வழக்கை சுட்டிக்காட்டி திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்காதது தவறு என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

மக்களவை தேர்தலுடன்,  தமிழகத்தில் காலியாகவுள்ள 21 சட்ட மன்ற தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு வரும் ஏப்ரல் 18ஆம் தேதி தேர்தல் நடைபெறும். திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி ஆகிய மூன்று தொகுதிகளிலும் வழக்கு நிலுவையில் இருப்பதால், தேர்தல் தற்போது நடைபெறாது என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதைதொடர்ந்து, அந்த 3 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் திமுக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஏ.கே.போஸ் வெற்றி பெற்றார். இந்தத் தேர்தல் நேரத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த முன்னால் முதல்வரும், அதிமுகவின் பொதுசெயலாளருமான ஜெயலலிதாவிடம் அதிமுக சார்பில் போட்டியிடபோவதாக வேட்புமனுவில் கையொப்பம் வாங்கிய ஏ.கே.போஸ், தேர்தல் ஆணையத்திடம் அளித்தார். அதைதொடர்ந்து, திமுக சார்பில் போட்டியிட்ட மருத்துவர் சரவணனைவிட அதிக வாக்குகள் பெற்று இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட ஏ.கே.போஸ் வெற்றிபெற்றார்.

சுயநினைவு இல்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஜெயலலிதாவிடம் கைரேகை வாங்கிவந்ததாகவும், அதனால் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட ஏ.கே.போஸீன் வெற்றி செல்லாது எனவும் அறிவிக்ககோரி மருத்துவர் சரவணன் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணை நிறைவடைந்து, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இதற்கிடையில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஏ.கே.போஸ் உடல்நலக்குறைவு காரணமாக இறந்துவிட்டதால், அந்தத் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தும் சூழல் உருவாகியுள்ளது. இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்திலும் வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் அமர்வு முன்பு இன்று (மார்ச் 18) விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கை சுட்டிக்காட்டி திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்காதது தவறு என நீதிபதி  கருத்து தெரிவித்தார். தேர்தல் ஆணையம் தன் விருப்பம்போல் செயல்பட்டுவருகிறது என்று கூறிய நீதிபதி, ஏ.கே.போஸீன் வெற்றிக்கு எதிரான வழக்கில் வரும் வெள்ளிகிழமைக்குள் தீர்ப்பு வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.