கடந்த புதனன்று பிரதமர் மோடி, தொலைக்காட்சியில் “இந்தியா விண்ணிலுள்ள செயற்கைக்கோளைச் சுட்டு வீழ்த்தும் சோதனையில் வெற்றி பெற்றது. இதன் மூலம் நாம் உலகிலுள்ள மற்ற விண்வெளி சக்தி நாடுகளின் பட்டியலில் இணைந்ததாக” நாட்டு மக்களுக்கு அறிவித்தார். 

 

தன்னுடைய 10 நிமிட உரைக்குப் பின் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் உலகில் இந்த தொழில்நுட்பம் கொண்ட நான்காவது நாடாக இந்தியா இருப்பதாகவும் இதன் மூலம் நாம் ஒரு விண்வெளி சக்தியாக உயர்ந்து நிற்கிறோம் என்று பதிவிட்டிருந்தார்.

இந்த நிகழ்விற்குச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவை இது போன்ற சோதனைகள் கடந்த காலத்தில் நடைபெற்றதையும் அதன் பின்விளைவுகளைப் பற்றியும் கவலை தெரிவித்திருந்தன.

பெரும்பான்மையான செய்தி நிறுவனங்கள் இதை வரவிருக்கும் தேர்தலை மனதில் கொண்டு நடத்தப்பட்ட சோதனையாகவே தெரிவித்தன.

பிபிசி இந்த செய்தியைத் தனது இணையதளத்தில் முக்கியச் செய்தியாக வெளியிட்டது. அந்த பக்கத்திற்குச் சென்றால் “இந்தியா தேர்தல் 2019: இந்தியா இப்போது ஒரு விண்வெளி சக்தி சொல்கிறார் மோடி” என்று இந்த செய்தியைத் தேர்தலுடன் சம்பந்தப்படுத்திப் பதிவிட்டிருந்தது.

நியூயார்க் டைம்ஸ் தன்னுடைய உலகச் செய்திகள் பக்கத்தில் இந்த செய்தியை வெளியிட்டிருந்தது. அதில் பால்கோட் தாக்குதலுக்குப் பின் குறைந்த மோடியின் புகழ் இந்த சோதனையின் மூலம் உயர்ந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

 

இந்த இரு செய்தி நிறுவனங்களும் பத்திரிக்கையாளர் சேகர் குப்தாவின் டிவீட்டை மேற்கோள் காட்டியிருந்தன. அதில் “இந்த நிகழ்விலிருந்து இதுவரை நாம் அறியாத, சந்தேகிக்காத மோடியின் தேர்தல் விரக்தியே தெரிகிறது” என்று பதிவிட்டிருந்தார்.

பிரிட்டனைச் சேர்ந்த ‘இன்டிபெண்டண்ட் இணையப் பத்திரிக்கை’, என்‌டி‌டி‌வி யின் அறிவியல் ஆசிரியர் பல்லவ் கோஷ் “இந்தியா ஏற்கனவே செயற்கைக்கோள்களைச் சுட்டு வீழ்த்தும் தொழில்நுட்ப தகுதியை அடைந்துவிட்டது” என்று தெரிவித்ததை மேற்கோள் காட்டி இதை இப்போது செய்வதின் மூலம் மோடியும் பாஜகவும் தேர்தல் ஆதாயம் தேடுகிறார்கள். மேலும் மோடியின் தொலைக்காட்சி அறிவிப்பில் அவர் எப்படி தனது அரசு பாதுகாப்பு விஷயங்களில் சாதனைகள் படைத்துள்ளது என்று பட்டியலிட்டார். இது ஒரு அரசியல் அறிவிப்பாகவே தெரிகிறது என்று செய்தி வெளியிட்டுள்ளது.

பாகிஸ்தானின் ‘தி டான்’ பத்திரிக்கை இது மோடி இரண்டாம் முறை ஆட்சிக்கு வர விரும்பும் ஒரு செயல்போலத் தெரிகிறது என்று தெரிவித்துள்ளது.

 

அமெரிக்காவின் ‘வாஷிங்டன் போஸ்ட்’, “போரில் இந்தியாவின் தயார்நிலையை பற்றிய கவலைகளுக்குப் பதிலளிக்கும்விதமாக இந்த சோதனை அமைந்துள்ளது. சமீபத்தில் அது பாகிஸ்தான் விமானப்படையுடன் நடத்திய வான் தாக்குதலில் மிகப் பழைய விமானத்தைப் பயன்படுத்தியது விமர்சனத்திற்குள்ளானது. மேலும் இந்தியாவிடமுள்ள 68 சதவீத ஆயுதங்கள் பழங்காலத்தைச் சேர்ந்தவையாக உள்ளன”. என்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஃபிரெஞ்சு பத்திரிக்கையான ‘ல மோண்டே‘ இந்த சோதனையின் பாதிப்பைப் பற்றி கவலைப்படுகிறது. இப்படி விண்வெளியிலிருக்கும் செயற்கைக்கோளை அழிப்பதின் மூலம் ஆயிரக்கணக்கான உடைந்த பாகங்கள் பூமியின் சுற்றுப்பாதையில் அதிவேகமாகச் சுற்றி வரும். இதனால் மற்ற செயற்கைக்கோள்கள் பாதிக்கப்படும் என்றும் தெரிவிக்கிறது,.

உலகம் முழுவதுமுள்ள செய்தி நிறுவனங்கள் இந்த சோதனையை சந்தேகிக்கின்றன. இதை மோடியின் அறிவிப்பாக மட்டுமே பார்க்கின்றன. நமது விஞ்ஞானிகளின் பலவருட உழைப்பையும், அர்ப்பணிப்பையும் வெறும் தேர்தல் ஆதாயமாக மோடி பயன்படுத்திக்கொள்வது உண்மையில் அற்பமானது.