சமய இலக்கியங்களைச் ‘சமய நீக்கம்’செய்து வாசிக்க முடியுமா? இது ஒரு சமகால வினா. அவ்வாறு நீக்கம் செய்து ஏன் வாசிக்க வேண்டும்? இது ஒரு பழங்காலக் கேள்வி. இக்கேள்விகளுக்குத் திட்டவட்டமான பதில்கள் உண்டு.ஒரு குறிப்பிட்ட சமயத்துக்குத் தாலி கட்டிக்கொண்டு, அச்சமயம் வலியுறுத்தும் தத்துவநெறிகளையும், அவற்றின் வழிப்பட்ட புனிதமான நம்பிக்கைகளையும், முழுமுதற்கடவுளாகக் கருதுவோனின் பெருமைகளையும், மனிதவாழ்வு நடத்தப்பட வேண்டிய முறைமைகளையும் பற்றிப் பேசுபவைதாம் சமய இலக்கியங்கள். ஆனால்,‘அனுபூதிநிலையின் அந்தரங்கஉணர்தல்கள்’ கவிதையாகப் பிரவாகமெடுக்கும்போது, அவை குறுகிய எல்லைகளுக்குள் மட்டும் திரும்பத் திரும்பச் சுழல்வதில்லை.படைத்தவனின் நோக்கத்தையும் மீறிப் பெரும்பாய்ச்சல்களையும், அத்துமீறல்களையும் சிலவேளைகளில் பிரதிகள் நிகழ்த்திவிடுகின்றன.இதயமற்ற இந்த உலகத்தின் இதயமாக ஒருகோணத்தில் சமயம் தெரிந்தாலும், உண்மையில் அது மக்களைக் கெடுக்கும் அபினிதான் என்பதால், ‘வாசிப்புச் சுதந்திரத்தை’ப் பெருமளவுக்குப் பயன்படுத்திக்கொண்டு, ‘மனச்சுடரைத் தூண்டும் மலை’களாகத் திகழும் ஆழ்வார்களின் பாசுரங்களை அவற்றின் சமயப்பொருண்மைக்கு வெளியிலிருந்து அணுகும் முயற்சியே, இங்குக் காலத்தின் தேவையாக மேற்கொள்ளப்படுகிறது.பாசுரங்களைக் கருத்தாகப் பக்தியாகப் பாவநீக்கியாகப் பேற்றுக்கு வழியாகக் கருதிப் படிப்பதுதான் பெரும்பான்மை என்றாலும், சிறிய அளவிற்கேனும் சமய மனநிலையிலிருந்து விடுபட்டுச் சுதந்திரக் கவிதையாகப் பெருகும் இயல்பூற்றாகக் கண்திறக்கும் காட்சியனுபவமாக வாசிப்பதும் சாத்தியம்தான்.

சென்றால் குடையாம் இருந்தால் சிங்காதனமாம்

நின்றால் மரவடியாம் நீள்கடலுள் – என்றும்

புணையாம் மணிவிளக்காம்  பூம்பட்டாம் புல்கும்

அணையாம் திருமாற்கு அரவு” (பொய்கையாழ்வார்:53)

ஒன்றைப் பாசுரமாக ஏற்பதற்குத் திருமாலின் திருப்பெயர்களுள் ஒன்றோ, அவரது அவதாரங்களோ, புராணக்கதைகளோ, திவ்விய தேசங்களோ, திருக்கல்யாண குணங்களோ, திருமாலோடு தொடர்புடைய பொருள்களோ உயிர்களோ பாடப்பட்டிருக்க வேண்டும் என்பது எழுதப்படாத வைணவக் கவிமரபாகும். இப்பாசுரத்தில், திருமாலும் ஆதிசேஷனும் பாடப்பட்டுள்ளனர். இங்குச் சுட்டிப் பெயர்கூறப்பட்ட திருமாலையும் அரவையும், அவர்களுக்குரிய சமயத்தன்மையை நீக்கிவிட்டுப் பொதுவான இரண்டு உயிர்களாக மட்டும் கருதிச் சுதந்திரமாக வாசிக்கும்போது, குறுகிய சமயவட்டத்தைக் கவிதை மீறிவிடுவதையும், பேரனுபவத்தின் பெருந்திரட்சியாகிப் பக்திநெறியின் இறுகிய பிடியிலிருந்து வெளியேறித் திமிறித் துடிப்பதையும் காண்கிறோம். ‘இரு பொது உயிர்கள்’ என்பதை மேலும் நுணுக்கிப் பெண்ணும் ஆணும் என்று மடைமாற்றிவிடுகிறபோது, அதற்கப்பாலும் சென்று, ‘சென்றால் இருந்தால் நின்றால் மிதந்தால் இருண்டால் உடுத்தினால் அணைத்தால்’ என வருவனவற்றை ஒருவருக்கு இன்னொருவர்செய்வனவாகக் கொள்ளாமல் – ஒருவருக்கொருவர்மாறி மாறி இருவரும் செய்துகொள்வதாகப் புதுவதாகக்கற்பனைவிரிவைப் பயன்படுத்திப்பொருள் புனைந்துகொள்ளும்போது, ‘திருமால்-ஆதிசேஷன்’ என்ற பக்தியுணர்வு, அரிதினும் அரிதான ஆனால் உலகப்பொதுவான மானுடப்பேருணர்வாகப் புதுஉச்சம் தொட்டுவிடுகிறதல்லவா!

‘திருமாற்கு அரவு’ என்ற மொழிப் பயன்பாடு, கூர்ந்து நோக்கத்தக்கது. ‘அரவுக்குத் திருமால்’ என்றும், இதை வாசிக்க இயலும். திருமாலுக்குத் திருமகளைக் காட்டிலும் அரவுதான் நெருங்கியஉறவு என்கிறார்பொய்கையார்என்றும், இதை மேலும் ‘பட்டை தீட்ட’ முடியும். சென்றால் குடையாவார்; இருக்கும்போது சென்றவர்சிங்காதனமாகலாம்; நின்றால் மரவடியாவார்; நீள்கடலுள் செல்லும்போது நின்றவரும் புணையாகலாம்! இது மாறி மாறிச் சூழலுக்கும் விருப்பத்துக்கும் ஏற்ப நிகழ்வதன்றி, ஆண்டான்-அடிமை உறவாகவே நிகழவேண்டியதில்லை. இப்படிப்பட்ட மொழியமைப்பைத் தம் பாசுரத்தினுள் தொனிப்பொருளாய்ப் பொய்கையாழ்வார்கட்டியெழுப்பியுள்ளார். இப்பாசுரத்தை நேர்நிலைக்காட்சியாகத் தட்டையாகப் புரிந்துகொண்டு பொருளுரைப்பதைவிடவும், உள்நிலை உணர்வலையாக்கிப் பொருண்மையைக் கூடுமானவரையில் புதுக்கி விரித்துவிடுவதே செய்யவேண்டியதாகும்.குடை, அமரும் ஆசனம், செருப்பு, தெப்பம், விளக்கு, பட்டாடை, தலையணை என்ற ஏழுவகைப்  பயன்படுபொருள்களும் ‘அரவு’ எனப் பொருள்கொள்கிறபோது, வடிவங்களை எளிதில் மாற்றிக்கொண்டு, அவற்றையனுபவிக்கும் திருமாலுக்குப் பாம்பாகிய ஆதிசேஷன் மகிழ்ச்சியேற்படுத்துவதாகப் பாசுரத்தை வாசிக்கலாம்தான். ஆனால், ‘திருமால்-அரவு’ தொடர்பான ‘வைணவ ஐதீகத்திற்கு’ வெளியே செல்லும் ‘வாசிப்புச் சுதந்திரத்தை’ எடுத்துக்கொள்ளும்போது, ‘ஒன்றைவிட்டு ஒன்று பிரியவேமுடியாத இன்றியமையாமை’; ‘மேல்கீழ் தாண்டிய ஒன்றற்கொன்று ஒன்றிவிடும் உணர்வு ஒருமை’ என்ற உச்சநிலைகளுக்குக் கவிதை மொழிவழிப்பட்டு முன்னகர்ந்துவிடும் மாயமும் நிகழ்ந்தேறுகிறது. இதுதான் கவிதையின் ரசவாதம். கவிஞன் உத்தேசித்த எல்லையைத் தாண்டி, வேறு சிலபுதிய நிலங்களுக்குள்ளும் கவிதை நுழைந்துவிடுகிறது.

வடிக்கோல வாள் நெடுங்கண் மாமலராள் செவ்விப்

படிக்கோலம் கண்டு அகலாள் பன்னாள் – அடிக்கோலி

ஞாலத்தால் பின்னும் நலம்புரிந்தது என்கொலோ?

கோலத்தால் இல்லை குறை” (பூதத்தாழ்வார்:82)

இது ஒரு வித்தியாசமான பாசுரம். பக்தி இலக்கியங்களைக் குறிப்பிட்ட நம்பிக்கைகளுக்கு அப்பால் இயங்கும் ஒரு பொதுவாசகனும், அப்பாலை உலகுக்கு இப்பால் நின்று, தனக்குரிய சமகாலத்தன்மையுடன் அர்த்தப்படுத்திக்கொள்ள முடியும் என்பதற்குச் சிறந்த சான்றாக, இப்பாசுரத்தைச் சுட்டலாம். ‘கூர்ந்து ஒளிரும் அழகிய நெடுங்கண்களுடன்’ தாமரைமலரில் பிறந்த திருமகள், திருமாலின் திருமேனி எழிலில் கண்தோய்ந்து ‘கணப்போதும் விட்டுப்பிரியாமல்’ கட்டுண்டு கிடக்கிறாள். பலநாளும் இப்படி இவள் ‘கண்டு அகலாமல்’ கிடப்பதை அறிந்தபிறகும், பொங்கிவரும் ஆசையைக் கட்டுப்படுத்தாமல் பெருக்கிக்கொண்டிருக்கிறாள்  பூமிப்பிராட்டி என்கிறார் பூதத்தாழ்வார். இது எவ்வாறு சாத்தியமாயிற்று? எத்தனைபேர்அனுபவித்தாலும் வளர்ந்தோங்கும் அழகுக்குக் குறையேது? எம்பெருமானிடத்தில் ‘அழகு’ எல்லை கடந்திருப்பதால், அனைவரும் அதற்கு ஆசைப்படுகின்றனர்என்கிறார் பூதத்தாழ்வார். ஒருத்திக்கு ஒருவன் என்பதன்றி, ஒருவனுக்கு ஒருத்தி என்பது மண்ணுலக மரபன்றுதானே!அது எப்படியோ போகட்டும், இங்குக் கவனிக்க வேண்டியது வேறொன்றும் உண்டு. ‘கோலத்தால் இல்லை குறை’ என்ற ஈற்றடியைச் சமயப்பொருண்மை கடந்து பொதுத்தளத்துக்கு விரிக்கும்போது, ‘அழகு என்றும் குறை ஆவதில்லை’; அதாவது ‘அழகினால் துன்பம் நேர்வதில்லை’ என்ற எல்லைக்குக் கொண்டுகூட்டிவிடமுடியும். ‘A thing of beauty is joy for ever’ (அழகு என்றும் இன்பம் தரும்) என்ற அமரத்துவம் பெற்ற கீட்ஸின் புகழ் பூத்த தொடர்சுட்டுவதும் இதையே என்பதை, ஒப்பிலக்கியப்பயிற்சி மூலம், எளிதாகத் தெளிந்துகொண்டுவிடலாம்தானே! இக்கருத்தைக் கீட்ஸ்க்கு முன்பே  பூதத்தாழ்வார்பேசிவிட்டார்எனக் கூறிப் பழம்பெருமை பேசுவதன்று, பக்தி உணர்ச்சியிலிருந்து கவிதை விடுபடும்போது, அது எவ்வளவு பெரியதொரு பொருண்மைப்பரப்புக்குள் சிறகுகள் விரித்துப் பறக்கமுடிகிறது என்பதைச் சுட்டிக்காட்டுவதே, இந்த ஒப்பீட்டின் நோக்கம்.

இங்குப்பூதத்தாழ்வாரின் மொழிப் பயன்பாடு, மிகவும் செறிவாகக் கட்டப்பட்ட ‘புதைபொருள் சொல்லாட்சி’களைக் கொண்டுள்ளது. ‘வடிக்கோலம், படிக்கோலம், அடிக்கோலி, செவ்வி, பின்னும் நலம் புரிந்தது, கண்டு அகலாள், ஞாலத்தால் (ஞாலத்தாள்)’ எனச் சொற்கள் ‘நன்கு திரட்டப்பட்டு’ப் பாசுரத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளன. ‘வடி’ என்பதற்குக் கூர்மைஎன்று பொருள்கொள்வது வைணவ மரபு. இதற்குத் தேன், கள் என்றும் பொருள்கள் உண்டு. கோலம்-அழகு; படிக்கோலம்-உடலழகு; செவ்விப் படிக்கோலம்- ‘தக்க பருவத்திற்கு ஏற்ற உடலழகை இயல்பாகப் பெற்றவன்’ எனச் சொற்கள் விரித்துப் பொருள் கண்டடைய வேண்டும். ‘ஞாலத்தாள்’ எனக் கொண்டு, ‘ பூமிப்பிராட்டி’ எனப் பெயர்சுட்டவேண்டும். ‘மாமலராள்’ என்பதால், முன்னவள் திருமகள் என்று தெளியவேண்டும். ‘அடிக்கோலி’ என்பதற்கு, ‘நெஞ்சின் அடியாழத்திலிருந்து மேற்கிளம்பிப் பரவி வளரும்’ எனப் புரிந்து, ‘நலம்’ – ஆசை என்று கூட்டி முடிக்கவேண்டும். இவ்வாறு சொல் சொல்லாக வாசித்துப் பக்திவெளியைக் கடந்து பொதுவெளிக்குள் புகுந்து பரவிவிட்டால், இப்பாசுரத்தை இப்படியும் வாசிக்கும் துணிவு வசப்பட்டுவிடும். இது ஒரு ரெண்டு  பெண்டாட்டிக்காரன் கதை; வழக்கம்போல் ஆணின் குரலைக்கூடப் பெண்ணையே எதிரொலிக்க வைக்கும் சமத்காரம்தான்இங்கும்செயல்பட்டிருக்கிறது!

சென்றநாள் செல்லாத செங்கண்மால் எங்கள்மால்

என்றநாள் எந்நாளும் நாளாகும் – என்றும்

இறவாத எந்தை இணையடிக்கே ஆளாய்

மறவாது வாழ்த்துக என் வாய்”(பேயாழ்வார்:17)

‘செங்கண்மால் எங்கள்மால் என்ற நாள்’, ‘சென்றநாள் செல்லாத எந்நாளும் நாளாகும்’ என்று இப்பாசுரத்தைச் சொல்வரிசை மாற்றிப் படிக்க வேண்டும். ‘நாள்’ என்ற சொல், பாசுரத்தில் நான்குமுறை பயன்படுத்தப்பட்டுள்ளது. ‘செல்லாத நாள்’ என்றுரைப்பதற்கும், ‘என்றும்’ என்பதற்குப் பதிலாக ‘எந்நாளும்’ எனக் கூறுவதற்கும் வாய்ப்பிருந்தும் கூறாமல், ஆனால் அவ்வாறு வாசிப்பதற்கு ஏதுவாகச் சொற்களின் வரிசைமுறை குலைக்கப்பட்டுப் பாசுரத்தில் பதிவாகியுள்ளன.‘செந்தாமரைக் கண்ணன் நம்மிடத்துப் பேரன்பு வாய்ந்தவனாக இருக்கிறான்’ என்று உணரும் ஒருநாள் உண்டானால், சென்றுவிட்ட நாள்களும் – இனி வரப்போகும் செல்லாத நாள்களுமான அந்த எல்லாக் காலங்களும் நல்லனவே என்கிறார்பேயாழ்வார். நமக்கு நன்மை செய்பவரை நம்மவர்என நினைத்து, இவர்நம்மோடு இப்படியே எப்போதும் இருப்பார்எனப் பழகுபொருளாய்க் கொண்டுவிடுவதால், அவரை மறந்து நம்மையே எப்போதும்  நினைப்பதுதான் மானுடரின் பொதுஇயல்பு என்பதால், அதுபோல் தாமும் நன்றி கொன்றவராகிவிடக்கூடாது என்பதற்காகத்தான், ‘மறவாது வாழ்த்துக என் வாய்’ என்றார்ஆழ்வார்எனச் சமகாலத்தன்மையைப் பாசுரத்தில் பொருத்தி விளக்கமளிக்கவும் முடியும். எனினும், இப்பாசுரத்தின் மிக முக்கியமான சொற்றொடர், ‘என்றும் இறவாத எந்தை’ என்பதுதான்.பேயாழ்வாரின் பார்வையில், ‘ஒருநாளும் அழிவில்லாத எம்பெருமானான திருமாலுடைய திருவடிகள் இரண்டிற்கே’ தாம் என்றும் ஆளாகித் ‘திருவடிப்பேறு’ பெற்றுவிடவேண்டும் என்ற பொருண்மையே, இங்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், ‘என்றும் இறவாத எந்தை’ என்ற அந்தத்தொடரை, மேலும் புதுக்கியும் நுணுக்கியும் அதற்குள் விரிவாகப் பயணப்படும்போது, ‘கடவுள்’ என்ற பழைய கருத்துருவம் பற்றிய ஒரு வரலாற்றுப்புரிதல் ஆழ்வாருக்குள் செயல்படும் முறைமையை அறியும் வாசிப்புத்தருணம், அங்குப் பிடிபட்டுவிடுகிறதல்லவா!இல்லாத கடவுளை, ‘God is dead’ எனக் கடவுள் செத்துவிட்டதாகப் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் நீட்ஷே அறிவித்தபோது, உலகம் ஒருகணம் திடுக்கிட்டது உண்மைதான். ஆனால், அதற்குப் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னால் தோன்றிய பேயாழ்வார், கடவுள் என்ற கற்பனையை அதன் கொடுமுடிக்குக் கொண்டுசென்று, ‘என்றும் இறவாத எந்தை’ என்ற தொடர்மூலம், ‘என்றைக்கும் சாகாத’ கடவுளின் சமூகத்தேவையைச் சிறப்பாக வலியுறுத்துவதும் உண்மைதான். இவ்விரு சிந்தனைகளும் இரண்டு வெவ்வேறு காலத்தின் விளைபொருள்கள் என்பதைத் தாண்டிப் பேயாழ்வாருக்குள் ‘என்றும் இறவாதவன் எந்தை’ என்ற ‘புனைவு மனநிலை’நம்பிக்கையூற்றாகிப் பெருகுகிறது என்பதால்தான், பெருமாளைஅவர் என்றும் இறவாதவனாக்கி வாழவைக்கிறார்எனலாம். இவ்வாறெல்லாம் ‘எல்லை’மீறிப் பொருளுரைக்கலாமா? இதற்குப் பதிலளிக்கப் பின்வரும் நம்மாழ்வார் பாசுரத்தைத்தான்மடைமாற்ற வேண்டியிருக்கிறது.

உயர்வற உயர்நலம் உடையவன் எவன் அவன்

மயர்வற மதிநலம் அருளினவன் எவன் அவன்

அயர்வறும் அமரர்கள் அதிபதி எவன் அவன்

துயரறு சுடரடி தொழுதுஎழு என்மனனே!” (திருவாய்மொழி:1)

இந்த எவனும் அவனும் திருமாலையே சுட்டுவதாக, வைணவ மரபில் வரும் உரையாசிரியர்கள் அனைவரும் விளக்குவதில் வியப்பில்லை. அது நேரடியானதும் இயல்பானதுமேயாகும். இதை, வேறுவகையாக வாசிக்கவியலுமா என்பதுதான், இங்கு நம் முன்னுள்ள கேள்வி. இப்பாசுரத்தில் வரும் எந்தச்சொல்லும், நேரடியாகத் திருமாலோடு தொடர்புடையதாக இல்லை. ‘அமரர்கள் அதிபதி’ என்பதுகூடத் ‘தேவர்களின் தலைவன்’ எனப் பொதுப்பொருளைச் சுட்டும் ஒரு தொடரே. அந்த அதிபதி, சிவனாகத் திருமாலாக இந்திரனாக ஏன் சமணக் கடவுளாகக்கூட இருக்கலாம். ஆனால், இது திருவாய்மொழியின் முதல் பாசுரம் என்பதும், இதனைப் பாடிய நம்மாழ்வார்திருமாலையே முழுமுதற்கடவுளாகக் கொண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாசுரங்களைப் பாடியவர்என்ற உண்மைகளையும் நாம் புறக்கணித்து விடுவதற்கில்லை. ஆனால், இவ்வாறுமரபான ‘வைணவ வாசிப்பிலிருந்து’ மட்டும் பாசுரத்திற்குப் பொருள்கூற வேண்டியதில்லை. வேறுவகையாகப் பொருள் கூறுவதற்குப் பாசுரத்திற்குள் சிறிய அளவில் இடமிருந்தாலும், அதையும் பெரிதாக்கிப் பயன்கொண்டு, கூடுமானவரையில் நவீனமாகப் பொருளுரைக்க வேண்டும் என்பதுதான் நிகழ்காலத் தேவையாகும்.இப்பாசுரத்தில், திருமாலைக் குறிக்கும் தொடர்கள், குறிப்பாக அல்லாமல் வெளிப்படையாக இடம்பெறாத காரணத்தால், ‘வைணவ நீக்கம்’ செய்து இப்பாசுரத்தைச் சுதந்திரமாக வாசிக்கும் சமகாலத்தன்மை, உடன்விளைவாய்ப் பிரதியில் உருப்பெற்றுவிடுகிறது. இவ்வாறு ‘அவைணவ’ப்பொருண்மைஎன்பதிலிருந்து வாசிக்கும்போது, ‘இதற்குமேல் உயர்வில்லை என்னும்படியாக உயர்நலங்கள் யாவும் வாய்க்கப்பெற்றவன் எவனோ, மயக்கமற்ற அறிவுத்தெளிவை அளிப்பவன் எவனோ, சோர்வை விரட்டும் அமரத்தன்மையைத் தரும் தலைவன் எவனோ, அவனது துயரம் அறுக்கும் சுடரடியைத் தொழுது எழுச்சி பெறட்டும் என் மனம்’ எனப் பெரிதினும் பெரிதைப் போற்றும் பொதுக்குரலைப் பாசுரத்திற்குள் ஒலிக்கச்செய்வதும் தவிர்க்கவியலாததாகி விடுகிறது.

பொய்கையாழ்வார்,  பூதத்தாழ்வார், பேயாழ்வார், நம்மாழ்வார்என நால்வரின் பாசுரங்களைச் சிறிது முயற்சியெடுத்துச் ‘சமய நீக்கம்’ செய்து வாசித்துக் காட்ட முனைந்ததைப்போல், பிற ஆழ்வார்களின் பாசுரங்களையும், இதே சமகாலத் தடத்தில் பயணிக்கச் செய்வதும் இயலும்.வினைச்சுடரைநந்துவிக்கும்வேங்கடமேவானோர்மனச்சுடரைத்தூண்டும்மலை”  (முதல்திருவந்தாதி : 26)எனப்பொய்கையாழ்வார்பாடியுள்ளார். அதுஎப்படியோ, ஆனால்வாசகர்மனச்சுடரைத்தூண்டும்மலைகளாகப்பன்னிருஆழ்வார்களும்திகழ்கின்றனர்என்றுதுணிந்துகூறலாம். இது ஓர்அபாயகரமான விளையாட்டு. தமிழும் தமிழர்சிந்தனையும் இன்று ஏந்திநிற்கும் தற்கால வாழ்வடையாளங்களுடன் பண்டைய பக்திப்பனுவல்களைப் புதுவதாகப் புதுக்கி வாசிக்க மேற்கொள்ளப்படும் இந்தமுயற்சி, பண்டைப்பெருமைக்கும் பின்னைப்புதுமைக்கும் வலிமைசேர்க்கவேபயன்படுவதன்றிப்பக்திக்கும் கடவுளுக்கும் பெருமையும் முதன்மையும் சேர்ப்பனவாகிக் கவிதையைக் கீழிறக்கிப் பின்தள்ளிவிடஒருபோதும்நாம்அனுமதித்துவிடலாகாதுஎன்றநுண்புரிதலே, இன்றுநமக்குத்தேவைப்படுகிறது.செம்மையால் உள்உருகிச் செவ்வனே நெஞ்சமே!,மெய்ம்மையே காண விரும்பு” (பேயாழ்வார்:22).