#”உன்னோட மூக்குத்தி அம்சமாய், மங்களமாய் இருக்கு பாட்டி”

Side View Of An Old Indian Woman With Earrings And Nose Pi… | Flickr“மூனு பொறந்தும் தங்கல, பொறந்து, பொறந்து போய் சேந்துடுச்சாம், நாலாவதா நானு!, அதனால, மூக்குக் குத்துறதாய் வேண்டுதல் வெச்சாளாம் அம்மா”

“குப்புலட்சுமீனு உனக்குப் பெயர் வச்சதுக்கும் சாமியே காரணமா?”

“ஆணாய் இருந்தாக் குப்புசாமி, பொண்ணுனா குப்புலட்சுமினு வையுனு பூசாரி சொன்னாராம்”

“உங்கம்மா பெத்துக்கிற மிசினா?, முன்னால மூணு, பின்னால ரெண்டு, உன்னைச் சேர்த்தி அரை டஜன், இப்பொ, ஒன்னு ரெண்டுக்கே ஒடம்பு ஈர்குச்சி ஆயிடுது”

“எனக்கும் முதல்ல ரெண்டு தங்கலை, அப்புறம் உன் அப்பா, பிற்பாடு உன் சித்தப்பன்”

“அடி ஆத்தி மொத்தம் நாலு!, எங்கம்மா மட்டும் ஏன் என்னோடவே நிறுத்தீட்டாங்க?”

“பையன் வேணும்னு நானும் எவ்வளவோ சொன்னேன். ஒன்னையே ஒழுக்கமாய் காப்பாத்துனாப் போதும்னு உன் அப்பன் மறுத்துட்டான்”

பேத்தி பவித்ரா பாட்டியிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தாள். அவளும் சளைக்காமல் பதில் சொல்லிக் கொண்டிருந்தாள்.

“மூக்கு மேலக் கெத்தாக் குந்தி இருக்கிற மூக்குத்தியை இப்பொ யாரும் போடுறதில்லையா?”

“நம்ம சண்முகத்தோட பையனுக்குக் குத்துனாங்க, அவன் ஆளாகியும் சிறுசாப் போட்டுட்டுத் திரியறான்”

“அவர் எங்கே இருக்கார், என்ன செய்யுறார், நமக்கு உறவா?”

“மூக்குத்தி மனோன்னு கூப்பிடுவாங்க. சும்மா மனோகரன்னா யாருக்கும் தெரியாது. நமக்கு நெருங்குன சொந்தம்”

பவித்ரா பி. ஈ. முடித்திருந்தாள். அப்பா அம்மாவோடு நகரத்தில் வசிக்கிறாள். இருவருமே வேலை பார்த்தனர்.

வளாகத் தேர்வில் எதிர்பார்த்த வாய்ப்பு அமையவில்லை, கம்பெனிகளுக்கு அப்ளிகேசன் போட்டுக் காத்திருக்கிறாள்.

யூனியனில் பணியாற்றும் சித்தப்பா கதிரேசன் சொந்த ஊரில் பாட்டியோடு வசிக்கிறார், அவருக்கு ஒரே மகன் பள்ளியில் படிக்கிறான்.

பவித்ராவின் அப்பா அழகுமுத்து தனது பங்குப் பூமியையும் தம்பியிடமே விட்டிருந்தார். அவரால், அரசு வேலையோடு அதிக ஏக்கர் வெள்ளாமை செய்ய முடியவில்லை.

அதனால் வேறு ஒருவருக்குக் குத்தகைக்கு விடச் சொல்லி விட்டார். அழகுமுத்து பால்யத்தில் இருந்தே பட்டணத்தில் செட்டில் ஆகி விட்டார்.

சின்ன வயதில் பவித்ரா அடிக்கடி சொந்த ஊருக்கு வருவதுண்டு. படிப்பில் பிசியாகி விட்டதால் சில வருடங்களாக எப்போதாவது மட்டுமே!

இந்த முறை அவசரமாய் திரும்ப வேண்டிய அவசரமில்லை. வேலைக்கான மெயில் வரும் வரை ஹாயாகப் பாட்டியோடு காலத்தை ஓட்டும் முடிவுடன் வந்திருந்தாள்.

“பாட்டியும் பேத்தியும் பேசுனது போதும் சாப்பிட வாங்க”

“வர்ரோம் சித்தி”

கதிரேசனின் மனைவி ராசாத்தியின் சத்தம் கேட்டு எழுந்து சென்றனர்.

#’நந்தியம் பெருமான் பாதம்

நகைமலர் முடி மேல் வைப்போம்!’

Srirangam Temple Pooja Gallery & Photos | Sriranga Pankajamஉள்ளுர் சிவன் கோவிலில் பிரதோச அபிசேகம் களை கட்டி இருந்தது. முன் பீடத்தில் மேற்கு முகமாகக் கருவறை நோக்கி நந்தீஸ்வரர் தியானத்தில் திளைத்திருந்தார்.

பக்தர்கள் கூட்டத்தில் பவித்ரா, சித்தி, பாட்டியோடு உட்கார்ந்திருந்தாள்.

அவளுடைய பார்வை அபிசேகப் பொருட்களை எடுத்துக் கொடுத்துக் கைங்கரியத்தில் ஈடுபட்டு இருந்தவனுக்குள் பதிந்து இருந்தது.

மஞ்சள் பொடியில் குங்குமம் தூவிய தேகம், அருகம்புல்லை நறுக்கிக் கருப்பட்டிக் கரைசலில் ஊற வைத்த தலை முடி, உடைத்த வாதானிப் பருப்புப் பற்கள், திரண்ட வில்வப் பழத்தை வெண்ணெயில் தோய்த்த கன்னங்கள்,

இவைகளை எல்லாம் தாண்டி, குட்டி நாதஸ்வரத்தை ஒட்டியதைப் போன்ற மூக்கின் மேல், நளினம் காட்டிக் கொண்டிருந்த சின்ன மூக்குத்தி சிலிர்ப்பாய் சிரிப்பது அவளுக்கு மட்டுமே தெரிந்தது.

அது அசைகிற வழிகளில் அவள் நினைவுகள் நகர்ந்தது.

“எழுந்திரு, பூஜை ஆகுது, நல்லாக் கும்புட்டுக்கோ”

பாட்டி சொன்னதைக் கேட்டும் கேட்காமல் மூக்குத்தியுடனே பயணித்தாள்.

வரிசையாக அமர வைத்து, வாழை இலைக் கிழிசலில் பிரசாதம் கொடுத்தனர். வாளியைத் தூக்கிச் சர்க்கரைப் பொங்கலைக் கரண்டியில் கவிழ்த்துக் கொண்டே வந்தான்.

பவித்ராவை உற்றுப் பார்த்து விட்டு நகர்வதைப் போல் அவளுக்குத் தோன்றியது.

பாட்டியை லேசாகக் கிள்ளினாள்.

“இது…”

“நான் சொன்ன மனோ, ஊருல ஒன்னுனா ஓடி வந்து முன்னால நிப்பான்”

“மெதுவாப் பேசு”

வழிபாடு முடிந்து வீட்டுக்கு வந்தும் அவனுடைய நினைவை அவளால் விலக்க முடியவில்லை.

#சித்தியிடம் விசாரித்தாள்,

“மனோகர், எஞ்சினியரிங் படிச்சிருக்கான். ஆனா, அப்பனுக்கு ஒத்தாசையாய் விவசாயத்துல இறங்கிட்டான். டிராக்டர் இருக்கு. நம்ம நிலத்தைக் கூட அவன் தான் உழுது கொடுப்பான். நாளைக்கு வருவான்”

“நமக்கு உறவா?”

“மாமன், மச்சான், முறையாகுது, இதை எதுக்குக் கேட்கிறே?”

“நம்ம சொந்த பந்தத்தை தெருஞ்சுக்கலாமேனு!”

“அடிக்கடி ஊருக்கு வந்தாத் தெரியும், டவுனே கதீன்னு கிடந்தா எப்படி?”

மறுநாளுக்காக ஆர்வமாய் காத்திருந்தாள்.

வீட்டை ஒட்டியே தோட்டம் இருந்தது. உழவுக்காகக் காலையிலேயே டிராக்டர் வந்தது.

“வா மனோ, காபி குடிச்சுட்டுப் போய் ஓட்டுவே”

உள்ளே வந்தான். பவித்ராவைப் பார்த்தான்.

“பெரிய மாமா பொண்ணு தானே?”

“ஆமாம், உனக்குத் தெரியுமா?”

“சின்ன வயசில பாத்தது அத்தை! எவ்வளவு ஒசரம் வளந்திடுச்சு. என்ன பண்ணுது?”

“பேசீட்டிரு, நான் காபி போட்டு வர்ரேன்”

ராசாத்தி சமையலறைக்கு நகர்ந்தாள்.

“ஹாய், என்ன படிச்சிருக்கீங்க”

“பி. இ. கம்ப்யூட்டர் சயின்ஸ், நீங்க?”

“மெக்கானிகல்”

படித்த கல்லூரியைப் பற்றியும், பொதுவான விசயங்களையும், பரஸ்பரம் பேசிக் கொண்டனர்.

அவன் எழுந்து மறுபடியும் டிராக்டருக்குப் போகும் வரை பக்கத்திலேயே இருந்தாள். மறக்காமல், போன் நெம்பரை வாங்கிக் கொண்டாள்.

“இவ்வளவு படிச்சுட்டும், விவசாயத்தில் இறங்கிச் சொந்த ஊர்லய வாழுறது கிரேட்”

“நகரத்தில் எப்படிக் காலத்தை ஓட்டுறீங்களோ?, இயற்கைக் காத்து, உற்றார் உறவினர் னு கிராமத்துல வாழுறதே தனி சுகம்!”

“உண்மை சித்தி!, ச்சூ, எங்களுக்கு அதுக்கான கொடுப்பிணை இல்லாமப் போயிடுச்சு”

“உனக்குனு போதும்ங்கிற அளவுக்கு நிலம் இருக்கு, ஒரே பொண்ணு, நீயெல்லாம் இந்த ஊர்ல இருந்திருந்தா எவ்வளவு சந்தோசமாய் இருந்திருப்பே தெரியுமா?”

கதிரேசன் ஆபீஸ் கிளம்ப ரெடியாக வந்தார்.

“பவி!, உங்கப்பா, அம்மாவை வரச் சொன்னேன், லீவ் இல்லையாம், நாளன்னிக்கு முனியப்பசாமிக்கு சேவல் அறுக்கனும்”

“அவனுக்கு ஊரோ, நாமோ, முக்கியமில்லைனு வேலையக் கட்டிப் புடிச்சுட்டுக் கிடக்கிறான். இங்கெ இருக்கிறவங்க நல்லாப் பொழைக்கிலையா?”

பாட்டி மூத்த மகனைக் கரித்துக் கொட்டினாள்.

Sri Muniyappa Swamy Temple in Dindigul - Best Temples in Dindigul - Justdial#முனியப்பசாமி கிடா மீசையோடு பெரிய உருமாலை கட்டி இருந்தார். கையில் வீச்சறிவாள் வைத்திருந்தார்.

“கச்சை வரிஞ்சு கட்டிக்

கருங்கச்சை சுங்கமிட்டுச்

சாட்டை கையிலெடுத்து

சாரக் குதிரை ஏறி

வேட்டைக்கு வந்தாரு

முனியப்ப சாமி!

வேணும் வரந்தருவாரு

முனியப்பசாமி!”

மரளாடி வெண்கலச் சிலம்பை ஆட்டிப் பாடிக் கொண்டு இருந்தார்.

“பவி, இங்கே வாம்மா!, இந்தச் சேவலைப் பிடி, தீர்த்தம் போடட்டும்”

கதிரேசனிடம் இருந்த சேவலை பவித்ரா வாங்கிக் கொண்டாள்.

“அடுத்த வருசத்துக்குள்ளே கழுத்துல முடிச்சு விழனும்னுக் கும்புட்டுப் புடி”

“கம்முனு கெட பாட்டி”

கூத்தும், கும்மாளமுமாய் நேரம் நகர்ந்தது. சித்தப்பாவின் பையனோடு ஆலயத்தைச் சுற்றி வந்தாள்.

கற்களைக் கூட்டிப் பெண்கள் பொங்கல் வைத்துக் கொண்டிருந்தனர். ஆண்கள் சேவல்களை நறுக்கிக் கறியைப் பாத்திரத்தில் போட்டனர்.

“வாட்ஸப்ல கலக்குறீங்க”

குரல் கேட்டுத் திரும்பினாள்.

மனோ நின்றிருந்தான்.

“அக்கா, அப்பா கறி வெட்றதைப் பாக்கிறேன், நீ வா”

சொல்லி விட்டுச் சித்தப்பா பையன் சிட்டாய் மறைந்தான்.

“இயற்கைக் காட்சிகள்னாப் பிடிக்கும் அதைப் படம் புடிச்சுப் போட்டிருந்தேன். நல்லாருந்துச்சா!”

“சூப்பர்! நீங்க அனுப்பிச்ச, அப்பத்தாவோட மூக்குத்தியை ஜீம் பண்ணிப் போட்டிருந்த படத்தை என் பேஸ்புக் பேஜ்ல போட்டேன். ஆயிரத்தக் கடந்து லைக்ஸ அள்ளீடுச்சு”

“அப்படியா!, எனக்கு முகநூல் கணக்குக் கிடையாது”

“சரி, வாங்க என் குடும்பத்தை அறிமுகப் படுத்துறேன்”

அவனுடைய அப்பா இறகு பிடுங்கிய சேவலை மஞ்சள் பூசி நெருப்புக்குப் பக்கத்தில் இருந்தார்.

கொதிக்கும் உலையில் அரிசியைக் கொட்டிய அம்மா ஆச்சரியமாய் பவித்ராவைப் பார்த்தாள்.

“அக்கா, பாட்டி கூப்பிடுது” பையன் வரும் வரை மனோவின் குடும்பத்தோடு இருந்தாள்.

“இரும்மா, சாப்பிட்டுட்டுப் போகலாம்”

“சித்தியும், பாட்டியும் தேடுவாங்க, இன்னொரு நாள் உங்க வீட்டுக்கு வர்ரேன்”

“கண்டிப்பா வரனும்”

“சரீங்க அத்தை!”

உறவு சொல்லும் அளவுக்கு அவர்களோடு ஒன்றி இருந்தாள்.

#”மனோ எங்கே இருக்கே?”

“மாட்டுக்குத் தீனி போடக் கட்டுத்தறிலே, காலையில் தானே பாத்துட்டு வந்தேன்”

Beautiful View of Kaveri River Distributing To Different Villages through  Small Dam Opening a Gate Near Village Thuruganur Stock Photo - Image of  mandya, basic: 229884900“நீ இல்லாமப் போரடிக்குது, கம்மாக்கரைப் பக்கம் வா, பேசீட்டு இருக்கலாம்”

“பாட்டி எங்கே?”

“அதுவோட நொனநொனப்பைத் தாங்க முடியலை, நீ வா!, உங்கிட்டே ஒரு முக்கியமான விசயம் பேசனும்”

பவித்ரா ஒரு முடிவுக்கு வந்திருந்தாள். இந்த மண்ணோடும், மக்களோடும், வாழ்வதே மகிழ்ச்சியானது.

கணிணிக்கு முன்னால் காலத்தை ஓட்டி இயந்திரமாய் கிடப்பதை விட, களத்து மேட்டில் இயற்கையோடு இயைந்து கிடப்பதே அலாதி இன்பம்!,

கம்மாக்கரையை நோக்கி நடந்தாள்.

முன்னால் துளியூண்டு பட்டு இறக்கை மின்னப் பூச்சி ஒன்று விர்ரென்று பறந்தது. அவள் உள்ளத்துக்குள் அது ஊடுறுவி விட்டது போல் பரவசம் அடைந்தாள்.

காக்க வைக்காமல் வந்து சேர்ந்தான் மனோகர்,

“இன்னிக்கு என் பேஜ்ல நீ எடுத்த போட்டோவைப் போட்டேன் லைக்காக் கொட்டுது.”

“அதிருக்கட்டும் மனோ, விவசாயத்தைப் பத்தி என்ன நினைக்கிறே?”

“நினைக்க என்ன இருக்கு?, இப்பொவோ, அப்பொவோ அப்பாயிண்மெண்ட் வந்தா ஓடிட வேண்டியது தான்”

“என்ன சொல்றே?”

“பின்ன இந்தக் காட்டையும், கழனியையும் கட்டிப் புடிச்சுட்டா கிடக்க முடியும்?, சிட்டியில், சீட்டுக்கட்டு அடுக்கிய மாதிரி கட்டி வச்சப் பில்டிங்ல, கோட்டு சூட்டோட நீட்டா வாழுறதுக்காகத் தானே படிச்சிருக்கேன். அதை விட்டுட்டு இந்தப் புழுதியில புரள முடியுமா?”

“வேலை கிடைச்சா ஓடிடுவியா?”

“கண்டிப்பா, அப்புறம் விசேசம், காரியம்னா மட்டும் இங்கே வந்துட்டுப் போகனும், மத்தபடி வில்லேஜ் நமக்கு செட் ஆகாது, இங்கிருந்தா எவனும் பொண்ணே தர மாட்டான், கடலளவு நெனப்போடுக் காத்துட்டுக் கிடக்கிறேன். என்னவோ முக்கியமான விசயம்னயே என்ன?”

“அதுவா?, நீ ரொம்ப அறிவாளின்னு சொல்லலாம்னு கூப்பிட்டேன்”

சம்பிரதாயத்துக்குச் சில வரிகள் பேசி விட்டு விடு விடு வெனக் கிளம்பி வீட்டுக்கு வந்தாள்.

வாசல் திண்ணையில் பாட்டி இருந்தாள். பக்கத்தில் சென்றாள்.

“ஏன்டி, என் மூக்கை அப்புடி உத்துப் பாக்கிறே!,”

பவித்ரா முகத்தில் அறைந்தாற் போல் சொன்னாள்.

“இதைக் கழட்டிடு!, எனக்கு மூக்குத்தியைப் புடிக்கலே!

……………( முற்றும்) ……………….