சங்க இலக்கியம் ஒரு பெருங்காடு. உட்புகுந்தோர் வெளித்திரும்பியதில்லை; வெளித்திரிவோர் உட்புகும் துணிவிலர். உட்புகுந்தும் வெளிவந்தும் அகலாமல் அணுகாமல் ஆழம் காண்போர் எண்ணிக்கை அதிகமில்லை. உள்ளே ஒரேயடியாய்ப் புகுந்துவிட்டால் வெளிக்காட்சியே தெரியாது போய்க் கி.பி. 21ஆம் நூற்றாண்டிற்குப் பதிலாகக் கி.மு. 2ஆம் நூற்றாண்டில் அடைபட நேரிடும். வெளியே தேடுவதாய்க் கூறிக்கொண்டு முற்றிலுமாகப் புறந்திரிந்தாலோ, உட்செறிவே உணராது போய்க் கி.மு.வைத் தாண்டி வந்ததற்கான சுவடுகளின்றிக் கி.பி.யிலேயே பிறந்ததுபோல் நிலை தடுமாறித் தலைக்குக் கால் அந்நியமாகும் அபத்தமே அறிதலாகும். புறக்கண் காணாதோடும் பிரவாகப் பெருக்கை உள்விழியால் கண்டுகொள்ளச் சரித்திரத் தேர்ச்சியும் சமகாலப் பிரக்ஞையும் உடலுயிராய் உடன்வேண்டும்; நன்மையும் அறிவும் எத்திசைத்தாயினும் யாவரே காட்டினும் அம் மெய்ம்மைகள் தழுவி வாழும் அச்சமின்மை கண்ணிமையாய்க் கூடவேண்டும். இவை கூடும் எழுத்து அரிது; இந்த அருமை இளந்தோழர் முனைவர் மு.ரமேஷுக்கு இயல்பாகியுள்ளது.

    களப்பிரர் காலம் இருண்டகாலம் என்ற திரிபு மட்டுமன்று; சங்ககாலம் பொற்காலம் என்ற மயக்கமும் இன்று கலைக்கப்பட்டுவிட்டது. இதற்குச் சங்க இலக்கிய வாசிப்புடன் முதுமக்கள் தாழி, நடுகல், நாணயங்கள், பாறையோவியங்கள், குகைச்சிற்பங்கள், வழக்காறுகள், செப்பேடுகள், கல்வெட்டுகள்,பழஞ்சுவடிகள், வரலாற்றுக்குறிப்புகள், செவிவழிக்கதைகள், மானுடவியல் மற்றும் மொழியியல் ஆய்வுகள், வேர்ச்சொல்லறிவு, அகராதியியல், அகழ்வாய்வுகள், ஆவணங்கள் எனப் பல்துறை நுண்மையும் ஒருங்கிணைந்த ஒரு விரிந்த பார்வை வேண்டியிருந்தது.இவ்விரிவின்றிச் சங்க இலக்கியப் பிரதியொன்றே எல்லாவற்றுக்குமான ஊற்றுமூலம் என்ற பழம்பெருமைவாதம் இன்று செல்லுபடியாகத்தக்க ஓர் அறிவடையாள மதிப்பாயில்லை. இலக்கியச் செய்திகளுக்குப் புறநிலை ஆதாரங்களும் வலுவூட்டாவிடின், அவை கற்பனைப் புனைவுகளேயன்றி உயிர்ப்புள்ள உண்மைகளாகா என்ற நிலைப்பாடு, வேறுவழியின்றித் தற்காலத்தில் உலகம் முழுவதும் ஏற்கப் பட்டுள்ளது. இந்த உலகளாவிய பார்வையைக் கிரகித்துக்கொண்டு, சங்க இலக்கிய ஆய்வைப் பன்முகப்பட்ட தொல்லியல் தரவுகளோடு பொருத்திப் புதிய கருத்தியல்களுக்கு முன்னகர்த்தும் அரசியல் கூர்மையுடன் முனைவர் மு.ரமேஷ் தமிழ்க் கடலாடியுள்ளார். பற்பலரும் நடையாடும் கலாச்சார வழமையாகிவிட்ட பாதைப் பாதுகாப்புகளைப் பொருட்படுத்தாது, கல்லும் முள்ளும் குத்தித் தூண்டும் எதிர்க்கலாச்சாரத் தடங்களில் அச்சமின்றிப் பயணிக்கிறார். இது மிதமிஞ்சிய  சுதந்திரத்தையும், அதேவேளை அதிகபட்சமான பொறுப்புணர்வையும் அவருக்களிக்கிறது. இவை  ஒருங்கிணைவதாலான சாதகங்களும், பிரிந்துவிலகுவதாலான சேட்டைகளுமே இந்நூலாகும்.

    ’உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே’ என்ற இலக்கணத்தால், ’இழிந்தோர்’ என்ற வேறோர் அடையாளமும் குறிப்புணரப்படுகிறது. படவே, ’உயர்ந்தோர் – இழிந்தோர்’ என்ற இருமை கட்டி எழுப்பப்பட்டுப் பாதுகாக்கப்படுவதும் இயல்பாகிறது. இது உயர்ந்தோர் தம்மை மேலும் உயர்த்திக் கொள்ளவும், இழிந்தோராக்கப்பட்டோரை மேலும் கீழே தள்ளி எழமுடியாமல் அழுத்திவைக்கவும் வழிவகுக்கிறது. இந்த உயர்த்தலும் தாழ்த்தலும் நாகரீக எல்லைகளை மீறித் தொற்றுநோயாய்ப் பரவும்போது, அடியோடனைத்தையும் தலைகீழாகப் புரட்டிப்போடும் சமூகத்தேவையும் வரலாற்று அழுத்தமும் விளைகின்றன. அடியோர், வினைவலர், புலையர், இழிசினர் முதலிய சொற்களைப் புனிதப் பனுவலான சங்க இலக்கியத்தில் காணும் விளிம்புநிலை மனம் ஒருகணம் திடுக்கிட்டுப் பிற்கணத்தில் சீற்றமுற்றுப் பண்பாட்டுக் களத்திலிருந்து அக்கயமையின் அடிவேரைத் தேடிச் சொல்லாய்வில் இறங்கிப் புத்தறிதல்களுக்குள் புகுந்து குமுறியும் திமிறியும்  இளைப்பாறுகிறது. யார் உயர்ந்தோர் யார் இழிந்தோர் என்ற வினா முற்றுமுழுதாக ஒரு முழுச்சுற்றுத் திரும்பும் போது, முன்மரபில் உயர்ந்தோர் பின்திரிபில் இழிந்தோராக்கப்படும் மேட்டிமைத்தனம் ஒளிவு மறைவின்றிப் பச்சையாக அம்பலப்பட்டுவிடுகிறது. இப்படித்தான் பூர்வகுடிப் புலமையாளர்கள் புலையராகவும் இழிசினராகவும் கீழிறக்கப்பட்டனர். இவ்வரலாற்றுண்மையைப் பாண்மரபு புலவர் மரபானதன் பின்னணியைப் பொருத்தமான சங்க இலக்கிய மற்றும் தொல்லியல் சான்றுகள்வழி இந்நூலில் மிகத்திறமையாக ரமேஷ் நிறுவியுள்ளார். உடலுழைப்புத் தொழில்கள் செய்தமையால் இழிசினராக இகழப்பட்டவர்கள் நடப்புலக நெறியிலும், நோய்கள் தீர்க்கும் மருத்துவத்திலும், கால வெளிப் புரிதலிலும், நிலநீர் மேலாண்மையிலும், இன்னும் பிற அறிவுத்துறைகளிலும் எத்தகைய  செழுமையான பாரம்பரியத்தின் முதுகுடிகளாயிருந்தனர் என்பதைத் தெளிந்த மொழியில் அரிதின் முயன்று சேகரித்த தரவுகளின் அடிப்படையில் இந்நூலில் மு.ரமேஷ் துலக்கியுள்ளார். இதனூடே,  சங்க இலக்கிய ஆய்வுக்களத்தில் பிரேம் ரமேஷின் காத்திரமான இடையீடுகளால் உருவாகிய ஒரு புத்தறிவுப் புலத்தை மேலும் முன்னகர்த்துவதில் குறிப்பிடத்தக்க வெற்றியும் பெற்றுள்ளார்.

   சேர சோழ பாண்டியருள் சேரரைத் தவிரப் பிறர் இருவரையும் தமிழ்க் குடிகளாகக் காண்பதில் பெருந்தயக்கத்தையும், விளிம்புநிலைக் குடிகளிலிருந்தே சேரர் தோன்றியிருக்கக்கூடும் என்பதால் அவர்களே பூர்வத் தமிழராதல் வேண்டுமென்றும் ரமேஷ் விவாதிக்கிறார். சமண, பௌத்த சமயக் கணக்கர்களே முதலில் எழுத்துகளை முறைப்படுத்தி வாய்மொழியிலக்கியங்களைத் தொகுத்தனர் என்றும், அரசர் அந்தணர் வணிகர் வேளாளர் எனும் நால்வருணப் பாகுபாடு ஏனைய இந்திய நிலங்களிலிருந்ததுபோல் தமிழகத்திலும் நிலவியதாகவும், பழந்தமிழ்ச் சமூகங்களுக்கிடையில் அசமத்துவநிலையே நீடித்ததாகவும் குறிப்பிடுகிறார். அகப்புறத்தின் கூட்டு வடிவே தமிழென்றும், பேரரசுகளும் அவற்றுக்கான நாகரீகச் சமூகமும் உருவாகிறபோது உள்முரண்களைத் தொகுப்பது இன்றியமையாத வரலாற்றுத் தேவையாவதையும் வலியுறுத்துகிறார். முதலில் சோழநாடு சதுப்பு நிலமாயிருந்து பின்பே மருத நிலமானதாகவும், பெண்களின் புணர்ச்சிப் பருவத்தைக் குறிஞ்சி பதிலீடு செய்வதாகவும், தமிழகத்தினும் ஈழத்தின் வடக்குப் பகுதியிலேயே பாலை மரத்தைப் பெரிதும் காண முடிவதாகவும், சங்க இலக்கியம் காட்டும் ஐந்திணைக் காமம் ஒரு நடப்பியல் என்பதினும் அது வெறும் இலட்சியக் காமமே என்றும் விழிப்பூட்டுகிறார். பெரிய படையோ நல்ல உணவோ சரியான வணிகத்தொடர்போ ஏதுமில்லாத தேங்கிய சமூகமாக முதுகுடிச்சமூகம் மாறி விட்டமையைப் புறநானூறு காட்டுவதாகவும், மக்களின் தனியுணர்விலேயே பால் வேறுபாடுகள் முக்கியப்படுவதாகவும், தொகுதிப்படுத்தி நோக்குகையில் அவை மதிப்பிழப்பதாகவும் துணிகிறார்.  பழங்குடிச் சமூகத்தின் மூத்தோரான புலையர்போல் பழைய மந்திரங்களைக் கற்றுப் புதுச்சூழலில்  முன்னுக்குவந்த பார்ப்பனரும் வைதீகத் தலையீடுள்ள வேந்தராட்சியில் ஐயரெனப் பெருவழக்கில் விளிக்கப்பட்டனரென்றும்,  ஒரு குலமின்றிப் பல குலங்களையும் உள்ளடக்கியது பேரரசென்றும்,  பழந்தமிழர் இன்றைய தென்கோடி இந்தியாவைத் தாயகமாகக் கொண்டிருந்தாலும் பழந்தமிழக வேந்தருள் பலர் தமிழகத்தைத் தாயகமாகக் கொண்டவரல்லரென்றும் கூறி உணர்வூட்டுகிறார். உலகெங்கிலுமுள்ள விளிம்புநிலையினரும் உதிரிமனிதர்களும் தொல்குடிகளேயென்றும், தொல் குடிகளின் வரலாறு இடைக்காலப் பெருமிதங்களை அச்சுறுத்துகிறது என்றும் அறைகூவுகிறார்.

    மிகத்துணிவுடன் தம் பல யூகங்களையும் சில முடிவுகளையும் மு.ரமேஷ் முன்வைத்துப் புலமை மரபுக்குரிய அளவையியல் ஆய்வுமுறையுடன் கடந்தகாலத்தையும் நிகழ்காலத்தையும் ஒப்பிட்டு விவாதித்துள்ளார். இந்த விவாதத்துக்குப் பின்னே செயல்படும் விளிம்புநிலைப்பார்வை முக்கியமானதாகும். தமிழ்ச் சமூகம் என்ற ஒரு பெருந்தொகுதியைப் பொதுமைத் தடத்திலான அதன் பன்மைத்துவப் பண்பாட்டை மீட்டெடுக்கும் பேரிதயம் படைத்த ஒரு தமிழ் ஆய்வாளனின் ஆதிமூலந்தேடும் மயர்வறு மதிநலம் கண்டு வியக்கிறேன்; வணங்கி வாழ்த்துகிறேன்.பழந்தமிழ்ச் சமூக அமைப்பை அதன் தோற்றமயக்கம் தாண்டிக் காணும் கூர்விழிகள் மு.ரமேஷிடம் உள்ளன. இக்கூர்ப்பாலேயே அவர், ’’ஒவ்வொரு நிலமும் ஒவ்வொரு குடிக்குரியதாக எல்லைப்படுத்தப்பட்டு உடைமையாக்கப்பட்டிருந்தது.தமிழ்ச்சமூகத்தில் காதல், பறவையின் எச்சத்தால் காடு முளைப்பது போன்ற தற்செயல் நிகழ்வன்று. தம் குடிக்குள்ளாகவே தகுதியுடைய ஆண் பெண்களுக்கிடையில் காதல் மலரவேண்டியிருந்தது. நிலம்விட்டு நிலம், குடிவிட்டுக் குடி காதல் உருவாகலாம். அவை திருமணமாக மாறமுடியாது. அதற்கான சமூக அனுமதி கிடையாது’’ என்றெழுதுகிறார். இத்தனை நுணுகிக் கருத்துரைத்தாலும், தமிழ்க் கற்புப் பெருமித ஜோதியில் கலந்துவப்பதில் இவரும் விதி விலக்கல்லர். ’’கற்பு சார்ந்த பெண்ணுக்கான விதிகள் மிகக் கடுமையாயிருந்தாலும், ஐரோப்பியச் சமூகங்களைப்போல் அல்குல் பூட்டுப் போன்ற நடத்தைகள் பின்பற்றப்படவில்லை. இங்குக் கற்பு, மகளிரின் மனத்தன்மையாகப் பதிவுறுத்தப்பட்டுவிட்டது. இந்நிலை, ஆண்-பெண் சமத்துவத்தைப் பாதிக்கிறதென்றாலும், ஒருவகையில் தமிழ்ச் சமூகத்தில் கடைப்பிடிக்கப்பட்ட கற்பு நடத்தை, பண்பட்ட ஒருநிலையை காட்டக்கூடியதாகும்’’ எனக் கசிந்துருகுகிறார் மு.ரமேஷ்.மகளிரின் மனத் தன்மை என்றும், பண்பட்ட நிலை என்றும் அமைதி காண்பதுவழித் தம்முள் ஓர் ஆண்நோக்கைப் போகிறபோக்கில் அனுமதித்துக்கொள்கிறார். இங்கே அம்பேத்கரின் கருத்தொன்றை நினைவூட்டல் தகும். ஐரோப்பாவின் கொடிய அடிமைமுறை சாதியச் சமூகமானாலும் இந்திய நிலத்திலில்லை என்ற கருத்து பலராலும் முன்வைக்கப்பட்டபோது, அதை உறுதியாக எதிர்த்த அண்ணல், அடிமை முறையைவிடக் கொடுமையானது சாதியமே என்று வாதிட்டதைக் கருதுக. அல்குல் பூட்டுக்கு உட்பட்டிருந்தாலும், குறிப்பிட்ட வரலாற்றுக்காலத்திற்குப் பிறகு ஐரோப்பாவில் பெண்ணுரிமைகள் மிகப்பரவலாயின என்பதையும் அத்தகைய வேகம் இன்னுமிங்கில்லை என்பதையும் ஒப்பிட்டுக் கண்டிருப்பின், தமிழ்க் கற்புப் பெருமிதம் அவாவும் ஆண் மனப்பிடியிலிருந்து விடுபட்டுப் பெண் நோக்கில் இருகட்சிக்கும் அது பொதுவிலமையாமை கண்டு, நாணமும் அச்சமும் வேண்டாமென உறுமியிருப்பார். இதைக்கூடச் சிந்திக்காதவரல்லர் மு.ரமேஷ். எனினும், தமிழ்ச் சூழல் சார்ந்த  கட்டுப்பெட்டித்தனம், ஒருதுளி இன்னும் மிச்சமிருப்பதால், ’மனத்தன்மையின் பண்பட்ட நிலை’ பற்றியே, இவரும் கதைக்கிறாரெனலாம்.

   சங்க இலக்கியம் பற்றி இனி ஆய்வு செய்ய எதுவுமில்லை, எல்லாமே ஆராயப்பட்டுவிட்டன எனக் கல்விப்புலத்தில் ஓர் அசட்டை உண்டு. இந்நூலில் மு.ரமேஷ், அக்கற்பனையை அடித்து நொறுக்கி, விளிம்புநிலையிலிருந்து இனிதான் ஆய்வுகள் கூர்மைப்படப்போகின்றன என்பதற்கான மண்விளக்குகளைத் திக்கெட்டும் ஏற்றியுள்ளார். சுரர், அசுரர், நாகர், யவனர், ஆரியர், திராவிடர், மூவேந்தர், களப்பிரர், பல்லவர், சாதவாகனர் எனப் பலர் குறித்தும் தரவுகளைத் தொகுத்துள்ளார். பாலி, பிராகிருதம், சமஸ்கிருதம், கிரேக்கம், சீனம், ஆங்கிலமெனப் பல்மொழிப் பண்பாட்டோடும் ஒப்பிட்டுத் தமிழின் தொன்மையையும் தனிச்செழுமையையும் பன்மையையும் சமத்துவத்தையும்  உயர்த்திப்பிடித்துள்ளார்.நான்மணிக்கடிகையைக் காதாசப்தசதியுடன் இணைவுறுத்தியும், பழமொழி நானூற்றிலுள்ள அதிகார அறத்தைப் புலப்படுத்தியும், பழந்தமிழில் பூதவாதக் கருத்துகளுள்ளதை வெளிச்சமிட்டும், சங்ககால ஆயர்களின் தனித்தன்மையை நிலைநாட்டியும், தமிழ்ச் சிந்தனையில் பௌத்தம் பிரிக்கவியலாதவாறு கலந்துள்ள சிறப்பியல்பை விதந்தோதியும், பழந்தமிழ் அரசனாக முருகனை மீள்புனையும் அயோத்திதாசரின் மீட்டுருவாக்கம் வியந்தும் தமிழ் ஆய்வு நிலத்தை ஆழ்ந்தகழ்ந்து மு.ரமேஷ் உழுதுள்ளார். இந்த உழவின் விளைவைக் காணத் தொடர்ந்து மேலும் பல்லாண்டு இவ்வாய்வுக் களத்திலேயே இவர் உழைத்தாக வேண்டும். இது இவரது முதல் உழவு  என்பதால், கரடுமுரடாய்க் கிடக்கும் இப்பெருங்கற்கால ஆய்வுப்புலத்தைப் பாடுபட்டு நெகிழ்த்தத்  துடிக்கும் ஆர்வமும் வேகமும் எங்கெங்கோ வழிமீறிக் கூட்டிச்சென்றுவிடும் ஆவேசமடக்கிக் கண்ணுங்கருத்துமாய்க் கரையடங்கியோடும் காவிரியாய்ப் பெருக்கெடுப்பார் என்று நம்புகிறேன். தாம் தேடித் தொகுத்த தரவுகளே தம் கருத்தியலுக்கு முற்றெதிராகத் திரும்பும்போதும், அவற்றை மெளனப்படுத்தாமல் உரக்கப்பேசும் பெருந்துணிச்சல், இந்த இளைஞரிடம் சூல்கொண்டிருப்பதாகக் கருதுகிறேன். உண்மைகளும் நம்பிக்கைகளும் ஒன்றுபோல் தோன்றினாலும், அவை ஒன்றில்லை வேறு என்றறியும் ஆய்வறம் கனிந்தோர் வரிசையில் நாளை இவருக்கும் இடமுண்டு. ஆனால், இங்கே ஒன்றை மட்டும் ஓங்கிச் சொல்லிவிடவேண்டும். இன்று கல்லூரிகளில் சங்க இலக்கியம் கற்பிக்கும் என்னைப் போன்ற தமிழாசிரியர்களுக்குப் பழந்தமிழைப் புரிந்துகொள்ளவும் பகிரவும்  இன்னும் நாம் எவ்வளவு கற்கவேண்டும், தேடவேண்டும் என்ற மலைப்பைத் தூண்டிவிட்டுள்ளார். சங்க இலக்கியத்தில் தோய்ந்த ஒரு பின்நவீன மனத்துடன், தமிழ் வேர்களைத் தேடும் இவரது விசாரணைகள், இந்நூல் முழுவதும் கிளைபரப்பிக் கனிநல்கிக் கவனங்கோருகின்றன. இது ஓர் ஆய்வாளனின் கனவு முயக்கம்; ஒரு புனைவாளனின் நனவுத்தீண்டல். மனங்கனிந்த வாழ்த்துகள் காம்ரேட் மு.ரமேஷ், இனிவரும் உங்கள் ஆய்வு நூல்களுக்காகக் கண்விரித்துக் காத்திருக்கிறேன்.