க்றிஸ்டோஃபர் நோலன்: காலத்தின் கலைஞன்- 14

தமிழ் சினிமாவில் குறும்படங்களின் வழி இயக்குநர் ஆகும் கலாசாரத்தை கலைஞர் தொலைக்காட்சியின் நாளைய இயக்குநர் நிகழ்ச்சி பத்தாண்டுகளுக்கு முன் தொடங்கி வைத்தது. கார்த்திக் சுப்புராஜ், நலன் குமாரசாமி, பாலாஜி மோகன் உள்ளிட்ட‌ பலரும் மேலெழுந்தனர். ஹாலிவுட்டிலும், இங்கிலாந்து சினிமாவிலும் இப்பாணி 90களிலேயே புழக்கத்தில் இருந்தது. க்றிஸ்டோஃபர் நோலனும் லண்டனில் இருக்கையில் திரைத் துறைக்குள் நுழைவதற்கான துருப்புச் சீட்டாக குறும்படங்களைக் கையில் எடுத்தார்.

வெளிதெரியாத சில அமெச்சூர் முயற்சிகள் தவிர்த்து நோலன் நான்கு குறும்படங்கள் இயக்கி இருக்கிறார்: Tarantella (1989), Larceny (1996), Doodlebug (1997), மற்றும் Quay (2015).

நோலன் தன் பதின்மங்களிலேயே நண்பர்களான ஆன்ட்ரியன் பெலிக், ரோகோ பெலிக் சகோதரர்களுடன் இணைந்து குறும்படம் எடுக்கத் தொடங்கி இருந்தார். அப்படி 19 வயதில் அவர் ரோகோவிடன் இணைந்து இயக்கிய குறும்படம் தான் Tarantella. சூப்பர் 8 எனப்படும் 8 எம்எம் வடிவில் இப்படத்தை எடுத்தார் (70 எம்எம், சினிமாஸ்கோப், ஐமேக்ஸ், சூப்பர் 35 மாதிரி இதுவும் ஒன்று). சிகாகோவின் பப்ளிக் ப்ராட்கேஸ்டிங் சர்வீஸில் அப்போது வந்து கொண்டிருந்த இமேஜ் யூனியன் என்ற நிகழ்ச்சியில் ஒளிபரப்பானது. தற்போது பொதுவில் பார்க்கக் கிடைப்பதில்லை.

பார்த்தோர் இதைச் சர்ரியலிஸப் படம் என வர்ணிக்கிறார்கள். சர்ரியலிஸம் என்றால் சூப்பர் ரியாலிட்டி. மேலோட்டமாகச் சொன்னால் தர்க்கத்தொடர்பற்ற விஷயங்களை / பிம்பங்களை அருகருகே வைத்து, சேர்த்து ஒரு படைப்பை உருவாக்குவது. அதன் மூலமாக‌ கனவுக்கும் நிஜத்துக்குமான இடைவெளியை நீக்கும் நிலையை எட்டுவது.

நோலன் அதற்குப் பிறகும் பெலிக் சகோதரர்களுடன் இணைந்து பணியற்றினார். 90களின் முற்பகுதியில் அவர்கள் ஆஃப்ரிக்க நாடுகளின் வன‌விலங்கு சஃபாரியை ஆணவப் படமாக எடுத்த போது அதில் பங்கேற்றார். பிறகு அவர்கள் தயாரித்து இயக்கிய‌ Genghis Blues (1999) என்ற படத்துக்கு எடிட்டராகப் பணியாற்றினார். அப்படம் ஆஸ்கர் விருதுகளில் சிறந்த ஆவணப்படப் பிரிவில் இறுதிச் சுற்றுக்குச் சென்றது. 

அதன் பிறகு நோலன் பெரும் உச்சத்துக்குச் சென்ற போதும் அவர்கள் நட்பு நீடித்தது. நோலன் தன் Inception (2010) படத்துக்கு ப்ளூ-ரே டிஸ்க் வெளியிட்ட போது அதில் ரோகோ இயக்கிய Dreams: Cinema Of The Subconscious என்ற குறும்படம் இடம் பெற்றது. பிறகு அதே போல் The Dark Knight Rises (2012) படத்துக்கு ப்ளூ-ரே டிஸ்க் வெளியிட்ட போது அதில் ரோகோ இயக்கிய The Batmobile என்ற குறும்படம் இடம் பெற்றது.

1993ல் ஆங்கில இலக்கியத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றபின் நோலன் திரைக்கதை வடிகட்டுநர் (Script Reader), கேமெரா ஆப்பரேட்டர் எனச் சில‌ சில்லறை வேலைகளில் ஈடுபட்டிருந்தார். சில தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விளம்பரங்கள் எடுத்துக் கொடுத்தார். அப்போது ஒரு வார இறுதியில் குறைந்த வசதிகளுடன் சின்ன நடிகர் குழுவுடன் கருப்பு வெள்ளையில் அவர் எடுத்த குறும்படம் Larceny (1995). கேம்ப்ரிட்ஜ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியின் (ULC) சிறந்த குறும்படங்களில் ஒன்றாகப் பாராட்டப்பட்டது. நடிகர் ஜெரெமி தியோபால்ட் நடித்த‌ முதல் படம் இது. படம் கல்லூரியின் ஒளிப்பதிவுக் கருவிகளைப் பயன்படுத்தி 16 எம்எம் வடிவில் எடுக்கப்பட்டது. இது நோலனின் சொந்தத் தயாரிப்பு. நோலனின் மனைவி எம்மா தாமஸ் அவருடன் இணைந்து முதன் முதலாகத் தயாரிப்பில் இறங்கியது இப்படத்தில் தான். இதுவும் இன்று நமக்குப் பார்க்கக் கிடைப்பதில்லை. (ஐஎம்டிபி தளம் இது ஒரு பிக்பாக்கெட்டின் கதை என்கிறது. அவன் எவரிடம் திருட முயன்றானோ அவர்கள் அவனை ஒரு காட்டுக்குள் வைத்துத் துரத்துகிறார்கள்.)

பிறகு 1997ல் ஸ்டீவ் ஸ்ட்ரீட் என்பவர் இயக்கிய Fearville என்ற படத்தில் கேமெரா ஆப்பரேட்டராகப் பணியாற்றினார் நோலன். ஒரு முழு நீளப் படத்தில் அவரது பெயர் டைட்டில் கார்டில் இடம்பெற்றது அதுவே முதல் முறை. அது ஒரு சன்னத் துவக்கம்.

பிறகு 1997ல் அவர் Doodlebug என்ற குறும்படத்தை இயக்கினார். பொது வெளியில் நமக்குப் பார்க்கக் கிடைக்கும் நோலனின் மிகப் பழைய‌ படைப்பு இதுவே. நோலன் தன் மனைவியுடன் இணைந்து இதைத் தயாரித்தார் (மேலே சொன்ன Fearville பட இயக்குனர் ஸ்டீவ் ஸ்ட்ரீட் இணை தயாரிப்பாளர்). 16 எம்எம் வடிவில் எடுக்கப்பட்ட கருப்பு வெள்ளைப் படம். 2 நிமிடம் 58 விநாடிகள் ஓடுகிறது. குறைந்த பட்ஜெட்டில் வழக்கம் போல் ஒரு வார இறுதியில் எடுத்திருக்கிறார். படத்தில் ஒரே பாத்திரம், படம் நடப்பது ஒரே அறையில். அந்த ஒரே பாத்திரத்தில் நடித்திருப்பது முன்பு Larceny-யில் நடித்த‌ ஜெரெமி. இசையும் அப்படத்துக்குச் செய்த டேவிட் ஜூல்யன். நோலன் இதை எழுதி இயக்கியதோடு ஒளிப்பதிவையும் படத்தொகுப்பையும் டிஸைனையும் கவனித்திருந்தார் (டைட்டில் கார்டில் க்றிஸ் நோலன் எனப் பெயர் போடப்படுகிறது).

இந்த ஆரம்ப காலப் படத்திலேயே நோலனின் கோட்டித்தனங்களுக்கான சாயைகள் நமக்கு நேரடியாகவே புலப்படுகின்றன. ஓர் அழுக்கு வீட்டில் தனிமையில் இருக்கும் நாயகன் பதற்றத்துடன் ஏதோ பூச்சியை அடிக்கக் கையில் ஷூவுடன் இங்குமங்கும் தேடுகிறான். கடிகாரத்தின் துடிப்பும், தொலைபேசி அழைப்பும் அவன் பரிதவிப்பைக் கூட்டுகிறது. அவன் அதை அடிக்க முடிந்ததா, அவனுக்கு என்ன ஆகிறது என்பது தான் கதை. இதை சைக்காலஜிக்கல் த்ரில்லர் என்றே வகைப்படுத்துகிறார்கள்.

ஆனால் இது இருத்தலியல் சார்ந்த மனச் சிக்கலை உருவகமாகக் காட்சிப்படுத்தும் தத்துவ முயற்சியாக எனக்குப் படுகிறது. இதை நினைவுகளை முன்வைத்ததாகவும் பார்க்கலாம், பிரச்சனைகளை முன்வைத்ததாகவும் எடுக்கலாம். கடந்த காலத்தின் நினைவுகளிலிருந்து தப்பிக்கப் பார்க்கையில் எதிர்காலத்திற்கான அதே மாதிரியான‌ புதிய‌ நினைவுகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். அல்லது முந்தைய சிறிய பிரச்சனைகளைத் தீர்த்துக் கொண்டிருக்கையில் புதிதாய் அதே மாதிரியான‌ பெரிய பிரச்சனைகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். பழைய நினைவுகள் அல்லது பிரச்சனைகளை முன்னிட்டு இன்றைய கடமைகளைத் தவற விட்டு அல்லது ஒத்திப் போட்டுக் கொண்டிருக்கிறோம். ஆக, சிக்கல் நம்முள் தானே ஒழிய நினைவுகளோ, பிரச்சனைகளோ அல்ல. இன்றைய விஷயங்களைச் சீராக்குவதே தீர்வு. இப்படிப் பல கோணங்களில் பொருள் கொள்ளும் open-ended சாத்தியத்துடன் எடுக்கப்பட்டிருக்கிறது.

இந்தப் படம் யூடியூபில் பார்க்கக் கிடைக்கிறது:  https://www.youtube.com/watch?v=xy0geiP6csY.

குறைந்த செலவில் எடுக்கப்பட்டிருந்தாலும் இதிலேயே கிராஃபிக்ஸ் உண்டு. இது கொண்டாட்டத்திற்குரிய தனித்துவம் கொண்டதல்ல என்றாலும் நோலன் ஒரு நல்ல‌ இயக்குநராக வரக்கூடியதற்கான ஆரம்ப‌ அடையாளங்கள் இருக்கின்றன இப்படத்தில்.

இதன் பிறகு நோலன் முழு நீளப் படங்கள் எடுப்பதற்குள் நுழைந்தார். பிறகு 18 ஆண்டுகள் கழித்துத் தான் மீண்டுமொரு குறும்படம் எடுக்கிறார். 2015ல் Quay என்ற படம். ஆனால் அது சினிமாவில் வாய்ப்புத் தேடி அல்ல (ஏனெனில் அப்போது அவர் ஹாலிவுட்டின் உச்ச இயக்குநர்); தான் மதிக்கும் கலைஞர்களுக்கான ட்ரிப்யூட்டாக‌.

குவே சகோதரர்கள் என்றழைக்கப்படும் ஸ்டீஃபன் குவே மற்றும் டிமோதி குவே என்ற இரு ஸ்டாப்மோஷன் அனிமேஷன் செய்பவர்கள் பற்றிய ஆவணப்படம் இது. 

பொருட்களைச் (உதாரணம்: பொம்மைகள்) சிறுகச் சிறுக அசைய வைத்து அதைப் புகைப்படம் எடுத்து, அப்படங்களைத் தொடர்ச்சியாய் வேகமாக நகர்த்துவதன் மூலம் அசைபடக் காட்சிகளை உருவாக்குவதே இந்த‌ ஸ்டாப்மோஷன் அனிமேஷன்.

2010களின் மத்தியில் நோலன் ஒரு விஷயத்தில் ஆர்வம் காட்டினார். அதிகம் அறியப்படாத, ஆனால் நல்ல உள்ளடக்கம் பழைய‌ படங்களுக்கு ப்ளூ ரே டிஸ்க்குகளைத் தன் நிறுவனத்தின் வழி வெளியிடுவதன் மூலம் அவற்றைப் பிரபலமாக்குவது. அப்படித் தான் குவே சகோதரர்களின் மீதான அவரது மதிப்பு வெளிப்பட்டது. அவர்களின் அனிமேஷன் படங்களுக்கு ப்ளூ ரே வெளியிட்ட போது தான் அவர்கள் பற்றிய இந்தக் குறும்படத்தையும் அதோடு சேர்த்து வெளியிட்டார்.

நியூயார்க் ஃபிலிம் ஃபோரம் தியேட்டரில் நடந்த‌ நிகழ்ச்சியில் குவே சகோதர்களின் மூன்று அனிமேஷன் குறும்படங்களை (In Absentia, The Comb மற்றும் Street of Crocodiles) நோலன் அறிமுகம் செய்து பேசியபின் அவரது Quay ஆவணப்படம் திரையிடப்பட்டது.

35 எம்எம் வடிவில் கலரில் எடுக்கப்பட்ட குறும்படம் இது (நோலன் இதுகாறும் தன் வாழ்வில் எடுத்திருக்கும் ஒரே கலர் குறும்படம் இதுவாக இருக்கலாம்.). 8 நிமிடம் 21 வினாடிகள் ஓடுகிறது. இந்தத் தலைமுறை சினிமா ரசிகர்கள் பலரும் மறந்திருந்த குவே சகோதரர்களின் பங்களிப்பை அறிந்து கொள்ள இக்குறும்படம் உதவியது.

ஸ்டீஃபன் குவே மற்றும் டிமோதி குவே இருவரும் இதில் வருகிறார்கள். அவர்களின் ஸ்டூடியோ காட்டப்படுகிறது. அங்கே நெருக்க நெருக்கமாக‌ வைக்கப்பட்டிருக்கும் பொம்மைகளும். அவர்களின் ஒரு வழமையான ஒரு வேலை நாள் துவங்குகிறது. அவர்கள் பொம்மைகளைப் பயன்படுத்திச் செய்யும் விஷயங்களை விவரிக்கிறார்கள்.

ஒளியமைப்பு, ஒப்பனை எனப் பொம்மைகள் பொருத்தமாக அலங்கரிப்படுகின்றன. தாம் பயன்படுத்தும் ஒரு பழைய‌ ஒளிப்பதிவுக் கருவியையும் விவரிக்கிறார்கள். மொத்தப் பிரபஞ்சத்தையும் தங்கள் மேசையில் அந்தப் பொம்மைகளைக் கொண்டு உருவாக்கலாம் என்கிறார்கள். எல்லாம் அவர்கள் கற்பனையில் பிறப்பவை. தம் ஜன்னலுக்கு வெளியே இருக்கும் எதையும் அவர்கள் உருவாக்க முற்படவில்லை.

இந்தக் குறும்படம் மிகச் சிறப்பாக ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளது (ஒளிப்பதிவு நோலனே தான்). ஸ்டாப்மோஷன் அனிமேஷன் என்ற கலையின் க்ளாஸிக்தன்மை ஒளிப்பதிவினூடாகவே நமக்குக் கடத்தப்பட்டு விடுகிறது. ஆங்காங்கே வரும் mystic தன்மை கொண்ட‌ இசையும் மிகப் பொருத்தமாக இருக்கிறது (இசையும் நோலனே). அது குவே சகோதரர்கள் காட்டும் அனிமேஷன் உலகைக் குறியீடாகச் சுட்டுகிறது. இது போக, இதன் படத்தொகுப்பையும் நோலனே கவனித்துக் கொண்டிருக்கிறார்.

இந்தப் படமும் யூட்யூபில் காணக் கிட்டுகிறது: https://www.youtube.com/watch?v=z-xoS73f53A.

நோலன் இதே 2005-ல் ஒரு குறும்படத்தின் க்யூரேட்டராகவும் பணியாற்றியுள்ளார். ஒரு தொகுப்பில் எதுவெல்லாம் இடம்பெற வேண்டும் எனத் தீர்மானிப்பவர் தான் க்யூரேட்டர். அதற்கு முந்தைய ஆண்டு நோலனின் Interstellar வெளியாகி இருந்தது. அதையொட்டி டேவிட் ப்ராடி, ஆங்கஸ் வால் என்ற இருவரும் Emic: A Time Capsule From the People of Earth என்ற குறும்படத்தை இயக்கினார்கள். Interstellar-ல் வருவது போல் மனித இனம் எப்போதேனும் பூமியை நீங்க வேண்டி இருந்தால் எதிர்காலச் சந்ததியருக்காக இங்கே பூமியில் என்ன என்னவெல்லாம் இருந்தன, மனிதர்கள் இக்கிரகத்தை எப்படிக் கொண்டாடினார்கள் என ஆவணப்படுத்தும் முயற்சி இது. இதற்காக உலகின் பல மூலைகளிலிருந்தும் பெறப்பட்ட‌, பல்வேறு கலாசாரப் பின்புலங்களிருந்து பதியப்பட்ட‌ காட்சிகளை நோலன் தேர்ந்தெடுத்து அளித்தார்.

மொத்த மானுடத்தையும் ஒரு சன்னமான‌ காலக்குப்பியில் அடைக்கும் முயற்சி. இக்குறும்படத்தையும் யூட்யூபில் காணலாம்: https://www.youtube.com/watch?v=0fqf2jQ6CQU.

பழைய செல்லுலாய்ட் படங்களைப் பாதுகாப்பது தொடர்பான தொடர்முயற்சிகளில் நோலன் அந்தக் காலகட்டத்தில் ஈடுபட்டிருந்தார். சினிமாக்காரர்களை வரவழைத்து கெட்டி ம்யூஸியம் (லாஸ் ஏஞ்சல்ஸ்), டேட் மாடர்ன் (லண்டன்), முசியோ டமயோ (மெக்ஸிகோ), டாடா தியேட்டர் (மும்பை) ஆகிய நகரங்களில் இது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தினார். நோலனின் இன்னொரு மென்முகம் இது.

க்றிஸ்டோஃபர் நோலனின் எல்லா முகங்களுமே காலத்தின் மீதான காதல் தான்!

(கடிகை ஓடும்)

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. க்றிஸ்டோஃபர் நோலனின் Insomnia:நான் மகான் அல்ல‌-சி.சரவண கார்த்திகேயன்
  2. க்றிஸ்டோஃபர் நோலன்: நான் சிகப்பு மனிதன்-சி.சரவண கார்த்திகேயன்
  3. நோலனின் ’ஃபாலோயிங்’: ஆடு புலி ஆட்டம்- சி.சரவண கார்த்திகேயன்
  4. க்றிஸ்டோஃபர் நோலன்: காலத்தின் கலைஞன்-சி.சரவணகார்த்திகேயன்