மூத்த தமிழறிஞர், தலைசிறந்த சொற்பொழிவாளர், சிறந்த எழுத்தாளர் என்று பன்முகங்கள் கொண்டவர் சிலம்பொலி செல்லப்பன். இவர் நாமக்கல் மாவட்டம் சிவியாம் பாளையம் கிராமத்தில் 1928-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 24-ம் தேதி பிறந்தார்.
சிலம்பொலி அவர்கள் , சிலப்பதிகாரம்- தெளிவுரை , சிலப்பதிகாரச் சிந்தனைகள் ஆகிய அற்புதமான இலக்கிய நூல்களைப் படைத்துள்ளார்.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆய்வு அணிந்துரைகளை எழுதி மிகப்பெரும் சாதனை படைத்த இவர் சிலப்பதிகாரம் , மணிமேகலை, பெருங்கதை, சிற்றிலக்கியங்கள் , சங்க இலக்கியம், சீவக சிந்தாமணி, ராவண காவியம், பாரதிதாசன் கவிதைகள், சீறாப் புராணம், ராஜநாயகம், தேம்பாவணி, பேரறிஞர் அண்ணாவின் சிறப்புகள் ஆகிய தலைப்புகளில் தொடர் சொற்பொழிவுகள் நிகழ்த்தியுள்ளார். மேலும் நூற்றுக்கணக்கான மாநாடுகளிலும், கருத்தரங்குகளிலும் கலந்துகொண்டு பேருரையாற்றி சாதனை படைத்திருக்கிறார்.
சென்னையில் நடைபெற்ற இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு, மதுரையில் நடைபெற்ற ஐந்தாம் உலகத் தமிழ் மாநாடு, கோவையில் நடைபெற்ற உலகச் செம்மொழித் தமிழ் மாநாடு ஆகிய மூன்று மாநாட்டுச் சிறப்பு மலர் தயாரிக்கும் பொறுப்பேற்று மிகச் சிறப்பாகப் பணியைச் செய்து முடித்தவர் சிலம்பொலி செல்லப்பன்.
செம்மொழித் தமிழைப் பரப்புவதில் 60 ஆண்டு கால உழைப்பைக் கொட்டிய தமிழ் பண்பாளர். தமிழகத்தின் தலைசிறந்த இலக்கியச் சொற்பொழிவாளர்களில் ஒருவர்.
மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, மொரீசியஸ், ஐக்கிய அரபு நாடுகள், அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்குச் சென்று தமிழ்மொழியை பரப்பியுள்ளார்.
தனது வாழ்நாளில் 50க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளார். 22 வயதில் ஆரம்பித்த இவரது தமிழ்ப் பணி 91 வயதுவரை தொடர்ந்தது.
சென்னை திருவான்மியூரில் மகள் இல்லத்தில் வசித்து வந்த சிலம்பொலி செல்லப்பன் வயது மூப்பால் ஏற்பட்ட உடல்நலக் குறைவால் இன்று(மார்ச் 6) காலை காலமானார். இன்று பிற்பகல் முதல் மாலைவரை அவரது திருவான்மியூரில் சிலம்பொலி செல்லப்பனுக்கு அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாளை காலை அவரது உடல் சொந்த ஊரான நாமக்கல் மாவட்டம் சிவியாம் பாளையம் எடுத்துச் செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்படும்.