பெண் பத்திரிக்கையாளரான பர்கா தத்தக்கு ஆபாசமாக பேசியும், குறுஞ்செய்தி அனுப்பியும், மிரட்டல் விடுத்தும் தொந்தரவு செய்த 4 பேரை கைது செய்துள்ளனர் டெல்லி போலீசார் .
டெல்லியில் பெண் பத்திரிக்கையாளராக பணிபுரிந்து வருபவர் பர்கா தத். இவர் புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு நிறைய அச்சுறுத்தலுக்கு உள்ளாகினார். டெல்லி சைபர் பிரிவு போலீசாரிடம் கடந்த பிப்ரவரி 21ஆம் தேதி புகார் ஒன்று கொடுத்திருந்தார். அந்த புகாரில், பிப்ரவரி மாதத்தில் தனக்கு தவறான அழைப்பேசிகளும், மிரட்டல் விடுப்பதும், வாட்ஸ் ஆப்பில் ஆபாசமாக குறுஞ்செய்திகளும், புகைப்படங்களும் மர்ம நபர்கள் அனுப்பி, தொந்தரவு செய்வதாக தெரிவித்திருந்தார். மேலும், தன்னுடைய தவறான பெண்ணாக சித்தரித்து, சமூக வலைதளங்களில் தன்னுடைய மொபைல் எண்னும் பரப்பப்பட்டு வருவதாகவும் அந்த புகாரில் அவர் தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்தப் புகாரை தொடர்ந்து, மிரட்டல், ஆபாசமாகப் பேசுதல் உள்ளிட்ட ஆறு பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். விசாரணை நடைபெற்று நிலையில், தேசிய மகளிர் ஆணையம் இந்த பிரச்சினையில் தலையிட்டு, உடனடியாக நடவடிக்கை எடுக்க டெல்லி போலீசாரிடம் வலியுறுத்தியது. இந்நிலையில், இந்த வழக்கில் ராஜிவ் ஷர்மா (23), ஹேமராஜ் குமார் (31), ஆதித்ய குமார் (34) ஆகிய டெல்லியைச் சேர்ந்த மூன்று இளைஞர்களையும், குஜராத் மாநிலம், சூரத்தைச் சேர்ந்த சபீர் குர்பான் பின்ஜாரி (45) என்ற நபரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், ராஜிவ் ஷர்மா, தொலைதூரவழிக் கல்வியில் பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருப்பதும், ஹேமராஜ் ஹோட்டலில் செஃப்பாக இருப்பதும், ஆதித்யா தனியார் நிறுவனத்தில் விற்பனை பிரதிநியாக பணியாற்றுவதும், தெரியவந்தது. இவர்கள் மூவரும் மோசமான வார்த்தைகளுடன்கூடிய குறுஞ்செய்திகளை அனுப்பியதற்காக கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். சபீர் குர்பான் பின்ஜாரி இறைச்சி கடையில் வேலை பார்ப்பவர். இவர் பர்கா தத்வுக்கு ஆபசாமான புகைப்படங்களை அனுப்பியதால், 14 நாட்கள் நீதிமன்ற காவலில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, பர்கா தத் தனது ட்விட்டர் பக்கத்தில், தனக்குத் தொந்தரவு கொடுத்தவர்களைக் கைது செய்த டெல்லி போலீசாருக்கு நன்றி. அதேநேரம், இன்னும் இதேபோன்ற 10 குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று பதிவிட்டிருந்தார்.