- றாமானந்த சித்தர் தன் மீசையைத் தாழ்த்தினார்!
தேசம் ஒரு மோசமான சூழலில் வீழ்ந்துவிட்டது. அது கண்டது ஒரு கொள்ளை நோய். அதுவும், வற்றாத திரவ மல போக்கினைவிடவும் ஒரு கொடு நோய் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். ஒருத்தரின் மூச்சை, இன்னொருத்தர் வாங்கிவிட்டால் கூட செத்துப் போய் விடுவோம் என்று வைத்தியர்கள் சொல்லி விட்டார்கள். அப்படிச் சொன்னதும் அது போன்றதொரு நோயைக் கண்டு பிடித்தவன் சர்வ நிச்சயமாய் ஒரு பாரத் வாசியாகத்தான் இருக்கும் என்று நினைத்துக் கொண்டார் றாமானந்தர். ஒருத்தரை ஒருத்தர் தொடக்கூடாத பழக்கங்கள் அவருடைய குடிகளுக்கு ஏற்கனவே நன்கு பரிட்சையமாகி இருந்தது என்பதை இனியும் யாருக்கும் புதிதாகச் சொல்லி தெரிய வேண்டிய அவசியம் இல்லை என்றே எண்ணுகிறேன். அதுபோகட்டும். ஆனால், றாமானந்தருக்குத் தன் இஷ்ட பந்துகளைக் கூட தீண்டாமல் ஒதுங்கியே இருப்பதே உத்தமம் என்று சொன்னதும்தான் ரொம்பவும் தர்ம சங்கடமாய்ப் போயிற்று.
யாரையும் தீண்டாமல் இருந்துவிடலாம், ஆனால், தன் தர்ம பத்தினியை எப்படி தீண்டாமல் இருக்க முடியும். தான் கல்யாணம் பண்ணிக் கொண்டு வந்த நாளிலிருந்து இன்று வரை, அந்தம்மாளை ஏதோ பூரிக்குத் தேவையான மைதா மாவினைப் பிசைவதைப் போல நாளுக்கு இரண்டொரு நாழி ஆச்சும் பிசைந்தால்தான் சித்தருக்குத் தூக்கம் வரும். அப்படியே அது பழகிவிட்டமை அன்னாருக்கு உவப்பாகவே இருந்தாலும், அந்தம்மாளுக்கு என்னவோ எரிச்சலைத் தவிர வேறெந்த போதுமான சந்தோஷத்தையும் தரவில்லை.
தன் திருக்கரம் படாமல் தன் தர்ம பத்தினி எப்படி இனி ஒவ்வொரு க்ஷணமும் உயிர்த்திருப்பாள் என்று பலவாறாக யோசித்து வேதனையுற்ற சித்தர் பெருமான், நைஸாகச் சென்று இப்படி பேசலானார். மங்கையே!.. நான் சொல்வதைக் கேட்டு உனக்கு ஜீரணிக்க இயலாமல் போகலாம். ஆனால், இதனை நம் இருவருடைய பிராணனை போஸிக்க வேண்டிய காரணத்தின் பொருட்டே, அதுவும் கனத்த மனதுடனேயே தெரியப்படுத்துகிறேன். இனி, இந்தக் கொள்ளை காலத்தில் நம்மால் சம்போகம் அனுபவிக்கலாகாது! எனவே, நீ வாதையுறாதே! பசலையுறாதே! கண்ணே.. நான் உன்னை கனிவோடு என் மனதில் ஏந்துவேன்!
பெருமாட்டிக்கு, இதைக் கேட்டதும் உற்சாகம் தாளவில்லை (ஆனால், அதை வெளியே காட்டக் கூடாது என்பது பண்டை நூல் விதி என்பதால், அவளும் காட்டிக் கொள்ளாமல்) இப்படிச் சொன்னாள்.. தேவனே.. தினமும் ஐந்து நிமிடம் செய்யும் கைங்கரியம்தானே.. அதைச் செய்யாமல் இருந்தால்தான் என்ன கெட்டுப்போய்விடப் போகிறது!?
- சர்க்காருக்கே கொடை அளித்த சரித்திர நாயகன்!
சித்தரின் தேசத்தில் ஒரு கொடிய கொள்ளை நோய் ஒன்று பரவி வந்தது என்பதை ஏற்கனவே சொல்லி இருக்கிறேன் அல்லவா? அந்த நிலைமை இன்னும் மோசமாகிவிடவே, நாட்டின் நிதி நெருக்கடியும் மோசமாகிக் கொண்டே போனது. முதல் மந்திரி எனப்படும் நாட்டின் சர்காரதிபதி நாட்டு மக்கள் முன் தோன்றி இங்ஙனம் உரைக்கலனார்: உங்களாலான உதவியை செய்யுங்கள்!
றாமானந்த சித்தரின் தேசத்தில் ஏற்கனவே ஒரு சர்காரதிபதி அதேபோல கொடை கேட்டு, அதைத் தின்று கொட்டாவியும்விட்ட நிலையில், இவர் கேட்டதின் பேரில் தொகையினை அனுப்பலாமா வேண்டாமா என்ற சந்தேகம் வலுபெற்றுவந்தது. ஆனால், றாமானந்தருக்கோ, உள்ளூர பிறிதொரு ஏக்கம் ஸ்திரபட்டு நின்றது!
ஏற்கனவே தனது முற்பிறவியில், காலம் சென்ற காந்தி மகான், காங்கிரஸதிபதி சத்தியமூர்த்தி காலத்தே, சுதந்திரப் போராட்டத்திற்குக் கஷ்டப்பட்டு வந்த காலத்தில் ஸ்த்ரீமார்கள் அதற்கான பொருளுதவியைக் கேட்டபோது, தங்களுடைய பொன்னாபரணங்களையும், வைர, வைடூரியங்களையும் தந்துதவிய காட்சி மனதில் நிழலாடியது. கஞ்சிக்கு வழியில்லாத (இந்தக் காலத்தைப் போலவே) அந்தக் காலத்திலே வாழ்ந்து வந்த றாமானந்த சித்தருக்கு அப்படி உதவ ஓர் அரைஞான் கயிறுகூட வாய்த்திருக்கவில்லை. இன்றும் அப்படியானது வாய்க்காத சூழலில் அப்படியான கயிறை அரை டஜன் வாங்கத் தேவையான பணத்தினை, அன்றெனப் பார்த்து சித்தருக்கு ஒரு கர்ம பலனாய் வாய்த்தது.
’கொடை வழங்க இறை கொடுத்த அடை’ என்று எதுகை மோனையாக எதையோ கருதிக் கொண்ட சித்தர் பெருமான், தொகையைக் கொண்டு சர்கார் அலுவலகத்தில் தந்துவிட்டு வந்தார்.
அன்னாரின் கீர்த்தி உடனே ஊர்த் தெருவெங்கும் வேக வேகமாய்ப் பரவியது, ஆனால், அதன்பொருட்டு மகிழ்ச்சியிலிருக்க வேண்டிய சித்தர் பிரானோ, வேதனையில் இருந்தார். காரணம், தான் கொடையளித்ததிற்கான பற்றுப் பட்டயம் அவருக்குக் கிடைத்தபாடில்லை. மாதக் கணக்கில் அதற்காகக் காத்திருந்த றாமானந்தர், “எவனோ, பேமானி எடையில புவுந்து லவுட்டிட்டானா இருக்கும்” என்று அஞ்சியபடி காலந்தள்ளினார்.
- பால காருண்யாதிபதி வாழ்க!
சின்ன வயசிலேயே, றாமானந்த சித்தரை நோக்கி யரோ ஒரு மகாபீடை’யாதிபதி, “அறம் வழுவாமல் இருக்கக் கடவது” என்று விட்ட சாபத்தால் றாமானந்த சித்தர் சர்வ யோக்கியனாய் வாழ்ந்துவந்தார், ஆனால், அப்படி வாழ்வதென்பது பெரும் சாபத்திற்குரியது என்பதை அவர் நாட்டுக் கவி பெருமக்கள் அன்றே எழுதிவிட்டனர்*. அதை அப்போது அவர் படித்திருக்கவில்லை என்பதால், இப்படியான காரியமொன்றை தன் பால பருவத்தில் செய்யலானார்:
றாமானந்தர் தனக்கென யானையோ, குதிரையோ, தேரோ என எதுவும் இல்லாத காரணத்தினால், வழக்கம் போல நடந்தே வந்தார், வந்துகொண்டிருந்த சமயத்தில், ஒரு நூறு ரூபாய்த்தாள் பாதையில் படுத்துக் கொண்டு, மின்னிக் கொண்டிருந்தது. அதைக் கண்ட றாமானந்தர் கிஞ்சித்தும் சபலமுறாமல், சுற்றுமுற்றும் பார்த்து அதே பாதையில், தன்னைப் போலவே, தனக்கென யானையோ, குதிரையோ, தேரோ என எதுவும் இல்லாத காரணத்தில், வழக்கம் போல் என ஊர்சிதப்படுத்த முடியாத நிலையில், நடந்தே வந்த பெருங்கிழவியைக் கூவி அழைத்து, பவ்யமாய், மூதாட்டியே! இங்கே கிடக்கும் நூறு ரூபாய்த் தாள் உங்களுடையதா என்று பாருங்கள் என்றார். மூதாட்டியும், திரைக் காவியத்தில் வரும் ஒளவை பிராட்டியைப் போல ஆரவாரமாய், ஆம் குழந்தாய்! அது எமக்குரியதுதான் என்றதோடு, ஒன்றின் பக்கத்தில் இரண்டு சுழியங்கள் இருக்கிறதா? பார் என்றார். சித்தர் பெருமானின் சித்தியில் சிறிய வெளிச்சம் ஒன்று மின்னல் கீற்றைப் போல வந்துபோனதே என்றாலும், கிழவிக்கு உதவிய தனது கருணா கைங்கர்ய ஜன சேவையை எண்ணி புலாகாகிதம் அடையலானார்.
ஆனால், அவருடைய புலாகாகிதம் அவருடைய சொந்த அன்னையை அடையும் வரை தாக்குப்பிடிக்கவில்லை என்பதுதான் துர் அதிஷ்டம் என்பது!
அன்னை இப்படிக் கேட்டார்: டே, எங்கடா அப்பா கொடுத்தனுப்பிய காசு? றாமானந்தர் தன் திரு கால்சராயையும், அதன் பல பக்க வாய்களையும், இரு பக்க வயிறுகளையும் துழாவு துழாவு என்று துழாவினார். ஒன்றும் கிடைக்காத நிலையில்தான் றாமானந்தருக்கு நடந்தது உரைத்தது: பாட்டியிடம் வடை இழந்த கதையை அன்னையிடம் சொல்லி முடித்தவுடன் அதற்கான அடியையும் செம்மையாகவே பெற்றார் றாமானந்தர்.
கு:
*கழித்துவிடும் போலொரு துயருண்டா
யோக்கியனாய் வாழ்க்கையைப் பழிபெறும்
அயோக்கியனுக்கு இல்லை பார் –
அதுபோலான சுயமலச் சிக்கல்! என்பது அப்பாடல்,
கவியோகி கண்டராதித்த சித்தர் எழுதிய இப்பாடலையே, “யோக்கியதை சில குறிப்புகள்” என்ற தனது நவ கவிதையில், கவிபதி கண்டராதித்தன், “யோக்கியனாகவே கழித்துவிடும் / வாழ்க்கையைப் போலொரு / துயருண்டா இல்லையா” என்றும், “ஆபாசங்களை / மலத்தைப் போல / அடக்கிக் கொண்டிருக்கிறது / யோக்கியதை / அயோக்கியத்திற்கு / அந்த மலச்சிக்கல் இல்லை” என்றும் எழுதலானார்.
- காருணயத்தை வெளியே சொன்னதற்குப் பிறகான பிரச்சனைப் பாடு (கள்)
றாமானந்தரின் காருணயம் தொடர்பான கதைகள் ஊரெங்கும் பரவியதும், அவருடைய கீர்த்தி மக்கள் மத்தியில் இவ்வேனிற்காலம் வெக்கையெனப் பரவியது. அதன் பொருட்டு வள்ளல் என்றே றாமானந்த சித்தரை அழைக்கத் தலைபட்டனர்.
அப்படியான, வள்ளல் பெருமான் மகாஸ்ரீ றாமானந்த சித்தரின் வங்கிச் சேமிப்பு ஒருநாள், ரூபாய் 155 என்பதிலிருந்து, காலை சிற்றுண்டியாக வழக்கமாகச் சாப்பிடும் இரண்டு இட்லி, ஒரு பூரி, ஒரு வடை, ஒரு முழூஉ வேவு வெண் கோழி நன் முட்டை யய்யம் – மிளகுப் பொடி தூவாதது, அதாவது, ஆங்கிலத்தில் கலா நேர்த்தியில்லாமல் சொல்ல வேண்டும் என்றால் ’ஃபுல் பாயில்’, சாப்பிட்டதற்குப் பிறகான சேமிப்பு தலா ரூபாய் பத்து, பத்து, ஐந்து, திரும்பவுமொரு பத்துப் போக, ரூபாய் 120வாகக் குறைந்தமை, றாமானந்த சித்தரை பெரும் வருத்தத்தில் ஆழ்த்தியது. அந்த நேரமென்று பார்த்து, துர்பாக்கியத்திற்கு வாழ்க்கைப்பட்ட ஒரு லௌகீகவாதி அவரை அழைத்தான்.
தனக்கு ஏற்கனவே தெரிந்த ஒரு வாசகனின் எண்தான் அது; ஆனால், இதுவரை இருவரும் பெரிதாகப் பேசிக் கொண்டதில்லை.
இருந்திருந்து இத்தனை காலையில், இத்தனை நாட்கள் கழித்து தனக்கொரு இலக்கியவாதி அழைப்பதைப் பெருமிதத்தோடு எண்ணிப் பார்த்த றாமானந்த சித்தர், தன்னுடைய புதிய கவிதைத் தொகுப்புதான் மாபெரும் இலக்கிய லோகத்தில் சமீபமாய் பிரமலமடைந்திருக்கிறது என்றும் பிரஸ்தாபிக்கப் படுகிறது என்றும் அதை படித்தவொரு வாசகனே, ராத்திரி பூராவும் நித்திரைக் கொள்ளாமல், அத்தனைக் காலை வேளையில், தன் வாச்சியத்தை அதற்குரிய ஆசிரியரிடமே வெளிப்படுத்திவிட வேண்டும் என்று எண்ணி அழைக்கிறார் என்றும் பலான ஊகங்களில் ஆழ்ந்தார்; அதுவும், நாக்கிலேயே தங்க வேண்டும் என்று தண்ணீரைக்கூடக் குடிக்காமல் காத்துவந்த, ஒரு முழூஉ வேவு வெண் கோழி நன் முட்டை யப்பத்தின் சுவையானது மெல்ல தொண்டைக்குள் நழுவும் சமயத்தில்.
அழைப்பு திடீரென்று துண்டிக்கப்பட்டதும், சித்தருக்குப் பக்கென்று ஆனது.
’வந்ததும் போச்சா! இப்போ என்ன பன்றதுன்னு தெரியலயே. அவன் கூப்டபோதே ஃபோன எடுத்திருக்கலாம். முடியாம போச்சு. இப்போ நானா கூப்டா நல்லாவா இருக்கும், வெட்டியா இருக்காம்பா அந்த எழூத்தாளருன்னு ஊராங்கிட்ட சொல்லிட்டா என்ன பன்றது’ என்று மனச்சங்கடம் உதயமானது.
’சரி வர்ரத ஏன் விடுவானே’ என்று மனதைத் தேற்றிக் கொண்டு அந்த எண்ணை இவரே அழைத்தார்.
சித்தரே எப்படி இருக்கீங்க!!
நலம் நீங்க!!
ரொம்ப நாளே உங்கிட்டப் பேசனும் நினைச்சு முடியாம போச்சு.
ஓ அப்படி சந்தோஷம். நீங்க எப்ப வேணும்னாலும் பேசலாம். இலக்கியம் பேசுறதவிட எனக்கு வேற என்ன வேல என்ன. ”கரும்புத் தின்னக் கூலியா” வையும் மறக்காமல் சேர்த்துக் கொண்டார்.
பேஸ் புக் பதிவெல்லாம் பாக்குறேன்; அமர்க்களம். நீங்க பெரியாளா வர வேண்டியவங்க.
ஐயோ, கொஞ்சம் ஓவரா இருக்கு; இல்லை. கேக்க நல்லா இருக்கு- இன்னும் கொஞ்சம் சொல்லுங்க. ஆனா, வெறும் ஃபேஸ்புக்க வச்சி எப்படி கணிக்குறீங்க.. என்று இருவேறு வாக்கியங்களைத் தொடுத்து அதில் தன்னடக்கம் கருதி முதல் வாக்கியத்தை வெளிப்படுத்தினார்.
அட. நீங்க எவ்ளோ பெரிய ஆளு, வீட்ல பாத்ரூம் (இடக்கரடக்கல் கருதி கழிவறையைத்தான் அப்படிச் சொல்கிறார்) கூட இல்லாத நெலயிலயும் உங்க பெல்லோஸிப் பணத்த கவுர்மெண்டுக்குக் குடுத்திருக்கீங்க.
அத இன்னுமா ஞாபகம் வச்சிருக்கீங்க’ என்றார் காவ்ய அந்தஸ்து இல்லாத மொழியில். அதேசமயம், சரி அதெல்லாம் இருக்கட்டும் புக்க பத்தி ஏதாவது சொல்லேன் என்றும் இருந்தது அவருக்கு.
ஆங். றாம. கவியானந்தர் அருளிய “வேனிற் பத்து” ….
அடிபொழி. சொல்லுங்க. சொல்லுங்க. இது றாமானந்தர் மனசின் குரல்.
இன்னும் வாங்கல.
சட்டென்று சித்தர் முகம் வாடிப்போனது.
நீங்க அனுப்பி வைக்க முடியுமா?
எல்லோருக்கும் அனுப்பினால் என் பிழைப்பு என்னாவது என்று தோன்றினாலும், எதையாவது சொல்லி சமாளிக்க வேண்டிய நிர்பந்தத்தில் ஆட்பட்டார் சித்தர்; எழுத்தாளர்கள் பக்குவமாய்ப் பேசவேண்டும் என்று அவருக்கு யாரோ சொல்லி இருந்தார்கள்; இல்லாவிட்டால் அவரைப் பற்றி யாரும் பேச்செடுக்க மாட்டார்களாம்! ’சரிடா வெண்ணே’ என்று சொன்னவருடைய வார்த்தைகளை அவர் முதலில் உதாசீனப்படுத்தினாலும் அதைச் சமீபமாய்க் கடைபிடிக்கவே செய்தார்.
போகட்டும்.
தற்போது என் கைவசம் படிகள் எதுவும் இல்லை; பார்க்கலாம் என்றார்.
இந்தப் பதில் அவ்வார்வம் மிக்க வாசகரை காயப்படுத்தும் என்று நினைத்து வேகமாய் கண்களை அவர் ஈரப்படுத்திக் கொள்வதற்குள்! அந்த வாசகர் அதற்காகத் தான் அழைக்கவில்லை என்பதுபோல்,
நான் ஒரு உதவிக்காக உங்களைக் கூப்பிட்டேன் என்றார்!
காலையிலயே உதவியா என்னவா இருக்கும்! அதுவும் நான் அவ்ளோ தெரிஞ்சவன், பழகினவன் கூட இல்லையே? என்று யோசித்தவர், ஹாங்.. என்று ஒரு இழுப்பு இழுத்து … சொல்லுங்க என்றார்.
அதற்கும் அவர் காத்திருக்காதவர்போல, எனக்கு ஒரு ரெண்டாயிரம் பணம் வேணும்; இன்ன தேவை – இது வாசகர்.
ஓ! என்று மீண்டும் ஒரு இழுப்பு போட்டு, என்ட்ட காசு இல்ல என்று ’உண்மையை உரக்கச் சொல்லிவிட்டார்; அவசரத்திற்கு, தன் வங்கிக் கணக்கில் இருக்கும் காசு இனி ரெண்டாயிரம் ஆக, எத்தனை பூஜ்ஜியம் சேர்க்க வேண்டும் என்று கூட அவரால் கணக்கிட முடியவில்லை. ஆனால், வாசகர் தன்னைப் புரிந்துகொள்வார் என்று இந்த முறை மனசை ஆரப்போட்டார்.
ஆனால், வாசகருக்கோ இந்த முறை கோபவம் வந்துவிட்டது; கவுர்மெண்ட்டுக்கு முப்பதாயிரம் குடுக்குறீங்க எனக்கு ரெண்டாயிரம் கொடுத்தா என்ன? என்றார்.
இதைக் கேட்ட றாமானந்தருக்குத் தான் சாப்பிட்ட ஒரு முழூஉ வேவு வெண் கோழி நன் முட்டையய்யம் – மிளகுப் பொடி தூவாதது, தாமதிக்காமல் தன் வாய் வழியே வருது போல் இருந்தது.
என்னப்பா சொல்றே! அது வேற; இது வேற! வாஸ்தவம் சொல்லப்போனா எனக்குக் கடன் வாங்குற பழக்கமும் இல்ல; குடுக்கற பழக்கமும் இல்ல! அது என் வருட ஒதுக்குத் தொகை! அதைத் தாண்டி என்னாண்ட ஒன்னும் இல்ல; புரிஞ்சுக்கோ; உனக்கே தெரியும் என் வூட்ல கக்கூஸ் இல்ல;…
இந்தக் கடைசி வார்த்தைகளைச் சொன்னதும் வாசகரின் மனசு இளகும் என்று நம்பினார்; ஆனால், அதுதான் இல்லை. அவர் இப்படி இன்னொரு அடி போட்டார். கக்கூஸ் கட்ட வக்கில்லாதவரு ஏன் புக்கு வாங்கிக் குவிக்கிறீரு!
’கக்கூஸ் இல்லாட்டியும் கக்கூஸ் போகலாம்; ஆனா, புக் இல்லாட்டி எப்படி புக்கு படிக்கறது’ என்கிற தத்துவத் தெறிப்பு அநாயசமாய் றாமானந்தர் மூளையில் வந்து போனது; ஆனால், அதையும் அவர் வெளிப்படுத்தவில்லை. காரணம், எழுத்தாளர்கள் பக்குவமாய்ப் பேசவேண்டும் என்று அவருக்கு யாரோ சொல்லி இருந்தார்கள்; இல்லாவிட்டால் அவரைப் பற்றி யாரும் பேச்செடுக்க மாட்டார்களாம்! ’சரிடா வெண்ணே’ என்று சொன்னவருடைய வார்த்தைகளை அவர் முதலில் உதாசீனப்படுத்தினாலும் அதைச் சமீபமாய்க் கடைபிடிக்கவே செய்கிறார் என்பதை முன்னமே சொல்லி இருக்கிறேன் அல்லவா? அதுதான்.
பீப்.. பீப்…
றாமானந்த சித்தரின் பாட்டைக் கேட்க மாட்டாமல் வாசகர் அழைப்பைத் துண்டித்துவிட்டார்’ என்றுதான் றாமானந்த சித்தரும் நம்பினார். ஆனால், அதற்குள் வாசகர் அன்னாரை பற்றி அவதூறுப் பாட்டு ஒன்றை பாடிவிட்டார். அது பட்டி தொட்டி எங்கும் வேகமாய்ப் பரவ, அக்கிரம ஒழிப்புப் படையினரும் சித்தருக்கு எதிராகப் போர்கொடி தூக்க ஆரம்பித்துவிட்டனர்..
சித்தர் புகழ் ஒழிக! சித்தர் புகழ் ஒழிக!
ஆனால், அதுவோ, சித்தருக்கு முன்பைவிடவும் அதிக புகழையே சம்பாதித்துக் கொடுத்தது என்பதை சொல்லியும்தான் தெரியவேண்டுமா என்ன??