நண்பர் ஒருவரிடம் ஆங்கிலத்தில் எழுதுவது, உரையாடுவது பற்றி பேசிக் கொண்டிருந்தேன். அப்போது அவர் ஆங்கிலம் எப்படி பல மொழிகள் பேசப்படும் இந்தியாவில் ஒரு பொதுமொழியாக செயல்படும் சிறப்பைப் பற்றி பேசினார். நான் அவரிடம் இதனால் தான் நாம் இந்தியர்கள் இல்லை என்று சொன்னேன். விவாதம் இப்படிப் போயிற்று:

இந்தியர்களை பொதுவாக இணைப்பது நமது அரசியலமைப்பு சட்டம், நமது அரசியல் நிறுவனங்கள், பிரதமர், ஜனாதிபதி, பாராளுமன்றம் போன்ற குறிப்பான்கள். ஆனால் இவற்றைக் கடந்து யோசித்தால் நான் யோசிப்பதை அப்படியே ஒரு வடகிழக்கு மாநிலத்தவரால் புரிந்து கொள்ள முடியாது. என் மொழி அவருக்கும், அவர் மொழி எனக்கும் புரியாது. அப்படியே புரிந்து கொள்ள ஒரு பொது மொழி இருந்தாலும் இனக்குழு அடையாளம், சாதி, மாநிலத்துக்கு உரித்தான பிரச்சனைகள், எதிர்பார்ப்புகள், அரசியல் என பல பொருந்தா விசயங்கள். நான் இதைச் சொன்னதும் நண்பர் ஒரு தென்னிந்தியரால் அஸ்ஸாமில் சென்று வாழ்ந்து அந்த ஊர்க் கலாச்சாரத்தையும், மொழியையும் புரிந்து கொண்டு கிட்டத்தட்ட அஸ்ஸாமியராகவே ஆகிட முடியும். இதுவே இந்தியர்களைப் பிணைக்கிற ஒரு இந்திய உணர்வு என்று சொன்னார்.

நான் அவரிடம் பிரான்ஸிலோ ஜெர்மனியில் அமெரிக்காவில் வாழும் தமிழர்கள் கூட அதைச் செய்யலாம், ஆனால் அது அவர்களை எளிதில் அந்த தேசிய இனத்தவராக்குவதில்லை என்றேன். இவர்கள் சில பத்தாண்டுகளில் தம்மை பாதி பிரஞ்சு, ஜெர்மானிய, அமெரிக்க குடிமகனாக நினைக்க தொடங்குவர். அங்கு (பிறந்து) வளரும் அவருடைய பிள்ளைகள் தம்மை முழு ஐரோப்பியனாகவே நினைப்பர். ஆனால் இதை நேரடியாக அன்றி போலச்செய்வதன் வழியே அவர்கள் செய்வர் (mimicry) என பின்காலனிய கோட்பாட்டில் சொல்வார்கள். இதில் என்ன பிரச்சனை என்றால் நீங்கள் ஒரு இந்தியராக இருந்தபடி பிரஞ்சுக்காரராக உங்களை காட்டிக் கொள்ளும் போது, அதற்காக போலச் செய்யும் போது நீங்கள் பிரஞ்சு அடையாளத்தை ஒரு போதும் முழுமையாக அடைய முடியாத ஒரு முடிவற்ற தேடலின் பகுதியாகிறீர்கள். ஒவ்வொரு முறை பிரஞ்சுக்காரர் ஆகும் போது பிரஞ்சுக்காரர் அல்லாமலும் ஆகிறீர்கள். இதுவே இந்தியாவுக்குள்ளும் நிகழ்கிறது என்பது என் தரப்பு.

நீங்கள் வீட்டில் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி பேசுகிறவராக இருந்து வெளியே கற்றுப் பேசுகிற, எழுதுகிற மொழி தமிழாக இருக்கையில் நீங்கள் தமிழராக இருத்தலை போலச்செய்தபடியே இருக்கிறீர்கள். அசல் அடையாளத்துக்கும் போலச்செய்யும் அடையாளத்துக்கும் இடையே ஒரு இடைவெளி தோன்றுகிறது. இது படைப்பூக்கமான, விடுதலையான ஒரு வெளியாக (மூன்றாவது வெளி – third space) இருக்கிறது என்கிறார் ஹோமி பாபா. எந்த சாராம்சத்துக்குள்ளும் ஆட்படாதவராக இத்தகையோர் இருக்கிறார்கள். (வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும் இதுவே நிகழ்கிறது.)

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வாழும் மாற்றுமொழியாளர்கள் இப்படி அடையாளங்களில் இருந்து வழுக்கி சென்றபடி இருக்கும் மனிதர்களாக உள்ளார்கள். இவர்களை இந்தியத்துவம் என ஒன்று இணைப்பதெனில் ஏன் இந்த போராட்டம் அவர்களுக்கு இருக்க வேண்டும்? ஆக இந்த பிணைப்புச் சங்கிலி ஒரு கற்பிதம் மட்டுமே. நீங்கள் இந்தியரோ ஜெர்மானியரோ ஒரு மாற்று மொழி, மாற்றுக்கலாச்சாரத்துக்குள், மாற்று தேசியத்துக்குள் வரும் போது நீங்கள் பொருத்தமின்மையுடன் போராடிக் கொண்டே தான் இருக்கிறார்கள்.

இந்தியராக இருப்பதில் இன்னொரு மிகப்பெரிய பிரச்சனை உள்ளது. நான் அரசியலைப் பற்றி சொல்லவில்லை. நடைமுறையிலேயே பெரும் தடை, தாண்ட முடியாத தடை ஒன்று உள்ளது: எந்த இந்தியனாலும் இந்தியாவில் புழக்கத்தில் உள்ள அத்தனை மொழிகளிலும் பேச முடியாது. 2011 சென்ஸஸ் படி இந்தியாவில் 122 மொழிகள் உள்ளன. அதிகாரபூர்வ மொழிகள் 22. ஆனால் இதுவும் பெயரளவுக்குத் தான். 19, 500 தாய்மொழிகள், வட்டார பேச்சுவழக்குகள் இந்தியாவில் உள்ளன. எந்த இந்தியனாலும் இத்தனை மொழிகளையும் கற்க முடியாது. அதனால் தான் எந்த இந்தியனாலும் “இந்தியனாக” முடியாது.

தென்னிந்தியர்கள் ஆங்கிலத்தை பொதுமொழியாக பயன்படுத்துவது போல, வட இந்தியர்கள் இந்தியை பயன்படுத்துகிறார்கள். ஆனால் இது மேற்பூச்சு தான். அசலான வாழ்க்கை பேச்சுமொழிகளிலே புழங்குகிறது. நான் குமரிமாவட்டத்தின் தக்கலையை சேர்ந்தவன். எங்களுடைய வட்டார வழக்கின் சில நுட்பங்கள் சென்னைக்காரருக்கோ, மதுரைக்காரருக்கோ, வேறு எந்த மாநிலத்தவர்களுக்கோ சுலபத்தில் விளங்காது. “அய்யே” எனும் சொல்லை நாங்கள் பல தொனிகளில் பயன்படுத்துவோம். ஒவ்வொரு போதும் அதன் பொருள் மாறிக் கொண்டே இருக்கும். இதுவே இப்படி என்றால் ஒரு உ.பியில் காரி போலி வட்டாரவழக்கில் பேசும், பொதுமொழியாக இந்தியைக் கொண்டுள்ள ஒருவரால் மூட்டைமுடிச்சுடன் தக்கலை பஸ் ஸ்டாண்டில் வந்திறங்கி பழம்பொரியும் டீயும் சாப்பிட்டபடி கவனித்தால் இந்த “அய்யே”வின் முழு பரிமாணத்தை என்றாவது எட்ட முடியுமா? அய்யே!