நவீனக்கவிதை என்று எதைக் குறிப்பிடுகிறோம்? பழைய கவிதையில்லை நவீனக் கவிதை. அது இந்தச் சமகாலத்தின் கவிதை; மொழியிலும் கூறுமுறையிலும் புதிய சாயலுடையது; அமைதியற்ற மனத்தின் அலைபாய்தல்; எந்த ஒன்றிலும் நிலைகுத்த முடியாது தொடர்ந்து நகர்ந்துகொண்டேயிருப்பது; கருத்துப் பிடிக்கெல்லாம் சிக்காமல் வழுக்கியும் நழுவியும் விழுந்தும் எழுந்தும் தீவிரப்போக்கு காட்டுவது; தனக்குத் தானே எதிரியாகிக் கட்டுமீறியடங்கும் அலைகடல் சப்த நிசப்தம் அது. இது இலக்கணமன்று; வேடிக்கை பார்ப்பவனின் அவதானிப்பு. இதற்குப் பெரிதும் பொருந்துவன என்று போகன் சங்கரின் கவிதைகளைக் குறிப்பிடலாம். வேறு எந்த விமர்சனத்தை வேண்டுமென்றாலும் போகனின் கவிதைகள் மீது வைக்கலாம்; ஆனால் இவை நவீன மனதின், நவீன வாழ்வின், நவீன உலகின் கவிதைகள் என்பதை மட்டும் நாம் கவனிக்காதிருக்கவே முடியாது. இங்கு நவீனம் என்னும்போது, அது பின்நவீனத்தையும் உள்ளடக்கியது என்பதாகவே புரிந்துகொள்ளப்பட வேண்டும். பழைமையின் துருவைக் கவிதைகளிலிருந்து உதறிவிட்டமை என்பது, போகனின் எழுத்துக்கான ஒருவிதக் கரட்டு முத்திரையாகும். 

உலகில் எத்தனையோ தீர்க்கதரிசிகள் தோன்றிவிட்டார்கள்; தத்துவஞானிகளுக்கும் கணக்கில்லை; கவிஞர்களும் நாவலாசிரியர்களும் மட்டுமென்ன! வயது ஏற ஏறப் புதியது என்று ஏதும் இல்லை என்பதும் உறுதிப்பட்டுவிட்டது. பின்னும் புதிதாகச் சொல்லவும் பகிரவும் ஏதோ இருக்கிறது என்றுதான் எழுதுபவர்கள் அனைவரும் நினைக்கின்றார்கள்; நம்புகின்றார்கள். இந்த நம்பிக்கைதான் வாழ்வின் அடிப்படையாகும். என்றாலும், புதியது அல்லாத இவ்வுலகில், கவிதையில் இது புதியது எனப் படிப்போரை நம்பவைக்கக் கலைத்திறன் தேவைப்படுகின்றது. எல்லாமே தோற்ற மயக்கம்தான் என்னும்போது, கவிதை மட்டும் என்ன, காலத்தை வெல்லும் முடிவிலியின் மாயையா? ஆத்மா இல்பொருள் என்பதைப் புத்தன் போட்டுடைத்துவிட்ட பிறகும், ஆத்மா மக்களை வசீகரிக்காமலா போய்விட்டது? கவிதையும்கூட அப்படித்தான். சொற்கூட்டத்தில் மனம் மயங்குகிறது; இருப்பில் காணாத ஏதோ ஒன்றைக் கண்டுவிட்டதாகத் துள்ளுகிறது; ஒருகணம் எனினும் அதில் பிரபஞ்ச முழுமையை எப்படியோ தரிசித்துவிடுகிறது; சொல் பின்னும் மோனத்தில் பிறப்பின் புதிர் அவிழ்ந்தாற்போல் தோன்றிக் காலம் மறைந்து பிறக்கிறது ஒரு புதுக்கணம். இதுவே கவிதை எனப்படுகிறது.

இங்கோர் ஒழுங்கு இருக்கிறது. இந்த ஒழுங்கு நிலைபெறக் கறாரான விதிகள்  செயல்படுகின்றன. இதோடு ஒன்றிவிட்டால், கவலைகள் நம்மைத் தின்னுவதில்லை. ஆனால், யோகிகளும்கூட  ஒன்றமுடியாத ஒருபெரும் வன்முறையின் வெறியாட்டு இங்கே அரங்கேறுகிறது. பாவனைகளையே பேருண்மைகளாகக் கருதி வாழப் பழகிவிட்டோம். இதைக் கவிதை மீற முனைகின்றது. இம்மீறல் சாத்வீகமானதாய் எப்படியிருக்கவியலும்? ஆரம்பம், நடுவு, முடிவு என்ற ஒழுங்கின் வரிசையைக் குலைக்காமலும் சிதைக்காமலும் நிகழ்கணங்களை எதிர்கொள்ளமுடியாதுதானே! போகனின் கவிதைகளுக்குத் தலைப்பில்லை; முதலடிகளே பொருளடக்கத்தில் தலைப்புகளாகியுள்ளன. ஏதோ தோன்றுகிறது; சொற்கள் தீண்டிக் காட்சிகள் அர்த்தப்படுகின்றன; அர்த்தம் குழம்பிப் பித்தநிலையில் வாழ்கணங்கள் விரிகின்றன; அனுபவங்கள் அறுபட்டு அறுபட்டுத் திரைகள் விலகி விலகிச் சாயைகள் உருவுகொள்கின்றன; சீச்சீ… போதும்… போதும்… எல்லாம் கூளம் எனச் சலிக்கையில் திடீரென நாதம் உட்பாய்கிறது! இப்படியான ஒருமையற்ற வேறு வேறு சித்த சாகர அலைகளாய்ப் போகனின் சொற்கூட்டங்கள் நம்மை உலுக்கி வேடிக்கை காட்டுகின்றன.

சோர்வு, விரக்தி, வேதனை, கையாலாகாத்தனம், கசப்பு, குமட்டல், வலி, நிராதரவு, அச்சம், ஒதுங்கல், ஒடுங்கல் என எதிர்மறை உணர்வுகளே அன்றாடங்களாய் அலைமோதுகின்றன. குறைகளேயன்றி நிறைவு என்பதெல்லாம் கனவிலும்கூடக் குறுக்கிடுவதில்லை. இது ஓர் உலகப்பொதுவான மனோபாவமாகி இன்று நிலைபெற்றுவிட்டது. இதற்குள்ளிருந்துகொண்டே – இந்த இருளை, இருளென்று உள்வாங்கி – ஒளிதேடி நீளும் ஒரு பயணம் போகனுடையது. எவ்வளவுதான் அவர் எல்லாவற்றையும் கேலிசெய்து கடந்துவிடப் பார்த்தாலும், மகிழ்ச்சியையும் அமைதியையும் விரும்பும் அவரது ஆழ்மனம், அவரே விரும்பாவிட்டாலுங்கூட அவரையும் மீறி இக்கவிதைகளில் ஒளிந்திருப்பதைப் பார்க்கிறேன். இவ்வகையில், இருளில் ஒளிதேடும் ஒரு தொல்குடியின் புதிய விழிகளே இக்கவிதைகள் என்பேன். இங்கு நட்சத்திரங்கள் எல்லாம் கொண்டுவரும், நட்சத்திரங்களை அடைய, உங்களுக்குத் தேவையான காலத்தையும் (ப.30) என்ற போகனின் வாக்கைச் சுட்டிக்காட்ட விழைகிறேன்.

கடவுளிடம் சியர்ஸ் சொல்வார்; வயசாளியின் பீத்துணியை மறக்காமல் நினைவூட்டுவார்; பொய் சொல்லி நனவிலியுடன் தொடர்புகொள்வார்; தற்பிழைகளைச் சுட்டிச் சிரிப்பார்; எதிரியின் முற்றத்தில் ராணியும் ஞானியும் சந்தித்து முத்தமிடுவதை வெறிப்பார்; இது கடைசியாய் இறக்கப்பட்ட சுவிசேஷம் என்று அறிவிப்பார்; தன்னுடன் சமமாக நடக்கும் தெரு நாய்களையும் கவனமாக நாற்காலி மறுக்கப்படுபவனையும் ஒரேகோட்டில் வைத்திணைப்பார்; எட்டிமரம் செய்த கையைத் தேடுவார்; அசலைவிட அன்பான வட்டியை வியப்பார்;நட்சத்திரங்களின்முன் தாழ்ந்துபோவார்; பள்ளிவாசலில் அமர்ந்திருக்கும் சிறுமியின் கால் ஷூவில் பொறுமையின்றி ஆடும் ஆரஞ்சுவண்ணக் கயிற்றைக் கவனிப்பார்; தசை இழுத்துண்ணும் தீயை நுகர்வார்; கள்ளத் தீர்க்கதரிசியைக் காட்டிக் கொடுப்பார்; இவ்வுலகம் பற்றியே அதிகம் குறைசொல்வதை ஆளுமைப் பிழையாகக் காண்பார்; துளைகள் மீதான காதலைத் தோலுரிப்பார்; கீழிறங்கத் தனி ஏணிகள் கேட்பார்; தீபங்களைச் சங்கிலியாகப் பூட்டப்பட்ட கண்கள் என்பார்; முன்னோக்கி நகராத எதுவும் சுமையாகிறது எனப் போதிப்பார். வகைதொகை செய்ய முடியாதவாறு வாழ்வின் இண்டு இடுக்கிலெல்லாம் புகுந்து புறப்பட்டுக் கைவிடப்படும் தேவாலயங்கள் எழுப்பும் மகிழ்ச்சியில் தன்னைத் தேடித் தன் கவிதைகளில் தானே லயித்துத் தொலைந்தும் போகிறார் போகன் என்றும் வாசிக்கலாம்.

பிரமிளின் படிமங்கள் அசாதாரணமானவை. ஆனால், அவற்றில் எப்படிச் சொல்லிவிட்டேன் பார்த்தாயா என்ற ஒரு மிதப்புமிருக்கும். அத்தகைய படிமங்களே போன்ற சில ஆழ்மனத் தூண்டல்களைப் போகனிடமும் காண்கின்றோம். ஒரு குழந்தைப் படிக்கட்டென இந்த இதழ், ஒரு கோழிக்குஞ்சைப் போன்றதொரு பிள்ளை முத்தம், அந்தியில் வான்நோக்கித் தனியாக விடப்பட்ட கை, சத்தமாய்ச் சிரிக்கும் நடுச்சாமக் கூகை, அருவியை உருவிக்கட்டியதுபோல ஒரு சேலை, நோய்போல் வரும் குளிர், சரக்கொன்றை மலர்கள் உதிர்வது போல் சிரிப்பவள், கேவல் சப்தத்துடன் இருளில் மறையும் ராப்பறவை, எரியும் கப்பல், மழை வெள்ளத்தில் மென்மையுடன் நீந்தும் சர்ப்பம், சன்னல் கண்ணாடிகளில் மோதிமோதிக் குளவி புக முயலும் ஒரு வீடு, பனிப் புயலுடன் சண்டையிடும் ஒற்றை மரம், புழு தின்னும் மீன், மழை பொழியும்போது கடற்கரையில் தனியாக விடப்பட்ட நாற்காலி, பனியை ஆடையாக்கி மலையுச்சிக்கு ஏறும் சிறுமி, கால்விரல்கள் நடுவே விம்மியிருந்த புழுதி, இசையை மூங்கில் புரிந்துகொள்ளும் தருணம், மின்னிடைக் கணமேயிருக்கும் மனுஷ குமாரி, இரக்க சமுத்திரமாகுபவள் எனப் பல உவமைப் படிமங்கள் போகனிடம் மிகுதியாய்த் தலைநீட்டுகின்றன. ஆனாலும், பிரமிளின் அசாதாரணத்திலிருந்து வேறுபட்ட சாதாரணப் படிமங்கள் இவை என்பதைக் கவனிக்கவேண்டும். இச்சாதாரணம் வாசிப்பில் எவ்வாறோ அசாதாரணமாவதுதான் போகனின் நடைவிசேஷம்.

சிறிய எண்களை நினைவிற்கொள்ளும் ஹரிணிபோல், சிறிய விஷயங்களையே போகனும் சிரத்தையுடன் காட்சிப்படுத்துகிறார். ஒளியில் உடைந்ததை இருளில் ஒட்ட முனையும் நனவிலியையே திரும்பத் திரும்ப மையப்படுத்துகிறார். ஆரோக்கியமும் வலியும் இரு மொழிகளாயிருக்கும் அபத்தத்தையே பேசுகிறார். ’நான் மிகப்பெரிய சிறுநீர்த்தாரை, வயதான மின்தூக்கியைச் சிரமப்படுத்தாமல் மாடிப்படிகளில் ஓடினேன், பெயர் என்பது அழிவு, உங்களுக்குத் தேவையானதெல்லாம் ஒரு மனிதர் சொல்லியதுபோல மிகச்சிறிய விசுவாசம், நீ வணங்கும் தெய்வங்கள் மழைக்கு மேம்பட்டவை அல்ல, பதினேழாவது செங்கல்லில் இருந்து இந்தக் கட்டடம் கலையாகத் தொடங்கிவிடுகிறது, என் சாலையை யாரோ கவனக் குறைவாய் அழித்துவிட்டார்கள், மனிதனால் இப்பூமியில் உருவாக்கக்கூடிய அதிகபட்ச கலை எரிப்பதுதான், என் மீது எப்போதும் எனக்கு ஒரு குமட்டல் இருந்துகொண்டேயிருக்கிறது, ஒரு அம்பு வரையப்படுவதற்கும் எய்யப்படுவதற்கும் நிச்சயமாக ஏதேனும் வேறுபாடுள்ளதா?,  பயணம் செய்து பயணம் செய்து மனிதர்கள் பயணம் செய்யும் மனிதர்களையே அடைகிறார்கள்’ என்றெல்லாம் போகன் எழுதும்போது, அவரிடம் மொழி, இருண்மையற்ற ஒருவித நூதனத் தன்மையைப் பாசாங்கற்ற சுதந்திரத் தொனியை அடைவதைச் சிறப்பாகக் குறிப்பிடவேண்டும்.

ஒரு ரயில் எப்போதும் கிளம்பிச் செல்கிறது

ஒரு ரயில் எப்போதும் நிற்கிறது

நிற்கிற ரயிலைப் பற்றிக் கிளம்பிச் செல்லும் ரயிலுக்கு

எப்போதும் ஒரு உதாசீனம் இருக்கிறது  (ப.79)

 

நிற்கிற ரயில், கிளம்பிச் செல்கிற ரயில் என்பன எவற்றைக் குறிக்கின்றன என்று மண்டையைப் போட்டு உடைத்துக்கொள்ளத் தேவையில்லை. இதில் வரும் உதாசீனம் என்ற ஒரு சொல் வழியே பொதுவாசகனும் எவ்வளவோ புரிந்துகொண்டுவிட முடியும். நேர்ப்பொருளுக்கும் உட்பொருளுக்குமான அக்கடக்க முடியாத இடைவெளியைச்  சொற்கள்வழிப் போகன் எளிதாக நெகிழ்த்திவிடுகின்றார்.

 

நதியில் எழும் அலை  தான் நதியைவிட எப்போதும் ஓரடி

முன்னால் நடப்பதாக நினைக்கிறது

அம்மையை முந்த முயலும் சிறு மகள்போல (ப.76)

 

என்கிறார். துன்புறுவது வாயிலாகவே உடல் தன்னை நிச்சயப்படுத்திக்கொள்கிறது, உடல் மரணம் நோக்கி வளர்கிறது, பிரமைகளுக்குக் காலக் கணக்கு கிடையாது, ஒளி எப்போதும் ஒரு விதை வடிவில் இருக்கிறது, உன்னிடம் எரிக்க எத்தனை உள்ளன என்பதைப் பொறுத்து உன் வாழ்வு அர்த்தமுள்ளதாகிறது எனப் பொன்மொழி போன்ற தொடர்களைப் பல இடங்களில்  போகன் இயல்பாகக் கையாள்கிறார். இவை எளிய வாசகர்களையும் தம் கவிதைக்குள் இழுத்துக்கொள்ள அவர் செய்யும் தந்திரமாகலாம். வேகமும் ஓட்டமுமான மொழி போகனுடையது. சுருதிபேதம் அவற்றில் இல்லை. மனம் திறந்துகொண்டே போகிறது; கேட்பதற்குச் செவிகளும் பார்ப்பதற்குக் கண்களும் இருந்தால் போதும்; போகனின் கவிதைகள் வாசக மூளைகளுக்குள் சென்று சேர்ந்து விடும். ஆனால், அவற்றின் நுட்பம், உறுமீன் தேடும் கொக்குகளுக்கே வசப்படக்கூடும்.

 

மூக்குக்கண்ணாடிகளைத் தொலைத்துவிட்டுத் தேடுவது

எனது முக்கியமான வேலைகளில் ஒன்றாக இருக்கிறது

ஒவ்வொருமுறை புனிதக்குளத்தில் மூழ்கியெழுந்தபிறகும்

நான் மிக அழுக்கான செயல் ஒன்றைச் செய்கிறேன்  (ப.74)

 

புனிதம், தீட்டு என்ற முரண் தலைகீழ்விகிதத்தில் பின்நவீனமாகப் பேசப்பட்டிருப்பதைக் கண்டுகொள்க. இது போகனிடம் செயல்படும் பார்வை விரிவுக்கான ஓர் எடுகோளாகும். பாலைவனம்தான் அது, அதற்கா ஆயிரம் பாடல்கள் எழுதினாய் நீ! (ப.45) எனப் போகன் முரணைத் தொனி மாற்றும் நுட்பமும் கவனிக்கத்தக்கதாகும்.

 

குதிரை ஓடும்போது கால்களைப் பற்றி நினைத்துக்கொள்வதில்லை

கால் உடைந்தபிறகு ஓடுவதைப் பற்றியே

நினைத்துக்கொண்டிருப்பதில் ஏதேனும் புத்திசாலித்தனம்

உள்ளதா? வெறுப்பும் நேசமும் ஒரே கூட்டில் பிறந்து

இரண்டு வெவ்வேறு திசைகளில் பறந்துசெல்கின்றன

கூடடைவது எதுவென்பது நிகழ்தகவுக் கணக்கு

எனினும் பொதுவாகவே வெறுப்பின் சிறகுகள்

அதிக பலம் கொண்டிருக்கின்றன  (ப.40)

 

இது ஒருவகையில் ஞானக்கூத்தனை நினைவூட்டுவதாகும். ஆனால், ஞானக்கூத்தனிடம் எதிர்வினையாகவே பெரிதும் உருப்பெறும் காட்சிகள், போகனிடம் எதிர்வினை தாண்டிய உட்கிரகிப்புகளாக மேலுமோர் ஆழ்ந்த தளத்திற்குச் சென்றடைவதைக் காணத் தவறக்கூடாது. இது கால மாற்றத்தின் விளைச்சலாகலாம்.

 

திண்ணை இருட்டில் எவரோ கேட்டார்

தலையை எங்கே வைப்பதாம் என்று

எவனோ ஒருவன் சொன்னான்

களவு போகாமல் கையருகே வை   (ஞானக்கூத்தன் கவிதைகள், ப.1)

 

என்று ஞானக்கூத்தன் செய்யும் பகடிக்குச் சார்த்தரின் இருத்தலியவாதம் காரணம் என்றால், பின்வருமாறு போகன் பேசுவதற்குப் பின்நவீனத் தாக்கமே காரணமெனலாம்.

 

என்னய்யா கதைக்கிறீர் இது எனது தலைதான்

நான் பிறந்ததிலிருந்து இதை வைத்திருக்கிறேன்  (ப.25)

 

ஞானக்கூத்தனிடம் செயல்படும் பகடியைப் போகன் மேலும் முன்னகர்த்தித் தன்னுரிமைக் குரலாக்கி ஒலிப்பதைக் கவனிக்கவேண்டும். இதன் வேறு வடிவங்களை, மாட்டுக்கேது ஜோலி? மாடாய் இருப்பதே மாட்டின் ஜோலி (ப.26), என்ன சொல்வாள் தமிழ்க் குமரி, கற்பென்பது களைப்படைந்த யோனியிலிருந்து சொட்டிய, ஒரு சொல் என்பதைத் தவிர? (ப.32), குதிரை தமிழ் பேசும் கிரேக்கம் பேசும் வடமொழி பேசும், மேடையேறிப் புரட்சியும் பேசும், சிப்பாய்கள் எதையும் பேசமாட்டார்கள் (ப.25) போன்ற பல தொடர்களில் காணலாம். ஆனால் போகன், ’படிமம், குறியீடு, இருண்மை, பகடி’ என்று உத்திகளையே நம்பிக் கவிதை செய்கிறவரில்லை. காட்சிகளை அவர் வரைவது, அர்த்தபுஷ்டியுடன் கூடிய ஓர் அழகியல் நோக்கிலேயே என்பதும் அறியத்தக்கதாகும்.

 

ஒரு நல்ல முழு நிலவு இரவில் பனை மரம்

தன்னை விட்டு எங்கும் போய்விடக்கூடாது என்ற

நிபந்தனையுடன் ஒரு நிழலை வரைந்தது

பனை மரங்களின் பிரார்த்தனைகளை நிலவு என்றைக்குக்

கேட்டிருக்கிறது? என்று முணுமுணுத்தது பச்சைக்கிளி  (ப.33)

 

இதை இயற்கைக்காட்சியாகக் கருதிவிட முடியாது. ஆண் – பெண் மனச் சிக்கல் சார்ந்த புதைபடிவங்களைப் போகன் ஒளித்துவைத்துப் பல கவிதைகளிலும் கண்ணாமூச்சி காட்டுகிறார் என்றே துணியவேண்டும். நடு ஆற்றில் அள்ளிய மணலைப் போல் அவ்வளவு எளிமையானது என் அன்பு என்பாரே சுகுமாரன், அந்த எளிய அன்பைத்தான் போகனும் தேடுகின்றார். ஆனால், அவரிடம் அது, சொற்களுக்குப் பின்னால் பதுங்கும்  மனப் பதற்றமாகப் பிடிமானமின்றிச் சுழன்றுகொண்டேயிருக்கிறது. இந்தச் சொற்கள் என்ன சொல்கின்றன? இது வெறும் சொல் சார்ந்ததில்லை. சொல் என்பதும் ஏமாற்று வித்தைதான். சொல்லில் அர்த்தமில்லை; அது அதன் தொனியில், அத்தொனியின் தோற்றுவாயான ஆழ்மனக் கசப்பு அல்லது களிப்பில் வேர்கொண்டிருக்கின்றது. இவ்வேர்ப் பரவலின் ஊற்றுக்கண்ணைக் காட்டியும் காட்டாமலும் பொக்கென ஓர் கணத்தே தொலைத்து விட்டுத் தேடிக்கொண்டிருக்கிறார் போகன்.

 

இந்தக் கள்ள விளையாட்டு தரும் கண்கள்

திறக்கும் புதிய சருமத் துளைகள்

வனத்தைப் புதிய மிருகங்களுக்கு அனுமதிப்பது

பழைய மிருகங்களைக் குகையில் அடைப்பது

மீன்கள் விரும்பும் தடங்களில் நீரோடைகளை அனுப்புவது

ஒரு பெரிய வீட்டைச் சிறிய வாசலுடன் கட்டத் துவங்குவது

சுற்றுச்சுவரின் மீது இரவுகளில் ஒரு பூ வைப்பது

மாற்றுச் சாவிகளுக்குச் சரியான எண் தருவது

குளித்துவாலைகளாக நம் உடல்களைப் பயன்படுத்திக்கொள்வது

மூடிகள் இல்லாத போத்தல்களைச் செய்துகொண்டே இருப்பது

மழையைப் பெய்துகொண்டே இருக்கச் சொல்வது

ஓரிரவுக்கு மட்டும் நம் உள்ளாடைகளையும் பெயர்களையும்

மாற்றிக்கொள்வது  (ப.38)

 

‘சிறிய வீடு கட்டுவாய், போ போ போ’ எனப் போகின்ற பழைய பாரதத்தைப் பாரதி சபித்தார். வந்துவிட்ட சமகாலப் புதிய பாரதத்தில், ஒரு பெரிய வீட்டைச் சிறிய வாசலுடன் கட்டுவதைப் போகன் காட்டுகின்றார் (ப.38). ’விதியே விதியே, தமிழச் சாதியை என்செயக் கருதியிருக்கின்றாயடா?’ எனச் சீறினார் பாரதி. ’என் மக்களே என் மக்களே, தீ நடக்கும் வழியிலா உறங்குவது?’ எனப் பதறுகின்றார் போகன். போகனின் தொடர்கள் பாரதியின் தாக்கத்தில் உருவானவையென்று வாதிட வரவில்லை. நான் சொல்ல வருவது வேறு. குறுந்தொகையின் முதற்பாடல், இன்னும் அர்த்தமறியப்படாத ஒரு மிகப் புதிய பாடலாயுள்ளது. போர்க்களம் சிகப்பு, வீழ்ந்துள்ள உடலெல்லாம் ரத்தச் சிகப்பு, யானைத் தந்தம் சிகப்பு, அம்பு சிகப்பு, முருகன் சிகப்பு, அவனின் வீரக்கழல் சிகப்பு, காந்தள் பூ சிகப்பு, அது குருதிப் பூவின் சிகப்பு எனச் சிகப்பை My name is red எழுதப்படுவதற்கு வெகுகாலம் முன்பே பாடிவிட்டது குறுந்தொகை. இது ஒரு பெருமரபு. இதற்குள் நீங்கள் எழுத வருகிறபோது, இதனால் நீங்கள் உள்விழுங்கப்படாமல் உங்களைக் காத்துக்கொள்வது கடினமாகும். ஏதோ ஒருவகையில் உங்கள் எழுத்துக்குள் இப்பெரு மரபின் தடயங்கள், அடையாளப்பட்டுக்கொண்டேதான் இருக்கும். இது குறையன்று; உண்மையில் இது கூட்டுமன நனவிலியின் வெளிப்பாடேயாகும்.

 

இந்தச் சிகப்பு வானத்தில் கிடையாது

இந்தச் சிகப்பு பூமியைத் தொடாது

இந்தச் சிகப்பைச் சைத்திரிகர்கள் அணுகுவதில்லை

இந்தச் சிகப்பைப் பால்வெளி அனுமதிக்காது

இந்தச் சிகப்பை உங்கள் முதல் மாதவிடாயின்போது

பார்த்திருக்கலாம்

இந்தச் சிகப்பை நீங்கள் செய்த முதல் கொலையின்போது

அறிந்திருக்கலாம்

இந்தச் சிகப்பை இந்தச் சிகப்பு என்று அறியாதவர்கள்

ஒருபோதும் இந்தச் சிகப்பைத் தொடாதீர்கள்   (ப.35)

 

இந்தச் சிகப்பைச் சுந்தர ராமசாமிபோல் கம்யூனிசப் பகடிக்காகப் போகனும் கைக்கொண்டிருக்கலாம். அப்படிச் செய்யக்கூடியவர்தான் அவர். என்றாலும், குறுந்தொகையின் நீட்சியாகவே விரியும் இக்கவிதை, வெறும் பகடியோடு அமைதியுறுவதாகத் தோன்றவில்லை. இது காதல், வன்முறை, மனச்சிதைவு, அப்பட்டம், நிறபேதம் எனப் பலவற்றையும் குறிப்பதன்றி அழிவின் ஆழ்மனக் குறியீடுமாகலாம். இதன் பொருளைக் கவிஞரேகூட விளக்கிவிட முடியாது என்பதுதான் இதன் தனித்துவமாகும். மனிதன் இறந்த பிறகு செடிகளாவான், மனிதா வனங்களை அறிய இறந்துபோ (ப.43) என்கிறார். வனங்களை அறிவது மட்டுமன்று; மனங்களை அறிவதும் போகனுக்குப் பெரும் பிரச்சனையாகத்தான் இருக்கின்றது. இன்னும் ஒருமுறைகூட அண்டைவீட்டானுடன் பேசியதில்லை (ஆத்மாநாம் படைப்புகள், ப.55) என்கிற ஆத்மாநாமின் பிரசித்தி பெற்ற நான் கவிதைக்கும், போகனின் பின்கவிதைக்குமான ஒருகுடிப்பிறப்பைக் குறிப்புணர்க.

 

இமயத்தில் திரிந்தவர் அவர்

ஆல்ப்ஸ் சிகரங்களில் சறுக்கியவர்

சைபீரியாவின் பிசாசு நிலவையும் தார் பாலைவனத்தின் இமையா

நட்சத்திரங்களையும் கண்டவர்

எனது வீடருகே இருக்கும் மெலிந்த குளத்தைக் காண்பிக்க

நாணமுற்றேன்

எனது பையில்தான் எவ்வளவு சிறிய நாணயங்கள்!  (ப.65)

 

ஆத்மாநாம் தடமிட்டுக் காட்டிய புலத்திலிருந்தே தொடங்குகின்றார் போகன் என்பது முக்கியமானதாகும். நானும் திரும்பவேண்டும், தினசரியைப்போல, ஒவ்வொரு நொடியாக, அடுத்தநாள் காலைவரை (ப.63) என்கிற ஆத்மாநாமுக்கும், திரும்பப் புரட்டப்படாத ஒரு தேதித் தாளாக உனக்கேன் இந்த அவசரம்? (ப.51) என்கிற போகனுக்குமிடையில் ஒற்றுமையும் வேற்றுமையும் இருக்கின்றன. எங்கும் தாங்கவொண்ணா விபரீதத்தைக் காண்பதில் ஒன்றுபடுகிறார்கள்; வரம்பின்மையின் வினையாடல்களைப் போகன்போல் ஆத்மாநாம் நம்புவதில்லை என்பதில் வேறுபடுகிறார்கள். ஆத்மாநாமின் கூர்ப்பரசியல், போகனிடம் கலகப் பகடியாக மட்டுமே புலப்படுகின்றது. செங்கற்கள் ஆகாத சில மண் சதுரங்கள், ரயில்களின் போக்குவரத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தன (ப.34)  என்கிறார் ஆத்மாநாம். மனிதன் மட்டுமே காலி இடங்களைக் கண்டு பயப்படுகிறான் (ப.59) என்கிறார் போகன். நீங்கள் கேலி செய்தாலும் நான் ஆத்மவாதிதான் (ப.55) எனப் போகனே அறிவித்தும் விடுகிறார். மனிதனுக்குத் தூய அடித்தளம் என்பதில்லை என அமைப்பை மறுக்கும் எதிர்ப்பாளர் அவர்.

 

அவனைச் சுமக்கமுடியாத பாலங்களை அவன்தான் செய்தான்

அவன் கால் சம்மதியாத படிகளும் அவன் வடித்ததே

அவனைச் சேர்க்காத அவன் பற்றிய காவியங்கள் அவன்

எழுதியதே அவை வெளியிடப்படும் அரங்கில் ஓரத்தில்

நின்று கடைசிவரை கை தட்டிக்கொண்டிருந்தவன்கூட

அவன்தான்

ஆனால் நிகழ்ச்சி முடிந்ததும் மேடை நோக்கி

அவன் முன்னேற முயன்றபோது விளக்குகள் ஏன்

நிறுத்தப்பட்டுவிட்டன என்பது அவனுக்குத் தெரியாது

இடைநிகழ்ந்த நெருக்கடியில் துப்பாக்கியை முழங்கியவர்

யார் என்றும் அவனுக்குத் தெரியாது

அவனுக்குத் தெரிந்ததெல்லாம் அதில் இறந்தவர் யார்

என்பது மட்டும்தான்

அது வெகு நிச்சயமாக அவன்தான் (ப.49)

 

என்கிறார் போகன். இது தீதும் நன்றும் பிறர் தர வாரா என்ற அறிவுரையில்லை. அகம் பிருமாஸ்மியின் எதிர் மரபுக் குரல்தான் இது. காண மிக எளிதாகத் தோன்றும் சிறுமியின் உள்ளங்கைக் குழிக்குள், ஒரு மழைத்துளி எதேச்சையாக வந்து சேர்வதில்லை (ப.29) என்கிறார் போகன். உங்கள் அறிவை வைத்து நீங்கள் என்ன செய்கிறீர்கள் (ப.17) என அவர்  வினவும்போது, நாம் பதிலற்றுத் திகைப்பூண்டை மிதித்தவர்களாய்த் திகைக்கிறோம்.  அனார் கவிதையில் வரும் வண்ணத்துப்பூச்சியைப்போல், போகனின் கவிதைகளுக்குள்ளும் ரயில்ப்பூச்சியும் பட்டாம்பூச்சியும் சிறகடித்துப் புகுந்துகொள்கின்றன.

 

பாவனைகளோடு கொஞ்சிய முத்தம்

கண்களாகவும்

பெயர் சொல்லி அழைத்த கணங்கள்

நிறங்களாகவும் கொண்டொரு வண்ணத்துப்பூச்சி

நினைவெல்லாம் பறந்து திரிவதை

எப்படிக் கொல்வது

எனக்குச் சொல்லித் தா  (எனக்குக் கவிதை முகம், ப.31)

 

என்கின்றார் அனார். இது ஒரு வதைக்கும் நினைவாகும். இத்தகைய சித்ரவதைகளைச் சொற்களின் வழியே படிப்பவரிடம் கடத்துவதில் போகன் கெட்டிக்காரராயினும், போகனிடம் one – one சார்ந்த எளிய பிரிவின் உணர்வுகளாக மட்டும் இவை முடங்குவதில்லை. அகச்சிக்கலின் பல்வேறு நுண்கோணங்களாகவே இவை பரிணாமமுறுகின்றன. உனது ஒவ்வொரு கால் மீதும் ஒவ்வொரு கால் வைத்து, உன்னை வளைத்து இறுக்கிக் கொள்ளும் ரயில்ப்பூச்சி நான் (ப.38) என்கிறார். உறவுப்பிறழ்வுகளை அவற்றின் அடியாழங்களுக்குள் சென்று காணும் ஒருவகைக் குறுகுறுப்பையும் அகத்தெளிவையும் ஒருசேரப் போகன் எதிரொலிக்கின்றார்.

 

கடவுளுடன் பொறுமையாக இருங்கள் உலகின் அதி

மூத்தவர் உங்களுடன் சேர்ந்துவரக் காத்திருங்கள்

பட்டாம்பூச்சிகளைப்போலத் துடிக்காதேயுங்கள்

துடிப்பவற்றின் ஆயுள்காலம் நீங்கள் அறிவீர்கள்

உங்கள் மணிக்கட்டை உற்று நோக்குங்கள்

இந்தப் பட்டாம்பூச்சி எப்படி உங்களுக்குள் புகுந்தது? (ப.42)

 

எனக் கேட்கிறார் போகன். அவர் கவிதைகளில் இடக்கு, பகடி, பண்பாட்டு மீறல், மனப் பிறழ்வு, உறவுச் சிக்கல், அந்நியமாதல், எதிலும் ஒன்ற முடியாத விலகல், கலகம், எதிர்ப்புணர்வு என்ற எல்லாம் தாண்டிச் சலிப்பூட்டும் இருப்பைச் சகித்துக்கொள்ள முடியாத ஒவ்வாமையே மேன்மேலும் தீவிரப்பட்டிருக்கின்றது. A Slice of Life என்பதாக அல்லாமல், வாழ்வின் அடித்தளத்தையே அசைக்கும் ஆதாரச் சிக்கலாக இருப்புடன் முரணும் இந்த ஒவ்வாமை, போகனிடம் கரைமீறிச் சீறும் உணர்வலையாகிறது. மனசில் கூத்தாடுகிறது சதா ஒரு கலவரம் (கல் தூங்கும் நேரம், ப.31) என்பாரே விக்கிரமாதித்யன், அத்தகைய கலவரமான மனநிலையை உண்டு உமிழ்ந்தாடும் விளையாட்டுக் கணங்களே போகனிடம் கவிதைகளாகின்றன எனலாம்.

 

எனக்குத் திடீரென்று எல்லாப் போர்களும் புரிவதுபோலத்

தோன்றுகிறது எல்லா சர்வாதிகாரிகளும்

கொடுங்கோலர்களும் எனது சகோதரர்களே என்று

தோன்றுகிறது

அவர்கள் பூமிக்கு வெளியிலிருந்து வந்தார்கள் என்று நான்

இப்போது சொல்வதில்லை

அவர்கள் என்னிடமிருந்து வந்தார்கள்

 

இது ஒரு கண்டடைதலாக இருக்கவியலாது; வாழ்வின் குமட்டலாகவே இருக்க இயலும். இது ஒரு பெரும் குருஷேத்திரம். எனக்கும் உனக்குமான போர் இதனினும் எளிதாகும். நானும் நானும் இடையறாது மோதிக் கொள்ளும் நம் நிகழ்காலத்தின் இந்த மாபெரும் போரைப் போகன் வார்த்தைப்படுத்த முனைகிறார். இதில் அவர் அடையும் வெற்றி தோல்விகள் முக்கியமல்ல; உள்ளத்தின் உருக்குலைவுகளைத் துளித்துளியாகப் பிளவுறும் சிதறல்களைக் கூடுமானவரையில் சுய ஏமாற்றல்களின்றிக் காட்ட அவர்  முனைவதே முக்கியம். பேயாய் உழலும் சிறு மனமே என்கிறார் பாரதி. பேயாய் உழல்வது சிறு மனங்கள் மட்டுமில்லை; பெரு மனங்களும் அப்படித்தான் உழல்கின்றன என்கிறார் போகன். இதுவே அவர் கவிதை புதியது என்பதற்கான தனித்துவமான அடையாளமாகும்.