நள்ளிரவு கடந்தும் அடை மழை விடாமல் பெய்து கொண்டிருந்தது. சிவப்பு கங்கையில் நிறைந்திருந்த தண்ணீர் அனைத்து அணைகளையும் உடைத்துக் கொண்டு வெள்ளமாகப் பெருக்கெடுத்துப் பாய்ந்து கொண்டிருந்தது.
ஊரை அண்மித்திருந்த அணைக்கட்டினால் தண்ணீர் பெருக்கெடுத்துப் பாய்வதை அதற்கு மேலும் தடுக்க முடியவில்லை. ஏற்கெனவே அதன் பல இடங்களையும் உடைத்துக் கொண்டு தண்ணீர் பெருக்கெடுக்கத் தொடங்கியிருந்தது. அணைக்கட்டு முற்று முழுதாக உடைந்து விடும் ஆபத்தை எதிர்நோக்கியிருந்தது.
அந்திவேளையிலிருந்தே ஆயிரக்கணக்கான விவசாயிகள் ஒன்று திரண்டு மண்வெட்டி, மண்வாரி போன்றவற்றைப் பயன்படுத்தி மண்ணள்ளி அணைக்கட்டோரமாகக் குவித்து வைத்தும், பலகைகளை முட்டுக் கொடுத்தும் அணைக்கட்டைப் பலப்படுத்தப் பாடுபட்டுக் கொண்டிருந்தார்கள். இடுப்பு வரை சேற்றில் புதையப் புதைய, வியர்வை வெள்ளமாக வழிந்தோட பேரழிவிலிருந்து தப்பித்துக் கொள்ள மேற்கொண்ட கடும் பிரயத்தனமாக அது இருந்தது. தமது தன்னம்பிக்கையை அதிகரிக்கவென பெருங்குரலெடுத்து பேரோசை எழக் கத்தியவாறு பாடுபட்டுக் கொண்டிருந்த அவர்களது முயற்சி கடைசிக் கட்டத்தை எட்டியிருந்த அவ்வேளையில்தான் அடை மழை விடாமல் பலத்துப் பெய்ததோடு கங்கையின் நீர் மட்டம் மேலும் அதிகரித்துக் கொண்டு வந்தது. பேரழிவைத் தடுக்க எடுத்துக் கொண்ட முயற்சி வீணாகிப் போனது தெளிவானது. அணைக்கட்டால் தண்ணீரின் கனத்தை மேலும் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அனைத்து முயற்சிகளும் பின் வாங்கத் தொடங்கியிருந்தன.
உச்சந் தலையிலிருந்து உள்ளங்கால்கள் வரைக்கும் சேறு படிந்திருந்த பொது மக்கள் தம்மிடம் எஞ்சியிருந்த அனைத்து சக்திகளையும், தைரியங்களையும் ஒன்று திரட்டியவாறு தமது உயிர்களையும், எளிமையான வீடுகளையும், வயல்களையும் வெள்ளத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள பெருங் கவலையோடும், ஒத்துழைப்போடும் மிகவும் பாடுபட்டுக் கொண்டிருந்தார்கள்
நாட்டில் இவ்வாறான அபாய நிலைமை நிலவிக் கொண்டிருக்கையில் அரசன் என்ன செய்து கொண்டிருக்கிறார்? பொது மக்களின் தேச பிதாவாகவும், அன்னையாகவும் அறியப்படும் அவர் எங்கே இருக்கிறார்? உண்மையில் அவர் இருப்பது எங்கோ வெகு தொலைவில் அல்ல. இந்த அழிவு நடைபெற்றுக் கொண்டிருக்கும் பிரதேசத்துக்கு சில நூறு யார் தொலைவிலுள்ள பிரதேசத்தில் இருந்த மாளிகையில்தான் அவர் இருக்கிறார். வெள்ளம் எவ்வளவுதான் உயர்ந்தாலும் அதனால் பாதிப்பு ஏற்படாத அளவு உயரமான இடத்தில்தான் அந்த மாளிகை கட்டி எழுப்பப்பட்டிருகிறது.
அந்த மாளிகையின் உட்புறத்தில் பகல் போலவே வெளிச்சம் சிந்திக் கொண்டிருந்தது. உள்ளே அடிமைகளும், படை வீரர்களும், சேவகர்களும் தொடர்ந்தும் அங்குமிங்குமாக நடமாடிக் கொண்டிருந்தார்கள். மாளிகையின் நடுவே சிறப்பாகத் தயாரிக்கப்பட்டிருந்த சிம்மாசனத்தில் பொது மக்களின் தாயாகவும், தந்தையாகவும் அறியப்படும் அவர் தனியாக, கம்பீரமாக வீற்றிருந்தார். அவரது இடது கை மிகவும் மிருதுவான அரியணை மீது ஓய்வாக இருந்தது. தரையில் அமர்ந்திருந்த சேவகனொருவன் அவரது வலது காலைத் தடவிக் கொண்டிருந்தான். கட்டழகான படைவீரனொருவன் அவரது ஒரு புறம் நின்று கொண்டு பெரியதொரு தோகை விசிறியால் அரசனின் வதனத்துக்கு காற்று வீசிக் கொண்டிருந்தான். மறுபுறத்தில் நின்று கொண்டிருந்தவன் புகை பிடிக்கும் குழாயைத் தயார் நிலையில் வைத்தவாறு காத்துக் கொண்டிருந்தான்.
‘ஸமி எட்டாம் இலக்கத்தை நான் எடுக்கப் போகிறேன்’ என்றான் ஒரு விளையாட்டு வீரன். (சூதாட்டத்தில் பயன்படுத்தப்படும் ஒரு சீட்டின் பெயர் ஸமி.)
‘வேன் ஏழாம் இலக்கத்தை நான் எடுக்கிறேன்’ என்று இன்னுமொருவன் பதிலளித்தான். இவ்வாறாக, விளையாட்டு வீரர்கள் அனைவரும் சில சமயங்களில் சத்தமிட்டவாறும், சில சமயங்களில் கிசுகிசுப்பாகவும் கதைத்தவாறு, ஆனால் எப்போதும் கண்ணியத்தைப் பேணியவாறு விளையாடிக் கொண்டிருந்தார்கள்.
அரசனும் அணைக்கட்டு உடைந்து வெள்ளத்தில் சிக்கி மக்கள் மாண்டாலும் எதையும் பொருட்படுத்தாத மனநிலையோடு சூதாட்டத்தை ஆடிக் கொண்டிருந்தார். சிவப்பும், கருப்பும் கலந்த நூற்றிருபது சீட்டுகளின் மாய சக்தி ‘பொது மக்களின் தேச பிதாவையும், அன்னையையும்’ வசியப்படுத்தியிருந்தது. அணைக்கட்டு உடைந்து விழுந்தாலும் என்ன, வெள்ளம் அணைக்கட்டைக் கடந்து பெருக்கெடுத்துப் பாய்ந்தாலும் என்ன, அவர் விளையாடிக் கொண்டிருக்கும் ஆட்டத்தை விடவும் அவை முக்கியமானவையல்ல.
அந்த நள்ளிரவு நேரத்தில், அந்த மாளிகைக்கு வெளியே நீர் மட்டம் உயர்ந்து ஆயிரக்கணக்கான மக்கள் அடுத்தவர்களையும் கூட்டிக் கொண்டு, நடமாட இயலாதவர்களையும் தூக்கிச் சுமந்து கொண்டு இடம்பெயர்ந்து கொண்டிருந்தார்கள். மாளிகைக்குள்ளேயே அரச பரிவாரங்கள் இருப்பதுதான் பாதுகாப்பானது. அடிமைகள் சூழ வீற்றிருக்கும் அரசனின் சூதாட்டத்தைப் பார்த்துக் கொண்டிருக்கையில் பேரழிவொன்று அண்மித்திருக்கிறது என்பதை யார்தான் நம்புவர்?
ஆனாலும் அந்த மக்கள் தனது நாட்டு மக்கள் அல்லவா? ஒரே குடும்பம் போன்ற, ஆண்களும், பெண்களுமாக ஒன்று போலவே இரத்தம் கொண்ட, மனிதர்கள் அல்லவா?
நடப்பது நடக்கட்டும்! மனிதர்கள் உயிரோடு இருந்தாலும், இல்லாவிட்டாலும் பரவாயில்லை. இவ்வாறான சின்ன விடயத்துக்காக சூதாட்டத்தை நிறுத்த முடியுமா என்ன? இவ்வாறான விளையாட்டை நிறுத்த யாருக்குத்தான் மனம் வரும்? அரசன் வெற்றிக் களிப்பில் பூரித்துப் போயிருந்தார். அவர் எவ்வளவு திறமையான விளையாட்டு வீரன்? அவர் மீண்டும் மீண்டும் தொடர்ந்த சுற்றுகளிலும் வெற்றி பெற்றுக் கொண்டேயிருந்தார். அவர் அந்த விளையாட்டில் திருப்தியடையவில்லை என்று யார்தான் சொல்ல முடியும்?
அணைக்கட்டு எவ்வளவுதான் உடைந்து வீழ்ந்தாலும், நிலப்பகுதியை எவ்வளவுதான் தண்ணீர் சூழ்ந்தாலும் சிறந்த உத்திகளோடு விளையாடினால்தான் வெற்றி நிச்சயம். இந்த அடிமைகளுக்கு அது விளங்காது.
அரசன் முதலாம் சுற்றிலிருந்து இறுதிச் சுற்று வரைக்கும் வெற்றி பெற்றுக் கொண்டேயிருந்தார். அனைத்து விளையாட்டு வீரர்களும் தமது சீட்டுகளை அவரின் முன்னால் பரத்தி வைத்திருந்தார்கள். அரசனை வெல்ல எவரும் முன்வரவில்லை. ஆகவே அரசன் தொடர்ச்சியாக வெற்றி பெற்றுக் கொண்டேயிருந்ததில் வியப்படைய ஏதுமில்லை. அரசனின் வெற்றிதான் அனைவரினதும் விருப்பமாகவும் இருந்தது.
இறுதிச் சுற்று முடிந்ததும் அரசனுக்கு சிறிது ஒய்வு தேவைப்பட்டது. அவர் ஏற்கெனவே மிகச் சுவையான சூப் பானத்தை அருந்தி முடித்து விட்டு ஒரு கையால் மீசையைத் தடவிக் கொண்டிருந்தார்.
அவ்விடத்துக்குச் சற்றுத் தொலைவில்தான் பூமியையும், வானத்தையும் அதிரச் செய்தவாறு பேரழிவின் பேரோசை கேட்டுக் கொண்டிருந்தது. அங்கிருந்த அனைவருமே அந்த ஓசையில் அதிர்ந்து போயிருந்த போதிலும், அரசன் மாத்திரம் சலனமேதுமில்லாமல் தனக்கு எதிரேயிருந்த விளையாட்டு வீரன் அடுத்த சீட்டைத் தேர்ந்தெடுக்கும் வரை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தார். இந்தத் தடவையும் அவர்தான் வெற்றியாளர்.
அரசனின் பிரதான செயலாளர் அரசனை நெருங்கி மெதுவாக கிசுகிசுத்தார்.
‘கண்ணியத்துக்குரிய அரசரே. இப்போது அணைக்கட்டு உடைந்திருக்கக் கூடும் என்பதைத் தெரிவிக்க விரும்புகிறேன்.’
‘நடப்பது நடக்கட்டும்’ என்று உறுமிய அரசன் பொறுமையற்றவராக, அவரை முறைத்துப் பார்த்தார். பிறகு, சீட்டுக்களை மீண்டும் அடுக்கி வைத்துக் கொண்டிருந்த தனது பிரதான செயலாளரைத் திட்டினார்.
‘சரி. நீ விளையாட மாட்டியோ? இனி விளையாடவே மாட்டியோ?’
திறமையாகப் பயிற்சி பெற்றிருந்த பிரதான செயலாளர் உடனடியாகப் பதிலளித்தார்.
‘உங்களது ஆணைக்காகக் காத்திருக்கிறேன், அரசரே.’
அந்தச் சந்தர்ப்பத்தில்தான் ஆயிரக்கணக்கான மக்களின் மரண ஓலம் நாற்திசைகளிலிருந்தும் கேட்கத் தொடங்கியது. அவற்றுடன் வெள்ளப் பெருக்கின் ஓசையும், விலங்குகளின் ஓசையும் கேட்டன. மாளிகையின் நிலவரமும் சட்டென மாறியது. அரசனைத் தவிர ஏனைய அனைவருமே பதற்றமுற்றிருந்தார்கள்.
திடீரென தலை முதல் பாதம் வரை சேறு படிந்திருந்த விவசாயி ஒருவன் கதவைத் திறந்து கொண்டு அரசனின் முன்னால் வந்து நின்றான்.
‘கண்ணியத்துக்குரிய அரசரே, அணைக்கட்டு உடைந்து விட்டது.’
‘அணைக்கட்டு உடைந்து விட்டது… அணைக்கட்டு உடைந்து விட்டது… ஏன் இந்த விளையாட்டைக் குழப்புகிறாய்? அவ்வளவு துணிச்சலா உனக்கு? காவல்காரர்கள் எல்லோரும் எங்கே போய்த் தொலைந்தார்கள்? இந்தக் கேடுகெட்டவனை ஏன் உள்ளே வர விட்டீர்கள்? இங்கு ஒரு ஒழுங்குமே இல்லையா?’ என்று அரசர் உறுமினார்.
‘உத்தரவு அரசரே.’
‘உடனடியாக இந்த நாயைக் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுங்கள். உடனடியாக… புரிகிறதா?’
பிறகு அரசர் தனது பிரதான காரியதரிசியின் பக்கம் திரும்பினார்.
‘எந்த சீட்டை நீ இப்போது போட்டாய்?’
‘உத்தரவு அரசரே. நான் இன்னும் விளையாடத் தொடங்கவில்லை.’
‘சரி. விளையாடு. ஏன் பார்த்துக் கொண்டிருக்கிறாய்?’
நடுங்கும் விரல்களால் சீட்டுக் கட்டிலிருந்து ஒரு சீட்டை எடுத்துப் போட்ட அவர் பலவீனமான குரலில் சொன்னார்.
‘சரி.’
அரசர் அந்தச் சீட்டின் மறுபுறம் திருப்பிப் பார்த்தார்.
‘எல்லோரும் பாருங்கள். வெற்றி நிச்சயம் என்பது எனக்குத் தெரியும். இந்தத் தடவையும் நான்தான் வெற்றி பெற்றிருக்கிறேன். ஆஹா… திரும்பத் திரும்ப வெற்றி’ என்று சந்தோஷக் களிப்பில் அனைத்து சீட்டுகளையும் கலைத்துப் போட்டார்.
‘வெற்றி. வெற்றி. வெற்றி. தொடர்ச்சியாக மூன்று சுற்றுகளிலும் வெற்றி பெற்று விட்டேன். இது ஒரு அருமையான விளையாட்டு. யாரங்கே? இப்போது என்னிடம் புகைபிடிக்கும் குழாயைக் கொண்டு வாருங்கள்.’
இவ்வாறாக அரசன் மாபெரும் வெற்றியை தொடர்ச்சியாகப் பெற்றுக் கொண்டிருக்கையில், அந்த மாளிகைக்கு வெளியே இருளில் அனைத்துப் பிரதேசங்களும் மோசமான வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டிருந்தன. வீடுகளும், வயல்களும், உயிர்களும் தண்ணீரில் மூழ்கிப் போயிருந்தன. உயிர் பிழைத்திருந்தவர்களுக்கும் தங்குவதற்கு வீடுகள் இருக்கவில்லை. தண்ணீரில் மூழ்கி இறந்தவர்களுக்கும் இனி மண்ணறை மாத்திரமே உரித்தாகும். தண்ணீர் சுழிகளோடு பெருக்கெடுத்துப் பாய்ந்து கொண்டிருந்தது.
அந்தத் தேசத்தில் பேரழிவு எந்தளவுக்குத் தலைவிரித்தாடியது என்றால், பின்னொரு காலத்தில் அதைப்பற்றி எடுத்துரைக்க ஒரு சிலர் மாத்திரமே உயிரோடு எஞ்சியிருந்தார்கள்.
எழுத்தாளர் பற்றிய விபரம் – பாம் டை தூன்
வியட்நாம் தேச எழுத்தாளரான பாம் டை தூன், 1881 ஆம் ஆண்டில் பிறந்தவர். பிரான்ஸ் பல்கலைக்கழகத்தில் கற்று பட்டம் பெற்றிருந்த அவர் சில காலம் அரசாங்க அதிகாரியாகப் பணி புரிந்திருக்கிறார். பிறகு பத்திரிகை ஊடகவியலாளராக சேவையாற்றிய அவர் வியட்நாமின் ஆரம்ப கால சிறுகதை எழுத்தாளர்களுள் முக்கியமானவர். சமூகப் பிரச்சினைகளை தமது எழுத்தில் கொண்டு வந்த அவர் 1924 ஆம் ஆண்டில், தனது 43 ஆம் வயதில் காலமானார். அவரது இறுதிக் காலத்தில் அவரால் எழுதப்பட்ட இந்தச் சிறுகதை, பேரிடர் காலத்தில் மக்கள் மீது மறைமுகமாகத் திணிக்கப்படும் சர்வாதிகார ஆட்சியின் மற்றுமொரு கோர முகத்தை எடுத்துக் காட்டுகிறது.