சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி போட்டித் தொடரின் நான்காவது லீக் போட்டியில், போலாந்தை (10-0) வீழ்த்திய இந்திய ஹாக்கி அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
28வது சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி தொடர் மலேசியாவில் உள்ள இபோ நகரில் நடைப்பெற்று வருகிறது. இத்தொடரில் மலேசியா, இந்தியா, தென் கொரியா, கனடா, ஜப்பான், மற்றும் போலந்து ஆகிய 6 அணிகள் பங்கேற்கிறது. இதன் லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் ஒரு முறையாவது மோத வேண்டும். லீக் சுற்றின் முடிவில் புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களைப் பிடிக்கும் அணி இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெறும். இதுவரை நடந்த முதல் நான்கு லீக் போட்டியின் முடிவில் இந்திய அணி( 3 வெற்றி, 1 டிரா) என முதல் இடத்திற்கு முன்னேறியது. இதனையடுத்து போலாந்துடன் கடைசி லீக் போட்டியில் பங்கேற்று வெற்றிப்பெற்றால் இறுதிப்போட்டிக்கு நேரடியாக தகுதிப்பெறும் என்ற நிலையில் இருந்தது.
இன்று ஐந்தாவது லீக் போட்டியில் விளையாடிய இந்திய அணி, போலந்து அணியை எதிர்கொண்டது. இதில் துவக்கம் முதல் இந்திய அணி வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினர். இரண்டாவது காலிறுதியின் முடிவில் இந்திய அணி 6-0 என அசைக்க முடியாத முன்னிலை பெற்றது. இதன்பின் அடுத்த 30 நிமிடத்தில் மேலும் 4 கோல் அடித்து இந்திய அணி வீரர்கள் அசத்தினர். இதன்மூலம் இந்திய அணி அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு, மிகப்பெரிய கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் கடந்த போட்டியில் ஹாட்ரிக் கோல் அடித்து அசத்திய இந்திய வீரர் மந்தீப், இந்தப் போட்டியிலும் 50 மற்றும் 51வது நிமிடத்தில் இரட்டை கோல் அடித்து அசத்தினார்… இவரைத்தவிர இந்திய அணிக்கு வருண் குமார் (18 மற்றும் 25வது நிமிடம்), விவேக் பிரசாத் (1வது நிமிடம்), சுமித் குமார் (7வது நிமிடம்), சிம்ரன்ஜீத் சிங் (29வது நிமிடம்), நிலன்கந்த சர்மா (36 வது நிமிடம்), மற்றும் அமித் ரோகித் தாஸ் (55 வது நிமிடம்) ஆகியோர் கோல் அடித்து இந்திய அணியை அசைக்க முடியாத நிலைக்கு கொண்டுவந்தது மட்டுமில்லாமல் இந்திய அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தனர்.
இந்நிலையில் இந்திய அணி பங்கேற்ற ஐந்து போட்டியில் 4 வெற்றி 1 ‘டிரா’ என 13 புள்ளிகளை பெற்று முதலிடம் இடம் பிடித்து இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இதனையடுத்து இந்திய அணி நாளை நடக்கவிருக்கும் இறுதிப்போட்டியில் தென் கொரியா அணியை எதிர்கொள்கிறது.