டடக்… டடக்… டடக்… டடக்…
ஒரே சத்தம்… என் உடம்பு இங்குட்டும் அங்கட்டும்… திடுக்கிட்டு எழுந்தேன்! தலையில டம்ம்ம்…! அக்கா…! ஏய் என்னாடி? இடிச்சுக்கிட்டியா? சென்னை எக்மோர் வரப்போவுதுனு சொல்லி காஃபி வாங்கி வச்சிருந்தா அக்கா. மிகுந்த அக்கறையுடன். செல்ஃபி எடுத்து ஸ்டேட்டஸ் போட்டேன். “டெல்லி கனவு – காலை காஃபியோடு ரயில் பயணம் இனிதே தொடங்கியது!”
நாங்க 4 பேரு பெண்கள்; குடியரசு தினவிழாவுல பறையாட்டம் ஆட தஞ்சாவூர்லயிருந்து டெல்லிக்கு போறோம். எனக்கு பறை அடிக்கத்தெரியது, ஆடமட்டும்தான் தெரியும்னு சொல்லியும் நான் கத்துத்தர்றேன் 6000 பணமும் வாங்கித்தர்றேன்னு சொல்லி டெல்லிக்கு அழச்சிட்டு போறாங்க கூடவர்ற அக்காங்க. இரண்டு ராத்திரி, இரண்டு பகல் கடக்க… எனக்கு ஒரே ஆவல்… மாலை 6 மணி, குளிர ஆரம்பித்தது. டெல்லி வரப்போகிறது, வந்து விட்டோம்! இதற்கெனப் புதிதாக 400ரூ கொடுத்து வாங்கிய ஷூ, சாக்ஸ், சொட்டர் போட்டு ரெடியானேன். ரயில் நின்றது, இறங்கிய உடனே வீட்டுக்கு வீடியோ கால், “இதான் டெல்லி ஸ்டேஷன்! நான் டெல்லி வந்துட்டேன்! ஒரே குளிர்ர்ர்ர்ர்ரா இருக்குது”னு சந்தோசமா பைய எடுத்துக்கிட்டு பேசிட்டே போனேன். எதிர்ல அவ்வ்வ்….ளோ பெரிய தேசியக்கொடிக்கம்பம், அதையும் வீட்ல காட்டுனேன்! அப்றம் எல்லாரும் வாங்க, வேன் வந்துருச்சுனு சொன்னாங்க. பாத்தா மிலிட்ரி வேன். அதுல POLICEனு எழுதியிருந்துச்சு. “பாத்திங்களா நா போலிஸ் வேன்ல போகப்போறேன்னு சொல்லிக்கிட்டே ஏறுனேன்.
“ஏய்! ஏறுவன்னா வீடியோ கால் பேசுற?” னு திமிரா ஒரு குரல். நாங்க மொத்தம் 27 பேரு. ஏறி ஒரு சீட்ல போயி உக்காந்துட்டேன். பக்கத்துல அக்கா வந்து உக்காந்தா. அக்கா! என்ன ஒருத்தரு திட்டிட்டாரு. அவருதான் பாப்பா இந்த டீமோட லீடரு!
எனக்கு ஒரே தலைவலி, அப்படியே படுத்துட்டேன். முழிச்சு பாத்தப்போ, தங்கப்போற இடம் வந்துருச்சு. முழுவதும் துணியால கட்டப்பட்ட மாளிகை. அதுலதான் நாங்க தங்கப்போறோம். அது எப்டியிருந்தா என்ன? நமக்கு சோறு தான முக்கியம்னு அங்க போனா, இந்தியா முழுகக் எல்லா மாநிலத்துலயிருந்தும் நெறைய பேரு, விதவிதமா சாப்பாடு வரிசையா இருந்ததுல கொஞ்சம் தட்டுல எடுத்து வச்சுக்கிட்டு ஃபோட்டோ எடுத்தேன். எஃப்பில போஸ்ட் பண்ணிட்டு சாப்பிட்டேன். பசி ருசி அறியாது; நான் ருசிச்சு சாப்பிட்டேன். முதல் நாள் மட்டும். அடுத்த நாள் எல்லாம் இந்தி தெரியாததால, அவரு “ஏக் அண்டா ஆர் தோ அண்டா?” னு கேட்க, அண்டா இல்லங்க… முட்ட தாங்க… ஏக் முட்ட… முட்டனு போராடி புரிஞ்சுகக் முடிஞ்சது “முட்டைய இந்தியில அண்டானு சொல்லுவாங்கன்றத”. அப்பறம் எங்களுக்கு மிலிட்ரியிலயே ஷூ, சாக்ஸ், சொட்டர் எல்லாம் கொடுத்தாங்க. அங்க அதத்தான் போடனும், அப்பதான் குளிர தாங்க முடியும்னு சொல்லிக்கிட்டே! நாங்க தங்குறதுக்கு; எங்களுக்காக ஒதுக்கியிருந்த 88-வது கேம்ப்ல போயி பாத்தா, அங்க வேற யாரோ தங்கியிருக்க , ஒருவழியா பேசி 102,103 வது கேம்ப் கொடுத்தாங்க. பெண்கள் மொத்தம் 14 பேரு, நாங்க ஏழு, ஏழு பேரா பிரிஞ்சு ரெண்டு கேம்ப்லயும் தங்கியிருந்தோம். சிவகாசியிலருந்து வந்திருந்த ஏழு பொண்ணுங்களும் எங்ககூட பேசவே மாட்டாங்க. அவங்கதான் கடந்த ரெண்டு வருசமா கரகாட்டம் ஆடி தமிழ்நாட்டுக்கு முதல் பரிசு வாங்கிக்கொடுத்தாங்களாம். அதான் லீடரும் அவங்க பக்கம்; அவங்க ஊரு; அதான் அதே கல்லூரியிலிருந்து எல்லா வருசமும் அழச்சுட்டு வர்றாங்க போல… எங்கள யாரும் மதிக்கவே இல்ல… அடுத்த நாள் பயிற்சி, பறையாட்டம் 6 பேரு. கரகாட்டம் 6 பேரு, பின்னலாட்டம் 4 பேரு. தமிழ்நாடு அணிவகுப்பு வண்டியில மேல நின்னு கரகாட்டம் ஆடுவாங்க, அவங்க முன்னாடி பின்னலாட்டம் ஆடுவாங்க. கீழ வண்டியோட கூடவே பறையாட்டம் ஆடிக்கிட்டு வருவோம். தவிலும் நாதஸ்வரமும் எங்ககூட வாசிச்சுக்கிட்டே நடந்து வருவாங்க. வலது பக்கம் நாட்டோட ஜனாதிபதி, பிரதமர்னு பிரதிநிதிகள் இருப்பாங்க. இடது பக்கம் முழுக்க ஊடகம். நல்லா ஆடுறவங்கள வி.ஐ.பி பக்கமா நிப்பாட்டுவோம்ங்குற அறிவுறுத்தலோட, பயிற்சி தொடங்குச்சு. அணிவகுப்புக்கு முன்னாடி நம்ம தங்கியிருக்குற இடத்துல போட்டி நடக்கும். அதுல நாமதான் கண்டிப்பா ஜெயிக்கனும்னு சொல்லிட்டுப் போனாரு லீடரு. ஒருவழியா அணிவகுப்புக்கான பாட்டுக்கு ஆடுனோம். நா கொஞ்சம் மெதுவா ஆடிப்பாத்துக்கிட்டு இருந்தேன். உடனே லீடர் வந்து முடிச்சிட்டிங்களானு கேட்க, நான் பயத்துல அவசர அவசரமா ஆட, என்னய பாத்து “ஏய்! என்ன ஆடுற நீ? தையதகக் தையதக்கனு குதிச்சுக்கிட்டு? ” னு கேட்க,
இரவு மீட்டிங் போட்டாங்க. அதுல என் பேரும் அடிபட்டது. லீடர் என்னய தனியா கூப்ட்டுபேசுனாரு. நா அவர்கிட்ட “எனக்கு இங்க இருக்க புடிக்கல. என்னய ஊருக்கு அனுப்ப முடியுமா?”னு சொல்ல, அவரு “நீ யாரப்பத்தியும் கவல படாத, உன் வேலைய நீ பாரு. இது சாதாரண வாய்ப்பு இல்ல”னு சொன்னாரு. சரினு போயி தூங்கிட்டேன். மறுநாள் பயிற்சி நல்லபடியா போனுச்சு. போட்டிக்கு ரெண்டு நாள் முன்னாடி பறையாட்டம் வேணாம் கரகாட்டம் மட்டும் போதும்னு லீடர் சொல்ல, அக்காங்கல்லாம் போய் பேசுனதும் சரி ஒரு நிமிசத்துக்கு தயார் பண்ணிக்குங்கனு சொல்லிட்டாரு. மூனு நிமிசத்துல ஒரு நிமிசம் பறை. இவங்க ஆடுனாங்க. ஆனா அவரு மதிக்கல. பறையாட்டத்துல இருக்குற ஒரு அண்ணன் “நாம ஆட வேணாம், அவங்களே ஆடிக்கிறட்டும்னு” சொல்ல, நாங்க தங்குற இடத்துக்கு வந்து பேச ஆரம்பிச்சோம். “நாம எதுக்காக இங்க வந்தோம்? அந்த பரேட்-ல வண்டிகூடவே பின்னாடி ஆடிக்கிட்டு வர்றதுக்கு மட்டும்தானா இந்த பறையாட்டம்? இத ஏன் மேல கொண்டுவர இவ்ளோ தடையா இருக்காங்க? தமிழ்நாட்டுல நம்மளோட எவ்ளவோ கலைகள் இருக்கு! ஏன் இவங்க தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட கல்லூரி மாணவர்களோட கரகாட்டத்துக்கு மட்டும் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கனும்? நமக்குள்ள இருக்க பிரச்சனை நம்மோட இருக்கட்டும். நாம ஒன்னா நின்னாதான் இத பத்தி கேட்கமுடியும்னு பேசிட்டு தூங்கிட்டோம்.
அடுத்த நாள் வழக்கம்போல அணிவகுப்பு பயிற்சிக்கு இந்தியா கேட் ஏரியாவுக்கு போனோம். தமிழ்நாட்டு கலைத்துறை இயக்குநர் முன்னிலையில பயிற்சி நடந்துச்சு. எங்களுக்கு அவர அறிமுகப்படுத்துனாங்க. அன்னைக்கு சாயந்திரம் போட்டிக்கான பயிற்சி நடக்குற இடத்துல நாங்க நாலு பேரும் நின்னுட்டு இருந்தோம். அப்ப அவரு எங்ககிட்ட “நீங்கதான பறையாட்டம் ஆட வந்துருக்கீங்க”?-னு கேட்டாரு. அப்புடி நாங்க பேசிக்கிட்டிருக்கையில நான் கேட்டேன் “எப்புடி செலக்ட் பண்ணி தமிழ்நாட்லயிருந்து இதுக்காக கூட்டிட்டு வர்றாங்க?”-னு. அவரு சொன்னாரு “தமிழ்நாட்ல இருக்குற ஆரட் கமிட்டி எல்லாருக்கும் அன்னொன்ஸ் பண்ணி, அதுல வர்றவங்கள செலக்ட் பண்ணி இங்க அனுப்புவாங்க. நா ஒன்லி எக்ஸிகியூட் பண்றது மட்டும்தான். நா செலக்ட் பண்ண மாட்டேன்.” சரி சார், போட்டியில நாங்க பறையாட்டம் ஆடலாமா?-னு கேட்டோம், நான் லீடர்ட்ட சொல்லிட்டேன்மா, நீங்களும் ஆடுங்க-னு சொல்ல, அவரு தயவால பறையாட்டமும் ஆடி மூனாவது பரிசு வாங்குனோம். இப்பவும் பறையாட்டம் இல்லன்னா முதல் பரிசு வாங்கியிருக்கலாம்னும்; நாங்கதான் சரியா பண்ணலைனும் சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க. அதுக்கு அடுத்த நாள் பிரஸ் மீட்! அதுல எங்ககிட்ட கொடுத்த ஸ்கிரிப்ட்ட நாங்க ஒப்பிச்சோம்! அடுத்த நாள், குடியரசு தினவிழாவுக்கு முந்தையநாள். எங்கள பிரதமர் வீட்டுக்கு அழச்சிட்டு போக ஒருத்தர் வந்தாரு. அவருதான் தமிழ்நாட்ல இருக்குற ஆர்ட் கமிட்டியோட டைரக்டர். அவருதான் இந்த லீடரோட அப்பாவாம்! பிரதமர் வீட்டுக்கு போனோம். அவரு ஏதோ பேசுனாரு! ஒன்னும் புரியல, கடமைக்கு ஒரு ஃபோட்டோ அதுல நாங்க இருக்குறதே தெரியாது. அப்பறம் நல்ல சாப்பாடு; சாப்புட்டோம்! பிரதமர் வீட்லருந்து கௌம்பிட்டோம். ஒருவழியா குடியரசு தினமும் வந்துச்சு! காலையில மூனு மணி, பனி வாயிலருந்து புகையா வந்துச்சு! அதோட மூஞ்சியில பேய் மாதிரி மேக்-அப் -லாம் போட்டுக்கிட்டு அஞ்சு மணிக்கு சாப்பாடு; நா டீ மட்டும் குடிச்சிட்டு வேன்ல ஏறிட்டேன்! மூனு கட்ட சோதனைகள தாண்டி உள்ள போனோம்! அப்றம் ரெண்டு கிலோ மீட்டருக்கு அணிவகுப்பு! எங்களுக்கு முன்னாடியும் பின்னாடியும் எல்லா மாநிலத்துலருந்தும் நிறைய பேரு கலந்துக்கிட்டோம். அணிவகுப்பு முடிஞ்சு நாங்க செங்கோட்டை வரைக்கும் போயிட்டு வந்தோம். காலெல்லாம் வெடிச்சு, களச்சு, தங்குற இடத்துக்கு வந்துட்டோம்.
அடுத்தநாள் எல்லாரும் ஜனாதிபதி வீட்டுக்கு போகனும் கௌம்புங்க-னு சொல்ல, எல்லாருக்கும் வலி. வேற வழி இல்லாம போனோம்! அதே துணி, அதே மேக்-அப்! போயிட்டு போட்டோ எடுத்துகிட்டு வந்துட்டோம். அன்னக்கி சாயந்திரம் தவில், நாதஸ்வரம் வாசிக்குற அண்ணனுங்க கிளம்புறாங்கனு தெரிஞ்சதும், அண்ணே என்னையும் அனுப்புங்கனு லீடர்ட்ட கேட்டேன். மதிகக் வே இல்ல. திரும்ப திரும்ப போன் பண்ணுனேன், எடுகக் வே இல்ல. அப்றம் ஊர்லயிருந்து பேசச்சொல்லி, பேசி, பெரிய போராட்டத்துக்கு; அப்றம் டிக்கெட் புக் பண்ணுனாங்க!
கௌம்பும்போது தமிழ்நாட்டு கலைத்துறை இயக்குநர் வந்து பேசுனாரு. “ஏன் நீங்க கௌம்புறீங்க?”னு. “இல்ல சார், எனக்கு ஒத்து வரல, தப்பா முடிவெடுத்துட்டேன்”னு நா சொன்னேன். அவரு, இது எல்லா துறையிலயும் இருக்க பிரச்சனைதான். நம்மதான் சகிச்சு நடந்துக்கனும்னு சொல்லிட்டு போயிட்டாரு. அப்றம் லீடரு வந்து 2000ரூ காசு கொடுத்தாரு. சான்றிதழ் வந்ததும் கொடுத்துவிட்றேன்னு சொன்னாரு. நான் எப்டியோ அந்த மிலிட்ரி கேட்டை தாண்டி வந்துட்டேன். வீட்டுக்கு ஏதாவது வாங்கிட்டு போகலாம்னு கொஞ்சம் பொருட்கள் வாங்குனோம்! எல்லாம் முடிச்சு தமிழ்நாடு எக்ஸ்பிரஸ்ல ஏரியாச்சு. நான் ஜன்னல் பக்கத்துல உக்காந்துக்கிட்டு நகந்து போற டெல்லிய பாத்துக்கிட்டே இருந்தேன்! எனக்குள்ள எத்தனையோ கேள்விகள்…
கலையினை உணர்வுப்பூர்வமாக நேசிக்கும் கலைஞர்களுக்கு தமிழ்நாட்டில் பஞ்சமேயில்லை! தமிழ்நாட்டில் எல்லா இடங்களிலும் கலைகளும், கலைஞர்களும் கொட்டிக்கிடக்கின்றனர். அப்படியான மக்கள் கலைஞர்களுக்கு ஏன் எவ்வித அங்கீகாரமும் கிடைப்பதேயில்லை? ஒருங்கமைக்கப்பட்ட ஒரு நாட்டின் மிகமுக்கிய நிகழ்வு, அங்கு ஒவ்வொரு மாநிலங்களின் கலைஞர்கள்தான் ஹீரோக்கள்! அப்படிப்பட்ட நிகழ்விற்கு சரியான நபர்கள்தான் தேர்வு செய்யப்படுகின்றனரா? இந்தத் தேர்வு செய்தலை யார் தீர்மாணிப்பது? அது சரியான முறையில் நடக்கிறதா? அனைவரையும் சென்றடைகிறதா? தமிழ்நாட்டு கலைத்துறை உண்மையில் கலைஞர்களை ஊக்குவிக்கிறதா? கௌரவிக்கிறதா? கடந்த தி.மு.க ஆட்சி காலத்தில் “சென்னை சங்கமம்” எனும் பெயரில் அனைத்துக் கலைஞர்களையும் ஒன்றிணைத்து அவர்களை அடையாளப்படுத்தினர், அது அவர்களை சற்றேனும் முன்னேற்றியிருக்கும். அதற்குப்பின் அப்படியான நிகழ்வுகள் ஏன் தொடரவில்லை? இந்த டெல்லி வாய்ப்பு தெடர்ந்து ஒரு குறிப்பிட்ட கல்லூரி மாணவர்களுக்கே வழங்கப்படுவதற்கான காரணம்? இன்றளவும், தான் நேசிக்கும் கலைக்காக தன்னை அர்ப்பணித்து, தன் வாழ்வை வறுமையின் பிடியிலிருந்து விடுவிக்கப் போராடும் கலைஞர்கள் எத்தனை பேர்? தமிழ்நாட்டில் இருக்கும் கலைத்துறை இயக்குநரின் மகன் எங்கள் கலைக்குழுவுக்குத் தலைவராம்! இந்த கலைக்குழுவை வழிநடத்த இயக்குநரின் மகன் எனும் ஒரு தகுதி போதுமா? அவர் சரியானவராக இருந்தால் அதனை ஏற்றுக்கொள்ளலாம்! கலைஞர்களை மதிக்கவில்லை, அவர்களின் பேச்சுக்கு அங்கு மரியாதையே இல்லை! ஒரு கலையினை கலையாய் பார்க்கும் குணம்கூட இல்லாதவர்தான் கலைக்குழுத் தலைவரா? இதனை யார் தீர்மாணிப்பது? அரசு விழாவில் பங்கேற்ற கலைஞர்களுக்கு அரசு சார்பில் ஊதியம் கொடுக்கப்படுகிறதா? இல்லையா? எனும் கேள்விக்கு இன்றளவும் பதில் இல்லை. மக்களிடம் பரவியிருக்கும் கலைகளை ஒன்றிணைத்து, அதனை மேம்படுத்த உருவாக்கப்பட்ட கலைத்துறை அதனை சரியாகத்தான் செய்கிறதா?
அடுத்த வருடமும் இதே விழா நடக்கும். இதே ஏற்பாடுகளுடன், இதே பயிற்சிகளுடன். என்னைப்போன்ற ஒருத்தியை இந்த டெல்லி மீண்டும் சந்திக்கும். அவரிடமாவது இவற்றுக்கான பதிலை டெல்லி சொல்லுமா?
இப்படி கேள்விகள் அடுக்கடுக்காய் என்மீது அமர்ந்துகொண்டிருக்க, எப்போதும் பழகிய சத்தம் ஒன்று கேட்டுக்கொண்டே இருக்கிறது!
டடக்… டடக்… டடக்… டடக்…