த்திய கலைஞனுக்குக் கால அடிப்படையில் ஒரு முக்கியமான மைல்கல் இது!

அதற்கு மறுநாள் அவர் இயக்கிய‌ 11வது திரைப்படம் வெளியாகிறது: Tenet. இன்றைய தேதியில் மொத்த உலகமே தவங்கிடக்கும் படம். பெங்களூரில் கொரோனா தளைகள் தீர்ந்தால் நானும் திரையரங்கில் பார்க்க விரும்பும் முதல் படம். இத்தொடர் அவ்விரு நிகழ்வுகளையும் ஒட்டியதே. அவற்றைக் கொண்டாடும் முகமாக‌வே எழுதப்படுவது.

“I never considered myself a lucky person, I’m the most extraordinary pessimist. I truly am.”

  • The Guardian இதழுக்கு அளித்த பேட்டியில், க்றிஸ்டோஃபர் நோலன் (2005)

ஒரு மனக்குறையிலிருந்தே தொடங்குவோம். க்றிஸ்டோஃபர் நோலன் இது வரை 5 முறை ஆஸ்கருக்கும், 5 முறை ப்ரிட்டிஷ் அகாடமி ஃபிலிம் அவார்டுக்கும், 6 முறை கோல்டன் க்ளோபுக்கும் நாமினேட் ஆகியிருக்கிறார். ஆனால் எதுவும் கிட்டவில்லை.

விருதுகள் ஒரு குழுவின் அங்கீகாரம் மட்டுமே. தரம் தாண்டியும் நூறு விஷயங்கள் அதைத் தீர்மானிக்கின்றன. அதற்கும் ஒருவரது உயரத்துக்கும் நேரடித்தொடர்பில்லை. ஆக, விருது கிடைத்தால் மகிழலாம்; அல்லாது போனால் வருந்த அவசியமில்லை. இப்படியெல்லாம் சொல்லியே ஆறுதல்பட்டுக் கொள்ள வேண்டியுள்ளது. வெளியாக உள்ள Tenet திரைப்படம் ரசிகர்களின் இந்த ஆதங்கத்தை உடைக்கும் என நம்பலாம்.

நோலன் அடிப்படையில் ஒரு ப்ரிட்டிஷ்காரர். லண்டனில் பிறந்து வளர்ந்தவர். அம்மா அமெரிக்கப் பெண் என்பதால் அவரது பால்யம் இங்கிலாந்து, அமெரிக்கா என‌ மாறி மாறிக் கழிந்தது. அதனால் இரு நாட்டுக் குடியுரிமையும் பெற்றவர். சிறுவயதிலேயே சினிமாவின் மீது ஆர்வம் வந்துவிட்டது. எழு வயதில் தன் தந்தையின் கேமெராவில் குறும்படங்கள் எடுத்துக் கொண்டிருந்தார். அச்சமயம் வந்த 2001: A Space Odyssey, Star Wars படங்களைப் பார்த்து விஞ்ஞானப் புனைவு வகைமை மீது பேரார்வம் கொண்டார்.

அவரது ஒவ்வொரு அசைவும் சினிமாவை நோக்கியே இருந்தது. யூனிவர்ஸிட்டி காலேஜ் ஆஃப் லண்டனில் ஆங்கில இலக்கியம் படித்தார். அந்தக் கல்லூரியைத் தேர்ந்தெடுக்கக் காரணமே அங்கே கிடைத்த சினிமா தொடர்பான வசதிகள் தாம். அங்கு தான் அவரது வருங்கால மனைவி எம்மா தாமஸைச் சந்திக்கிறார். அவரும் சினிமாவில் ஆர்வம் கொண்டவர். அவரது தம்பி ஜோனதன் நோலன் எழுத்தில் ஆர்வம் கொண்டவர். இப்படி இளமையில் அவரைச் சுற்றி கலை நிரம்பி வழிந்தது.

தன் 19 வயதிலேயே Tarantella என்ற குறும்படத்தை இயக்கினார் (அது பொதுவில் பார்க்கக் கிடைப்பதில்லை). கல்லூரியில் சினிமா திரையிட்டுக் கிடைத்த சொற்பப் பணத்தில் கோடை விடுமுறையில் குறும்படங்கள் எடுத்தார். 1996ல் Larceny என்ற தன் இரண்டாவது குறும்படத்தை வெளியிட்டார். கேம்ப்ரிட்ஜ் திரைப்பட விழாவில் அது பரவலான‌ பாராட்டுக்களைப் பெற்றது (இதையும் இன்று நாம் பார்க்க முடிவதில்லை).

அந்த உற்சாகத்தில் அடுத்த ஆண்டு Doodlebug என்ற குறும்படத்தை இயக்கினார் நோலன். அதை அவரோடு இணைந்து தயாரித்தவர் எம்மா தாமஸ். அவ்வாண்டே இருவருக்கும் திருமணமானது. “மனைவி வந்த நேரம்” என்றெல்லாம் எழுதும்படி ஏதும் நடக்கவில்லை. இங்கிலாந்தில் முழுநீளப் படம் எடுப்பதற்கான முயற்சிகளில் இறங்கினார்கள் இருவரும். ஆரம்ப ஆண்டுகளில் நிராகரிப்புகளே பதிலாக வந்தன.

1998ல் நோலனின் முதல் திரைப்படம் Following வெளியானது. அதிலும் எம்மாவின் பணம் இருந்தது. அந்த‌ப் படம் திரைப்பட விழாக்களில் விருதுகள் வென்றது. தி நியூயார்க்கரும், தி நியூயார்க் டைம்ஸும் பாராட்டி எழுதின. பிறகு 2001ல் முதல் ஹாலிவுட் படம் – Memento. மிகவும் பேசப்பட்ட திரைக்கதை. அவரது சகோதரர் ஜோனதனின் சிறுகதையைத் தழுவி அதை எழுதியிருந்தார். காலத்துடனான தன் விளையாட்டை அவர் தொடங்கியது இப்படத்தில் தான். அந்தப் படத்திலேயே ஆஸ்கருக்கும் கோல்டன் க்ளோபுக்கும் நாமினேட் ஆனார். பிறகு 2002ல் Insomnia. அதுவே நோலனின் முதல் மற்றும் ஒரே ரீமேக் படம் (நார்வேஜியன் படமொன்றைத் தழுவியது). பெரும்நடிகர் அல் பசீனோவை அப்படத்தில் இயக்கி இருந்தார்.

இந்தப் படங்கள் யாவும் அவருக்குப் பெயர் பெற்றுக் கொடுத்தாலும் வசூல்ரீதியாக அவர் நம்பகமான இயக்குநராக ஆகவில்லை. அதற்கு அச்சாரமிட்டது 2005ல் அவர் இயக்கிய பேட்மேன் படம் Batman Begins. அவ்வாண்டு அமெரிக்காவில் அதிகம் வசூல் செய்த படங்களுள் எட்டாம் இடம் பிடித்தது அது. அதன் வெற்றியைத் தொடர்ந்து 2008லும், 2012லும் இரண்டு பேட்மேன் படங்கள் எடுத்தார்: The Dark Knight மற்றும் The Dark Knight Rises. அவையும் பெறுவெற்றிப் படங்கள் ஆகின. பல வசூல் சாதனைகளை நிகழ்த்தின. நோலன் ஹாலிவுட்டின் அசைக்க முடியாத வணிக இயக்குநர் ஆனார். (இந்த மூன்று படங்களிலும் பேட்மேனாக நடித்தவர் புகழ் பெற்ற‌ க்றிஸ்டியன் பேல்.)

இடையே 2006ல் முதன் முதலாகத் தன் சகோதரர் ஜோனதனுடன் இணைந்து The Prestige என்ற படத்தை எழுதினார். அப்புறம் 2010ல் லியோனார்டா டிகாப்ரியோவை வைத்து Inception இயக்கினார். கனவுகளை வைத்து திரைக்கதை விளையாட்டுக் காட்டிய‌ படம். அது வசூல்ரீதியாக மட்டுமின்றி தரத்துக்காகவும் போற்றப்பட்டது.

பிறகு 2014ல் எதிர்காலத்தில் நிகழும் விண்வெளிப் படமான Interstellar, இரண்டாம் உலகப் போர் பின்னணியில் 2017ல் எடுத்த Dunkirk இவ்விரண்டும் மேலும் அவரது இடத்தை உறுதி செய்தன. இடையே Quay என்ற குறும்படத்தையும் இயக்கினார்; Man of Steel என்ற சூப்பர்மேன் படத்துக்குக் கதை எழுதினார்; Transcendence, Batman v Superman: Dawn of Justice, Justice League, The Doll’s Breath படங்களுக்கு நிர்வாகத் தயாரிப்பாளராகவும் இருந்தார். இப்போது 2020ல் Tenet வழி மீண்டும் காலக் களியாட்டுக்குக் திரும்புகிறார்.

ஆரம்பம் முதல் வெளியாகப் போகும் Tenet வரை நோலனின் எல்லாப் படங்களிலும் அவரது மனைவி எம்மா தாமஸ் இணைத் தயாரிப்பாளராக இருக்கிறார். அவர்களுக்கு நான்கு குழந்தைகள் இருக்கின்றன. தனிவாழ்விலும் மிக வெற்றிகரமானவர் நோலன்.

காலம், நினைவு, அடையாளம் இம்மூன்றின் அடிப்படையில் தான் நோலனின் பெரும்பாலான படங்கள் இயங்குகின்றன. தொடர்ந்து இருத்தலியலைப் பேசுகிறார். அவர் திரைக்கதையில் செய்தவை அதற்கு முன்பு வேறெவரும் செய்திராத‌ பரிசோதனைகள். அதற்குத் தோதான கதைக்களங்களைத் தேர்ந்து கொண்டார்.

அவ்வகையில் அவர் முன்னுதாரணம் அற்றவர். தனித்துவமான கலைமொழி கொண்டவர். பிரம்மாண்டப் படங்கள் என்பதை வெறும் கம்ப்யூட்டர் க்ராஃபிக்ஸுக்குக் காசை இறைப்பது என்ற ஹாலிவுட் ஃபார்முலாவை உடைத்தவர். நான் லீனியர்

திரைக்கதை என்பதைப் புதிய உயரங்களுக்கு எடுத்துப் போனவர். அவர் எடுத்தவை பெரும்பாலும் வெகுஜன சினிமா என்றாலும் அவற்றில் இழையோடியிருந்த‌ ஆழமும் தத்துவார்த்தமும் அபரிமிதமானவை; நம் சிந்தையை அசைத்துப் பார்க்க வல்லவை.

The Dark Knight Rises படத்தில் பேட்மேன் சொல்வதாய் அவர் வைத்திருக்கும் வசனம் இது: “A hero can be anyone. Even a man doing something as simple and reassuring as putting a coat around a young boy’s shoulders to let him know that the world hadn’t ended.” ஆரம்பத்தில் ஒரு நேர்காணலில் நோலன் சொன்னதையும் இதையும் இணைத்துப் பார்க்கலாம்.

ஒட்டுமொத்த ஹாலிவுட் மற்றும் ப்ரிட்டிஷ் சினிமா வரலாற்றிலும் இயக்குநராக, திரைக்கதையாளராக அவரது இடம் அசைக்க முடியாதது என்றே கருதப்படுகிறது.

2018 விஷ்ணுபுரம் இலக்கிய விழாவில் நான் விருந்தினராகக் கலந்து கொண்ட போது எழுத்தாளர் சுனில் கிருஷ்ணன் என்னிடம் எழுப்பிய கேள்வி எனக்குப் பிடித்தமானது.

அதற்குச் சில மாதங்கள் முன்பு ஆப்பிளுக்கு முன் நாவலை முன்வைத்து பதாகை மின்னிதழுக்காக‌ என்னிடம் ஒரு நேர்காணல் செய்திருந்தார். அதில் ஆதர்ச ஆங்கில‌ எழுத்தாளர் பற்றிய கேள்விக்கு இப்படிச் சொல்லி இருந்தேன்: “ஆங்கிலத்தில் நான் பெரும்பாலும் அபுனைவு தான் வாசித்திருக்கிறேன். அதுவும் குறைவான அளவில். அதனால் பிடித்த எழுத்தாளர் எனக் குறிப்பிட்டுச் சொல்லுதல் சரி வராது. ஆனாலும் அப்படி ஒருவரைச் சொல்ல விரும்புகிறேன். அவர் எழுத்தாளர் அல்ல; திரைப்பட இயக்குநர். கிறிஸ்டோஃபர் நோலன். அவரது திரைக்கதைகள் போலத்தான் என் புனைகதைகள் உள்ளன என எண்ணுவதுண்டு.” அவர் கேள்வி அது தொடர்பானதே.

தமிழில் தீவிர இலக்கியம் நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் ஓர் இளம் எழுத்தாளன் தனக்கு ஆதர்சமாக ஓர் ஹாலிவுட் வெகுஜன சினிமா இயக்குநரைச் சொன்னது அவருக்கு வினோதமாகப்பட்டிருக்க வேண்டும். எனவே அதை விளக்கும்படி கேட்டார்.

“நோலன் பிரதானமாய் ஒரு திரைக்கதை எழுத்தாளர். மூன்று விஷயங்களில் அவர் எனக்கு முன்னுதாரணமாக‌ இருக்கிறார். 1) தான் எடுத்துக் கொள்ளும் கதையைச் செறிவூட்டவும் நம்பகத்தன்மை கொண்டு வரவும் உழைக்கிறார். அதாவது attention to details. 2) எழுத்தில் ஏராளமான பரிசோதனை முயற்சிகள் செய்கிறார். முக்கியமாய் அவை திணிப்பாக இல்லாமல் கதையோடு மிக இயல்பாய்ப் பொருந்தி நிற்கின்றன. 3) அவரது ஒரு படைப்பின் பின்புலத்துக்கும் மற்றொன்றுக்கும் பாரதூர இடைவெளிகள் இருக்கின்றன. எதையும் அவர் திரும்பச் செய்வதில்லை. எல்லாமே புதிதானவை. என் கதைகளிலும் இவற்றை எல்லாம் தான் செய்ய முனைகிறேன். அவ்வகையில் அவர் ஓர் இன்ஸ்பிரேஷன்.” என்ற பொருளில் சுனில் கிருஷ்ணனுக்குப் பதிலிறுத்தேன்.

ஒரு கட்டிடக் கலைஞனின் நேர்த்தியுடனும் நுட்பத்துடனும் அவர் தன் படங்களை உருவாக்குகிறார். ஒரு கவிதை, ஓர் ஓவியம், ஒரு சிற்பம் இவற்றோடு ஒப்பிடுவதை விட இப்படித் தான் சொல்லத் தோன்றுகிறது. Christopher Nolan is a state of the art architect!

இத்தொடரின் தலைப்பு நோலன் தன் படங்களில் செய்யும் காலம் தொடர்பான கலைப் பரிசோதனைகளைச் சுட்டுவதாக இருந்தாலும் நம் காலத்தின் கலைஞன் என்றும் அதை வாசிக்கலாம். உலகமெங்கும் அவரது படங்களின் கதை, காட்சிகள், திரைக்கதை உத்திகள் தரமாகவும் மலினமாகவும் பிரதியெடுக்கப்பட்டுக் கொண்டே தான் இருக்கின்றன. தமிழ் சினிமாவிலேயே கூட‌ அதற்கு உதாரணங்கள் உண்டு.

க்றிஸ்டோஃபர் நோலனின் உலகம் வசீகரமானது. ஒப்பற்றது. அதன் ஒரு துளியை, அதன் ருசி குன்றாது தமிழ் அன்பர்களின் நாவிற்கு அறிமுகம் செய்வதே என் ஆசை.

இதுவரை 10 படங்கள் எழுதி, இயக்கி இருக்கிறார். ஒரு படத்துக்குக் கதை மட்டும் எழுதி இருக்கிறார். அப்புறம் பார்க்கக் கிடைக்கும் இரு குறும்படங்கள். அடுத்த ஒன்றரை மாதங்களுக்கு – அதாவது Tenet படம் வெளியாகும் முன் – இவற்றை எல்லாம் பார்த்து (அல்லது மீள்பார்த்து), அலசி, என் அனுபவங்களை எழுதுவதே இந்தக் கட்டுரைத் தொடரின் நோக்கம். அவ்வகையில் இது ஒரு கவுன்ட்டவுன் தான்.

(கடிகை ஓடும்)

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. க்றிஸ்டோஃபர் நோலனின் Insomnia:நான் மகான் அல்ல‌-சி.சரவண கார்த்திகேயன்
  2. க்றிஸ்டோஃபர் நோலன்: நான் சிகப்பு மனிதன்-சி.சரவண கார்த்திகேயன்
  3. நோலனின் ’ஃபாலோயிங்’: ஆடு புலி ஆட்டம்- சி.சரவண கார்த்திகேயன்
  4. ராஜா சின்ன ரோஜா- சி. சரவண கார்த்திகேயேன்