செல்லம்மாளிடம் ஒரு ரேடியோ பெட்டியிருந்தது. இருபத்தினாலு மணி நேரமும் அது பாடிக்கொண்டேயிருக்கும் இப்படியும் சொல்லலாம் அது பாட்டுக்கு பாடிக்கொண்டேயிருக்கும். கைவிடப்பட்ட ஊர் அது ஊர்க்காரர்கள் எல்லாம் தோட்டங்களுக்குக் குடிபோய் மச்சு வீடுகள் கட்டிக் கொண்ட பின் ஊருக்குள் மனிதர்கள் இருக்கும் சொற்ப வீடுகளில் செல்லம்மாள் வீடும் ஒன்று. எப்போதிருந்து செல்லம்மாவிற்கு ரேடியோ கேட்கும் பழக்கம் உருவானதென்று தெரியவில்லை .
தொன்னூறுகளின் துவக்கத்தில் கிராமங்கள் தோறும் அரசு சின்னதாய் ஒரு தொலைக்காட்சி பெட்டி வைக்குமளவிற்கு அறையொன்று கட்டி பொது தொலைக்காட்சி பெட்டியொன்றை வைத்த பொழுதுத் தினம் தோறும் திருவிழாப் போல ஊரே கூடி அந்த பெட்டி முன் அமர்ந்து தொலைக்காட்சிப் பார்க்கத் துவங்கிய நாட்களில் செல்லம்மாளும் போவாள் தூர்தர்சனில் ஒன்பதரை மணி வரை ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளைப் புரிந்தும் புரியாமலும் பார்த்தபடி ஊராரோடு வாயாடிவிட்டு வருவாள்.
ஞாயிறு தோறும் ஒளிபரப்பாகும் தமிழ்படங்களைத் தவறாமல் பார்ப்பாள். சில நாட்களில் ஒரு சிலர் சொந்தமாக டிவி பெட்டி வாங்கி தமது வீடுகளிலேயே நீள நீளமான இரும்புக் குழாய்களில் ஆண்டென அமைத்து தொலைக்காட்சி பார்க்கத் துவங்கிய பின் பொதுத் தொலைக்காட்சி பார்க்க வரும் கூட்டம் குறையத் துவங்கியதும் செல்லம்மாளும் தொலைக்காட்சி அறைக்குப் போவதைக் குறைத்துக் கொண்டாள். பின்பொரு நாள் அந்த தொலைக்காட்சி பழுதடைந்தது அதை சரிசெய்ய யூனியன் ஆபிசுக்கு எடுத்துக்கொண்டு போனார்கள் .பிறகு அது திரும்ப வரவில்லை. அனேகமாக அதன் பின்பு தான் செல்லம்மாளிடம் ரேடியோ கேட்கும் பழக்கம் துவங்கியிருக்க வேண்டும். முதலில் அதை யாரும் பெரிது படுத்தவில்லை.
அவள் வீட்டைக் கடந்து போகும் எல்லாரும் ரேடியோவில் இசைந்த படியிருக்கும் பாடலைத் தாங்களும் முனுமுனுத்துக் கொண்டே சென்றார்கள். செல்லம்மாள் தனிக்கட்டையெல்லாம் இல்லை அவளுக்கொரு மகனுண்டு அரசுப்பள்ளியொன்றின் விடுதியில் தங்கிப் பனிரெண்டாம் வகுப்பு வரை பயின்றான் பின்பு ஏதேதோ வேலைகள் செய்தான் திருமணமாகிவிட்டது நல்ல வசதிகளோடு நகர்புறத்தில் வசிக்கிறான் பெரும்பாலும் அம்மாவோடு இருந்ததில்லை .அது செல்லம்மாளுக்கும் பெரும் குறையாகப் படவில்லை. காரணமும் உண்டு.
முத்துசாமி கவுண்டனின் ஒரே மகளான செல்லம்மாளுக்குக் கிழக்காளூர் ராசப்பகவுண்டன் மகனுக்கும் தான் கல்யாணம் நடந்து மிக விரைவில் வருடம் கூட முடியுமுன் கணவனை இழந்து விட்டு கைம்பெண்ணாய் முத்துசாமி கவுண்டன் வீடு வந்து சேர்ந்தாள் .ஒற்றை மகள் வாழ்வு இப்படியானதிலேயே கவுண்டன் பாடு நின்று போனது.
செல்லம்மாள் காட்டு வேலைகளுக்குச் செல்வாள். அவ்வப்போது கட்டிட வேலைகளுக்கு சித்தாளாகப் போவாள். தூரத்திலிருக்கும் ஏதோ ஒரு ஊரிலிருந்து கட்டிட மேஸ்திரியாக வந்து சேர்ந்திருந்தான் கண்ணுசாமி. அவன் அக்காவையும் பக்கத்திலிருக்கும் சிற்றூருக்குத்தான் கட்டிக் கொடுத்திருந்ததால் எளிதில் எல்லோருக்கும் பரிச்சயமானவனானான். கண்ணுசாமி மேஸ்திரியோடு சித்தாளாகப் போகத் துவங்கிய செல்லம்மாள் பின்பொரு நாள் முத்துசாமி கவுண்டனிடம் தன்னை கண்ணுசாமி திருமனம் செய்து கொள்ள விரும்புவதாகச் சொன்னாள் .அறுத்துக் கட்டுகிற வழக்கம் இல்லாத ஊருல பொறந்துட்டு இந்த நினைப்பு வெச்சிருக்காத என கறாராகச் சொல்லிவிட்டான் முத்துசாமிக்கவுண்டன்.
ஆனால் செல்லம்மாள் கண்ணுசாமியுடனேயே வசிக்கத் துவங்கி விட்டாள். அவர்கள் இருவரும் திருமனம் செய்து கொண்டார்கள் ஆனால் எங்கு செய்து கொண்டார்களென்பது தான் தெரியவில்லை வீட்டிலேயே மஞ்சக்கயிறொன்றில் மஞ்சள் ஒன்றை முடிந்து கோர்த்துக் கட்டியதாகவுமொரு கதை உண்டு. ஒராண்டுக்குள்ளாகக் கனகு பிறந்து விட்டான். பின்பு பேரனை பார்க்கும் ஆசையில் முத்துசாமிக்கவுண்டனும் மகள் வீட்டுக்கு போக வரத் துவங்கியிருந்தார்.
நிறைய கட்டிடங்களை மொத்தமாக பேசி ஆட்கள் வைத்து வேலை வாங்க துவங்கியிருந்த கண்ணுசாமி மேஸ்திரி கையில் சில்லரை சேரத்துவங்கியிருந்தது. செல்லம்மாளோடு குடும்பம் நடத்துவதால் போக்குவரத்தை நிறுத்தியிருந்த கண்ணுசாமியின் அக்காக்காரியும் தம்பி வீட்டுக்கு வரத் துவங்கியிருந்தாள். ஆனால் செல்லம்மாளோடு அவள் பேசுவதில்லை “முன்டை, முன்டைச்சி” என சாடையாகக் குத்துவதோடு சரி. அறுத்தவளோடு வாழ்பவனைச் சாதி சனத்தில் சீர், சடங்குகளுக்கு வைத்துக்கொள்ள மாட்டார்கள் முன்பு போல நீ இல்லை நாளு காசு கையில் வைத்திருக்கிறாய் உனக்கென மரியாதை வேண்டாமா? என்றும் “நாளைக்கு எம் மவ சமஞ்சா எப்படீடா மாம பொண்டாட்டீன்னு இவள மன சுத்த சொல்றது. அறுத்து கட்டுனவள சீரு செய்ய வெச்சுக்க சனம் உடுமா? மலயாட்ட பொறந்தவ இருக்குறப்போ நா அடுத்த சித்தப்ப, பெரியப்ப மவனுகள தேடுட்டா சொல்லு” என்றெல்லாம் பலவாறாகப் பேசிச் செல்லம்மாளைப் பஞ்சாயத்துப் பேசித் தாய்வீடு அனுப்ப நாள் குறித்தாள் கண்ணுசாமியின் அக்கா.
பெரிய மீசையோடு முழுக்கைச் சட்டையை முழங்கை வரை மடித்து விட்டுக்கொண்டு ஆறடி உயரத்தில் ஆஜானுபாகுவாய் வீட்டுக்கு நான்கு பெரிய மனிதர்கள் போலத் தோற்றம் கொண்டவர்களோடு வந்து நின்ற கண்ணுசாமியின் அக்காள் கணவனை என்ன உறவு சொல்லி அழைப்பது என தயங்கி நின்ற போதே கிழவன் முத்துசாமிக்கவுண்டனும் ஆள் விட்டு அழைத்து வரப்பட்டிருந்தான். செல்லம்மாளுக்கு விசயம் விளங்கிய பொழுது அழத்தான் முடிந்தது. கண்ணுசாமி அக்காளுக்கு பின்னால் கோழி திருடுகையில் அகப்பட்டவன் போல் விழித்துக் கொண்டு நின்றான். கொஞ்சம் பணம் தருவதாகச் சொன்னபொழுது காறித்துப்பிவிட்டு வந்துவிட்டாள் மகனோடு செல்லம்மா. மகன் பெரிதாகிவிட்டால் எப்படியும் சொத்தில் பங்கெடுத்து விடுவாள் என சிலர் பேசிக்கொண்டது முத்துச்சாமிக் கிழவன் காதுகளில் விழுந்தது. கிழவனுக்கும் கொஞ்சம் கணக்குகள் தெரிந்திருந்தது “செல்லம்மா உனக்கு இருப்பே உம் மவந்தே அந்த மொரடன் மணியே(கண்ணுசாமி அக்கா புருசன்) இந்த பய்யன என்ன செய்யவும் அஞ்ச மாட்டே நானிவன எட்ட பள்ளிக்கூடஞ் சேத்தீர்ற ” என ஐந்தாம் வகுப்பிலேயே ஒரு தூரத்து உண்டு உறைவிட பள்ளியில் சேரத்து விடப்பட்டான் கனகு செல்லம்மாளின் மகன். கண்ணுசாமிக்கு மீண்டுமொரு கல்யாணம் நடந்தது. கண்ணுசாமியின் முதல் திருமனத்தைப் பற்றி எல்லாமே கேள்விப்பட்டிருந்தவளாகவே அவள் இருந்தால். பின்னாளில் கண்ணுசாமி வாங்கிய எல்லா சொத்தும் அவள் பெயரிலேயே பத்திரம் பதியப்பட்டதால் கண்ணுசாமியின் சொத்துக்கு உரிமை கொண்டாடும் வேலையெல்லாம் கனகுக்கு வைக்காமலே செய்துவிட்டாள் கண்ணுசாமியின் இரண்டாம் மனைவி சரஸ்வதி.
பனிரெண்டாம் வகுப்பு முடித்திருந்த கனகு மேற்கொண்டு படிக்க வீட்டில் வசதியில்லை என்பதை அறிந்திருந்தான். செட்டூரில் ஒரு மோட்டார் ரீவைண்டிங் கடையில் வேலைக்கு போனான். முத்துசாமியும் ஒருநாள் செத்துப் போனான். ஆனால் கனகின் இருப்பால் கவலைகளை வேகமாக மறக்கக் கற்றுக்கொண்டாள் செல்லம்மாள். கனகு பக்கத்து ஊரில் ஒரு பெண்ணோடு பழக்கம் வைத்திருப்பதாக தகவல் வந்தது. அதைப்பற்றி கேட்ட பொழுது அவன் சொன்னான் “அம்மா பழக்கம்னெல்லாம் சொல்லக்கூடாது தப்பு அது பேரு லவ்” .” என்னடா பேரிது எலவ் கருமாதினுட்டு ச்சை ” என சலித்தாள் செல்லம்மாள். அந்த பெண் பண்டாரத்து வீட்டுப் பெண் எனவும் அவள் தந்தை கனகை கண்டித்துப் பார்த்து முடியாததால் அரண்மனைத் தோட்டம் பழனிமுத்துக் கவுண்டரிடம் புகார் செய்து விட்டதாகவும் கனகை ஆள் விட்டு அழைத்துச் சென்றார்கள். பதறிப்போனாள் செல்லம்மாள் “ஏன்டா இந்த வேலையெல்லாம் உனக்கு” என அழுதாள் .பண்டாரம் தன் மகளை நல்ல இடமாய் பார்த்து கல்யாணம் கட்டி கொடுக்கிறவரை கனகு அரண்மனையை விட்டு வெளியே எங்கும் போகக்கூடாது என அங்கேயே தங்க வைத்து விட்டார்கள்.
ஆனால் அந்த பெண்ணுக்கு குழந்தையெல்லாம் பிறந்த பிறகும் கூட அவன் அரண்மனைத் தோட்டத்தை விட்டு வெளியே வரவில்லை. உள்ளே ஒரு கட்டத்தில் சகலமும் கனகு தான் என்றாகிப்போனது. நான்கு ஆண்டுகளில் பெரிய ரியல் எஸ்டேட் முதலாளியாகிப் போனான் கனகு, அரண்மனையாரின் பினாமி என்றார்கள் எல்லோரும் ஆனால் வெளியில் சத்தம் வரவில்லை. காரில் தான் செல்லம்மாளைப் பார்க்க வருவான் “வேண்டாம்டா கனகு பெரியெடத்து சாவுகாசமெல்லா நம்மூட்டோட இருந்துக்கடா அவியலுக்கெல்லா போட்டி பொறாம சாஸ்தி” என புலம்புவாள். “அம்மா எனக்கு அரமனையாரே பொண்ணு பாத்திருக்காங்க அவிய சொந்தத்துலயே நாமளும் நாளைக்கி போயிப் பாக்கலா வா” என்றான் .தன் மகனுக்காகவும் அவன் வாழ்க்கைக்காகவும் கூட யோசிக்க ஆட்கள் இருக்கிறார்கள் என்ற எண்ணம் செல்லமாளுக்கு நிறைவை தந்தது. அவன் கல்யாண வேலைகளிலெல்லாம் சந்தோசமாகப் பங்கெடுத்துக் கொண்டாள். தகப்பனின் இடத்துக்குக் கண்ணுசாமியே வந்திருந்து எல்லாம் செய்தான் என்ன செய்வது அரண்மனைச் சொல். ஆனால் செல்லம்மாள் கண்ணுசாமியின் மூஞ்சியைக் கூடப் பார்க்கவில்லை கனகு இது பற்றி கேட்டபொழுது “துப்புன தம்பலத்த எடுத்துப் போடுவாங்களா எனச் சொல்லிவிட்டாள். கனகின் அழைப்பை ஏற்று கனகோடு வசிக்க கிளம்பியவளுக்குப் போன மூன்றாம் நாளே தனது இருப்பு மருமகளால் ரசிக்கப்படவில்லை என புரிந்து கொண்டு எந்த சர்ச்சையுமின்றி தனக்கு இந்த இடம் ஒத்துவரவில்லை என சொல்லிவிட்டு தன் ஊருக்கே வந்துவிட்டாள். அவனும் “ஆமா அம்மா எப்பவுமே அந்த ஊரப் பிறிஞ்சு இருந்ததேயில்ல ” என அனுப்பி வைத்தான். அவ்வப்போது பாடிய ரேடியோ அதன் பிறகே இருபத்தி நாலு மணி நேரமும் பாடத் துவங்கியது .பொதுவாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் புரிந்து கொள்வதிலும் நாடகங்களின் கோர்வையை ஞாபகம் வைத்துக்கொள்வதில் அவளுக்கிருந்த சிரமமுமே ரேடியோ கேட்கத் தூண்டியிருக்க வேண்டும். ஆனாலும் எந்தநேரமும் ரேடியோப் பாடிக்கொண்டே இருந்தது .ஒரு கட்டத்தில் அவளது கேட்கும் திறன் குறைந்து போனது. கனகு வரும் பொழுது மட்டும் என்ன சொன்னாலும் சிரித்தாள். மற்றவர்கள் என்ன பேசினாலும் முறைத்தாள் அல்லது அர்த்தமின்றி பார்த்து விட்டு உதடு பிதுக்கிச் சென்றாள். கனகு மாத மாதம் செலவுக்கு பணம் தந்து கொண்டிருந்தான். யாராவது கூப்பிட்டால் தலையை உயர்த்திப் பார்ப்பதோடு சரி. மற்றபடி தொடர்ந்து ஒலிக்கும் அந்த ரேடியோ தான் அவள் இருப்பை உணர்த்திக் கொண்டே இருந்தது. நெல்கோ கம்பெனியின் பழைய ரேடியோ பண்பலை ஒலிபரப்பிற்கான போர்டு மட்டும் வைக்கப்பட்டு எந்த நேரமும் இசை வெள்ளமாக வழிய விட்டு கொண்டிருந்தது.
ஆனால் கிட்டப்ப நாயக்கனுக்கு அப்படியில்லை “இதென்னடா எந்நேரமும் சும்மா ரவரவன்னு இந்த செவுடிக்குக் காதும் கேக்கிறதில்லை ஒரு எழவுமு கேக்கிறதில்லை ஆனா எந்நேரமும் பாட்டு பாட்டுன்னு போட்டு உசுர எடுக்குறா ஊரானூட்டுல ஒரு நாய நடத்த பேசுறதுக்குண்டா” என புலுங்கிப் புலம்புவான். கிட்டப்பனின் மகள் பிரசவ வேதனையில் துடித்த அன்று செல்லம்மாளின் ரேடியோ ” நான் ஏரிக்கரை மேலிருந்து எட்டுத்திசை பார்த்திருந்து ஏந்திலைக்குக் காத்திருந்தேன் காணலை” என பாடியபோது கிட்டப்பனின் கோபம் எல்லை மீறி “லேய் செவுடி ரேடியோவை நிறுத்துறியா இல்லையா?” என கேட்டுப் பயங்கரச் சத்தம் போட்டான். ஆனால் செல்லம்மாள் அவன் எதற்காக கத்துகிறான் என புரியாதவளைப் போல வெறித்துப் பார்த்தாள். அதற்குள்ளாகக் கிட்டப்பனின் மனைவியும் மகனும் பிடித்து இழுத்துச் சென்றுவிட்டார்கள். கிட்டப்பன் மகளுக்குக் குழந்தை பிறந்த பிறகு வீட்டிற்கு அழைத்து வந்த அன்று குழந்தை அழுது கொண்டேயிருந்தது. கிட்டப்பனோ குழந்தை தூங்காமல் அழுவதற்குச் செல்லம்மாவின் ரேடியோ தான் காரணம் என நம்பினான். அன்று மதியம் சற்று முன்னரே வேலை முடிந்து வந்த கிட்டப்பன் ஒரு முடிவோடு செல்லம்மாளின் வீட்டை எட்டிப்பார்த்தான் செல்லம்மாள் பின்புறத்தில் துனி துவைக்கும் சத்தம் கேட்டது. ரேடியோ பெட்டி பாடிக்கொண்டே இருந்தது ஒரு பெரிய கல்லை எடுத்த கிட்டப்பன் செல்லம்மாள் வீட்டின் கதவை திறந்து நிலவுகாலருகே நின்று குறி பார்த்து ரேடியோவை ஒரே அடி அடித்து விட்டு ஓடி வந்து விட்டான். குறி தவறாத அடி ரேடியோ உடைந்து போகப் பாட்டுச் சத்தம் நின்று போனது. அன்று இரவு ரேடியோப் பாடவில்லை. கிட்டப்பனின் பேரன் அழுகாமல் தூங்கினான். மறுநாள் காலை கிட்டப்பனின் மனைவி தான் அந்த மாற்றத்தை உணர்ந்தாள். செல்லம்மாளின் வீட்டு கதவு திறந்தே கிடந்தது. செல்லம்மாள் ரேடியோ பெட்டியை மடியில் வைத்தபடி சுவற்றில் முதுகு சாய்த்து காலை நீட்டி அமர்ந்திருந்தாள். ” என்ன இந்த செவுடி ஊட்ல பாட்டும் பாடல கதவ நீக்கி வைத்து அப்படியே ரேடியோவப் புடிச்சுக்கிட்டுச் சாஞ்சிருக்கிறா ” என்ற போது தான் கிட்டப்பனுக்கு ஏதோ உறுத்தியது “வா போய் பாக்கலாம்” என மனைவியையும் அழைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தான். கிட்டப்பனின் மனைவி செல்லம்மாவை ” செல்லம்மக்கோவ்” என தொடவும் அப்படியே சரிந்தாள் .”அய்யோ” என அவள் கதறவும் கிட்டப்பனுக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை ” என்னாச்சு லேய்” என அவன் மனைவியை கேட்கவும்” “அய்யோ போயிருச்சாட்ட இருக்குதுங்க” என கதறினாள்.. கைகால்கள் நடுங்க வெளியே ஓடிய கிட்டப்பன் பெரிய பண்ணையக்காரர் வீட்டிற்கு ஓடிப்போய் போன் செய்து கனகிற்கு சேதி சொன்னான். அன்று இரவிற்குள்ளாகக் காரியமெல்லாம் முடிந்தது. கனகும் அவன் மனைவியும் அங்கு தூங்க வசதியில்லை எனவே இரவு வீட்டிற்குச் சென்று விட்டு காலையில் வருவதாகக் கிளம்பி விட்டார்கள். கிட்டப்பனுக்குத் தான் அதன் பிறகு தூக்கமே வரவில்லை.